நீங்கள் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளப்படுகிறீர்கள்

புதன்கிழமை 01 - ஜூலை, 2015

பெங்களூர், இந்தியா


“சாதாரணமாக இருக்க முயற்சி செய் “ என்ற பிரசுரத்தின் தொடர்ச்சி கீழே வருகிறது.

கேள்வி - பதில்கள்

நான் ஒரு வயதானவன். நான் இறந்து விட்டால் நல்லது என்று நினைக்கிறேன். ஏனென்றால் அதிகமாக மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

வாழ்க்கை என்றால் அப்படித்தான். நீ மற்றவர்களுக்கு பாரமாக இருப்பதாக நினைக்காதே. நான் தனியாக சுதந்திரமாக வாழவேண்டும் என்று நினைக்காதே. நீ குழந்தையாக இருந்த போது, உன் பெற்றோர்கள் உன்னை பார்த்துக் கொண்டார்கள். உன் வயதான காலத்தில், உன் பிள்ளைகளோ, அல்லது வேறு யாரோ உன்னைப் பார்த்துக் கொள்வார்கள். வாழ்க்கையில்,குழந்தை பருவத்தையும், வயோதிகப் பருவத்தையும் விட்டு மற்ற சமயங்களில் நீ சுதந்திரமாக, யாரையும் நாடாமல் இருப்பதாக நினைக்கிறீர்கள். அப்போது கூட நாம் பல விஷயங்களை நாடி வாழ்கிறோம். உன் கவனம் இறைவனிடம் இருந்தால், நீ மற்றவரை நாடி வாழ்வதை பாரமாக கருதமாட்டாய்.

சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஏக்கமும் நீங்கி விடும். உன்னை ஒரு பாரமாகக் கருதுவதும், சுதந்திரம் இல்லை என்ற எண்ணமும் இரண்டுமே மறைந்து விடும். சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களும் வருத்தப்படுகிறார்கள். ஏனென்றால் சுதந்திரத்தை விரும்புபவர்களும் துக்கத்தில் வாழ்கிறார்கள். விழித்துக்கொள். நீ குழந்தையாக இருந்த போது யாரையும் சாராமல் வாழ்ந்தாயா? எந்தக் குழந்தையும் நான் என் பெற்றோர்களுக்கு பாரமாக இருப்பதால்,எங்கிருந்து வந்தேனோ, அங்கேயே திரும்பிச் செல்கிறேன் என்று சொல்வதில்லை.இல்லையா? 

பெற்றோர்களிடமிருந்து குழந்தையாக இருந்தபோது கிடைத்த உதவியோ, நண்பர்களிடமிருந்து கிடைத்த உதவியோ, எதுவானாலும் அது ஒரே இடத்திலிருந்து தான் வருகிறது. அதே இறைவன் தான் உன்னை பெற்றோராக பார்த்துக் கொண்டார். அதே இறைவன் இப்போது ஒரு செவிலிப் பெண்ணின் உருவிலோ, அக்கம் பக்கத்தவர்கள் உருவிலோ, அல்லது நண்பர்கள் உருவிலோ, எப்போதும் உன்னை அக்கறையாக பார்த்துக் கொள்வார்கள். கவலைப்பட வேண்டாம். நாம் நம்முள் கட்டி வைத்திருக்கும் பாதுகாப்பின்மை என்ற உணர்வை வெளியே தூக்கி எறிந்து, அதை எரித்து விட வேண்டும். கடைசி மூச்சை நீ விடும்போது உன் பிள்ளைகள் உன்னைப் பார்த்து கொள்வார்கள் என்று எண்ணாதே. உன் கடைசி மூச்சின் போது, ஒரு வேளை உன் வேலைக்காரனோ, பக்கத்து வீட்டுக்காரனோ வந்து உதவக் கூடும். யாருக்குத் தெரியும்? யார் உனக்கு உதவி செய்தாலும், அந்த தனி நபர் உனக்கு உதவவில்லை. கடவுள் அவர் உருவில் வந்து உதவுகிறார் என்று புரிந்துகொள். 

உனக்கு உதவி தேவையாக இருக்கும் போது, தெய்வசக்தி ஏதாவது ஒரு உருவில் வந்து உதவும். எனவே மற்றவர்கள் உதவிக்குக் கடன்பட்டிருப்பதாக நினைக்கத் தேவையில்லை. புரிந்ததா?அப்படிக் கடன்பட்டிருப்பதாக நினைப்பது அஞ்ஞானமாகும். தெய்வம் தான் மற்றவர்கள் மூலமாக உனக்கு உதவுகிறது. இந்த அத்வைத ஞானத்தை நீ புரிந்து கொண்டால், நீ மலர்ச்சியடைவதை யாரும் தடுக்க முடியாது.

குருதேவா! ஆன்மீகப் பாதையில் நம் யோக்யதையை எப்படி அதிகரிக்கலாம்?

யோக்யதையை அதிகரித்து கொள்ளவேண்டும் என்ற நினைப்பே, உன்னை அந்த திசையில் செல்ல வைக்கும். ஒருவன் தனக்கு யோக்யதை இருப்பதாக நினைத்தால் தான் பிரச்சினை என்று நீ புரிந்துகொள்ள வேண்டும். புகார் சொல்லத் துவங்கும் போது யோக்யதை குறைய துவங்குகிறது. புகார்கள் தீர்ந்த பின், ஒருவன் தன் யோக்யதையை பற்றி நினைக்காத போது, எளிமையும் அடக்கமும் உதயமாகும். நம் தகுதிக்கு மேல் நமக்கு கடவுள் கொடுத்திருக்கிறார் என்று எண்ணும் போது நமக்குள் நன்றி ஊற்றெடுக்கும்.

