மாற்றம் தேவை

சனிக்கிழமை, 05/03/2014,

ரோம், இத்தாலி


உங்கள் அனைவருடனும் இருப்பது மிக நன்றாக இருக்கின்றது. நான் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இத்தாலிக்கு வந்திருக்கின்றேன். இந்த மாலைப்பொழுதில் பேசப்போவது மாற்றம் தேவை என்பது பற்றியாகும். இப்போது உளங்கனிந்த சூழலை உருவாக்க என்ன செய்யலாம்நாம் அனைவரும் ஒரு நிமிட நேரம் எடுத்துக் கொண்டு, அருகில், பின்னால்,முன்னால், அமர்ந்திருப்பவரிடம் "நான் உன்னைச் சார்ந்தவன்" என்று கூறலாம், அல்லது உங்களுக்கு எப்படித் தோன்றுகின்றதோ அப்படி அவரை வாழ்த்தலாம். அச்சமயம் மனதில் என்ன நிகழ்கின்றது என்பதை அறிய முடிந்தால் அது பெரிய விஷயம் ஆகும். மனதை  நிகழ்காலத்திற்கு எடுத்து வருவதே தியானம் ஆகும். 

நமது மனதிற்குப் பிடித்த ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச எண்ணும்போது, முறைசார்ந்த சூழல் இசைந்து வராது. மனதிற்குகந்த விஷயத்தை பேச நீங்கள் இயல்பான, தளர்ந்த சூழலில் இருக்க வேண்டும். இப்போது நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். நீங்கள் மற்றவரை வாழ்த்தும் போது, உண்மையாகவே மனதார செய்தீர்களா அல்லது சம்பிரதாயத்திற்கு செய்தீர்களா? தற்காலத்தில் நன்றி” “மன்னிக்கவும் என்றெல்லாம் அடிக்கடி கூறிக் கொண்டிருக்கின்றோம். அவையெல்லாம் வாயளவிலேயே கூறப்படுகின்றன, நமது உள்ளத்திலிருந்து வருவதில்லை, அல்லவா? ஆனால் அதைப் பற்றிய உணர்வு கூட நமக்கு இருப்பதில்லை. நமது உள்நிலையைப் பற்றி கவனம் செலுத்துவது மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றம் உள்ளிருந்து வர வேண்டும்.

சில சமயங்களில் வாழ்க்கை என்பது என்ன? எதை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றோம்? நமக்கு என்ன வேண்டும்? என்றெல்லாம் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.இத்தகைய கேள்விகள் நமது விழிப்புணர்வை தூண்டும். நமக்குள்ளே எதையோ திறக்கும். வார்த்தைகளை விட நமது அணுக்கத்தால் நிறையத் தெரிவிக்கலாம். இதை உங்களது அனுபவமாக உணர்ந்திருக்கின்றீர்கள் அல்லவா? சிலருடன் பேசலாம் என்று தோன்றும், சிலரைத் தவிர்க்கலாம் என்று உணருவீர்கள். ஒரு சிலர் ஏன் உங்களிடம் பேச விரும்புவதில்லை என்று கூட நீங்கள் ஆச்சரியப்படலாம். ஏனெனில் அதிர்வலைகள் மூலம் நாம் அதிகம் தெரிவிக்கலாம். எல்லாமே அதிர்வலைகள் தாம், அவை நமது எண்ணங்கள் உணர்வுகள், மற்றும் உணர்ச்சிகள் எல்லாவற்றையும் பாதிக்கின்றன.

மாறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் எவ்வாறு நமது நேர்மறை அதிர்வலைகளை நிலைப் படுத்திக் கொள்வது என்பதை பற்றித் தான் இன்று பேச எடுத்துக் கொள்ளப் போகின்றோம். எல்லாமே சரியாக நடக்கும்போது புன்முறுவலுடன் இருப்பது எளிதானது. ஆனால், நிலைமை சரியில்லாத போது உங்கள் புன்முறுவலை கட்டிக் காப்பது முக்கியமான விஷயம் ஆகும். அதைத் தான் நான் வாழும் கலை என்று அழைக்கின்றேன். ஒரு சவாலான, சிக்கலான சூழ்நிலையைச் சந்திக்கும் போது, வலு தேவையாக இருக்கும்போதுதான் உங்களுக்கு உற்சாகம் தேவை, அப்போது தான் ஆற்றல் தேவை அல்லவா? அங்குதான் நீங்கள் முயன்று இழுத்துப் பிடிக்க வேண்டும்.
ஒரு டாக்டர் 15 முதல் 18 மணி நேரம் நோயாளிகளுடன் வேலை செய்யும் போதும் தனது ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வது போன்றது இது. எது உங்களுக்கு உள்பலத்தை அளிக்குமோ, எது பரந்த கண்ணோட்டத்தை அளிக்குமோ அதைத் தான் மனிதப் பண்புகள் அல்லது ஆன்மீகப் பண்புகள் என்று அழைக்கின்றோம். ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் எதிர்மறையாகவே பேசிக் கொண்டிருந்தாலோ அல்லது எதிர்மறையாகவே சிந்தித்துக் கொண்டிருந்தாலோ அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் களைப்பாகவும் ஆற்றல் வடிந்துவிட்டது போன்றும் உணருவீர்கள். பெரும்பாலும் நாம் இதைக் கவனிப்பதில்லை.

உங்களது மனப்போக்கை மாற்றிக்கொண்டு உங்கள் மனதிலும், அறிவிலும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்க்கையே மாறத் துவங்குவதைக் காண்பீர்கள்.எல்லோரும் இங்கு இருக்கின்றீர்களா? நான் பேசிக்கொண்டிருக்கும் போது உங்கள் மனமும் வேலை செய்து கொண்டிருக்கின்றது. உங்கள் மனம் "ஆம், ஆம், ஆம்" என்றோ "இல்லை, இல்லை, இல்லை என்றோ கூறிக் கொண்டிருக்கின்றது. நம் மனதில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை அடையாளம் கண்டுகொண்டாலே நாம் ஒரு பெரிய படியை எடுத்து வைத்ததுபோல் ஆகும். நம் மனதில் எப்போதும் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கின்றது? மனமானது கடந்த காலத்திற்கும் வருங்காலத்திற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. கடந்த காலத்தைப் பற்றிய கோபமும், வருங்காலத்தைப் பற்றிய கவலையும்  ஏற்படுகின்றது.

இப்போது தான் நான் ஒரு பத்திரிகையாளருடன் பேசிக் கொண்டிருந்தேன். பெண் பத்திரிக்கையாளர் இளைஞர்களை எவ்வாறு கையாள்வது? ஒன்று கோபமாக இருக்கின்றார்கள் அல்லது கவலையுடன் இருக்கின்றார்கள் வருங்காலத்தில் என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு உங்களது அறிவுரை என்ன?” என்று கேட்டார்கள். யாரேனும் அவர்களுக்கு நம்பிக்கையையும் சக்தியையும் அளிக்க வேண்டும் என்று பதில் கூறினேன். இந்தப் புவியில் ஒவ்வொருவருடைய தேவைக்கும் உரியன அனைத்தும் உள்ளன. மனித பண்புகளும் நிறைந்துள்ளன. நல்லவர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளார்கள். தவறான புரிதல் அல்லது விழிப்புணர்வு பற்றாக்குறை உள்ளவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளார்கள். ஆனால் நல்ல மனிதர்கள் செயலற்று இருப்பதால் தான் பிரச்சினைகளே ஏற்படுகின்றன. அல்லவா?
நல்ல மனம், கனிந்த உள்ளம் கொண்டவர்கள் செயல்பாட்டில் இறங்கினால் நமது சமுதாயம் மேம்படும். இதைத் தான் நாம் மேற்கொள்ள வேண்டும். தூய்மையான இதயம், தெளிவான மனம் நேர்மையான செயல்பாடு என்னும் இந்த மூன்றும் உங்களிடம் இருந்தால் மிக்க நன்று. அப்போது இயற்கையும், இறைமையும் நமக்கு உதவும். மனம் கடந்த காலம் மற்றும் வருங்காலத்திற்கு இடையே ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. கடந்ததை பற்றிய கோபமும் வரக்கூடியதை பற்றிய கவலையும் கொண்டிருக்கின்றது. மனதை நிகழ் காலத்திற்குக் கொண்டு வருவது தான் தியானம் ஆகும்.

