புத்துணர்வான மனதை அடைய தியானமே சிறந்த வழி

வியாழக்கிழமை, 16 ஜூலை 2015

பாத் அண்டோகாஸ்ட், ஜெர்மனி


 (அஹிம்சையே சிறந்த வீரத்தின் வழியாகும் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

குருதேவ், தியானம் செய்யும் போது எதையேனும் எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது என்பதை நான் அறிவேன். ஆனால், நான் காலையில் தியானம் செய்யும் நேரத்திலேயே மிகச் சிறந்த யோசனைகள் என் மனதில் வருகின்றன. அவற்றை தவற விட நான் விரும்பவில்லை. எனவே தியானத்தின் போதே என் மனம் அந்த யோசனைகளில் ஆழ்ந்து விட அனுமதிக்கிறேன். நான் செய்வது தவறா?

இளைப்பாறியிருக்கும் போது சிறந்த கருத்துக்கள் மனதில் எழுவது இயல்பு தான். அவற்றைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், தியானத்தினை நிறுத்த வேண்டாம், தொடருங்கள். உங்களில் சிலருக்கு காலை நேர தியானம் மிகுந்த ஆழ்ந்ததாக இருக்கும்.வேறு சிலரின் உடல்வாகிற்கு காலை வேளையில் உடல் முற்றிலும் விழித்தெழுந்து சுறுசுறுப்பாக இருக்கும்.தியானத்தில் ஈடுபட முடியாது. அதனால் மதிய வேளை தியானம் சற்று மேம்பட்டதாக இருக்கும்.பரவாயில்லை, நீங்கள் மதிய உணவிற்கு முன்னர் செய்யலாம். உடல் சற்று களைப்புற்று இருக்கும் போது சற்று பசியாக இருக்கும் போது தியானம் செய்யுங்கள். அதிகக் களைப்பாக இருக்கும் போது செய்யாதீர்கள், தூங்கி விடுவீர்கள்,

ஆரம்பத்தில் சற்று களைப்பாக இருக்கும் போது செய்வது உதவியாக இருக்கும்.ஏனெனில் உடலில் ரஜஸ் தன்னுடைய காலத்தை முடித்து கொண்டு விடுகின்றது. தமஸ் முழு உறக்கம், ஆகவே முற்றிலும் உறக்கம் வருவதற்கு முன்னர், ரஜஸ் காலம் முடிவடைந்த பின்னர் இரண்டிற்குமிடையேயான காலத்தில் சத்வ குணத்துடன் இருக்கின்றீர்கள். அப்போது ஆழ்ந்த தியான நிலைக்குச் செல்லலாம். ஆகவே சிலருக்கு மதிய வேளையில் தியானம் செய்வதும், சிலருக்கு மாலை வேளையில் தியானம் செய்வதும் சிறப்பாக இருக்கும். தினமும் இரு முறை தியானம் செய்ய முடியவில்லையெனில், ஒரு தடவையேனும் செய்ய வேண்டும். ஒரு தடவை கூட தியானம் செய்யவில்லையெனில் பல் தேய்க்காமல் இருக்கும் போது எவ்வாறு துர்நாற்றம் ஏற்படுமோ அது போன்று நாற்றத்துடன் இருப்பீர்கள். பல் தேய்ப்பது பல் சுத்தம். தியானம் என்பது மன சுத்தம். எண்ணங்கள் சூழ்ந்து கொண்டாலும், பரவாயில்லை கட்டாயம் தியானம் செய்ய வேண்டும்.

இருபது நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து, தியான ஒலி நாடாவினைப் பயன்படுத்தி தியானம் செய்யுங்கள். உங்களுக்கு அது பெரிதும் உதவும். மனம் அர்த்தமின்றி பிதற்றிக் கொண்டிருக்கும் போதும் கூட தியானம் செய்யுங்கள். சில பஜனைப் பாடல்களைக் கேளுங்கள். பண்ணிசையுங்கள். இவையனைத்தும் உங்களை ஆழ்ந்த தியானத்திற்கு அழைத்துச் செல்லும்.

