மரணத்தைப் பற்றிய விழிப்புணர்வு நல்லது

செவ்வாய்கிழமை , 14 ஜூலை 2015,

பாத் அண்டோகாஸ்ட் ,ஜெர்மனி  

காலமும், வாழ்க்கையும் புயலை போன்று வந்து உங்கள் மனதை துடைத்தெடுத்து விடுகின்றது. இதையே இவ்விதமாக கூறுகிறேன். எதிர்மறைகள் புயலைப் போன்று எழுந்து உங்கள் மனதை ஆக்கிரமித்துத் துடைத்தெடுத்து விடுகின்றன. இவ்வாறு உங்களுக்கு நிகழ்ந்திருக்கின்றதா? (பலர் கையுயர்த்துகின்றனர்) இது நிகழக் கூடியது தான்.  எதிர்மறை உங்கள் மனதை அப்படியே ஏற்றுக் கொண்டுவிடும்.

இவ்வாறு நிகழ்வதே ஒரு பெரிய படி என்பதை விழிப்புணர்வுடன் அறியுங்கள். இருண்ட மேகங்கள் சூழந்திருந்தாலும் ஒரு விமானம் புறப்பட்டு மேலெழக் கூடிய வசதியுடன் இருப்பது போன்றதாகும். விமானம் கரிய மேகங்களை ஊடுருவிக் கொண்டு மேகங்களுக்கு மேலே பறந்து செல்கின்றது. நான் கூறுவது புரிகிறதா? நம் மனத்திலும் அத்தகைய ஒரு இயந்திர நுட்பத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்மறை மேகங்கள் சூழ்ந்து கொள்ளும் போது (அவற்றை விழிப்புணர்வுடன் உணர்ந்து) அவற்றிற்கு உயரே செல்லவேண்டும்.

உயர்ந்து செல்ல உங்களுக்கு உதவுவது ஞானம். ஞானம் என்பது என்ன? அறிவாற்றல் மற்றும் அனுபவம் இரண்டும் இணைந்தது. வெறும் அறிவு மட்டுமல்ல, வெறும் அனுபவம் மட்டுமல்ல, இரண்டும் இணைந்தது. இவையனைத்துமே தாற்காலிகமானவை. அனைவரும் மரணிக்கப் போகின்றனர் என்னும் அறிவும்,அனுபவமும் இணைந்தது.

மக்கள் தாம் இறக்கப் போகின்றோம் என்னும் நினைவுடன் இருந்தால், பேராசையுடன் இருக்க மாட்டார்கள். பொறாமைப்பட மாட்டார்கள். கோபப்பட மாட்டார்கள். நமது பிரச்சினையே கோபம், பேராசை பொறாமை பற்று, காமம் போன்றவைதாம். ஏனெனில் நாம் இறந்து விடுவோம் என்பதை மறந்து விடுகிறோம் அல்லது, இவையெல்லாம் தாற்காலிகமானவையே நாம் இறந்து விடுவோம் என்பதன் மீது கவனம் வைக்காமல் இருக்கிறோம். எதுவுமே நிரந்தரமானது அல்ல.

நான் இறக்கவே போவதில்லை என்னும் தத்துவத்தினை நீங்கள் முன்வைத்தால்,"சரி, உண்மை தான், உங்களுக்குள் இருக்கும் ஒன்றிற்கு இறப்பே கிடையாது, இந்த உலகம் நிலையானதல்ல, அனைத்தும் ஒருநாள் மறைந்துவிடும் என்பதையாவது குறைந்தபட்சம், நினைவில் கொள்ளுங்கள்.  புல்லின் மீதுள்ள பனித்துளி போன்று அனைத்தும் மறைந்து விடும். பொறாமை, கோபம், பேராசை, இவை எதுவுமே நிலைக்காது.

எவ்வளவு பணம் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? ஏராளமான பணம் இருந்தாலும் உங்களுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மறைந்து விடலாம். அப்போது அங்கு இங்கு என்று சுவிட்சர்லாந்த்,லக்சம்பேர்க் என்று பல வங்கிகளில் சேர்த்து வைத்த பணமும் என்னவாகும்? பலர் இது போன்று பணம் சேர்த்து இறந்து விடுகின்றனர். வங்கிகளுக்கு அந்தப் பணம் யாரைச் சேரும் என்பதே புரிவதில்லை. அவ்வாறு வங்கிகளில் பல பில்லியன் கணக்கான பணம் உள்ளதாக கேள்விப்படுகின்றேன். அவர்கள் வேதனை, பேராசை, பொறாமை இவற்றுடனேயே அத்தகைய பணத்தினை சேர்த்திருப்பார்கள். இறந்த பின்னர் யாருக்கும் போய்ச் சேராமல் இருந்து விடுகின்றது. வாழ்க்கை முழுவதுமே அந்தப் பணத்திற்காக வீணாகி விட்டது ! 

