நேர்மை ஏன் முக்கியமானது?

சனிக்கிழமை, 18 ஜூலை, 2015,

பாத் அண்டோகாஸ்ட் - ஜெர்மனி




(மன்னிக்க எளிதான வழி என்னும் இடுகையின் தொடர்ச்சி)

அன்புள்ள குருதேவ், கியூபாவில் புரட்சியாளர்கள் அஹிம்சையைக் கடைபிடிக்க எடுத்துக் கொண்ட தீர்மானம் தொடர்பாக அவர்களை சந்தித்ததற்கு வாழ்த்துக்கள். காசாவின் ஹாமா தலைவர்களையும் இஸ்ரேலிய அரசாங்க உறுப்பினர்களையும் தாங்கள் அணுகி, இதே போன்று செய்வதற்கு ஊக்குவிக்க முடியுமா?

ஆம்.அரசியல் தலையீடு இருக்கும் போது எங்கேயோ நேர்மை மறைந்து,பேராவல் உள்ளே நுழைந்து விடுகிறது. சில இடங்களில் மக்களே மகிழ்வுடன் மோதல்களை வரவேற்கின்றனர், ஏனெனில் மோதல்கள் கறவை மாடுகளாகி விடுகின்றன.பலருக்கு உலக அமைதி வேண்டியிருப்பதில்லை. இல்லையெனில் அவர்களது படைக்கருவிகள் சந்தை என்னவாகும்? வளர்ந்த நாடுகளில் ஏராளமான படைக் கருவிகள் மற்றும் தளவாடங்கள் உள்ளன. உலகம் அமைதியாக இருந்தால், அவர்கள் தங்கள் மாபெரும் தொழிற்சாலைகளை மூட வேண்டியதிருக்கும். அவர்களை பொறுத்த வரையில் எங்காவது மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தால் தான்  அவர்களால் போர்க்கருவிகளை விற்க முடியும். இது  நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிகக் கசப்பான உண்மை.

இந்தியாவின் சாராய தொழில் போன்றது. மக்கள் குடித்துப் போதைக்கு அடிமையாக அரசாங்கமே ஊக்குவிக்கின்றது, ஏனெனில் அரசு வருவாய்க்கு ஆதாரமானது ஆகும். என்ன ஆகிறது? மக்கள் குடித்துக் குடித்து போதைக்கு அடிமையாகி அவர்களது குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. யார் கஷ்டப்படுவது? பெண்களே மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அமைதி என்பது எளிதான விஷயமன்று. அது மிகவும் சிக்கலானது. அதனால் தான், தலைவர்களும் முடிவெடுப்பவர்களும் தியானம் செய்யத் துவங்க வேண்டும் என்று நான் கூறுகின்றேன்.

உலக யோகா தினத்தன்று உலகத் தலைவர்களுக்குத் தியானம் கற்றுத் தந்த போது ஐநாவின் பொதுக் காரியதரிசி பன் கி மூன் உட்பட அதன் உறுப்பினர்கள்  என்ன கூறினார்கள் தெரியுமா? " ஒவ்வொரு நாளும் பேச்சுவார்த்தைகள் நிகழ்த்துவதற்கு முன்னர் நாம் இதை செய்யவேண்டும், தியானத்திற்கு பின்னர் மிக நன்றாக உணர முடிகிறது" என்று கூறினர். பலர் அன்று முதன் முறையாக தியானம் செய்தனர். "நாங்கள் புத்துணர்வுடன் முற்றிலும் வேறாக உணர்கின்றோம். தினமும் செய்ய வேண்டும்“ என்றே கூறினர். மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டும் என்னும் நிலையில் தியானம் மிகவும் அவசியம் ஆகும்.

கொலம்பியாவிலிருந்து ஓர் செய்தியாளர் என்னிடம்,"எவ்வாறு புரட்சியாளர்கள் நீங்கள் கூறுவதைக் கவனித்து போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டார்கள்? அமெரிக்கா, நார்வே போன்ற பெரிய நாடுகளே அவர்களை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க முடியாமல் தோல்வியுற்றனவே? நீங்கள் என்ன கூறினீர்கள்? என்று கேட்டனர். அவர்களிடம் நான்," நான் என்ன கூறினேன் என்பது முக்கியமல்ல. நான் யார் என்பதே மிகப் பெரிய வித்தியாசத்தினை ஏற்படுத்தியது.” என்று பதிலளித்தேன்.

