ஞானம் ஞானத்தை கைப்பற்றுகிறது.


சனிக்கிழமை, 12 ஜூலை 2015,


 வட கரோலினா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்

குருதேவரின் குரு பூர்ணிமா செய்தி என்னும் இடுகையின் தொடர்ச்சி

இந்தியாவில் ஏகலைவனை பற்றிய ஒரு பிரபலமான கதை உண்டு. ஏகலைவன் சிறந்த சீடனின் வடிவம் என்று கருதப்படுகின்றான். காட்டில் சிறுத்தைகளால் கொல்லப்படும் மான்களை காக்கும் பொருட்டு ஏகலைவன் வில்வித்தை கற்றுக்கொள்ள விரும்பினான். ஏகலைவன் ஏழை வேட்டைக்காரனின் மகன். அவன் அனைத்து போர்க் கலைகளிலும் சிறந்தவராகிய துரோணாச்சாரி யாரிடம் சென்று தனக்கு வில்வித்தை கற்பிக்குமாறு வேண்டினான். ஆனால் துரோணர்  அரச குலத்தைச் சேர்ந்தவருக்கு மட்டுமே ஆசிரியராக விளங்கியதாலும், ராஜ குருவாக இருந்ததாலும் இந்த வேண்டுகோளை மறுத்துவிட்டார். அக்காலத்தில் அரச குலத்தவருக்கு கற்பிக்கும் ஆசிரியர் பிறருக்கு வித்தைகளைக் கற்பித்து அவர்களை அரச குலத்தவருக்கு ஈடாக ஆக்க மாட்டார்கள்.  அது நெறிமுறையாக கருதப்படவில்லை.

நாட்டினை காக்கும் பொருட்டு ஓர் இளவரசனுக்கு வில்வித்தையை கற்பித்து அவனை சிறந்த வில்லாளராக ஆக்குவர். அதே கலையினை சாதாரண மனிதருக்குக் கற்பிப்பதில்லை. வேறு எவரையும் இளவரசனுக்கு சம வலிமையுடைவனாக  ஆக்குவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.  இளவரசரை மிகுந்த வலிமையுடைவராக ஆக்கும் கடமை ஆசிரியருக்கு இருந்ததால், அவர் வேறு எவரையும் இளவரசனுக்கு போட்டியாக உருவாக்க முடியாது. இல்லையெனில் நாடு பாதுகாப்புடன் இருந்திருக்க முடியாது.  ஏகலைவன் துரோணாச்சாரியாரை தனது குருவாக ஏற்க விரும்பினான், ஆனால் அரச குலத்தவருக்கே கற்பிக்க வேண்டும் என்னும் ராஜ நீதியின்படி, துரோணர் அவனை தன்  சீடனாக ஏற்க விரும்பவில்லை. ஆயினும் ஏகலைவன் அவரை தன்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டு வீட்டிற்குச் சென்று துரோணரைப் போன்ற சிலையினை அமைத்து கொண்டான். வில் வித்தையில் இளவரசனை விட சிறந்தவன் ஆனான்.ஓர் விலங்கின் ஒலியினை கேட்டவுடனேயே அம்பெய்திக் கொல்லும் அளவுக்கு திறமை பெற்றான். ஒருநாள் இளவரசனான அர்ஜுனன் இதைக் கண்டான். தன்னைவிட ஏகலைவன் சிறந்த வில்வீரனாக விளங்குவதையும் அறிந்தான். 
ஏகலைவனிடம்,"யார் உன் குரு?” என்று கேட்டான். ஏகலைவன் “எனது குரு துரோணாச்சாரியார் “ என்று விடையளித்தான்.

