பரமானந்தத்தை அடைவது

செவ்வாய்க்கிழமை 25 மார்ச், 2014,

வியன்னா, ஆஸ்ட்ரியா


கேள்வி - பதில்

ஆன்மீகத்தை அடைவது அவசியம் என்று ஏன் நினைக்கிறீர்கள் ?

குருதேவர்: நிபந்தனையற்ற மகிழ்ச்சியை விரும்புகிறாய். சிறிய விஷயங்களால் பாதிக்கப் படாத அமைதியை விரும்புகிறாய். இயல்பான ஒன்று. ஆன்மீகத்தை விரும்புவது, ஆழ்ந்த அமைதியை விரும்புவது போன்றது. அன்பையும், சுகத்தையும், மகிழ்ச்சியையும் விரும்புவது போன்றது. ஆன்மீகத்தை, சமஸ்கிருத மொழியில் மிக்க மகிழ்ச்சியை அடைவதற்கு, அதிக சுதந்திரத்தை (நிர்வாணம்) அடைவதற்கு நிகராக சொல்கிறார்கள். நீர்கீழ் நோக்கி ஓடுவது போல், தீ மேல் நோக்கிச் செல்வது போல், மனிதன் ஞானம் அடைய விரும்புகிறான்.

ஆன்மீக குருவை அடைவது என்பதற்கு என்ன அர்த்தம்?

குருதேவர்: ஆன்மீக குருவை அடைந்தவர்கள் இயல்பாக இருப்பார்கள். சுகமாக இருப்பார்கள். தெரியாத இடத்தை நோக்கி பயணம் செய்ய தன்னம்பிக்கை வரும். நம்மை பாதுகாக்க ஒருவர் உள்ளார். நான் கீழே தடுமாறி விழும்போது காப்பாற்ற என் குரு இருக்கிறார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை வரும்.

ஒருவரை பற்றித் தெரியாத போது அவரிடம் அன்பு செலுத்துவது எப்படி ?

குருதேவர்: குழந்தை பிறந்தவுடன் தன் தாயின் கண்களைப் பார்க்கிறது. தாயிடம் அன்பு செலுத்தத் துவங்குகிறது. குழந்தைக்குத் தாயைப் பற்றி ஒன்றும் தெரியாது. தாயின் பெயர் கூடத் தெரியாது. தாய் எந்தப் பள்ளிக்கு சென்றாள்? என்ன படிப்பு படித்திருக்கிறாள்? அவளுக்கு என்ன வயது? குழந்தை இதை பற்றி கவலைப்படுவதில்லை. எதை பற்றியும் அறியவில்லை. அதே போல் உன் வீட்டிலிருக்கும் நாய்க் குட்டிக்கு, உன்னைப் பற்றி எதுவும் தெரியாது. ஒரு வேளை உன்னைப் பற்றி அறிந்தால் உன்னிடம் அன்பு செலுத்தாது! எனவே ஒருவரிடம் அன்பு செலுத்த அவரை பற்றி அறிவது அவசியம் இல்லை.

குருதேவா! மனதைக் கட்டுப் படுத்த சிறந்த வழி என்ன ?

குருதேவர்: ஏன் மனதைக் கட்டுப்படுத்த விரும்புகிறாய்? உன் மனதை ஒரு நிலையில் வைக்க விரும்புகிறாய் சரியா? அதை கட்டுப்படுத்துவது என்று சொல்கிறாய். மனம் ஏன் அங்குமிங்கும் செல்கிறது? ஒரு நல்ல டி.வி. நிகழ்ச்சியைப் பார்க்க உன் மனதை கட்டுப்படுத்த அவசியம் இருக்கிறதா? நீ உன் குழந்தையிடம் அன்பு வைத்திருக்கிறாய். உன் மனைவியிடம் அன்பு வைத்திருக்கிறாய். உன் மனதை அதற்காகக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கிறதா? இல்லை!
எதன் மேல் விருப்பம் உள்ளதோ, அப்போது மனதைக் குவித்து அதன் மேல் எடுத்துச் செல்லத் தேவையில்லை. விருப்பமில்லாத விஷயங்களில் ஈடுபட மனதை அதன் மேல் வைக்கத் தேவையாகிறது. தற் சமயத்தில் விருப்பமில்லாத பொருளில் கவனம் வைக்க வேண்டும் போது மனம் அலையும். அப்போது மூச்சின் மேல் கவனம் செலுத்துவது, சுதர்சன கிரியா செய்வது, யோக சாதனைகள் முதலியன உதவிக்கு வரும்.அநீதியை மட்டும் நினைக்கும் போது மனம் கொதிக்கும். அப்போது சரியாக சிந்திக்க முடியாது. செய்யும் காரியமும் சரியாக இருக்காது. அந்த நிலையில் நீ செய்யும் செயலும் அநீதிக்குத் துணையாகி விடும்.