நீங்கள் நேர்மையாக இருந்தால் மக்கள் அதனைக் கண்டுணர்ந்து கொள்வர். அதுவே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உபாயம் என்பதை விட நேர்மை என்பது தான் முக்கியம். ஏனெனில் இந்த உலகம் ஆற்றலினால் நகர்ந்து கொண்டிருக்கின்றது, நேர்மறையான ஆன்மீக ஆற்றல் (நேர்மை) அனைத்தையும் மேம்படுத்துகின்றது. உங்களிடம் நேர்மறையான அன்பு மிக்க ஆற்றல் இருந்தால் அதுவே உலகில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தும். நான் கூறுவது புரிகிறதா?

பல சமாதான மாநாடுகள் நடைபெறுகின்றன. அவற்றில் மக்கள் தலைவலி ஏற்படும் வரையில் பேசிக்கொண்டே இருப்பர்.  மிகச் சோர்வடைய வைக்கும் அவை! இத்தகைய பல மாநாடுகளுக்கு நான் வருகை தந்திருக்கின்றேன். இப்போது எதற்கும் செல்வதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்! ஒரு வேளை அப்படியொரு மாநாட்டிற்கு செல்ல வேண்டியதிருந்தால், என்னுடைய உரையை மட்டும் நிகழ்த்தி விட்டு, வெளியேற வேண்டியது தான். அங்கேயே அமர்ந்திருந்து அனைவரின் பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை. மக்கள் பேச மட்டும் தான் செய்கின்றனர். எத்தனை பேர் மாநாடுகளில் இத்தகைய அனுபவத்தைப் பெற்றிருக்கின்றீர்கள்? (பலர் கையுயர்த்துகின்றனர்) 

வாழும் கலை நிறுவனம் ஏற்பாடு செய்யும் சர்வதேச பெண்கள் மாநாடு, அல்லது பெருநிறுவன கலாச்சாரம் மற்றும் ஆன்மீக மாநாடு போன்ற மாநாடுகள் வித்தியாசமானவை. ஏன்? நேர்மறையான ஆற்றலுடன் நிகழ்த்தப்படும் அவை, தியானத்தினை ஓர் பகுதியாக உள்ளடக்கியவை. அதுதான் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றது.

(கூட்டத்தில் பயங்கரவாதம் பற்றிய ஒருவரது கேள்வி செவிக்குப் புலனாகவில்லை)

இன்று மக்கள் செய்து வரும் பயங்கரமான குற்றங்கள் துரதிர்ஷ்டவசமானவையாகும். அவர்கள் மீது இரக்கம் தான் கொள்ளவேண்டும். அவர்கள் சரியான கல்வியினை அடையவில்லை. அவர்கள் கல்வி முறையால் பாதிக்கப்பட்டவர்கள். அந்த இடத்தில் நீங்கள் பிறந்திருந்து, உங்களிடம்," அது கடவுளின் பணி, கடவுள் பிற சமயங்களை சார்ந்த நாஸ்திகர்கள் இருப்பதை விரும்பவில்லை, அவர்களை அழிப்பது உங்கள் கடமை "என்று கூறினால் என்ன செய்வீர்கள்? இன்று அவர்கள் செய்து கொண்டிருப்பதையே  நீங்களும் செய்வீர்கள் அல்லவா?  போர் வீரர்களை போன்றவர்கள். ராணுவத்தில் பணி புரியும் ஓர் போர் வீரராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு என்ன கற்பித்துக் கொடுக்கப்படும்?  ஓர் எதிரியைக் கண்டால் அவனை மனிதனாகப் பார்க்காமல் ஓர் பொருளாகக் கருதி சுட்டுத் தள்ளுங்கள் என்றே கற்பிக்கப்படும் அல்லவா? 

