இவ்வுலகை ஒரு சிறந்த இடமாக்கலாம்


செவ்வாய்க்கிழமை 14 ஜூலை, 2015   

பாத் ஆன்டகாஸ்ட், ஜெர்மனி


(“மரணத்தைப் பற்றிய விழிப்புணர்வு நல்லது“ என்ற உரையின் தொடர்ச்சி)

கேள்வி – பதில்கள்

ஒவ்வொருவரும் அழைப்புக்காக காத்திருக்க வேண்டுமா ? அழைப்பு வரும் போது என்ன செய்ய  வேண்டும் ?

நீ ஏற்கனவே செய்து விட்டாய். உனக்கு  அழைப்பு வந்து விட்டது. அதனால் தான் நீ வாழும் கலையில் சேர்ந்திருக்கிறாய். வாழும் கலை அமைப்பு பல மக்களை அழைத்து, உலகளவில் மனித நேயத்தை மேம்படுத்துவதற்காகவே செயல்படுகிறது. இங்கிருக்கும் ஒவ்வொருவரும், இவ்வுலகை ஒரு சிறந்த இடமாக்க ஒன்று சேர்ந்திருக்கிறோம். உனக்கு அழைப்பு வந்து விட்டது. நீ பயணச்சீட்டு வாங்கி விட்டாய். கப்பல் நகரத் துவங்கிவிட்டது. இந்த பூமியில் மகத்தான ஒன்றை அடைய உன்னால் (தனி மனிதனால்) முடியாது. நீ மற்றவர்களுடன் ஒன்று சேர்ந்து, குழுவாக இணைந்து செயல்பட வேண்டும். நீ இங்கு அதைச் செய்கிறாய். நான் இங்கு (ஜெர்மனிக்கு) வருவதற்கு முன் யாரோ ஒருவர் பாரிஸ் மற்றும் ஃப்ரான்ஸில் உள்ள பல இடங்களில் மக்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருப்பதை என்னுடன் பகிர்ந்து கொண்டார். இது ஒரு நல்ல செய்தி. எல்லோரும் இணைந்து குழுவாக செயல்பட்டு உலகில் ஆனந்தத்தைப் பரப்ப வேண்டும்.

குருதேவா ! என் தாய்  தன் சகோதரியை பற்றி கேவலமாக பேசுவதை எப்படி நிறுத்தலாம் ? என் தாய்க்கு 76 வயதாகிறது. அவள் சகோதரிக்கு 74 வயது.

அவள் பேசுவதைத் தடுத்து நிறுத்தாதே. அவள் பேசி மனதில் உள்ள அனைத்தையும் காலி செய்யட்டும். நீ அவளோடு சற்று விளையாட விரும்பினால், அழகான வாழ்த்துக் கடிதத்தை எழுதி, “உன் சகோதரி அனுப்பியிருக்கிறாள்” என்று சொல்லி அவளிடம் கொடு. இரண்டு பேருமே அக்கடிதத்தைப்  படிக்கும் நிலையில் இருக்கமாட்டார்கள். “நான் படித்துக் காட்டுகிறேன்” என்று சொல்லி படித்துக்காட்டு. “உன் சகோதரி உன்னிடம் மிகவும் அன்பாக இருக்கிறாள். உன்னை நேசிக்கிறாள்” என்று சொல். இப்படி கடிதப் போக்குவரத்தை நீயே தொடர்ந்து செய். அவர்களுடைய மன நிலையில் (உறவில்) ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்று பார்.  
உனக்கு தெரிந்திருக்கும். ஒருவர் இப்படி எதிர்மறை உணர்வில் இருக்கும் போது, “பார் என்னைக் கேலி செய்கிறாள்” என்று சொல்லக் கூடும். நீ எதிர்மறை மனநிலையில் இருக்கும் போது, யாராவது உனக்கு ரோஜாப்பூ அனுப்பினால் கூட, அது உன்னைக் கேலி செய்வதற்காக என்று நினைப்பாய். அப்படி யாராவது எதிர்மறை உணர்விலேயே இருக்க விரும்பினால், கடவுள் தான் அவர்களுக்கு உதவ முடியும். இருந்தாலும் உன் முயற்சியைக் கை விட வேண்டாம். உனக்குள் இருக்கும் தெய்வ சக்தி, இந்த முயற்சியைத் தொடர உதவும்.

என் மனைவி மற்றும் பிள்ளைகள் ஆன்மீகப் பாதையிலிருந்து  விலகிச் செல்வதாக நினைக்கிறேன். அவர்களைக் கட்டாயப் படுத்த விரும்ப வில்லை. பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு ஏதாவது  செய்ய முடியுமா?

சரி தான். பிள்ளைகளைக் கட்டாயப்படுத்த வேண்டாம். ஆனால் அவர்களை மென்மையாக ஊக்கப்படுத்துவது அவசியம்.  அதை கட்டாயமென்று நினைப்பார்களோ என நீ தயங்கலாம். நீ அவர்களை ஊக்கப்படுத்துவதைக் கூட விட்டு விடுவாய். உன் குடும்பத்தினர் ஆன்மீகப் பாதையில் நடக்க நீ அவர்களை ஊக்கப்படுத்துவது அவசியம் என்று நான் சொல்வேன்.

