அஹிம்சையே சிறந்த வீரத்தின் வழியாகும்

வியாழக்கிழமை, 16 ஜூலை 2015,

பாத் அன்டகஸ்ட், ஜெர்மனி

சிறந்த போர்வீரர் என்னும் சொல் வீரம் நிறைந்த உலகில் போரிட்டு எதிரிகளை வெற்றி கொள்ளும் மனிதனைக் குறிக்கின்றது. அசைவின்றி அமர்ந்து, அஹிம்சை வழியினை முழுவதுமாக மேற் கொண்டிருப்பவரும் சிறந்த வீரர் என்றே அழைக்கப்படுகின்றார். மகாவீரர் என்னும் சொல்லில் வீரர் என்பது போர்வீரர் என்று  பொருள். மகாவீர் என்னும் பட்டம் போரிட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆழ்ந்த தியானத்தில் இருப்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றது.


உலகம் பஞ்சபூதங்களினால் ஆனது, அவற்றுக்குள் முரண்பாடுகள் உண்டு. அவற்றின் இயல்புகளில் முரண்பாடுகள். நெருப்பும் நீரும் என்றுமே நட்பல்ல, நெருப்பு நீரினை ஆவியாக செய்து விடும், நீர் நெருப்பினை அணைத்து விடும். அது போன்று, காற்று நெருப்பினை அணைத்து விடக்கூடும், ஆனால் காற்றிருப்பதாலேயே நெருப்பு இருக்க முடியும், நெருப்பு காற்றினை பிரித்து விடமுடியும். நிலம் இந்த நெருப்பு, நீர் மற்றும் காற்று என்னும் இந்த மூன்று கூறுகளால் பாதிக்கப் படுகின்றது. இதே போன்று முரண்பாடுகள் உலகெங்கும் உள்ளன. உங்களுக்குள் இதயமும் மனமும் முரண்பாடானவை. இதயம் கருணை மிக்கது,மனம் தர்க்கரீதியானது அனைத்தையும் ஆய்ந்தறிவது. மனம் இதைச் செய்வது சரி என்று கூறும் போது இதயம் அதை செய்ய விரும்பாது. அதே போன்று இதயம் ஒன்றினை விரும்பும் போது மனம் அதை மறுக்கும். இந்த விருப்பு வெறுப்புக்கள் உங்களை பாதிக்கும். புயல்கள் உங்களுக்குள் எழுந்து, மனம் அமைதியின்றி இருக்கும்.

கவலைப்பட எதுவுமில்லையெனில், அடுத்த வீட்டிலிருப்பவர், நண்பர்கள் உறவினர் இவர்களை பற்றிக் கவலைப்படத் துவங்குவீர்கள். கவலை, முரண்பாடு, சோகம், மகிழ்ச்சியின்மை, ஆகிய உணர்ச்சிகள் தியானம் நிகழப்பெரும் சவால். உங்களை அமைதியடைய விடாது. நிமிஷங்களுக்கு அமைதியாக மகிழ்ச்சியுடன் இருந்தால், ஏதாவது ஒன்று வந்து அந்த அமைதியை தகர்த்து விடும்.  துன்புற நூற்றுக்கணக்கான காரணங்கள் இருக்கலாம், அறிவார்ந்தவராக இல்லையெனில், உங்கள் மனம் ஆயிரக்கணக்கான காரணங்களால் மகிழ்ச்சியின்றி இருக்கும்.சமயங்களில் முரண்பாடுகளால் மகிழ்ச்சியின்றி இருக்கலாம்,சில நேரங்களில் உங்கள் மன அமைதியை இழந்ததால் மகிழ்ச்சியின்றி இருக்கலாம். இது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

