கர்மாவின் திருப்பங்களும் வளைவுகளும்

செவ்வாய்கிழமை, 21 ஜூலை,

2015, பாத் அண்டோகாஸ்ட்


(பிறரது அபிப்பிராயங்களை பற்றிய பயங்களை விட்டுவிடுங்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

குருதேவ், வாழும் கலையில் இணைந்து, இந்த வழியின் அனுபவங்களை பெற்றுப் பின்னர் திடீரென்று எவ்வாறு சிலர், தங்கள் மனதை மாற்றிக் கொண்டு விலகி விடுகிறார்கள்? என்னால் இதை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

இந்த பூமியில் பல்வேறு விதமான மனிதர்கள் இருக்கின்றனர். மீண்டும் கூறுகிறேன், சிலரது காலம் சரியில்லையெனில், அவர்கள் விலகி பின்னர் திரும்பி வருகின்றனர். இதிலுள்ள அனைத்தையும் நிறுத்தி விட்டு, மீண்டும் திரும்பி வருகின்றனர். பிறரது நடத்தையை பற்றி கவலைப்படாதீர்கள். சிலர் தியானம் செய்வதை நிறுத்தி விட்டு, தவறுகளுக்கு திரும்புகிறார்கள்? காலம் சரியாகும் போது மீண்டும் துவங்குகின்றனர். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதையே பார்க்க வேண்டும். இதை விட்டுவிடும் பலர் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. மிகவும் பரிதாபமாகவே காணப்படுகின்றனர். துயர் ஓரளவுக்கு மிகும் போது திரும்பி வருகின்றனர்.  இவ்வாறு நிகழ்வதை பார்த்திருக்கிறீர்களா? இதை நாம் ஒவ்வொரு நாளும் காண்கின்றோம். மரத்தில் அதிகப் பழங்கள் இருக்கும் போது அவைகளை அனுபவித்து, அம்மரத்திற்கு தண்ணீர் ஊற்ற மறப்பது போன்றதாகும். மரம் காய்ந்து விடும் போது பழங்கள் உதிர்ந்து விடும். அதைக் கண்ட பின்னர், மீண்டும் மரத்திற்கு நீர் ஊற்றத் துவங்குகின்றனர். இதுதான் மனித இயல்பு.

பல தீர்க்கதரிசிகளுக்கு இவ்வாறு நிகழ்ந்திருக்கின்றது. அவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள் அவர்களுக்கெதிராக திரும்பியிருக்கின்றனர். அப்பாதையிலிருந்து விலகிச் சென்றிருக்கின்றனர். அல்லவா? கர்மாவின் விதி என்பது புரிந்து கொள்ள முடியாதது. பரந்த மற்றும் பிரம்மாண்டமானது. அதை 2+2 என்பது 4 என்பது போல் புரிந்து கொள்ள முடியாது.

குருதேவ், ஆஸ்ரமத்தில் ஏன் முக்கியஸ்தர்களுக்கான மேஜை இருக்கின்றது? ஏன் சிலர் மட்டும் பிறரைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களுக்கு வேண்டிய அளவுக்குத் தாங்களே பரிமாறிக்கொள்ள முடிகிறது?

நல்லது, எனக்குத் தெரியாது. நீங்களே கண்டுபிடித்துக் கூறுங்கள். மக்கள் மௌனத்திலிருக்கும் போது, அவர்களிடமிருந்து விலகி,விருந்தினர்  தனி மேஜையிலிருப்பது நல்லது தானே? ஏன் கூடாது? இது போன்ற சிறிய விஷயங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். ஏன் ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்? நீங்கள் மட்டும் ஏன் சற்று உயரத்தில் தனி சோபாவில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று என்னை நீங்கள் நாளை கேட்கக் கூடும். (சிரிப்பு) இங்கு சற்று உயரத்தில் அமர்ந்தால் உங்கள் அனைவரையும் என்னால் அல்லது நீங்கள் அனைவரும் என்னைப் பார்க்க முடியும் என்று நான் விளக்கம் தர வேண்டியதிருக்கும். ஒருவருக்கு லேபிள் இருக்கிறது ஏன் வேறொருவருக்கு இல்லை ஏன் எல்லோரும் ஒரே மாதிரியான இராணுவ உடையில் இல்லை, போன்ற இத்தகைய சில்லறை விஷயங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.இவையெல்லாமே பொருத்தமற்றவை.  உங்கள் மனதை ஞானச்செய்தியில் லயிக்க விடுங்கள். ஓர் பெரிய காரணத்துக்காக இங்கு இருக்கின்றீர்கள்.  சிறிய துகள்கள் உங்கள் கண்களை மறைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கு எல்லாமே ஏராளமாக இருக்கின்றது. என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் இல்லம். இங்கு இயல்பாக இருங்கள். யாரேனும் ஒருவர் வந்து உங்களை சொந்த உணர்வுடன் இயல்பாக இருக்கச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

என்னுள் இருக்கும் தெய்வத்திடம் எவ்வாறு  மேலும் மேலும் அதிகத் தொடர்புடன் இருப்பது? பல பிறவிகள் எடுக்க வேண்டுமா?