நீ இன்னொரு தந்திரம் செய்யலாம். “நான் இரண்டு நாட்களுக்கு தியானம் செய்யப் போவதில்லை” என்று சொல்லி, அந்த இரண்டு நாட்களிலும் அவர்களிடம் எரிச்சலை காட்டு. அப்போது உன் மனைவி ‘உங்களுக்கு என்ன ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகிறீர்கள்” என்று கேட்பாள். அப்போது “நான் தியானம் செய்வதை நிறுத்தி விட்டேன்” என்று சொல்.

அவள் உன்னிடம் “தயவு செய்து தியானம் செய்யுங்கள். நீங்கள் யோக சாதனைகளை செய்து, தியானம் செய்த நாட்களில் எங்களுடன் இனிமையாக நடந்து கொள்கிறீர்கள்” என்று சொல்வாள். ஒரு தாய் என்னிடம் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டாள். அவள் மகன் அவளிடம் “இன்று நீ தியானம் செய்யவில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் என்னிடம் இன்று மோசமாக நடந்து கொள்கிறாய். நீ தியானம் செய்யும் நாட்களில் இனிமையாக இருப்பாய்” என்று சொன்னானாம். எனவே எல்லா விதமான தந்திரங்களையும் உபயோகித்து, சிக்கலான இவ்வுலகில் உனக்கு வழியை ஏற்படுத்திக் கொள்.

ஆஸ்பர்கர் நோய்க்கூற்றைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? (ஆஸ்பர்கர் மன இறுக்கம் சம்பந்தமான நோய்). எனக்குப் பிரியமான குழந்தைக்கு, மருத்துவ ஆய்வின் போது இந்த நோய் இருப்பதாக கண்டு பிடித்திருக்கிறார்கள்.

நான் இதைப் பற்றி ஆழ்ந்து படித்ததில்லை. கருத்து சொல்ல இயலாது. தற்காலத்தில் பல குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. அமெரிக்காவில் இந்த நோய் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. இந்த நோய் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. ஆழ்ந்த ஆராய்ச்சியின் மூலம், யாராவது இந்த நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். சில சமயம் தடுப்பூசி போடுவதும் தீங்கு விளைவிக்கக் கூடும். தென் அமெரிக்க நாடுகளுக்குச் செல்லுமுன் நீங்கள் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். சிலருக்கு  இந்த ஊசி ஒத்துக் கொள்ளாது. தோல் மீது சிறிய கொப்பளங்கள் தோன்றக் கூடும்.

இது உள்ளுணர்வு,அகம்பாவம் அல்ல என்று  தெரிந்துகொள்வது எப்படி ?

காலம் விடையளிக்கும். அது  உள்ளுணர்வாக இருந்திருந்தால், தவறாமல் சரியாக நடக்கும். தவறாக நடந்தால் அது உன் உள்ளுணர்வு அல்ல.

எப்போது ஆன்மா மற்றொரு உடலை ஏற்றுக் கொள்ளும். ஆன்மா மற்றொரு உடலில் புகுந்த பின், அதோடு தொடர்பு கொள்ள முடியுமா ?

நல்லது ! இது  ஒரு ஆழ்ந்த இரகசியமாகும். விடை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய் ? ஆம் ! ஆன்மா திரும்பி வரும். சில சமயம் இரண்டு மூன்று வயதுள்ள குழந்தைகள் ஏதோ பேசி, எதையோ சொல்லும். நீ அதைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுவாய். கவனித்து குழந்தை பேசுவதைக் கேட்பதில்லை. இரண்டு வயது குழந்தை “என் வீடு ஓப்பனாவில் (ஜெர்மனியிலிருக்கும்  ஒரு கிராமத்தின் பெயர்) இருக்கிறது “என்று சொல்லும். அல்லது “ என் நண்பர்கள் ஓப்பனாவில் இருக்கிறார்கள் “ அல்லது “என் காலணிகள் ஓப்பனாவில் இருக்கிறது “ என்று சொல்லும். குழந்தை ஏதோ சொல்கிறது. ஆனால் உன் கவனம் அதில் போவதில்லை. பல சமயங்களில் குழந்தைகளுக்கு மூன்று வயது வரை, முற் பிறப்பில் நடந்த நிகழ்ச்சிகள் நினைவுக்கு  வருவதுண்டு. இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, நூற்றுக் கணக்கான சம்பவங்கள் இதை தெரிவிக்கின்றன.


எப்போது ஆன்மா ஒரு உடலைத் துறந்த பின் மறு உடல் எடுக்கும் என்பதற்கு அளவு கோல் எதுவும் கிடையாது. அது எப்போது  வேண்டுமானாலும் திரும்பி வரலாம். உடனே வர முடியும். அதே நாளில் அதே நேரத்தில் வரலாம்; அல்லது பல ஆண்டுகள் கடந்த பின் திரும்பி வரலாம். அது பல விஷயங்களைப் பொறுத்தது. இறந்தவர்களின் ஆன்மாவோடு தொடர்பு கொள்ள முயலாதே. அதற்கு அவசியமில்லை. அவர்களுக்கு உன்னைப்  பற்றிய எல்லா விவரமும் தெரியும். நீ பேசித் தான் தொடர்பு கொள்ள வேண்டுமென்று இல்லை. உன் மனதில் எண்ணம் வருவதற்கு முன்பே, அவைகள் அதை அறியும். பேச்சில்லாத தொடர்பு ஏற்கனவே நிகழ்கிறது.