குருதேவ், காலை வேளையில் என் கணவருக்குக் உணவு தயாரித்தளித்தல், நண்பர்களை சந்தித்தல், தொலைக்காட்சி பார்த்தல் பேரக் குழந்தைகளுடன் விளையாடுதல் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு பயிற்சி செய்வது போதைக்கு அடிமையாதல் போன்றதல்லவா?

உங்களுக்கோ, உங்கள் கணவருக்கோ நீங்கள் காலையுணவு தயாரிப்பது என்பது தியானம் செய்வதிலிருந்து முரண்பட்டதல்ல. அது தியானத்திற்கு மாற்றும் அல்ல. காலை உணவிற்கு ஓர் விருப்பத் தேர்வும் அல்ல. நான் கழிப்பறையை பயன்படுத்துவதா அல்லது பல் தேய்ப்பதா என்று கேட்பதைப் போன்று இருக்கின்றது. இரண்டுமே தேவை தான். உங்களுக்கு எதையேனும் செய்ய விருப்பமில்லையெனில் நூறு காரணங்கள் கண்டுபிடிப்பீர்கள். ஆனால், எவ்வளவு வேலைகள் இருந்தாலும் எதையேனும் செய்ய விரும்பினால்,கண்டிப்பாக செய்ய முடியும். அனைவருக்கும் ஓர் நாளில் இருபத்து நான்கு மணி நேரம் தான் இருக்கிறது. அதில் சற்றுநேரம் உங்களுக்கென்று ஒதுக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் கணவர் எழுவதற்கு முன்னர் படுக்கையிலேயே அமர்ந்து, தியானம் செய்யுங்கள். அந்நேரத்தில் யாரும் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

தியானம் செய்வதன் மூலம் எனக்கோ வேறு யாருக்குமோ உதவுதாக எண்ணாதீர்கள்.எனக்காகவோ வேறு யாருக்காகவோ தியானம் செய்வதில்லை. உங்கள் நரம்பு மண்டலம் மற்றும் மூளைக்கு தியானம் நன்மை செய்கிறது.கண்டிப்பாக செய்ய வேண்டும். அதற்காக தீவிரமாக, "நான் தியானம் செய்யும் போது தொலைப்பேசி அழைப்புகள், வாயிலில் காத்திருப்போரின் அழைப்புக்கள் எதையும் நான் ஏற்கமாட்டேன்” என்று கூற வேண்டாம். அவற்றை கவனியுங்கள். குழந்தைகள் அழுதால் அவர்களை கவனியுங்கள். எந்த அவசரமானாலும், அதைக் கவனித்து விட்டுப் பின்னர் தியானம் செய்யுங்கள்.

யக்ஞங்கள் அவற்றால் நமக்கு ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றைப் பற்றித் தயவு செய்து பேசுங்கள்.

யக்ஞங்கள் என்பவை பழமையான அறிவியல் அவை நமது மெய்யுணர்வின் நுண்ணிய நிலையில் விளைவினை ஏற்படுத்துகின்றன. ட்ரான்சிஸ்டர் ரேடியோவை திறந்து பார்த்தால் ஒரு தகட்டில் மின்சுற்று வரிப்படம் இருப்பதைக் காண்பீர்கள். நமது செல்போனிலும் அதே போன்று உண்டு. இவை போன்றே பிரபஞ்ச அளவில் சில மின்சுற்று வரிகள் உள்ளன. அவை ஆற்றலை நகரச் செய்கின்றன. பழங்கால மக்களுக்கு இது பற்றித் தெரிந்திருந்தது.அவர்களை அவற்றை யந்திரங்கள் என்றழைத்தனர்.

யந்திரங்கள் என்பவை வடிவியல் படங்கள். அவை யக்ஞத்திற்கு மிக முக்கியமானவை. அவை பஞ்ச பூதங்களுடன் (நிலம், நீர், நெருப்பு காற்று, ஆகாயம்) இணைத்து குறிப்பிட்ட பண்ணிசைவுடன் குறிப்பிட்ட சடங்குகளுடன் சுற்றுசூழலில் உள்ள சில ஆற்றல்களை செயல்பட ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தினர். யக்ஞங்கள் சுற்றுச்சூழலில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை சுத்தப்படுத்தி, நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. மக்கள் எதிர்மறை எண்ணங்கள் உணர்ச்சிகள் ஆகியவற்றை வெட்டவெளியில் வெளியிடுகின்றனர். அவையனைத்தும் யக்ஞங்களில் பயன் படுத்தப்படும் யந்திர மந்திரங்களால் கரைந்து மறைந்து விடுகின்றன.

