நம்பிக்கையால் மலையையும் நகர்த்துங்கள்

வெள்ளி 13, மார்ச், 2014



வாரணாசி, உத்திரப்பிரதேசம்

ஒரு பார்வையால் சொல்லக் கூடியதை ஆயிரம் உரையாடல்கள் தெரிவிக்காது. ஒரு ஆழ்ந்த மௌனம் சொல்வதை, ஆயிரம் பார்வைகளால் கூட சொல்ல முடியாது.தியானம் என்பது ஒரு ஆழ்ந்த ஓய்வு, உங்களுடைய நம்பிக்கை தான் (இறை மீது) அந்த ஓய்வைத் தரும். என்னவிதமான நம்பிக்கை உங்களிடம் இருக்க வேண்டும்? இந்த உலகைப் படைத்த இறைவன் என்னுடையவன் என்ற நம்பிக்கை.

வாழ்க்கையில் மூன்று விதமான நம்பிக்கைகள் அவசியம் வேண்டும். முதலில் உங்கள் மீதான நம்பிக்கை. இரண்டாவது நம்பிக்கை, சமுதாயத்தில் நம்மைச் சுற்றி நல்லவர்கள் இருக்கிறார்கள், நன்மை இருக்கிறது என்ற உண்மையின் மீது நம்பிக்கை. மூன்றாவது நம்பிக்கை, எல்லாவற்றிலும் மேலாக இருக்கும் இறை சக்தியின் மீது உள்ள நம்பிக்கை.

இரண்டாவது நம்பிக்கையானது இந்தச் சமுதாயத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள்  நம்மைச் சுற்றி நன்மைகளும் இருக்கிறது என்கிற உண்மையின் மீது உள்ள நம்பிக்கை. உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் பொல்லாதவர்கள் என்று எண்ணினால் நீங்களும் அப்படியே ஆவீர்கள். அப்படி எண்ணும் போது நமக்கு நாமே நம்முடைய பொல்லாத்தனத்திற்கு சான்றிதழ் அளித்துக் கொள்வோம். அது நல்லதல்ல. நம் சமூகத்தில் 90 சதவீதம் நல்லவர்களும்,நேர்மையாளர்களும் இருக்கிறார்கள் என்றே நான் நம்புகிறேன். 10 சதவீதத்தினரே தீய செயல்களில் ஈடுபடுபவர்கள். மற்ற 90  சதவீதத்தினர் தூய இதயம் கொண்டவர்கள். 

மூன்றாவது நம்பிக்கை, தெரியாத, எப்போதும் இருக்கும், எல்லாவற்றையும் நிகழ்த்தும், எல்லாம் வல்ல சக்தியின் மீது உள்ள நம்பிக்கை. எனவே எல்லாம் வல்ல அந்தச் சக்தியின் மீது நம்பிக்கை வையுங்கள். இறைவனின் அடையாளம் அவர் எங்கும் நிறைந்திருப்பது, அப்படியென்றால் அவர் உங்களுக்குள்ளும் இருக்கிறாரல்லவா? அவர் கோவிலில் மட்டும் தான் இருப்பவர் என்றால் அவர் எங்கும் நிறைந்திருப்பவர் அல்ல. அவர் எங்கும் நிறைந்திருப்பவர் என்றால் அவர் நிச்சயம் உங்களுக்குள்ளும் இருக்கிறார் – இந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான் உங்களிடம் இருக்க வேண்டும்.

‘இறைவன் எல்லோருக்கும் உரியவர் என்றால் அவர் உங்களுக்கும் உரியவர்’ என்ற உறுதியான நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். எல்லாம் வல்ல அந்த இறைச் சக்தியினுடன் ஆழமான தனிப்பட்ட ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலே போதும். ஒரு பொதுச் சொத்தின் மீது பொதுவாக நாம் அதிகம் கவனம் வைப்பதில்லை. ‘ஓ, பொது மருத்துவமனை என்றால் எனக்கும் மிகவும் விருப்பம் அல்லது இரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையம் என்றால் எனக்கு மிகவும் விருப்பம் என்றெல்லாம் நீங்கள் எப்போதும் சொல்வதில்லை. பிரபஞ்ச ரீதியானதும் எல்லோருக்கும் உரிய ஒன்றின் மீதும் நாம் பொதுவாக பற்று வைப்பதில்லை. மிகவும் தனிப்பட்ட ஒன்றின் மீது, நமக்கு மட்டுமே உரியதான ஒன்றின் மீதுதான் நாம் எப்போதும் பற்று வைக்கிறோம். அதனால் தான் நமது மரபில் இஷ்ட தேவதை, இஷ்ட நாமம் என்ற பழக்கங்கள் இருந்துவந்தன.
காலங்காலமாக நமது மரபில் இஷ்ட தேவதை என்ற ஒரு முறை இருந்ததன் காரணம் உங்களுக்கு இறைவனோடு ஒரு தனிப்பட்ட சிறப்புத் தொடர்பை ஏற்படுத்தத்தான்.