இளைப்பாறுங்கள். நீங்கள் ஏற்கனவே தொடர்பு கொண்டு விட்டீர்கள். சற்றே விழித்தெழுந்து காண வேண்டும், அவ்வளவு தான். இளைப்பாறுங்கள்! பைபிளில் கூட," அசைவின்றியிருங்கள், நானே கடவுள் என்பதைக் காணுங்கள் "என்று கூறப்பட்டிருக்கிறது. வெட்ட வெளியில் இருக்கிறீர்கள் அல்லவா? வெளியினைத் தேடவேண்டுமா என்ன? நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? நான் வெட்ட வெளியில் இருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். திரும்பத் திரும்ப "நான் வெட்ட வெளியில் இருக்கிறேன்" என்று கூறத் தேவையில்லை.

ஜெர்மனியில் இருக்கிறீர்கள் அது உங்களுக்குத் தெரியும். அது போதும். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன்,நான் ஜெர்மனியில் இருக்கிறேன் நான் ஜெர்மனியில் இருக்கிறேன்  என்று திரும்பத் திரும்பக் கூற வேண்டியதில்லை (சிரிப்பு). அவ்வாறு செய்தால், ஜெர்மனியிலோ அதன் எல்லையிலோ மன நல மருத்துவமனைக்கு அனுப்பப்படுவீர்கள்! சில விஷயங்களை பாவனையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அது எவ்வாறு நிகழும்? எதுவும் செய்யாமல்  முற்றிலும் இளைப்பாறும் போது நீங்கள் ஆற்றலின் மூலத்தை மெதுவாகத் தட்டுகிறீர்கள். பின்னர் செயலில் ஈடுபடும் போது இயல்பாகவே இருங்கள்.

இப்போது இதைப் புரிந்து கொள்ள முடியவில்லையெனில் பரவாயில்லை. ஏனெனில் அதிக ரஜஸ் உடல் கூற்றில் இருக்கும் போது, புரிந்து கொள்ள முடியாது. அதனால் தான், தியானம் செய்யுங்கள், இளைப்பாறுங்கள், தீவத் தொடர்பில் பேரார்வம் கொள்ளுங்கள், என்று கூறுகிறேன். அது உங்களை படிப்படியாக முன்னேற்றும். உங்களுக்குப் பொறுமையும் தேவை. அவசரப்படாதீர்கள். யாரேனும் ஒருவர்," இன்று உங்களை இறைவனுடன் தோடர்பு கொள்ளச் செய்கிறேன்"என்று கூறினால் ஏற்றுக் கொள்ளாதீர்கள். சரி நன்றி. எனக்கு அவசரம் எதுவுமில்லை என்று கூறி விடுங்கள். அசைவின்றி அமர்ந்து தியானம் செய்யும் போது நீங்களே பரப்பு என்பதை அறிந்து கொள்வீர்கள். அங்கேயே எப்போதும் நிலைத்திருக்க முடியாது. எனவே திரும்பி செயலில் ஈடுபடுங்கள். செயல் வீரராகவே இருங்கள். இவையிரண்டும் முரண்பட்டதாக இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் செயலில் ஈடுபடும் போதும் மேய்யுனர்வுடன் இருப்பதைப் புரிந்து கொள்வீர்கள். என்ன நிகழ்ந்தாலும் அந்த நிலை மறையாது. எப்போதும் இருக்கும். ஆனால் அந்நிலையை அடைய அதற்குரிய காலம் ஆகும்.

குருதேவ், எனக்கு என்னைப் பற்றிய சுய மதிப்பு குறைவாக உள்ளது. என்னையும் பிறரையும் நான் விமர்சிக்கின்றேன். எவ்வாறு என்னுடைய தான் என்னும் அகந்தையை சீராக்குவது?  என்னுடைய ஆற்றல் குறைவாக இருக்கும்போது இவ்வாறு நிகழ்வதை காண்கின்றேன். ஆனால் இதிலிருந்து விடுபடுவது நல்லதற்கா?

இப்போதே, இந்தக் க்ஷணத்தில் விடுபடுவது சிறந்தது. இல்லையெனில் அதற்கு வாய்ப்பு இல்லை. நீங்கள் தயாரா? சாத்தியம் என்றால் இந்தக் க்ஷணமே அது சாத்தியம் தான்.  சுயமதிப்புக் குறைவு என்று உங்கள் மீதே நீங்கள் எழுதி வைத்துக் கொண்டிருக்கும் லேபிளை அழித்து விடுங்கள். உங்களுக்கு சுய மதிப்புக் குறைவு என்று யார் கூறியது? அது கற்பனை. முட்டாள்தனம். உங்களுக்கு குறைவான சுயமதிப்பு இல்லை. அந்த லேபிளை முதலில் அகற்றுங்கள்.

குருவினை பற்றிய பேராவல் அதிகரிக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும்?

பேராவல் நல்லது தான். அதுவே சக்தி. பெரிய ஆற்றல். ஹிந்தியில்," தடப் ஹி ஈஸ்வர் ஹை" (பேராவலே கடவுள்) என்று கூறப்பட்டுள்ளது. பேராவலுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

குருதேவ், எவ்வாறு சங்கடங்களைப் பற்றி எழுதிப் போடும் பெட்டி வேலை செய்கிறது?


அது வேலை செய்கிறது அல்லவா? (பலர் அமோதிக்கின்றனர்) அதுதான் என் தொழில் ரகசியம்! அதைப் பற்றிப் பின்னர் கூறுகிறேன். அது ரகசியமும் புனிதமானதும் கூட. நான் கூறுவதெல்லாம் ரகசியம் மற்றும் அதிக புனிதமுடையவையுமாகும்.