அர்ஜுனன் துரோணாச்சாரியாரிடம் சென்று "என்ன இது? தாங்கள் எனக்கு மட்டுமே கற்பிக்க வேண்டும், ஆனால் இவனுக்குக் கற்பித்து அவனை என்னை விட சிறந்த வில் வீரனாக்கி விட்டீர்கள்" என்று கேட்டான்>‘யார் இந்த சீடன்,யாருக்கு நான் கற்றுத் தந்தேன்,யார் இளவரசனுக்குப் போட்டியாக ஆனது’ என்றெல்லாம் எண்ணி துரோணாச்சாரியார் திகைப்படைந்தார். பின்னர் அவர்களிருவரும், ஏகலைவனை சென்றடைந்தனர். ஏகலைவன் தான் உருவாக்கிய சிலையினைக் காட்டி, அவரையே தன் குருவாக கருதி ஏற்றுக் கொண்டிருப்பதாகக் கூறினான்.

துரோணாச்சாரியார்,"நீ எனக்கு குரு தக்ஷிணை தரவேண்டும்.அதுவும் உன் வலது கை கட்டை விரலை தர வேண்டும் என்று கூறினார். உடனே எந்த தயக்கமும் இன்றி தன் வலது கட்டை விரலை தட்சிணையாக தனது குருவிடம் ஏகலைவன் அளித்தான். இந்தக் கதை குருவின் கொடுமையான குணத்தைக் காட்டுவதாக கருதப்படுகிறது. ஏகலைவன், தானாகவே கற்றுக் கொண்ட போதிலும், துரோணர் அவனது கட்டை விரலைப் பறித்துவிட்டார். சீடனின் வித்தையைப் பறித்து விட்டதான ஓர் பார்வை. ஆனால் அதன் மறுபக்கம், என்னவென்றால், இந்த நிகழ்வு இல்லையெனில் யாருக்குமே ஏகலைவனை பற்றித் தெரிந்திருக்காது.வெளிப்படையாகப் பார்த்தால் துரோணர் ஏகலைவனுக்கு அநீதி இழைத்து விட்டது போன்று தோன்றினாலும் உண்மையில், துரோணாச்சாரியார்  இந்த ஓர் செயலின் மூலம் அழியாப் புகழை அடையும்படி ஏகலைவனை மேம்படுத்தி விட்டார். எனவே பக்தி என்று எண்ணும் போது மக்கள் ஏகலைவனையே நினைவு கொள்கின்றனர், அர்ஜுனனை அல்ல.

சாதனையாளர் மற்றும் திருத்தொண்டர் ப்ராதா  ஸ்மரண்யா என்று அழைக்கப்படுகின்றார். ப்ராதா என்றால் காலை,ஸ்மரண்யா என்றால் நினைவில் கொள்ளத்தக்கது.காலைப் பொழுதில் நினைவில் கொள்ளத்தக்கது எதுவோ அது சாதரணமாக மக்கள் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னரும் காலையில் விழித்தெழுந்தவுடனேயும் பிரார்த்தனை செய்வதுண்டு. அது போன்று, காலையில் விழித்தவுடன் ஞானமுள்ளவர்களை நினைவு கூர்ந்தால் நீங்களும் ஞானியாவீர்கள். அது ஓர் பழக்கம். செறிந்த  கருத்துள்ளதும் ஆகும்.

உணர்ச்சி,உணர்ச்சியினைக் கைப்பற்றும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒருவர் உணர்ச்சிவசப்பட்டால் பிறரும் அதில் கைப்பற்றப்படுகின்றனர். அதேபோன்று ஞானம் ஞானத்தினை கைப்பற்றுகின்றது. ஞானம் மிகுந்தவர்களின் சகவாசத்தால், உங்களது மெய்யுணர்வின் தரமும் மாறுகின்றது. அவ்வாறு இல்லையெனில் நீங்கள் ஏன் ஏற்படவில்லைஎன்று சிந்திக்க வேண்டும். ஒருவேளை காலம் ஒரு காரணக்கூறாக இருக்கலாம்.உங்களை சுற்றி ஞானமுள்ளவர்கள் இருக்கும் போது நீங்கள் மாறாமல் இருப்பதற்கு சாத்தியமே இல்லை. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: ஞானம் என்பது செய்தியல்ல.அது மெய்யுணர்வின் தரம்.இன்று அல்லது இன்றுமுதல் உங்களுக்குள் ஓர் வைரம் அல்லது மாணிக்கம் இருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். அவற்றினை,ஞானத்தினை நீங்கள் அடைந்திருக்கின்றீர்கள்.விலைமதிப்பற்ற ஒன்று உங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதாக எண்ணி வாழ்வினை நடத்திச் செல்லுங்கள்.