அது பொதுவாக உங்களை மிகவும் ஈர்த்த கடவுளாகவும், அந்தக் கடவுளோடு உங்களுக்கு உள்ள ஒரு சிறப்பான தொடர்பை நீங்கள் உணரக்கூடிய ஒன்றாகவும் இருக்கும். ‘இவர் எனக்கே, எனக்கு மட்டுமே’, என்ற உணர்வு இருக்கும். இறைவனே இல்லாத நேரம் என்று ஒன்று இருந்திருக்கிறதா? இல்லை, இறைவன் எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் இருக்கிறார். ஆகவே, இறைவன் இங்கே இப்போது இருக்கிறார் என்ற உணர்வு உங்களுக்கு இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை கொள்ளுங்கள்.

முதலில் இது குழப்பமாகத் தோன்றும், நம்புவதற்கு கடினமாக இருக்கும். இந்த நம்பிக்கையை உங்களுக்குள் விதைக்க விதைக்க, இதைத்தவிர வேறு எதுவும் இல்லை என்ற உணர்வு மெதுவாக வரத் தொடங்கும்.பொதுவாகச் சொல்வார்கள், ‘என்னால் இறைவனைப் பார்க்க முடியவில்லை’. நான் சொல்கிறேன், எல்லாவிடத்திலும் இறையைத் தவிர வேறெதையும் நான் பார்க்கவில்லை! எல்லாவற்றிலும் இறை நிரம்பி இருக்கிறது.வெறும் புத்தி அளவில் இல்லாமல் அனுபவத்தால் இது நமக்கு உள்ளே இருந்து எழுகிறது. ஓவ்வொருவாராலும் இது இயலும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இதற்குத் தேவையானது எல்லாம் ஆழமான நம்பிக்கை. அவ்வளவு தான். நாம் தியானம் செய்வதால்,சிறியவையான நம்முடைய தேவைகளை மட்டும் நம்மால் நிறைவேற்றி கொள்ள முடிவதோடு அல்லாமால், நம்மைச் சுற்றி உள்ள யாருடைய தேவைகளையும் நம்மால் நிறைவேற்றி வைக்க இயலும்.

தியானம் ஒரு கலை. இந்தக் கலையை ஒரு முறை கற்றுவிட்டால் போதும், மனம் நிதானம் கொள்வது எளிதாக ஆகிவிடுகிறது. தியானத்தின் நன்மைகள் பல. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது, புத்தியை கூர்மையாக்குகிறது, வேலை செய்வதற்கான உற்சாகத்தை அதிகமாக்குகிறது மற்றும் உங்கள் நடத்தையை இனிமையாக்குகிறது.
எதிர்மறையான சூழலையும் சுத்தம் செய்கிறது தியானம். தியானத்தின் நன்மைகள் ஏராளம். இங்கு வருவதற்கு சற்று முன் இதையெல்லாம் படித்துக் கொண்டிருந்தேன்.

யோகம் மற்றும் தியானப் பயிற்சியினால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன, நமது மரபணு (DNA) எப்படி மாற்றமடைகிறது போன்ற பரிசோதனைகளை அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள்  செய்தார்கள்.யோகமும் தியானமும் உடலளவில் பல அனுகூலமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது நடப்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். நாம் உள்ளே இருந்து மாற்றமடையும்போது, நம்மைச் சுற்றி உள்ள உலகம் கூட மாற்றமடைகிறது.