நமக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது என்று நினைக்கத் துவங்கினால், நமக்குள் ஏதோ ஒன்று சிறியதாகி விடும். இப்படி நினைக்கத் துவங்கினால், நாம் செய்யும் காரியங்களுக்கு வெகுமதியை எதிர்பார்க்கிறோம். ஒரு தொழிலாளர் இயக்கத்தில் சேர்ந்து அதிக ஊதியத்துக்காகப் போராடுவது போலாகிறது. நம் தகுதியை விட இறைவன் நமக்கு அதிகமாகக் கொடுத்திருப்பதாக நினைக்கும் போது, நாம் ஒரு முதலாளியைப் போல் நடந்து கொள்கிறோம். எதற்காகவும், மற்றவரிடம் கேட்க (கையேந்த) வேண்டிய அவசியம் இல்லை.

குருதேவா! ஒரு மகான் ஒரு யந்திரத்தை என்னிடம் கொடுத்து தினந்தோறும் பூஜை செய்யச் சொன்னார். ஆனால் அதனால் நன்மை ஒன்றும் கிடைக்கவில்லை. இந்தப் பொருட்கள் எவ்வளவு உபயோகமானவை?

இப்படிப்பட்ட விஷயங்களில் சிக்க வேண்டாம். மக்கள் 5 லட்சம் ரூபாய் கொடுக்கச் சொல்லி, நிறைய லாபம் தருவதாகச் சொல்வார்கள். இவர்களிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம். உனக்கு மந்திரங்கள் தருவதாக சொல்லி ஏமாற்றும் பலரை எனக்குத் தெரியும். அப்படி சொல்பவர்களுக்கே மந்திரங்கள் தெரியாது. அவர்களுக்கு சமஸ்கிருத மொழி தெரியாது. ஆனால் யந்திரங்களை செய்து விற்கிறார்கள். இதை நம்பும் பலர், அதிக தொகையை கொடுத்து, யந்திரங்களை வாங்குகிறார்கள். பிறகு என்னிடம் வந்து, இந்த யந்திரம் வேலை செய்யவில்லை (இதனால் பலன் கிடைக்க வில்லை) என்று சொல்கிறார்கள். கண்டிப்பாக அவை வேலை செய்யாது.இதில் சிக்கிக் கொள்ளாதே. நம் பேராசை தான் இப்படிச் செய்யத் தூண்டுகிறது. பொறுமையாக இரு. நீ பேசாமல் இருக்கும் இடத்தில் இரு. உனக்கு வேண்டிய அனைத்துமே உன்னை வந்தடையும்.

மதங்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?

மதங்களுக்கு சமுதாயத்தில் ஒரு பங்கு உண்டு. ஒவ்வொருவரும் ஒரு மதத்தில் பிறக்கிறார்கள். உன் வாழ்வின் எல்லா வித சடங்குகளும், நீ பிறக்கும் மதத்தை பொறுத்திருக்கிறது. மதத்தின் பங்கு ஓரளவுக்கு மட்டுமே. மதம் எல்லாமும் ஆகாது. நீ ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும். நீ மதத்திலிருந்து ஆன்மீகத்துக்கு செல்வது மிகவும் அவசியம். மதத்திலிருந்து ஆன்மீகத்துக்கு செல்பவர்கள், தங்களுடைய மதத்துக்கு கண்ணியத்தைக் கொண்டு வருகிறார்கள். மதத்திலிருந்து குற்றத்தை நோக்கிச் செல்பவர்கள், தங்களுடைய மதத்தைக் கேவலப்படுத்துகிறார்கள். இப்போது உலகமெங்கும் இப்படி நடக்கிறது.

இன்று மக்கள் மதத்திலிருந்து ஆன்மீகத்துக்கு செல்வதில்லை. மக்கள் மதத்தின் பெயரால் குற்றம் செய்கிறார்கள். தங்கள் சுயநலத்துக்காக மதத்தை உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் மனித குலத்துக்கு பேராபத்து வந்திருக்கிறது. ஆன்மீகத்துக்கு செல்லும்போது, எல்லோரையும் உன்னைச் சேர்ந்தவர் என்று எண்ணுவாய். இல்லாவிட்டால், மதம் மக்களைப் பிரிக்கிறது. உண்மையில், ஒரு மதத்திலேயே, பல உட்பிரிவுகள் உள்ளன. ஆன்மீகப் பாதையில் செல்லும்போது, நீ உன் மதத்தோடு இணைவது மட்டுமல்லாமல், மற்ற மதங்களோடு இணக்கத்தோடு வாழ முடியும்.

குருதேவா! நீங்கள் அரசியல் பற்றிப் பேசினீர்கள். இளைஞர்கள் வியாபாரம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வியாபாரம் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு விசேஷ ஆலோசனை சொல்வீர்களா ?

வியாபாரம் செய்யுங்கள். ஒரே இரவில் நிறையப் பணம் சேர்க்க ஆசைப்படாதீர்கள். நிலையான, நாள் பட நிலைத்து நிற்கும் வியாபாரமாக இருக்கவேண்டும். பேராசை வேண்டாம். அதே சமயம், தொலைநோக்குப் பார்வையும்,இலட்சியமும் இருக்கவேண்டும். அதே தொலைநோக்கு பார்வையும், இலட்சியமும் பேராசையாக மாற வேண்டாம். நெறிமுறை தவறி உன் வியாபாரம் சரிவடைய வேண்டாம். பேராசையால் வழி தவற வேண்டாம்.