கிருஷ்ணா பகவானின் பக்தையான மீரா குருவின்றி முன்னேற முடியாமல் இருந்தாள். எனவே ஓர் செருப்புத் தைப்பவனிடம் சென்றாள். அவனையே குருவாக ஏற்றுக் கொண்டாள். பாயோஜி மைனே ராம் ரத்தன் தான் பாயோ என்று பாடினாள் (பொருள்: இன்று விலை மதிப்பற்ற செல்வத்தை  அடைந்தேன்). ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தியாக இருந்த போதிலும்,அவளது குரு ‘ராம்’ எனும் மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார். ராமன், கிருஷ்ணன் இருவரும் முற்றிலும் வேறுபட்டவர்கள். ராமர் செய்தவற்றை எல்லாம் கிருஷ்ணர் செய்யவில்லை. ராமருக்கும், கிருஷ்ணருக்கும் உள்ள வேறு பாட்டினை நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா? (சபையோர் இல்லை என்று கூறுகின்றனர்) ராமர் பகல் 12 மணிக்குப் பிறந்தார். கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்தார். ராமர் ஓர் மாளிகையில் பிறந்தார், கிருஷ்ணர் சிறையில் பிறந்தார். ராமர் தந்தை சொல்லை மீறியதே இல்லை, கிருஷ்ணர் தந்தை சொல்லைக் கவனித்துக் கேட்டதேயில்லை.

இவ்வாறு பல வேறுபாடுகள்  உள்ளன. மக்கள் ராமரைப் பின்பற்ற வேண்டும் என்றே கூறுவார்கள் கிருஷ்ணரை அல்ல. கிருஷ்ணர் கூறியதைக் கவனிக்க வேண்டும், ராமரைப் போன்று செயல்பட வேண்டும். அதுவே பெற்றோருக்கும் வாழ்க்கை துணைக்கும் எளிதாக இருக்கும். மீரா கிருஷ்ணா நாமத்தினையே எப்போதும் பாடிக் கொண்டிருப்பாள். அவளது குரு, ராமநாமத்தை உபதேசித்ததால், "பாயோஜி மைனே ராம் ரத்தன் தான் பாயோ என்று பாடினாள். அவளது குரு ராமமந்திரத்தை உபதேசித்த போதிலும் அது அவளிடம் எந்த முரண்பாட்டினையும் தோற்றுவிக்கவில்லை என்பதையே நான் இங்கு கூறுகின்றேன்.

ஒருவர் கிறிஸ்தவர், சீக்கியர் புத்த மதத்தைச் சேர்ந்தவர் அல்லது ஹிந்து என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. எந்த சமயத்தைப் பின்பற்றினாலும் பரவாயில்லை.ஆன்மீக ஞானம் உங்களை முன்னேறிச் செல்ல வைக்கின்றது, எனவே அதனை போற்றுங்கள். அதனால் தான் மீரா பாயோஜி மைனே ராம் ரத்தன் தான் பாயோ என்று பாடினாள். இந்தியாவில் புகழ்பெற்ற பாடல். இந்தியரில் பலர் இதைக் கேட்டறிந்திருப்பர். இது “நான் அடைந்த ஓர் செல்வம், நான் பெற்ற ஓர் ஆசீர்வாதம், சிறப்பான செல்வம்” என்று மீரா கூறுகின்றாள்.