ஒருமணி நேரத்திற்கு எதிர்மறையாகவே பேசிக்கொண்டிருந்தாலோ அல்லது எதிர்மறையாகவே சிந்தித்துக் கொண்டிருந்தாலோ அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் களைப்பாகவும் ஆற்றல் வடிந்துவிட்டது போன்றும் உணருவீர்கள். பெரும்பாலும் நாம் இதைக் கவனிப்பதில்லை. உங்களது மனப்போக்கை மாற்றிக் கொண்டு உங்கள் மனதிலும் அறிவிலும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்க்கையே மாறத் துவங்குவதை காண்பீர்கள்.

நமது வாழ்வில் ஏழு அடுக்குகள் உள்ளன. அவை யாவை?

1.   உடல்:  நமது உடலைப் பற்றி மிக அரிதாகத்தான் நாம் அறிந்து கொள்கின்றோம். உடலுக்குச் சரியான அளவு உடற்பயிற்சி, சரியான அளவு உணவு தேவையாகும். உணவை ஒரேயடியாக அடைத்துக் கொள்ளக் கூடாது. அவ்வப்போது அதற்கு சுத்திகரித்தல் தேவையானது ஆகும். ஆயுர்வேதத்தில் எவ்வாறு உடலை பராமரித்து இயற்கையோடு இணைந்திருக்க செய்வது என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது.

2.   இரண்டாவது மூச்சு ஆகும். மூச்சு இன்றி உடலுக்கு மதிப்பில்லை. இவ்வுலகிற்கு நாம் வந்ததுமே செய்த முதல் காரியம் மூச்சு உள்ளே எடுத்தது தான், இறுதியாக செய்யப் போவது மூச்சை வெளியே விடுவது தான். இவ்வுலகிற்கு வந்ததும் நீங்கள் அழுகின்றீர்கள், மற்ற அனைவரும் மகிழ்வுடன் சிரிக்கின்றார்கள். இவ்வுலகை விட்டுப் போகும் போது நீங்கள் புன்முறுவலுடன் செல்ல வேண்டும், பிறர் அனைவரும் அழ வேண்டும். நீங்கள் போகும் போது அனைவரும் சிரித்தால், நீங்கள் சரியாக வாழ வில்லை என்பது பொருள் ஆகும்.

3.   மூன்றாவது மனம். மனம் ஒரு மெழுகுவர்த்தி திரி போன்றது ஆகும். மெழுகுவர்த்தி திரியின் மீது கண்ணாடி மூடியை வைத்தால், ஆக்சிஜன் இருக்கும் வரையிலேயே அந்த திரி எரியும். அது போன்று உங்களை ஒரு கண்ணாடியை போட்டு மூடி வைத்தால் ஆக்சிஜன் உள்ள வரையிலேயே உயிருடன் இருப்பீர்கள். எரியும் சுடரைப் போன்றது மனம். விழிப்புணர்வு ஆக்சிஜனில் தான் வாழுகின்றது. ஆகவே உடல், மூச்சு மற்றும் மனம். மனம் என்பது என்ன? என்னை காண்கின்றீர்களா? நான் பேசுவதைக் கேட்கின்றீர்களா? எதன் மூலமாக நாம் சுவைத்தல்நுகருதல், காண்தல், கேட்டல் இவைகளை செய்கின்றமோ அந்த ஆற்றல் அல்லது விழிப்புணர்வு தான் மனம் என்பது ஆகும்.