அநீதியைப் பார்க்கும் போது நீ மூன்று வழிகளில் செயல்பட வேண்டும்.
·         சிறு சிறு துளிகளாக அதை எடுத்துக் கொள்.
·         எல்லா இடத்திலும் சில நல்லவர்கள் இருப்பதை நீ அறிய வேண்டும். உலகில் 100 நல்லவர்கள் இருக்கும் இடத்தில் 5 கெட்டவர்களே இருக்கிறார்கள். ஏனென்றால் 100 நல்லவர்கள் தூக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களைத் தட்டி எழுப்பு.
·         இறை சக்தி உன்னை விரும்புகிறது என்பதில் உறுதியாக இரு. இந்த சக்தி உன்னை எப்போதும் காப்பாற்றும் என்பதை உறுதியாக நம்பு. நீ இந்த உலகத்தை எப்போதும் கட்டிக்காக்க போவதில்லை. 80 -100 ஆண்டுகள் தான் வாழ முடியும். 200 ஆண்டுகளுக்கு பின் என்ன நடக்கும் என்பதில் நீ ஒன்றும் செய்ய இயலாது. அதே போல் 1900 கோடி ஆண்டுகளாக இருந்து வரும் உலகில் நீ ஒன்றும் செய்ய வில்லை. உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்து கொள். நீ செய்யக் கூடியது எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனை மட்டுமே.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி நம் சூரிய மண்டலம் பல கறும் துவாரங்களுக்கிடையே (ப்ளாக் ஹோல்ஸ்) நகர்ந்து செல்கிறது. அவற்றுக்கு அருகில் சென்றால் கறும் துவாரங்கள் இந்த ஒட்டு மொத்த சூரிய மண்டலத்தையும் விழுங்கி விடக் கூடிய சக்தி வாய்ந்தவை. கவனியுங்கள்! இந்த பூமி மட்டும் அல்ல. சூரியன் சந்திரன், வியாழன் மற்றும் எல்லா கிரகங்களும் அழிந்துவிடும். எல்லாம் சூனியத்தில் இணைந்து மறைந்து விடும். நீ மிகவும் கவலையாய் இருக்கும் போது, அநீதியை பற்றிக் கோபப்படும் போது ஒரு கோளரங்கத்துக்கு சென்று கிரகங்களின் இயக்கத்தை கவனி. இது கடைசிப்படி. அதற்கு முன் மக்களைத் தட்டி எழுப்பு. விழிப்புணர்வை பரவச் செய். அநீதிக்கு எதிராகப் போராடச் செய்.

எதிர் மறை கர்ம வினையை போக்குவது எப்படி? அது எப்படி நம்மிடம் வருகிறது?

குருதேவர்: நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்த அறையில் விளக்கு இல்லாத போது இருள் இருந்தது. இல்லையா? விளக்கு எடுத்து வந்த பின் இருள் எங்கு சென்றது? அது அடுத்த அறைக்குச் சென்றதா அல்லது ஜன்னல் வழியாக ஓடி மறைந்ததா? புரிந்ததா ?
அதே போல் எதிர் மறை கர்ம வினை என்பது சற்று இருளான நிலை. ஒளியில்லை. சற்று ஒளியைக் கொண்டு வந்தால் அது மறைந்து விடும். எதிர்மறை கர்ம வினையை எப்படிப் போக்கலாம்? தியானம், சேவை மற்றும் ஞானம். தேவையுள்ளவர்களுக்குச் சேவை செய். எதிர் மறை கர்ம வினை உன்னைத் தொடாது என்பதைத் தெரிந்து கொள். நிழல் உன்னைத் தொடாது.

என் வாழ்க்கையின் பாதையைக் காண்பது எப்படி? அதைக் கண்டபின் அது தான் என் பாதை என்பதை அறிவது எப்படி ?

குருதேவர்: உனக்கு சந்தேகம் வந்தால் உன் பாதையை அடைந்துவிட்டாய். ஏனென்றால் ஆக்க பூர்வமான விஷயத்தை நீ சந்தேகிக்கிறாய். எதிர் மறையாய் இருப்பதை சந்தேகிப்பதில்லை. ஒரு மனிதரின் நேர்மையை சந்தேகிக்கிறாய். ஒரு மனிதர் நாணயமில்லாதவர் என்று சொன்னால் அதை சந்தேகிப்பதில்லை. யாராவது உன்னிடம் “நான் உன்னை மிகவும் விரும்புகிறேன்“ என்று சொல்லும்போது “உண்மையாகவா? என்று கேட்கிறாய். “நான் உன்னை மிகவும் வெறுக்கிறேன் “என்று யாராவது சொல்லும் போது “உண்மையாகவா? என்று கேட்பதில்லை. உன் மகிழ்ச்சியை நீ சந்தேகிக்கிறாய். யாராவது “நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா? என்று கேட்கும் போது, “எனக்கு உறுதியாக தெரியவில்லை“ என்று சொல்கிறாய். உன் மனச் சிதைவை பற்றி எப்போதும் சந்தேகப்படுவதில்லை.

என் இதயத்தை (அதிக அன்புக்காக) திறப்பது எப்படி ?


குருதேவர்: உன் இதயத்தை திறக்க முயலாதே. நீயே உன் இதயத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது. அதை என்னிடம் விட்டு விடு.