ஒரு சிறந்த உலகை உருவாக்குவோம்

வெள்ளிக்கிழமை 10 ஜூலை, 2015 

பாத் ஆண்டொகாஸ்ட், ஜெர்மனி


உலகில் பல பிரச்சினைகள் உள்ளன. நாமனைவரும் சேர்ந்து உழைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும். அதிர்ஷ்டவசமாக அதற்குத் தேவையான அறிவு நம்மிடம் உள்ளது. வாழும் கலை நிறுவனம் துவங்கி 35 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாம் இதை தான் செய்து வருகிறோம். எல்லோரும் சேர்ந்து பிரச்சினைகளை தீர்த்துக் கொள்கிறோம்.

க்யூபா மற்றும் கொலம்பியாவில் நடந்த சம்பவங்களை மக்களால் நம்ப முடியாது. (கொலம்பியா அரசு மற்றும் எஃப். ஏ. ஆர். சி கிளர்ச்சிக் குழுவினருக்கிடையே 50 ஆண்டுகளாக நடந்து வரும் ஆயுதமேந்திய தாக்குதல்களை முடித்து கொள்வதற்காக நடந்த அமைதி பேச்சுவார்தையை பற்றி குருதேவர் இங்கு குறிப்பிடுகிறார்) இப்போது கொலம்பிய மக்கள் எஃப். ஏ. ஆர். சி குழுவினர் அமைதியை விரும்புவதை வரவேற்கிறார்கள். நம்பவே முடியாத அளவுக்கு இது ஒரு நல்ல செய்தியாக உள்ளது என்கிறார்கள். இருதரப்பினருக்கிடையே 50 ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. உலகின் வல்லரசுகளான அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் இருதரப்பினரிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த பலமுறை முயன்றும் நடக்கவில்லை.

இன்று ஸ்பெயின் நாட்டின் செய்தி நிறுவனங்கள் “இருதரப்பினரிடையே சமாதானம் உருவாக என்ன செய்தீர்கள்? அவர்களிடம் என்ன சொன்னீர்கள்? எல்லோரும் முயற்சி செய்து தோல்வி அடைந்தாலும், நீங்கள் எப்படி அவர்களை சமாதானப் பேச்சுக்கு ஒப்புதல் அளிக்க வைத்தீர்கள்? அவர்களை எப்படி அகிம்சை வழிக்குக் கொண்டு வந்தீர்கள்?“ என்று என்னைக் கேட்கிறார்கள்.
எனக்கு எந்த உள்நோக்கமோ, வேறு திட்டமோ கிடையாது. நான் எளிதான அமைதி வழிக்கான செய்தியுடன் அவர்களை அணுகினேன். அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டு புரிந்துகொள்ளத் தயாராக இருந்தேன். அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்தேன். அவர்கள் கெட்டவர்கள் அல்ல அவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுவாக, நாம் “அவர்கள் கெட்டவர்கள், குற்றவாளிகள், நாம் செய்வதே சரி“ என்று அவர்களைச் சுட்டிக் காட்டுகிறோம். இப்படிப்பட்ட அணுகுமுறையை பின்பற்றும் போது, அவர்கள் நாம் சொல்வதை கேட்க மாட்டார்கள்.

முதலில் அவர்களிடம், “நான் உங்கள் நிலைமையை புரிந்துகொண்டேன். நீங்கள் கெட்டவர்கள் அல்ல.“என்று சொன்னேன். அப்போது தான் பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டார்கள்.“எல்லோரும் எங்களை குற்றவாளிகள் என்றே சொல்கிறார்கள். எங்கள் பிரச்சினைகளை புரிந்துகொண்டு, நாங்கள் குற்றவாளிகள் அல்ல“ என்று சொன்ன முதல் நபர் நீங்கள் தான் என்று என்னிடம் சொன்னார்கள். சூழ்நிலையில் நிலவிய இறுக்கம் நீங்கி, அவர்கள் தங்கள் பக்கத்திலிருந்து போர் நிறுத்த்த்துக்கு ஒப்புக் கொண்டார்கள். 

