செயலின்மையில் செயலும், செயலில் செயலின்மையும்

1 மார்ச், 2014

பெங்களூரு இந்தியா


குருதேவ்! செயலின்மையில் செயலும், செயலில் செயலின்மையும் என்பது என்ன?

குருதேவ்: மிகத் தெளிவானது. மிக இரகசியமானதும். நீங்கள் நூறு சதவீதம் கவனத்துடன் செயல்படும் போது, உங்களுக்குள் ஏதோ ஒன்று, நான் இச்செயலை செய்யவில்லை, தானாகவே இது நடக்கின்றது என்று கூறும். இதுதான் செயலில் செயலின்மையை காண்பது. சில சமயங்களில் உங்களுக்குக் கோபம் ஏற்படுகின்றது அல்லது ஏதோ ஒரு விதமாக நடந்து கொள்கின்றீர்கள். அப்போது நீங்கள் அதை செய்யவில்லை, அது தானாகவே நடக்கின்றது என்பதை உணருகின்றீர்கள். உங்களைக் குறிக்கிடுபவரை, வேண்டுமென்றே செய்யவில்லை என்பதை உணர்ந்தே திட்டி விடுகின்றீர்கள். அவரிடம், ஏதோ ஒன்று உங்களில் எதையோ தூண்டி  விடுகின்றது, அதனால் அவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள். 

கடவுளே! நான் இவ்வாறு ஒரு போதும் செய்ய விரும்பவில்லையே என்று வியக்கின்றீர்கள். இது தான் செயலில் செயலின்மை ஆகும். உங்களிடமிருந்து அவ்வார்த்தைகளை கேட்க வேண்டும் என்பது அவரது கர்மா, அதனால் அவ்வாறு செயல்படுகின்றீர்கள். நீங்கள் ஒரு போதும் விரும்பி இருக்காவிடினும், உங்களிடமிருந்து வார்த்தைகளை இழுத்து விடுகின்றார். அத்தகைய சம்பவம் நிகழ்ந்தே ஆக வேண்டும். அது கர்மா. இது உயர்ந்த ஞானம். இந்தக் குறிப்பை நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் மேற்கொள்ளாதீர்கள். ஒருவரை இழிவாக பேசிவிட்டு நான் வேண்டுமென்று செய்யவில்லைஅனுபவிக்க வேண்டியது உன் கர்மா, அதனால் கூக்குரலிட வேண்டியதாயிற்று என்று கூறாதீர்கள். அவ்வாறு செய்வது ஞானத்தைத் தவறாக பயன்படுத்துவது. அவ்வாறு செய்யாதீர்கள். ஞானத்தை தவறாக பயன்படுத்தாதீர்கள்,சமயங்களில்நீங்கள் விரும்பாவிடினும், ஒரு செயலை செய்ய வேண்டியதாகின்றது. விருப்பம் இல்லாமல் வேறு வழியின்றி நிகழ்வதை காண வேண்டியதாகின்றது.

நீங்கள் செய்யவில்லையென்பதை நீங்கள் அறிந்தும் அது நிகழ்கின்றதுஇது தான்செயலில் செயலின்மையைக் காண்பது ஆகும். நீங்கள் கண்களை மூடி அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்களாக எதுவும் செய்யவில்லை. ஆனால் உங்களுக்குள் நீங்கள் ஏற்படுத்தும் அதிர்வலைகள் இவ்வுலகையே மாற்றுகின்றது. இது செயலின்மையில் செயல்படுவது ஆகும். தியானத்தின் போதுகருணை அலைகளை பரப்புகின்றீர்கள், தூய்மையான அன்பு, பக்தி, ஒத்திசைவு அலைகள், ஆகியவைப் பிறரைச் சென்றடைந்து அவர்கள் உள்ளத்தை மாற்றுகின்றது, சூழலை மாற்றுகின்றதுஎதிர்மறையினை அகற்றி அனைத்தையும் நேர்மறை ஆக்குகின்றது.
நீங்கள் பிறருக்கு ஆசி அளிக்கின்றீர்கள். உங்கள் ஆசியினால் மாற்றங்கள் நிகழ்கின்றன. இது செயலின்மையில் செயல் ஆகும். சமாதியில் அமர்ந்து ஆழ்ந்து தியானிக்கும் போதுஉலகில் பல செயல்களை உருவாக்குகின்றது. இது தான் செயலின்மையில் செயல்படுவது. இதை விளக்கிக் கூறுவது மிகக் கடினம். சிறிய உதாரணங்களுடன் விளக்கிக் கூற முயன்றிருக்கின்றேன்.