இதுதான் ராணுவப் பயிற்சி! ஒவ்வொரு ராணுவ வீரனுக்கும் சண்டையிடுபவனிடம் மனிதாபிமானம் கருதாமல் போர் புரியவேண்டும் என்றே கற்றுக் கொடுக்கப்படுகிறது. உங்களை தாக்க வருபவர்களை ஆபத்தானவர்களாகவே கருதுங்கள். ஓர் விலங்கினைப் போலக் கருதி சுட்டுத் தள்ளுங்கள்! இதுவே கற்பிக்கப்படும் கல்வி.அதனால் தான் இப்புவியிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் பலவிதமான கலாச்சாரங்களைப் பற்றியும்,அனைத்து சமயங்களை பற்றியும் சிறிதளவாவது கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். ஓர் உலகக் குடும்பம் - அனைவரும் பிற மனிதர்களை மதித்து, மரியாதையுடன் அன்புடன் நடத்த வேண்டும் என்பதைப் புரிய வைக்கவேண்டும்.இத்தகைய கல்வி அளிக்கப்பட்டால், யாராவது பிறரைத் துப்பாக்கி எடுத்துச் சுட்டுக் கொல்வார்களா? சாத்தியமே இல்லை. அஹிம்சை கொள்கை கற்பிக்கப்பட்டால்,உங்களால் பிறரைக் கொல்ல முடியாது.கல்வியில்லாக் குறைபாட்டால் தான் பயங்கரமான குற்றங்கள் நிகழ்கின்றன. 

வளரும் குழந்தைகளிடம் விலங்குகளை  வதை செய்வது தவறானது என்று கூறினால், அவர்கள் அக்கொள்கையை ஏற்றுக் கொண்டு, விலங்குகளை தொல்லை செய்யாமல் இருப்பர். தூரக்கிழக்கு நாடுகளில் மக்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் அவர்களது சாப்பாட்டு மேஜைக்கே வந்து விடுகின்றன. தெரியுமா? ஓர் அமெரிக்கர்  என்னிடம் கூறியது,அவர் தூரக் கிழக்கு நாட்டில் ஒருவரது வீட்டு விருந்தாளியாக சென்றிருந்தாராம்.ஓர் அருமையான நாய் அங்கு இருந்திருக்கின்றது. ஓரிரு மாதங்களுக்குப் பின்னர் அவர் அங்கு மீண்டும் சென்ற போது, "உங்கள் நாய் எவ்வாறு இருக்கிறது?" என்று கேட்டாராம். ஆனால் அது ஏற்கனவே சாப்பாடு மேஜையில் வைக்கப்பட்டிருந்ததாம் ! உங்கள் வீட்டில் வளர்ப்பு நாயை சுட்டு விடலாமெனில், உங்களது அண்டை வீட்டுக்காரரையும் சுட்டு விடலாம், சரிதான்! அதுவே மனப் பண்பாட்டின் நிலை!

இன்று உலகில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு துப்பாக்கி வீரர்கள் மக்களைச் சுட்டுத் தள்ளுவதான மெய்நிகர் வீடியோ விளையாட்டுக்கள்தாம் காரணம். குழந்தைகளும் சுடுகின்றனர், அதைத் தீயது என்று உணருவதேயில்லை. மெய்நிகர் உலகில் சுடுவது பரவாயில்லை. ஆனால் குழந்தைகள் மெய்நிகர் உலகிற்கும் நிஜ உலகிற்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பி விடுகின்றனர். நிஜ உலகிலும் துப்பாக்கி எடுத்துச் சுடத் துவங்குகின்றனர்.

அமெரிக்காவில் மளிகைப் பொருட்கள் கடைகளை விட துப்பாக்கிக் கடைகள் இருமடங்கு அதிகமுள்ளன. எனவே குழந்தைகளால் துப்பாக்கிகளை அணுக முடிகிறது. துப்பாக்கிகள பள்ளிக்கு எடுத்துச் சென்று மக்களைச் சுடுகின்றனர். அதைத் தவறென்று உணர்வதுமில்லை, ஏனெனில் வீடியோ விளையாட்டுக்களில் சுட்டு விளையாடி வளர்ந்து விட்டனர்! வீடியோ விளையாட்டில் சுட்டாலும் ஒருவர் மீண்டும் திரும்பி வருவார். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவ்வாறில்லை. ஒருவரைச் சுட்டால்  அவர் வாழ்க்கையே முடிந்து விடுகிறது!

உலகில் வகுப்பறை மற்றும் கல்விவளாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தெருக் குற்றங்கள், குடும்பச் சண்டைகள் ஆகியவையும் அதிகரித்து வருகின்றன. 50 சதவீத குடும்பச் சண்டைகள் விவாகரத்தில் முடிந்து விடுகின்றன என்று நேற்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அது ஓர் பெரிய பிரச்சினையாகி வருகிறது. நாம் நடத்தும் ஆனந்தப் பயிற்சி பொருத்தமானதாகும்.மன அழுத்தமற்ற வன்முறையற்ற சமுதாயமே நமது நோக்கம் அதை  அனைவரும் கேட்கும்படியாக தெளிவாகவும் உரக்கவும் வெளிப்படுத்த வேண்டும்.