இன்றைய உலகில் பல பிரச்சினைகள் உள்ளன. மக்களின் மனஉளைச்சல் அதில் ஒன்றாக உள்ளது. இன்றைய உலகில் மனஉளைச்சல் மக்களின் மரணத்துக்கு ஒரு முக்கிய காரணமாகப் போகிறது. ஒவ்வொரு இரண்டு செகண்டிலும் 7 பேர்கள் மனஅழுத்தம் காரணமாக மரணம் அடைவதாக ஒரு புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. நாம் வாழும் கலைப் பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறோம். இது ஒரு குறிப்பிடத்தக்க சேவையாகும். பல ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து உழைத்தால், கண்டிப்பாக ஒரு சிறந்த உலகை உருவாக்க முடியும்.

கேள்வி பதில்கள்

குருதேவா! எப்போது நிகழ்வுகளை நிகழவிட வெண்டும்? எப்போது  நிகழ்வுகளை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும்? இதை எப்படிப் புரிந்து கொள்ளலாம் ?

நிகழ்வுளை தன்னிச்சையாக நிகழவிடு. நீ தவறு செய்திருந்தால், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள். நன்றாக செய்திருந்தால் அதை பற்றி நினைத்து மகிழ்வோடு இரு. சரியான காரியம் செய்ததை பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொள். தவறு செய்திருந்தாலும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்.“ நான் இந்தத் தவறை செய்துவிட்டேன். நீங்கள் அப்படி செய்யவேண்டாம்“ என்று எடுத்து சொல். இரண்டு நாட்களுக்கு முன் ட்வீட் அனுப்பியிருந்தேன். “மக்கள் தங்கள் தவறுகளையும் பணத்தையும் மறைக்கிறார்கள். “ஆனால் தற்காலத்தில் வங்கிகள் கூட நீங்கள் பணத்தை மறைத்து வைப்பதை அனுமதிப்பதில்லை என்று சொல்கிறார்கள். மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது இயல்பான ஒன்று. ஆனால் நீ உன் தவறுகளை மறைக்கும் போது, மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாது. தவறுகளை மறைப்பதால், நீ உன் முன்னேற்றத்தைக் குலைக்கிறாய். உன் தவறுகளை பகிர்ந்து கொண்டால், மக்கள் உன்னைப் பாராட்டுவார்கள்.

இந்தியாவில் ஒரு பெரிய அரசியல் வாதி தவறுகளை செய்திருந்தார்.அவர் தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என்று மக்கள் நினைத்தார்கள். அவர் இரண்டாம் முறை தேர்தலில் நிற்கும் போது, மக்களிடம் பேசும் போது தான் செய்த தவறுகளை சொல்லி ஒப்புக்கொண்டார். மக்கள் அவரை இரண்டாம் முறையும் தேர்ந்தெடுத்தார்கள். மக்கள் பெரிய இதயமுள்ளவர்களென்று நான் சொல்வேன். உன் தவறுகளை மக்கள் முன் வைக்கும்போது, அவர்கள் தாராள மனதோடு உன்னை ஏற்றுக் கொள்வார்கள்.

உன் டாக்டரிடம், உன் வக்கீலிடம், உன் குருவிடம் எதையும் மறைக்கக்கூடாது என்று இந்தியாவில் சொல்வார்கள். வக்கீலிடம் நீ உண்மையை மறைத்தால், அவரால் உனக்காக வாதாட முடியாமல் வழக்கு தோல்வியடையும். அதே போல் டாக்டரிடம் நீ உண்மையை மறைத்தால், அவரால் உன் நோயைக் குணப்படுத்த முடியாது. அதே போல் நீ குருவிடம் உண்மையை மறைத்தால், இதயத்தை திறந்து உன் தவறுகளைப் பகிர்ந்து கொள்ளாமலிரூந்தால், குரு உனக்கு உதவி செய்ய நினைத்தால் கூட அவரால் உனக்கு உதவ முடியாது. குருவின் முன்பாக உன் பாதுகாப்புக் கவசத்தை அணியக் கூடாது. மனம் திறந்து பேசவேண்டும். குரு தீர்ப்பு சொல்பவர் அல்ல. அவர் இதயத்தில் உனக்கு இடமளிப்பவர். கருணை உடையவர். எப்போதும் உன் சிறப்பை விரும்புபவர். கொஞ்சம் கூடக் குறையில்லாத சிறப்பையே விரும்புபவர்.