குருதேவ்! படைப்பு மற்றும் பிரளயம் இவற்றில் இரண்டு சொற்தொடர்கள் அடிக்கடி பயன் படுத்தப்படுகின்றன. அவை மஹாதத்வா மற்றும் தன்மாத்ரா இவையிரண்டுமே புரிந்து கொள்ளக் கடினமானவையாக இருக்கின்றன. தயை கூர்ந்து இதை விளக்கிக் கூற முடியுமா?

குருதேவ்: தன்மாத்ரா என்பது நமது உடலுக்குள் ஏற்படும் உணர்வின் அளவு. (ஐந்து புலன்களால் உணரக் கூடிய மிகக் குறைந்த அளவு பார்வை, சப்தம், வாசனை, சுவை, தொடு உணர்வு) உடல் சார்ந்த நிலையில் தெளிவாகக் காட்டும் அளவு ஆகும். உதாரணமாக, நமது கண்களுக்குள் நுழையும் ஒளியின் மூலமாக நாம் காட்சிகளைக் காண்கின்றோம்.கண்களுக்குள் ஒளி செல்வதால் காட்சி புலப்படுகின்றது. கண் பார்வையை இழந்தோரின் கண்களை விட்டு ஒளி அகன்று விட்டதாக சாதரணமாக கூறப்படுகின்றது. வெவ்வேறு உயிரினங்களின் கண்ணில் புகும் ஒளியின் அளவு மாறுபடுகின்றது. ஆந்தையால் இருட்டிலும், மிகக் குறைந்த வெளிச்சத்திலும் பார்க்க முடியும், ஆனால் மனிதர்களால் இயலாது. பூனையால் கூட இருட்டில் காண முடியும். எனவே, ஒரு ஆந்தையின் அல்லது பூனையின் தன்மாத்ரா உயர்ந்தது என்று கூறுகின்றோம். மனிதர்களாகிய  நம்முடைய தன்மாத்ரா குறைந்த ஒளியில் காணும் திறன் மிகக் குறைந்ததே ஆகும். பூனையால் இருட்டில் கூட என்ன வைக்கப்பட்டிருக்கின்றது என்பதைக் கண்டு அறிய முடியும்.

அதே போன்று வாசனையை நுகர்வதிலும் இந்த வித்தியாசத்தை நாம் காணலாம். யானைக்கு நுகரும் திறன் (தன்மாத்ரா) அதிகம்.வெகு தூரத்திலேயே என்ன கிடக்கின்றது அல்லது எது தன்னை நோக்கி எத்திசையிலிருந்து வருகின்றது என்பதை சரியாக நுகர்ந்தறியும் திறன் அதிகம் உண்டு. அது மட்டுமல்லாது, அதை வரும் பல ஆண்டுகளுக்கு நினைவில் கொள்ளும் திறனும் அதற்கு உண்டு.அது போன்று தன்மாத்ரா சுவை சம்பந்தப்பட்டதும் ஆகும். ஒவ்வொரு உணவு பொருளுக்கும் ஒரு தனிச்சுவை இருக்கின்றது.நாம் உண்ணும்போது விதமான சுவைகளை அனுபவித்தறிகின்றோம். உதாரணமாக, சிறிது சர்க்கரையை உண்டுவிட்டு தேநீர் பருகினால், தேநீரின் இனிப்புச் சுவையை ரசிக்க இயலாது.