இன்று காலை மிகப் பெரிய ஓர் பயங்கரவாதி என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அவர் காடுகளில் சண்டையிடுபவர், 35 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வருபவர். அவரிடம்," பாருங்கள் ! நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? இப்போது உங்களுக்கு 65 வயதாகிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு காடுகளில் ஓடிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? சில நாடுகள்  வேறொரு நாட்டினைப் பலமிழக்கச் செய்ய உங்களுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் தந்துவிடலாம், ஆனால் அவர்கள் ஒருநாளும் உங்களுக்குக் கௌரவத்தை அளிக்க மாட்டார்கள். இத்தகைய அவமானத்துடன் நீங்கள் இறக்க விரும்புகிறீர்களா? எந்த நாடும் உங்களுக்கு அடைக்கலம் தராது. உங்களுக்கு  சமூக நீதி தேவை, உங்கள் மக்களுக்கு உதவ விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அநீதியை எதிர்த்துப் போராடுவது என்பது உங்களுடைய காரணம். அது சரி! ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் துப்பாக்கி எடுப்பது சரியான வழியல்ல. அது எந்த விதத்திலும் பயன் தராது. 35 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களை எங்கே அழைத்துச் சென்றிருக்கிறது? உங்கள் தாய் நாட்டுக்குத் திரும்பி விடுவது நல்லது. கௌரவமான வாழ்க்கையை வாழுங்கள். நான் உங்களுடன் துணை நிற்கிறேன். நாம் ஓர் அமைதியான சூழ்நிலையை உருவாக்கலாம்." என்று கூறினேன்.

அதற்கு அவர் என்ன கூறினார் தெரியுமா? நீங்கள் என்னைப் புரிந்து கொண்ட முதல் மனிதர். நான் உங்களை நம்புகிறேன். வேறு யாருக்கும் இவ்வளவு புரிந்திருப்பதாக நான் கருதவில்லை என்று கூறினார்.“உங்களுக்கு என்ன தேவையென்று எனக்குப் புரிகிறது. நீங்கள் காட்டில் விருந்துகள் எதுவும் கொண்டாடவில்லை. உங்கள் மனைவி மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் அனேகமாக வழக்கற்றுப் போன இந்தக் கோட்பாட்டில் சிக்கிக் கொண்டு இருக்கின்றீர்கள். இன்று உலகம் பரஸ்பர உதவியை நாடும் நிலையில் இருக்கிறது.” என்று கூறினேன். அவர் அதை ஏற்றுக் கொண்டு என்னைச் சந்திக்கவும் ஒப்புக்கொண்டார். "நான் மூன்று மாதங்களுக்கு பிஸியாக இருக்கிறேன் என்று கூறினார். அதற்கு நான், "உங்களை விட நான் அதிக பிஸியாக இருக்கிறேன். (சிரிப்பு) என்னால் ஒரு நாளைக் கூட உங்களுக்காக என்று ஒதுக்குவது சிரமம்,  என்னுடைய நாட்கள் எல்லாம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டன என்று கூறினேன். மீண்டும் என்னை அழைத்து, "சரி ! நாம் சந்திப்போம்" என்று கூறினார். ஒரு நாளையும் என்னை சந்திப்பதற்காக ஒதுக்கினார். நாம் மக்கள் மனதில் இத்தகைய உணர்வை பதிய வைக்கவேண்டும்.

நமது கல்வி முறையில் நான் சில முக்கியமான குறைகளைக் காண்கின்றேன். குழந்தைகளுக்கு ஆன்மீகக் கல்வியைத் தருவதில்லை. இவ்வுலகம் ஒரே குடும்பம் என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதில்லை. மக்களை ஒருங்கிணைக்கும் ஓர் பார்வை மற்றும் பணியை அவர்களை கண்டுணர வைப்பதில்லை. எனவே அவர்கள் பிரிவினையைக் கடவுளின் விருப்பம் என்று எடுத்துக் கொண்டு விடுகிறார்கள். இது முற்றிலும் முட்டாள்தனமானது! சமூக நீதிக்காக கம்யுனிசக் கொள்கையின் பேரில் போராடும் மக்களும் ஒரு புறம்  இருக்கின்றனர். சமய கொள்கையின் பேரில் போராடும் மக்களும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் மனித நாகரீகம் என்னும் மைய இலக்கிற்குக் கொண்டு வர வேண்டும். என்ன நினைக்கிறீர்கள்? மனித நாகரீகத்தின்  மைய இலக்கு என்ன? அன்பு, கருணை மற்றும் ஆனந்தம். இந்த பூமியில் இருக்கப் போவது குறைந்த காலம் மட்டுமே. வாழ்க்கையை ஓர் கொண்டாட்டமாக்க வேண்டும். அதை முழுமையாக வாழும் கலை  செய்து வருகிறது." எனக்கு அநீதி  இழைக்கப்பட்டு விட்டது.  நான் அவற்றை சரியாக்க வேண்டும்." என்னும் பிரக்ஞை ஏற்பட்டுள்ளது. உலகில் அனைத்தையும் சரியாக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள், உதாரணமாக தீவிரவாதிகள் என்ன வேண்டுமென்று விரும்புகிறார்கள்?  