இன்றைக்கு உலகில் ஏரளமான மாற்றங்கள் தேவைப்படுகிறது.இந்த நாட்டில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று நீங்களும் விரும்புகிறீர்களா? அந்த மாற்றம் இப்போது ஆரம்பிக்கிறது, இங்கே இருந்து, நமக்குள் இருந்து. நாம் என்ன விதமான மாற்றமடைய வேண்டும் என்று நாம் யோசிக்க வேண்டும். மற்றவர்களை சுட்டிக் காட்டுவது எளிது, நம்மை நாமே மாற்றிக் கொள்வது கடினம். நிச்சயம் இதை நீங்களே அடிக்கடி சொல்லியிருப்பீர்கள். நான் சொல்கிறேன், உங்களுக்குள் மாற்றம் ஏற்படுத்துவது கடினமல்ல. நிச்சயம் முடியும், ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

முதலில் இதற்காக நாம் செய்ய வேண்டியது, நமக்கே நமக்கு என்று ஒவ்வொரு நாளும் 15 - 20 நிமிடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில், தளர்ந்து இருந்துகொண்டு.‘நான் யார்? எனக்கு உண்மையில் என்னதான் வேண்டும்?’ என்று அமைதியாக உட்கார்ந்து யோசியுங்கள்.
இதைப் பற்றி யோசிப்பது மிக முக்கியம். இந்த ஒரு எண்ணம் உங்கள் மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களைக் கரைக்கும், வாழ்க்கையில் உற்சாகமும் மகிழ்ச்சியும் மறுபடி நிறையும்.ஏதாவது ஒரு போதைப் பொருளுக்கு அடிமையாகி அதன் ஆதிக்கத்தில் தான் இன்று நம் சமூகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களும் நடக்கிறது.

ஏதாவது ஒரு பொருளுக்கு ஒருவர் ஏன் அடிமையாகிறார் என்பதை நாம் முதலில் பார்க்க வேண்டும். உற்சாகக் குறைவும் வாழ்க்கையில் விரக்தியையும் ஒருவர் அனுபவிப்பதால், அதை ஈடு செய்ய ஏதாவது ஒரு போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். எல்லோரையும் நமது சத்சங்கத்திற்கு அழைக்கிறேன். விட்டுவிட முடியாத அளவு ஆன்மீகத்தில் அப்படி ஒரு பழக்கத்தை நிச்சயமாய் வழங்குகிறேன். இங்கு இருக்கும் இளைஞர்களைப் பாருங்கள். தங்களுடைய எல்லா போதைப் பழக்கங்களையும் தீய பழக்கங்களையும் விட்டுவிட்டு சத்சங்கத்தின் பேரானந்தத்தில் நனைவதைப் பாருங்கள். இந்த ஆனந்தத்தை வாழ்க்கையில் ஒரு முறை அனுபவித்துவிட்டால், எல்லா எதிர்மறை போக்குகளும் மறைந்தே போகிறது.

உள்ளே பிரச்சினையைக் கொண்டிருக்கும் ஒருவர் சுற்றி உள்ளவர்களுக்கும் பிரச்சினையைத்தான் உண்டு செய்வார். இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. – ஒரு ஆன்மீக அலை. இன்று, உலகத்தின் எந்த பகுதிக்குச் சென்றாலும், பிராணாயாமம், தியானம் மற்றும் சுதர்சனக்கிரியா செய்பவர்கள் இருக்கிறார்கள். உலகின் வட பாதியில், மனிதர்கள் வாழக்கூடிய கடைசி பகுதியில் உள்ள ட்ரோம்சோ நகரத்தில் கூட பிராணாயாமம் தியானம் செய்பவர்கள் இருக்கிறார்கள். அதே போல உலகின் தென் பாதியில், மனிதர்கள் வாழக்கூடிய கடைசி பகுதியில் உள்ள தியரா டெல் ப்யுகோ நகரத்திலும் தியானம் செய்யும் மக்களையும் பிராணாயாமம் செய்யும் மக்களையும் நீங்கள் காணலாம்.