யக்ஞத்தில்,பல்வேறு விதமான விஷயங்கள் நியமிக்கப்பட்ட முறையில் நிச்சயமான விளைவினை உருவாக்கும் பொருட்டு செய்யப்படுகின்றன. எனவே யக்ஞத்தில் பங்கேற்றுக் கொள்ளுதல் பயனுள்ளது. தியானம் செய்பவர்க்கு அதன் பயன் மேலும் அதிகமானது ஆகும். யஞ்யத்தினை நடத்துபவரும்,அதில் பங்கேற்றுக் கொள்பவரும் தியானம் செய்பவர்களாக இருந்தால் தாக்கம் அதிகமாக இருக்கும். மக்கள் அதைச் சடங்காக மட்டுமே செய்தால் அதன் தாக்கம் அதிகமாக இருக்காது. ஆரோக்கியம், சந்தோஷம் முன்னேற்றம் மற்றும் தடைகளை அகற்றுதல் ஆகியவற்றுக்காக பல யக்ஞங்கள் உள்ளன.

தன்னை கவனித்துக் கொள்வதன் மூலமும் பிரார்த்தனை மூலமும் நமது மரண நேரத்தினை நம்மால் மாற்ற முடியுமா அல்லது போகும் நேரம் வந்தவுடன் போவதை யாராலுமே மாற்ற முடியாதா?

இது ஓர் மர்மம். ஆத்மா விரும்பினால் வாழ்வினை நீட்டிக்கும் சாத்தியம் உள்ளது. ஆனால் பிறரது விருப்பமாக இல்லாமல் அது ஆத்மாவின் உள்ளார்ந்த விருப்பமாக இருக்கவேண்டும். சமயங்களில் பிறரின் விருப்பமும் அதை நிகழ்த்தலாம்,ஆனால் அது சமயங்களில் மட்டுமே. எப்போது ஒருவர் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டும் என்பது ஒரு பாதுகாக்கப்பட்ட ரகசியம். தியானம், யோகா தன்னை நன்கு பராமரித்துக் கொள்ளுதல் ஆகியவை நிச்சயம் தாக்கத்தினை ஏற்படுத்தும்.

குருதேவ், குறைந்த பட்சம் 10 மில்லியன் யுரோக்களை நான் தேசீய லாட்டரியில் அடைய வேண்டும் என்று விரும்புகிறேன். 90 சதவீதத்தை வாழும்கலையின் பணித்திட்டங்களுக்குத் தருவேன். இது நிகழ தயவு செய்து எப்படியாவது சரியான லாட்டரி எண்களை எனக்கு அனுப்புங்கள்.

நீங்கள் 90 சதவீதம் நன்கொடை அளிக்க விரும்பினால் அதைக் கடுமையாக உழைத்து அடைந்து அளியுங்கள். அதுதான் சிறந்த வழி. எளிதாகக் கிடைக்கும் பணத்திற்கு ஏங்காதீர்கள். எளிதாக வருவது எளிதாகச் சென்று விடும். ஆன்மீகத்திலும் நெறிமுறைகள் உண்டு. வழி நடத்துபவரே குறுக்கு வழியில் சென்றால் அவரைப் பின்பற்றுபவர்கள் எப்படியிருப்பார்கள்? பயிற்றுனருக்கு ஒரு பங்கு இருக்கிறது. ஆகவே என்னிடம் லாட்டரி பற்றிக் கேட்காதீர்கள். நகைச்சுவை உணர்வு நல்லது தான். அனைத்தையும் கடினமாக எடுத்துக் கொள்ளாமல் நகைச்சுவையுணர்வுடன் ஏற்று கொள்வது சரிதான். லாட்டரி பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்தால் அதைக் கனவில் மட்டுமே அடைவீர்கள்.  கனவு காணும் விருப்பங்கள் கனவில் மட்டுமே நிறைவேறும்.