எண்பது, தொண்ணூறு வயதுகளில் உள்ளவர்கள் குறைப்பட்டு முனகிக் கொண்டேயிருப்பார்கள். அதனால் பயனில்லை என்றும், எந்தப் பிரச்சினையையும் அது தீர்க்காது என்று தெரிந்தபோதும் அவ்வாறே செய்வார்கள். உற்சாகமுள்ளவர்கள் இந்தக் குறைப்பட்டு முனகும் குணத்தால் எரிச்சல் அடைவார்கள் ஏனெனில் இது அவர்கள் குணத்திற்கு முற்றிலும் மாறானது. நீங்கள் உற்சாகமாக இருக்கும் போது ஏராளமான ஆற்றலுடன் இருக்கிறீர்கள். அனைத்தும் வெளிச்சமாக தெரிகின்றன, சவால்களை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள், போர் வீரரை போன்று உணருகின்றீர்கள். ஆனால் ஒருவரது ப்ராணா அல்லது ஆற்றல் குறைவாக இருக்கும் போது, அவர்கள் உங்களை கீழே இழுக்கின்றார்கள், அப்போது நீங்கள் அதை எதிர்க்கின்றீர்கள். இது ஒரு சவால்.

அதே போன்று, தியானத்தின் போது, ஏராளமான விஷயங்கள் வரலாம்,ஆனால் உங்களை நீங்கள் முரண்பாடுகளுக்கு மேலாக எழுப்பி, அவற்றைப் பொருட்படுத்தாமல் அல்லது அவை ஏன் வந்தன என்று கேள்வி கேட்காமல், இருந்தால், உங்களை ஆழ்ந்து தியானிக்க செய்யும். ஏன் இந்த கெட்ட எண்ணங்கள் எழுந்தன என்று சிந்தித்துக் கொண்டிருப்பது, முரண்பாடுகளில் பங்கேற்கச் செய்து உங்களைப் பலவீனப்படுத்தும். எண்ணங்கள் வந்து போகட்டும்.அவற்றுடன் எந்த சம்பந்தமுமில்லை. இதுவே உள்முரண்பாடுகளை வெல்லும் உத்தியாகும்.

உள்முரண்பாடுகள் எழும்போது, இந்த உத்தி, அதிக சக்தியுடையவர் அதாவதுமுரண்பாட்டினை விட மிகப் பெரியவர் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தும். அப்போது நீங்கள் மேகங்களுக்கு மேலே அவற்றை ஊடுருவிக்கொண்டு தெளிவான வானத்திற்கு செல்வதை போன்று உயர்வீர்கள். அது போன்று, முரண்பாடு, எண்ணம் அல்லது உணர்ச்சி எதுவானாலும் பொருட்படுத்தாமல் அசைவின்றி உள்ளமைதியுடன் அமருங்கள். வந்தால் வரட்டும்,போகட்டும்,என்ன உணருகிறேன் என்பது எனக்குப் பொருட்டல்ல என்று எப்போது எண்ணுகிறீர்களோ அப்போது அது உங்களுக்கு வலிமையை அளிக்கும்.

முந்தைய தலைமுறை குருமார்கள் இதைச் செய்வதுண்டு. யாரேனும் நன்றாக இல்லையென்று கூறினால், உன் விதியை நீதான் அனுபவிக்க வேண்டும் என்று கூறுவதுண்டு. அவர்கள் ஒரு போதும் கருணை காட்டியதில்லை. அவர்கள்,"நீ உன் கர்மத்தினால் துன்புருகின்றாய். நீ கஷ்டப்பட்டு உன் கர்மத்தினைக் கழிக்க வேண்டும், அவ்வாறில்லையெனில், அந்தக் கர்மத்தை அடுத்த பிறவிக்கும் எடுத்துச்செல்ல வேண்டியதிருக்கும்" என்று கூறுவதுண்டு.

உங்கள் உள்முரண்பாடுகளை எதிர்த்து நின்று போரிட வேண்டும். உலகம் எப்படியுணருகிறீர்கள்  என்பதை பற்றிக் கவலைப்படுவதில்லை. என்ன செய்தீர்கள், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை மட்டுமே உலகம் காண்கிறது. ஒரு நாள் நன்றாக உணர்வீர்கள், அடுத்த நாள் அது போன்றிருக்காது. உணர்வுகள் மேலெழுந்து கீழிறங்கும். ஆனால் உலகம் "நீ என்ன நன்மை செய்தாய்? இவ்வுலகிற்கு எவ்வாறு பங்களித்தாய்" என்று மட்டுமே கேட்கும்.

