குருதேவரின் குரு பௌர்ணமி செய்தி

வெள்ளிக்கிழமை 31 ஜூலை 2015

க்விபெக், கனடா


நாம் இரண்டு உலகங்களில் வாழ்கிறோம். ஒன்று நம் நினைவாற்றல் சம்பந்தமானது. மற்றொன்று நிஜ உலகம். நினைவாற்றல் மூன்று வகைப்படும்.

·         உனக்கு நினைவு இருக்கிறது. ஆனாலும் உன்னால் ஒன்றும் செய்யமுடியாது. உன் குழந்தைப் பருவம் உனக்கு ஞாபகம் இருக்கும். ஆனால் அதை நீ திரும்பப் பெற முடியாது.

·         மற்றொரு வகையில் உனக்கு நினைவு வரும். ஆனால் அதைப் பெறுவதற்கு நீ முயற்சி செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக நீ டொராண்டோவில் உன்னுடைய சாவியை மறந்து வைத்து விட்டாய். இங்கு வந்ததும் நினைவு வருகிறது. ஆனால் அந்த சாவியை நீ உடனே பெற முடியாது. ஏழு மணி நேரம் காரில் பயணம் செய்து அதைப் பெற வேண்டியிருக்கும். உனக்கு நினைவு வந்தபோதிலும், அதைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.

·         மூன்றாவது வகை, நினைவு வந்தவுடனே நீ அதைப் பெறமுடியும். உதாரணத்துக்கு நீ உன் மூக்குக் கண்ணாடியைத் தேடுகிறாய். உன் எதிரிலிருப்பவர், “நீ உன் மூக்குக் கண்ணாடியைத் தலையில் தூக்கி விட்டிருக்கிறாய்” என்று சொல்கிறார். நீ உடனே அதைக் கீழே இழுத்து விட்டு அதைப் பெற முடியும். இங்கு முயற்சியின்றி, நீ தேடுவது உனக்குக் கிடைக்கிறது.

ஆன்மீகப் பாதை மூன்றாவது வகையைச் சேர்ந்தது. ஒன்றை பற்றிய ஞானம் வந்தவுடனே, அது கிடைத்துவிடும். நீ செய்ய வேண்டியது இதுதான். உனக்கும் இறைவனுக்கும் தொடர்பு எப்போதும் இருக்கிறது என்ற நம்பிக்கை வேண்டும். இந்த நினைவு நம்மை நிஜ உலகத்தோடு இணைக்கிறது. நாம் வாழும் கற்பனை உலகிலிருந்து நிஜ உலகத்துக்குச் செல்வோம்.

இறைவனோடு நமக்குள்ள தொடர்பை எப்படி உணர முடியும்? அங்கு தான் குருதத்துவம் வருகிறது. ஏனென்றால் குரு அந்தத் தொடர்பை உன்னிடம் கொண்டு வருகிறார். பார் ! நீ இங்கு கனடாவிலிருக்கிறாய். “கனடாவில் இருக்கிறேன் என்ற நினைவு வந்தவுடனே நீ கனடாவில் இருக்கிறாய்.அதற்கு எந்த முயற்சியும் தேவையில்லை… உடனே சாத்தியமாகிறது. அதே போல், நீ இறைவனின் தொடர்பை உணரும் போதே, அந்த க்ஷணத்திலேயே, நிஜமற்ற கருமேகம் போன்ற கற்பனை உலகை விட்டு நீ நிஜ உலகுக்கு செல்கிறாய். அது ஆச்சரியம்!
ஞானத்துடன் உள்ள தொடர்பை உணரும் போது, குருவுடன் உள்ள தொடர்பை உணரும் போது எந்தக் கவலையும் இருக்காது. எப்படி கவலைகள், பிரச்சினைகள் மற்றும் எதிர்மறை உணர்வுகள் இருக்க முடியும்? கண்டிப்பாக இருக்க முடியாது!இவைகளெல்லாம் மறைந்து விடும்.

குரு பௌர்ணமி இந்தத் தொடர்பை உணரும் நாள். “நான் இறைவனுடன் தொடர்புள்ளவன். இறைவனைச் சேர்ந்தவன்.” என்று உணரும் நாள். கொண்டாட்டம் தான். உடனுக்குடன் மகிழ்ச்சி தான். கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யத் தேவையில்லை. நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? ஒரு ஏழை தான் அரச குமாரன் என்பதை மறந்து விட்டான். யாரோ ஒருவர் அவனிடம் வந்து “நீ அரசகுமாரன்” என்று சொன்னார். அந்த வரியைக் கேட்டவுடனே, அவன் தன் இராஜ்யத்தைத் திரும்பப் பெற்றான். உடனேயே அடைந்தான்! ஒரு முயற்சியும் இல்லை. முயற்சி செய்ய வேண்டுமென்று மனதில் பட்டால், அந்த முயற்சியை நீக்க வேண்டும். ஏனென்றால் உன் மனம் முயற்சிக்குப் பழக்கப்பட்டது. அப்படி முயற்சி செய்யத் தூண்டும் மனதை அடக்கி அமைதியாக இருக்க வேண்டும். இறைவனுடன் தொடர்பு என்பது “ நான் தொடர்பு கொண்டவன்” என்ற ஒரு நேரடியான அங்கீகாரம். இன்று இவ்வளவு போதும் . இதில் நிறைய இருக்கிறது. திரும்பத் திரும்ப இதை ஞாபகப்படுத்தி கொள்.