முதலில், தனி ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர நாம் வேலை செய்ய வேண்டும். ‘நான் நிறைவாக இருக்கிறேன், எனக்கு எதுவும் தேவையில்லை,’ எனும் நிறைந்த மனம் மிக சக்தி வாய்ந்ததாய் மாறுகிறது; அவர் மனமும் எண்ணங்களும் ஒரு லேசர் கதிரைப் போல மிகக் கூர்மையாய் ஆகிவிடுகிறது. அப்படிப்பட்டவர் தரும் ஆசிகள் நிச்சயம் பலனளிக்கும்.
நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? பல விஷயங்களுக்குக் கோபப்படுகிறோம்; அல்லது விரக்தியாய் உணர்ந்து, நம்மைச் சுற்றி உள்ளவற்றில் எல்லாம் சுவாரசியம் இழக்கிறோம். பொறாமையில் அவதிப்படுகிறோம். எந்த வழியாய் இருந்தாலும் பரவாயில்லை சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தினால் அமைதி இன்றி தவிக்கிறோம். நீதி நேர்மை பற்றி நினைப்பதேயில்லை.இவை எல்லாம் ஏன் நடக்கிறது? ஏனென்றால், எங்கோ நமக்குள் நம் மீதும் நம் திறமையின் மீதும் நம்பிக்கை இல்லை. தேவைப்படும் முன்பேயே, நமக்குத் தேவையான அளவை விட அபிரிமிதமாகவே தேவையானவை நமக்குக் கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம். இந்த நம்பிகையை இழந்துவிட்டோம், அதோடு மட்டுமல்லாமல் இந்த அனுபவமும் நமக்கு இல்லை.

எந்த ஒரு மங்கலமான வேலையை ஆரம்பிக்கும் முன்பு எப்போதும் பெரியோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும் மரபு இந்தியாவில் உண்டு. இன்றும் இது கடைபிடிக்கப்படுகிறது. ஒரு பெரிய விழா நடக்கும் போது பெரியவர்களின் பெயரை முதலில் எழுதுகிறோம். இதன் பின் உளவியல் ரீதியான அறிவியல் முக்கியத்துவம் உண்டு. ஒருவருக்கு வயதாக வயதாக மிகுந்த நிறைவு ஏற்படுகிறது. அப்படி மனம் நிறைவடைந்த ஒருவர் வாழ்த்தும் போது அது நிச்சயம் அப்படியே நிறைவேறுகிறது. வேட்கையிலும் துவேஷதிலும் சிக்கி இருப்பவரின் வாழ்த்து பலிதமாவதில்லை. மனம் நிறைவடைந்து ஒருவர், ‘நான் நிறைவாய் இருக்கிறேன், எனக்கு எதுவும் தேவையில்லை.’ என்ற எண்ணம் கொண்டவருக்கு அதிக சக்தி கிடைக்கிறது; அவர் மனமும் எண்ணங்களும் குவிந்த ஒளிக்கதிர் (லேசர்) போல மிகக் கூர்மையாகிறது. அப்படிப்பட்டவரின் வாழ்த்து நிச்சயம் பலிக்கும்.
அதனால் தான் வயதில் முதிர்ந்தவர்களிடம் வாழ்த்து பெறுவது வழக்கமாய் இருந்தது, 

அவர்களுக்கு வாழ்க்கையில் எதுவும் தேவையில்லை. நீண்ட நாள் வாழ்ந்து அவர்களுக்கு வாழ்க்கையில் அதற்கு மேல் எதுவும் தேவைப்படவில்லை, நிறைவாய் இருக்கிறார்கள்.
இதை சிறு குழந்தைகளிடம் கூடக் காணலாம். சுமார் ஐந்து அல்லது ஆறு வயது குழந்தைகளிடம் கேளுங்கள், ‘உனக்கு என்ன வேண்டும்?’. எதுவும் தேவையில்லை என்பார்கள்.இந்தக் குழந்தைப் பருவத்தில், எனக்கு எதுவும் வேண்டாம் என்ற எண்ணம் கொண்டவர்களும் ஆசி அளிக்கலாம், அவர்களுக்கு அந்தச் சக்தி உண்டு. அதேதான் வயதானவர்களுக்கும்.ஆனால், இப்போதெல்லாம் வயதானவர்களிடம் இதைக் காண முடிவதில்லை. அவ்வளவு வயதாகியும், அவ்வளவு காலம் வாழ்ந்தும், அவர்களால், ஆசையை விட முடியவில்லை. அவர்கள் மனதில் நிறைவு காணப்படுவதில்லை.