கொலம்பியாவில் பொதுமக்களிடையே பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிறுமி (9 – 10 வயதிருக்கும்) எழுந்து நின்று, “என் ஆசிரியை என்னை வெறுக்கிறாள்.“ என்று சொன்னாள். கூட்டத்திலிருந்தவர்கள் நான் அவளிடம் அனுதாபம் காட்டுவேன் என்று எதிர்பார்த்தார்கள். அவளை வேறு பள்ளியில் சேர் என்று சொல்வேன் என்று நினைத்தார்கள். நான் அவளுக்கு என்ன சொன்னேன் என்று உங்களுக்கு தெரியுமா? “ ஏன் உன் ஆசிரியை உன்னை வெறுக்கிறாள்?உன்னை வெறுப்பதால் அவளுக்கு என்ன கிடைக்கும்? ஒரு ஆசிரியையால் தன் மாணவியை வெறுப்பது சாத்தியமல்ல. அவள் உன்னிடம் கடுமையாக நடந்து கொண்டால், அவள் உன்னிடமிருந்து சிறந்த பண்பை வெளிக் கொணர விரும்புகிறாள் என்று அர்த்தம். அவள் உன்னை திடமானவளாக, மன உறுதி படைத்தவளாக மாற்ற விரும்புகிறாள். விரைவில் முன்னேற்றமடைந்து வலிமையானவளாக ஆக வேண்டுமென்ற நல்ல எண்ணத்தால் உன்னைத் திட்டுகிறாள். நான் இப்படிச் சொன்ன பின்பு, அங்கிருந்த சூழ்நிலை மாறிவிட்டது. அந்தச் சிறுமி நான் சொன்னதை ஒப்புக் கொண்டாள். நாம் ஒரு சூழ்நிலையின் மேல் நம்மைத் திணித்துக் கொண்டு, ஒரு கற்பனை உலகை உருவாக்கிக் கொண்டு அதில் இழுக்கப் பட்டு துயரமடைகிறோம். இவ்வுலகிலுள்ள மனிதர்களைப் பார்த்தாலே போதும். வேறு கேளிக்கை தேவையில்லை. ஆனால் அதில் சிக்கிக் கொள்ளாமல் வேடிக்கை பாருங்கள்.

ஶ்ரீராமர், சீதை இருந்தார்களா?

அவர்கள் இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். 7500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார்கள். சமீபத்தில் சில விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகளின் மூலம் ராமாயணம் உண்மையில் நடந்த நிகழ்வு என்று உறுதி செய்திருக்கிறார்கள். எந்தப் பொய்யான கதையும் நீண்ட காலத்துக்கு தொடர்ந்து இருக்கமுடியாது என்று உங்களுக்கு தெரியும். ஒரு காலத்தில் இவ்வுலகம் முழுவதிலும் ராமாயணத்தின் பாதிப்பு இருந்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், ஜப்பான் வரையிலும் உள்ள கீழ்திசை நாடுகளில் ராமாயண கதை வழங்கி வந்தது. வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் சில இடங்களின் பெயர்கள் ராமனின் பெயரோடு ஒத்திருக்கின்றன. நீங்கள் ஆராய்ச்சியின்படி பார்க்கும்போது, ராமாயணம் கதையல்ல; உண்மையாக நடந்த நிகழ்ச்சி என்பது தெரிய வரும். ஆகவே ராமாயணத்தை இதிகாசம் என்றழைக்கிறோம். வேத இலக்கியங்கள் இருவகைப்படும். ஒன்று புராணம். அது ஒரு கதை மற்றது இதிகாசம். இதிகாசம் என்றால் சரித்திரம். உண்மையில் நடந்த நிகழ்ச்சியாகும். ராமாயணம் மற்றும் மகாபாரதம் இரண்டுமே இதிகாசங்களாகும்.