இந்த சிக்கலான உணர்ச்சி கொந்தளிப்பில் நீங்கள் மாட்டிக் கொள்ளும் போது, ஏராளமான நேரமும் பணமும் வீணாகின்றன. நமது நேரம் மட்டுமல்ல, தொலைபேசி பேச்சின் மூலம் பிறருடைய நேரம் பணம் ஆகியவையும் வீணாகின்றது. இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்து விடுபட்டு விட்டால், அடங்கி நேரத்தை வீணாக்காமல் இருந்தால், உலகம் சிறப்பான இடமாக இருக்கும்; ட்ரில்லியன் டாலர்களை சேமிக்கலாம். பழங்கால விவேகமுள்ள ஆண்களும் பெண்களும் "மாயையிலிருந்து எப்போது விழித்துக் கொள்வோம்?" என்று கேட்டதுண்டு. இவையனைத்துமே மாயை. ஏதோ ஒன்று போலத் தோன்றுகிறது, ஆனால் உண்மையில் அதுவல்ல. மாயையை வென்று மகாவீரர் ஆக வேண்டும். நீங்கள் வெளியிலிருக்கும் மனிதர்களை வெல்லலாம்,ஆனால் உங்கள் உள்ளேயே இருக்கும் கொந்தளிப்பை வென்று புன்முறுவலுடன் இருந்தால், நீங்கள் ஓர் சிறந்த போர்வீரர் அதற்கு வீரம் தேவை.

நாம் எதிலிருந்தாவது தப்பித்து ஓடவேண்டும் என்று விரும்பினால் நாம் நமது சுயத்திலிருந்தே தப்பியோடுகிறோம். மக்கள் இங்குமங்கும் கோழிக்குஞ்சுகளை போன்று விருப்பு வெறுப்புக்களுடன் ஓடிக் கொண்டிருக்கின்றனர், எதையும் அடைவதில்லை. உங்கள் விருப்பு வெறுப்புக்களை பற்றி யாருக்குக் கவலை? நீங்கள் விரும்பும் ஒன்றை வெறுக்கவோ, வெறுக்கும் ஒன்றை மீண்டும் விரும்பவோ எவ்வளவு நேரம் ஆகும்? இந்தத் தூக்க நிலையிலிருந்து நாம் விழித்துக் கொள்ள வேண்டும். அது வலிமையினை அளிக்கும்.

அனைவருமே பலமான ஒருவரையே விரும்புகின்றனர். மக்கள் உங்களை விரும்பி அன்பு செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள். நீங்கள் உள்ளுக்குள் பலவீனமானவராக ஆட்டம் கண்டு கொண்டிருந்தால் எவ்வாறு மக்கள் உங்களை விரும்புவார்கள்? கருணையுடன் சில காலம் சகித்துக் கொள்ளலாம், ஆனால் உங்களிடமிருந்து விரைவில் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள். அவர்களுக்கு உங்கள் அருகாமை மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். இது அனைத்து உறவுகளிலும் நிகழக்கூடியதே. அதனால் தான் உறவுகளிலிருந்து மக்கள் தப்பித்து ஓடி விடுகின்றனர். உங்கள் விருப்பு வெறுப்புக்களின் மூலம், உங்கள் உணர்ச்சிகளின் மூலம், பிறரை திணற வைக்கின்றீர்கள். அவர்களுக்கு ஏற்கனவே அவர்களுடையதே எவ்வளவோ இருக்கின்றது, அத்துடன், உங்கள் உணர்ச்சிகளை பிறரிடம் திணித்து அவர்களை சுமக்க வைக்கிறீர்கள். இவ்வாறு செய்து கொண்டிருந்தால், அவர்கள் அனைத்தையும் துறந்துவிட்டு விலகி ஓடிவிடுவர். எந்த உறவிலும் வலிமையினை கொடுங்கள். பலமாக இருந்தால் மட்டுமே இதை செய்யமுடியும். உணர்ச்சிபூர்வமாக பிறரை சார்ந்திருந்தால், உண்மையாகவே விரும்புகிறார்களா என்று கேட்டுக் கொண்டே இருந்தால், அவர்களுக்கு உங்கள் மீது அன்பிருந்தாலும், அது சரிந்துவிடும்.