ஒரு குறிப்பிட அனுபவம் தன்மாத்ரா விற்குக் கீழே இருந்தால், உங்களால் அதை அனுபவித்து புரிந்து கொள்ள முடியும். ஆனால் அது தன்மாத்ரா வை விட அதிகம் இருந்தால் உங்களால் சரியாகப் புரிந்தரிந்து கொள்ள முடியாது. சர்க்கரையை உண்டு விட்டுத் தேநீர் பருகினால் அதன் இனிப்புச் சுவையை அறிந்து கொள்ள முடியாது ஏனெனில் தன்மாத்ரா மாறி விடுகின்றது. இதுதான் தன்மாத்ரா  என்பது ஆகும். நமது ஐம்புலன்கள் - கண்கள், காதுகள், நாக்கு, மூக்கு மற்றும் தோல் இவையாவும் சேர்ந்து பஞ்ச ஜ்னாநேந்திரியா என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு புலனும் ஒரு தன்மாத்ரா வுடன் சம்பந்தப்பட்டது ஆகும். இந்த தன்மாத்ராவினால் தான் நம்மால் பார்க்க, கேட்க, நுகர, சுவைக்க மற்றும் தொட்டு உணர முடிகின்றது. 

குருதேவ்! உலக நாடுகளில் மிகவும் இளமையான நாடாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகின்றது. இளைஞர்களின்  சக்தியை  நாட்டின் வளர்ச்சிக்காக எவ்வாறு வழிப்படுத்துவது? வாழ்க்கையில் முன்னேறி வளரும் இளைஞர்கள் எதை தம் மனதில் கொள்ள வேண்டும்?

குருதேவ்: இதற்காகவே நாம் இந்தியாவின் மேம்பாட்டிற்குத் தொண்டர்கள் என்பதை நிறுவி இருக்கின்றோம். அதில் அனைவரும் உறுப்பினர்களாகச் சேர வேண்டும். நம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்த வேண்டும். நீங்கள் அனைவரும் இதற்கு உழைக்க வேண்டும். நாட்டின் மக்கள்தொகை 120 கோடி ஆகும்.அதில் 10% மக்கள் ஆர்வமாக செயல்பட்டால், நமது சமுதாயத்திலும் நாட்டிலும் பெரும் மாற்றம் ஏற்படும். நீங்கள் ஒவ்வொருவரும் இதை உங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரும் 10000 புது விருப்பார்வத் தொண்டர்களை சேர்க்கவேண்டும். இது மிகக் கடினமல்ல. மக்களை மகிழ்ச்சி ஆய்வு படிவங்களைப் பூர்த்தி செய்யுமாறு தூண்டுங்கள். மூன்று பேர் சேர்ந்து ஒரு குழு அமைத்துக் கொண்டுமக்களை அணுகி, அவர்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சி ஆய்வு படிவங்களை நிரப்பச்  செய்யுங்கள்.நீங்கள் 5000 முதல் 7000 வரை இப்படிவங்கள் நிரப்பப் பெற்றால், எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். மகளிரும் ஒன்று சேர்ந்து இதைச் செய்யலாம். ஒரு நாளுக்கு ஒரு மணி நேரத்தை சமுதாய மற்றும் நாட்டுப் பணிக்காக அற்பணிக்கும் பத்து கோடி விருப்பார்வத் தொண்டர்களை இந்தியாவிற்கு நாம் அளித்துவிட்டால் இந்நாட்டின் முகமே முற்றிலும் மாறி விடும்.

நம்மிடம் செறிந்த  ஞானம் இருந்தும், துயருடனும், சோர்வுடனும் இருக்கின்றோம். அப்போது அந்த ஞானத்தின் பயன் என்ன? ஒரு ஞானப் பொக்கிஷத்தின் உச்சியில் நாம் அமர்ந்திருக்கும் போதும் அற்ப விஷயங்களுக்கு அழுது கொண்டிருக்கின்றோம்.

இன்று நமது நாட்டின் நிலையை எண்ணிப்பாருங்கள். மத்தியகிழக்கு நாடுகளிலும், மலேசியாவிலும் ஏராளமான எண்ணெய் வளம் உள்ளது, ஆயினும் நாம் எண்ணெயும் பெட்ரோலியமும் அவர்களுக்கு ஏற்றுமதி செய்கின்றோம். மிகச் சிறந்த எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் நம் நாட்டில் உள்ளது ஆயினும் பிச்சைக்காரர்கள் போன்று எண்ணெய் இறக்குமதியை கேட்டுக் கொண்டிருக்கின்றோம். ஊழல்மிகுந்த நமது அரசு நிர்வாகத்தின் செயல் இது. 