4.   நான்காவது அடுக்கு மதிப்பீடு செய்தல், ஆம் இல்லை என்று பகுத்தறிதல், இவை அடங்கியது அறிவு ஆகும்.

5.   அடுத்தது, நினைவாற்றல். உங்களுக்கு பத்து புகழ்ச்சிகளும் ஒரு அவமானமும் தரப்பட்டால், எதை நினைவில் வைத்துக் கொள்வீர்கள் என்று எனக்குக் கூறுங்கள். பத்துப் புகழுரைகளை மறந்து விட்டு ஒரு அவமானத்தையே நினைவில் கொள்வீர்கள். பத்து ஆண்டுகள் திருமண வாழ்வில் ஒன்பது ஆண்டுகள் மிக மகிழ்ச்சியான காலமாக இருந்த போதிலும் சரியாக இல்லாத ஓராண்டு காலம் உங்கள் நினைவில் மேலோங்கி நிற்கும் அல்லவா?நினைவாற்றல் என்பது எப்போதுமே எதிர்மறையானவற்றையே சுற்றிக்கொண்டு அதையே பற்றிக் கொண்டிருக்கும். இதில மாற்றம் மிகத் தேவை. குழந்தைகள் அவ்வாறு செய்வதில்லை. குழந்தைகள் அழுது கண்ணீர் கன்னத்திலே இருக்கும் போதே அவை புன்முறுவல் செய்கின்றன. ஒரு குழந்தை ஒரு நாளில் நானூறு முறை சிரிக்கின்றது, வளர் இளம் பருவத்தினர் ஒரு நாளில் பதினேழு முறை சிரிக்கின்றனர், வயது வந்தவர் தினந்தோறும் சிரிப்பதில்லை. ஒவ்வொருவர் முகத்திலும் சிரிப்பை வரவழைப்பதே எனது குறிக்கோள் ஆகும்.

6.       நினைவாற்றலுக்கு அடுத்தது 'தான்' எனும் அகந்தை. அதுவே இன்று உலகெங்கிலும் காணப்படும் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. தான் எனும் அகந்தை நமக்கும், பிறருக்கும் இடையே ஒரு சுவர் எழுப்பி விடுகின்றோம். இவ்வுலகிற்கு நாம் வந்த போது, சுவர்களுடன் வந்தோமா? எவ்வாறு குழந்தைகள் பிறருடன் கலந்து உறவாடுகின்றார்கள் பாருங்கள். அனைவருடனும் அவர்கள் சுமுகமாக பழகுகின்றார்கள். குழந்தைப் பருவத்தில் நாம் சுவர்கள் எழுப்பியதில்லை, காலப் போக்கில் பிறருக்கும் நமக்கும் இடையே வேலி அமைத்து விட்டோம். பல்வேறு விதமான தீய எண்ணங்கள் உருவாக்கி விட்டன. பாலினம், வயது, மொழி, சமயம் போன்ற பலவற்றில் தீய மனப்போக்கு உருவாக்கிவிட்டது. இந்த வெறுப்புணர்வை அகற்றி விட்டால் மனித நேயம் நமக்குள் எழும். 

7.   இறுதியான அடுக்கு ஆத்மா வாகும். நம்முள் உள்ள ஒன்று மாற்றமே இல்லாதது. மற்ற அனைத்தும் மாறும் போதும் ஆத்மா மட்டுமே மாறாதது. நமது உடல், மனம் உணர்ச்சிகள் மாறும், மக்கள் மாறுவார்கள், ஆயின் நம் உள்ளே ஆழத்தில் இருக்கும் குறிப்பீடு மாறவே மாறாது. அதுவே ஆத்மா ஆகும். அதுவே மெய்ப்பொருள். அதில் தாழிட்டுக் கொள்வதையே நான் ஞானம் என்று அழைக்கின்றேன்.