நிசப்தமான மனதிற்கு – தியானமே வழி

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை, 2015

பாத் அண்டோகஸ்ட், ஜெர்மனி


(சிறந்த உலகை உருவாக்குவோம் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

குருதேவ், அன்றாட ஆன்மீகப் பயிற்சிகள் செய்தல், இறைவனை துதித்தல் அல்லது எண்ணங்கள் வந்து போவதைக் கவனித்து கொண்டிருத்தல் இவற்றில் சிறந்தது எது?

இவ்வாறு பிரிக்கக் கூடாது. நாம் தியானத்தில் அமரும் போது நமது பணியினை பற்றி யோசித்துக் கொண்டிருக்கின்றோம். பணியில் ஈடுபட்டிருக்கும் போது, ஓய்வெடுக்க விரும்புகிறோம். பணியில் ஈடுபட்டிருக்கும் போது உங்கள் 100% அளியுங்கள். தியானத்தில் அமரும் போது ஓய்வெடுங்கள். வேலை செய்யும் போது மனதில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை பற்றிக் கவலைப் படாதீர்கள். உங்கள் தியானம் முதிர்ச்சியடையும் போது, ஆழ்ந்த மௌன நிலையை அடைந்து, செயலில் ஈடுபட்டிருக்கும் போதும் அமைதி தொடர்கின்றது. இது ஒரு தனிப்பயிற்சி அல்ல, ஒரு துணைப் பொருள்.

குருதேவ், கதோஉபநிஷதம் மற்றும் திபெத்து புத்த பாரம்பரியத்தை சார்ந்த பார்தோ தோடோல் ஆகிய இரண்டிற்கும் தொடர்பு உள்ளதா அல்லது அவை மரணத்தைப் பற்றிய வெவ்வேறு அணுகல்களா?

கதோ உபநிஷதம் ஒரு பழமையான உரைமூலம். பூஜ்ய தலாய்லாமா அவர்களே "நாம் ஹிந்து சமயத்தை புத்த சமயத்தின் தாயாக கருதுகிறோம்.அதன் மூலமே நமது திபெத் புத்த சமயத்திற்கு செல்லவேண்டும்" என்று கூறியுள்ளார். எனவே, ஹிந்து மதத்திலிருந்தே புத்த சமயம் கிளை பிரிந்துள்ளது. இந்த புத்த ஞானமும் கதோ உபநிஷதத்தின் ஓர் கிளையே ஆகும். 

எவ்வாறு உண்மையான தெய்வீக வழிகாட்டுதலை, பொய்யான வழிகாட்டுதலிலிருந்து (போலி குருக்கள் மற்றும் பயிற்சியாளர்கள்) பிரித்தறிவது? நமது ஆத்மசுயம் உண்மையான வழிகாட்டியல்லவா?

உங்களுடைய நோக்கம் உண்மையை அறிவதானால் நீங்கள் அதை கண்டறிவீர்கள். ஆனால் நீங்கள் விரைவாக அடைய விரும்பினால் அப்போது சிக்கிக் கொள்கின்றீர்கள். எப்போதெல்லாம் அத்தகைய வதந்திகள் வருகின்றனவோ அப்போதெல்லாம் “நீங்கள் சுடப்படாத மண்குடத்தில் நீர் ஊற்றினால் குடமும் நீரும் வீணாகிவிடும். இரண்டும் தனித்தனியே பிரிந்து விடும்." என்னும் ஒன்றையே கூறுகிறேன். தங்களை குரு என்று கூறிக்கொண்டு சில பயிற்சிகளை மக்களுக்கு அளிப்பவர்களுக்கு இதுதான் நிகழ்கின்றது. சில காலம் மக்கள் இவர்களால் எதையோ அடைகின்றனர், பின்னர் அனைத்தும் வீழ்ந்து விடுகின்றன.

நேரம் என்பது மனதைப் பொறுத்த கருத்துப்படிவமானால், எவ்வாறு அதிக செயல்களை ஒரு நாளில் பொருத்துவது?

இதுவும் ஒரு கருத்துப்படிவம் தான்! நேரமும் மனமும் இணைந்தவை. நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது நேரம் குறைவாக இருப்பது போலவும், மகிழ்ச்சியின்றி இருக்கும் போது நேரம் நீண்டு கொண்டே போவது போலவும் தோன்றுகிறது. தனியாக விமானத்தில் அல்லது ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது பத்து முறை கைகடிகாரத்தை பார்க்கின்றீர்கள். உங்களுடன் பேச ஒருவர் கிடைத்தால், நேரம் போவதையே உணரமாட்டீர்கள். தியானம் செய்யும் போது நேரத்தைக் கடக்கின்றீர்கள்.

குருதேவ், நிகழ்காலத்திலுள்ள வெறுமையினை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாமல் என் மனம் பயத்தில் உள்ளது. எப்போதும் என் மனம் யாரையாவது,எ தையாவது பற்றிக்கொள்ள விரும்புகிறது.

இதுதான் மனதின் இயல்பு. பொருட்படுத்தாதீர்கள்! மனதை பற்றிய சலிப்புடன் இருப்பவர்கள் இவ்வாறு தான் கூறுகின்றனர். மனம் அவ்வாறு தான் இருக்கும். நீங்கள் அந்த மனம் அல்ல. அதை விடப் பெரியது. மனதை சீரமைக்க முயலாதீர்கள். அத்தகைய முயற்சி, கடலின் அலைகளை நிறுத்த முயல்வது போன்றதாகும். கடல் அலைகளை உங்களால் நிறுத்த முடியுமா? அலைகளற்ற கடலைக் காண விரும்பினால், சற்று ஆழ்ந்து மூழ்கி விட வேண்டும்! உங்களுக்குள் ஆழ்ந்து மூழ்கிச் சென்றால், கடலின் அசைவற்ற நிலையினை அனுபவிப்பீர்கள்.அனைத்தும் உறைந்த நிலை தான் முக்தி.

ஒருவரோடொருவர் என்னும் நிலையில் தங்களுடன் தொடர்பு கொள்ள முடியாத போது எவ்வாறு தினந்தோறும் உங்களுடன் தொடர்பு கொள்வது?


ட்விட்டர், முகநூல், மின்னஞ்சல், மற்றும் தியானம்! தியானம் மூலம் தொடர்பு கொள்வது தான் சிறந்தது. தியானம் மற்றும் மௌனம் மூலம் தொடர்பு கொள்வது திருப்தியளிக்க வில்லையெனில், மின்னஞ்சல் அல்லது ட்விட்டர் இருக்கின்றன. எங்களது குறுஞ்செய்தி (SMS) மௌனக் குறுஞ்செய்தி யாகும் (Silent Message Service)!