ஆறுமாத காலத்தில்இந்தியாவின் கப்பற்படையில் பத்து கடல் விபத்துக்கள் நிகழ்ந்திருக்கின்றன என்று நேற்று எதிலேயோ வாசித்தேன், வேறெந்த நாட்டிலாவது இது போன்ற நிகழ்வைப் பற்றிக் கேட்டிருக்கின்றீர்களா? இத்தகைய விபத்துக்கள் (ஊழல் மிகுந்த அதிகாரிகளின் சூழ்ச்சி என்று குறிப்பிட்டு) தற்செயலாக நிகழ்வதில்லை. இத்தகைய விபத்துக்கள் நிகழ்ந்தால் ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என்பதை அவர்களது கவனக்குறைவு என்று குற்றம் சாட்டப்பட்டு கப்பற்படை அதிகாரிகள் கேள்விக்குள்ளாவார்கள். ஆனால் பத்து விபத்துக்கள் நிகழ்ந்தபோதிலும் நமது அமைச்சர்கள் எதுவும் செய்யாமல் படிப்படியாக நிகழ்வதை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இது மிகவும் துரதிருஷ்டவசமானது.

வேறந்த நாட்டில் நிகழ்ந்திருந்தாலும்மக்கள் அதிர்ச்சியடைந்து கோபமுற்றிருப்பார்கள். ஆனால் நம் நாட்டில் அதிகாரிகளும், மக்களும் கண்டுகொள்ளாமல் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். கடல் விபத்துக்களில் எத்தனை உயிர்இழப்பு என்பதைப் பற்றிக் கூட கவலைப்படவில்லை. தங்களுடைய பைகளில் பணத்தை நிரப்புவது ஒன்றே அவர்களது ஆர்வமாக இருக்கின்றது. நம்மிடம் மிகப் பெரிய அளவில் நிலக்கரி மற்றும் தாதுப்பொருட்கள் வளம் உள்ளது. ஆயினும் பிற நாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றோம். நமது நாட்டில் பாக்சைடு தாது (இதிலிருந்து அலுமினியம் செய்யலாம்) மிகுந்த அளவுள்ளது, ஆனால் அதையும் நாம் இறக்குமதி செய்து கொள்கின்றோம். இரும்புத் தாது நம்மிடம் அதிகம் உள்ளது, அதைக் குறைந்த விலைக்கு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, முழுமையடைந்த இரும்புப் பொருட்களை அதிக விலைக்கு இறக்குமதி செய்கின்றோம். இது மிக துரதிருஷ்டமானதே. திறமை மிகுந்த விஞ்ஞானிகளுக்கும், ஆய்வாளர்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமே இல்லை. எல்லாப் பகுதிகளிலும் திறமையானவர்கள் இருக்கின்றார்கள். நம் இளைஞர்கள் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் திறன் பெற்றவர்கள். நம் நாட்டு இளைஞர்கள் அனைவரையும் ஒன்று சேர்ந்து முன்வந்து நிறையபேரை VB யில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். வரும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் நாம் பெருமளவில் செயலாற்ற திட்டமிட வேண்டும். நீங்கள் அனைவரும் இதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? நீங்கள் அனைவரும் ஒன்று திரண்டு வருவீர்களா? அதைச் செய்யுங்கள்.

குருதேவ்! எல்லாமே முன் நிர்ணயிக்கப்பட்ட விதியாயின், செயலின் அல்லது இஷ்டத்தின்  பயன் என்ன?

குருதேவ்: ஒவ்வொன்றுமே முன்விதி என்றால் இஷ்டம் என்பதற்குப் பயனே கிடையாது. அப்படி அன்று. உங்கள் விவேகத்தைப் பயன்படுத்தி, சில விஷயங்கள் முன்விதி என்று புரிந்து கொண்டு, சரியான தேர்வு செய்து, சரியான வழியில் செயல்பட்டு உங்கள் இஷ்டப்படி அடையவும் வாய்ப்பு உண்டு. எங்கு உங்கள் விவேகத்தைப் பயன்படுத்த முடியவில்லையோ அப்போது அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட வழிகளின் படி செயல்பட வேண்டும். வாழ்கை என்பது விதி மற்றும் விருப்பம் ஆகிய இரண்டின் கூட்டமைப்பு ஆகும். சில விதிப்படி ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன, வேறு சிலவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்து செயல்படலாம்.