மக்கள் இப்புவியையும், நாகரீகத்தையும் கெடுத்து, சமுதாயங்களையும் குடும்பங்களையும் அழித்து விட்டதாக எண்ணுகின்றனர். தாங்கள், கடவுளின் சட்டம் அல்லது ஆணையை கொண்டு வந்து அனைவருக்கும் சமூக நீதி மற்றும் அமைதி ஆகியவற்றை அளிக்கப் போவதாகக் கருதுகின்றனர். அதற்காகவே அவர்கள் போராடுகின்றனர்.  அவர்கள் கண்ணோட்டத்தில், தங்களுடைய கொள்கையை பின்பற்றாத மக்கள் கெட்டுப்போன ஆப்பிள்களைப் போன்றவர்கள்.அவர்களை விலக்கி, வெளியேற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். சமுதாயத்தில் நாசத்தை ஏற்படுத்துபவர்கள் மற்ற அனைவரையும் தீயவர்களாகவே கருதுகின்றனர். இதுதான் அவர்களின் புரிதல்.

அதனால்தான் இன்று நாம் பின்பற்றும் யோகா தியானம் மற்றும் ஆன்மீக அறிவு பொருத்தமானது. ஏனெனில், இதன் அடிப்படை அஹிம்சை, மற்றும் வேற்றுமையில் நல்லிணக்கம் ஆகியவையாகும். பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு சமயங்கள் பற்றிய கல்வி, அஹிம்சை பற்றிய கல்வி, ஆன்மீக மதிப்பு பற்றிய கல்வி ஆகியவை இன்றைய உலகில் மிகத் தேவையானவையாகும். இத்தகைய கல்வி அளிக்கப்பட்டால், வருங்கால அழிவுகளை தடுக்கமுடியும். தாங்கள் உண்மையானவர்கள், சுவர்க்கத்திற்கு செல்வோம்,மற்றவரெல்லாம் நரகத்திற்கு செல்வர் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு சிறிய நாட்டினை விட்டுவிட்டால் கூட இவ்வுலகம் வருங்காலத்தில் பாதுகாப்புடன் இருக்காது. அனைவருக்கும் நரகத்தினை ஏற்படுத்தி விடுவர்! தீவிரவாதிகளாகி  விடுவர். ஆகையால் நம்மிடம் செய்யவேண்டிய ஓர் மாபெரும் பணி உள்ளது.  ஒவ்வொரு இல்லத்தின் வாயிலுக்கும் இந்த ஞானச் செய்தியினை எடுத்துச் செல்லவேண்டும். மக்கள் அனைவருக்கும் தியானம் பற்றி எடுத்துக் கூற வேண்டும்.ஏனெனில் நீங்கள் உள்நோக்கி செல்லும் போது,உங்களுக்குள் அமைதியைக் காண்பீர்கள். 

பிறருக்குத் தொல்லை கொடுக்க மாட்டீர்கள். யார் பிறரைத் துன்புறுத்துகின்றனர்? தங்களுக்குள் துன்புறுபவர்களே சமாதானத்தைக் கண்டறியாதவர்களே பிறரைத் துன்புறுத்துகின்றனர். எனவே ஒருவன் பிறரை ஏமாற்றினால் அவன் மகிழ்ச்சியான மனிதன் அல்ல. ஓர் ஆணோ பெண்ணோ, தங்களுக்குள் மகிழ்வுடன் இருந்தால், திருப்தியுடன் இருந்தால், அவர்கள்  ஏன் பிறரை ஏமாற்ற வேண்டும்?