அதற்காக வங்கியில் பணமே சேர்க்கக்கூடாது என்று நான் கூறவில்லை. வாழ் நாள்  குறுகிய காலமே என்னும் விழிப்புணர்வுடன் கவனத்துடன் இருங்கள் என்றே கூறுகிறேன். இன்றே குன்றின் மீதேறிக் குதித்து இறந்து விடுங்கள் என்று நான் கூறவில்லை,இல்லவே இல்லை! ஏதோ ஓர் நாள் இறந்து விடுவோம் என்பதை நினைவில், கவனத்தில் வையுங்கள். அந்த ஞானச் செய்தி உங்களை சரியான பாதையில் நடத்திச் செல்லும்.அமைதியினை ஏற்படுத்தும். உறுஞ்சிக் கொண்டிருக்கும் அனைத்து எதிர்மறை என்ன மேகங்களிலிருந்தும் உங்களை விடுவிக்கும். இது ஓர் பகுதி, அதாவது ஞானம்.

அடுத்த பகுதி அனுபவம். நீங்கள் குழந்தையாக இருந்த போது கூட, எதிர்மறை எண்ண மேகங்கள் உங்களுக்கு வந்திருக்கும். குழந்தை பருவத்தில் எண்ண நிகழ்கின்றது? உங்களிடமிருந்த ஓர் விளையாட்டுப் பொருளை வேறொரு சிறுவனோ சிறுமியோ உடைத்து விட்டால் கோபம் ஏற்பட்டிருக்கும். விளையாட்டு சாமான்கள் கடைக்குள் நீங்கள் விரும்பிய அனைத்தையும் வாங்கும் முன்னர் உங்கள் பெற்றோர் கடைக்கு வெளியே அழைத்து வந்திருந்தால், கோபம் வந்திருக்கும். பின்னர் பள்ளியிலும், கல்லூரியிலும் உங்கள் நண்பர்களுடன் கோபம் போன்றவை ஏற்பட்டிருக்கும். சரியான மதிப்பெண்கள் அடையாமல் இருந்திருந்தால் வருத்தம் ஏற்பட்டிருக்கும். உங்கள் காதலன் அல்லது காதலியிடம் எதிர்மறையான உணர்வுகள் ஏற்பட்டிருக்கும்.! கடவுளே ! வாழ்வில் பல முறைகள் இது போன்றவை நிகழ்ந்திருக்கும். இப்போது அவற்றையெல்லாம் திரும்பிப் பார்த்தால், அவையனைத்தும் ஒன்றுமே இல்லாதவையாகவே தோன்றும். இதைப் புரிந்து கொண்டால் அது எதிர்மறை மேகங்களுக்கு உயரே நீங்கள் எழுவதற்கு உதவும். இதுதான் வாழ்க்கை அனுபவம்.

மற்றொரு வழி, உள்ள அமைதி மற்றும் சாந்தி அனுபவத்தை நினைவில் கொள்வது. ஏனெனில் அந்த கடந்தகால அனுபவத்தை மீண்டும் நினைவில் கொண்டு வருதல். அதே அனுபவத்தை உங்களுக்கு தரும். நீங்கள் மிகவும் வேதனையாக உணரும் போது உங்களில் சிலர் உடனேயே க்ரியா செய்திருக்கலாம். ஏனெனில், க்ரியா செய்து முடித்தவுடன் ஏற்படும் சாந்தி அனுபவத்தினை மனம் பெற விரும்புகிறது. மனதில் தொல்லை ஏற்படும்போது தாள கதியிலுள்ள மூச்சுப்பயிற்சி எதிர்மறை எண்ணங்களிலிருந்து உங்களை வெளியேற்றி சாந்தமான நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பது மனதிற்குத் தெரியும். எனவே, ஞானம் அனுபவம் இரண்டுமிணைந்து உங்களை எதிர்மறை எண்ண மேகக் கூட்டத்திலிருந்து வெளிக்கொண்டு வரும்.

ஒரு எதிர்மறை எண்ணத்தால் நீங்கள் பாதிக்கப்படும் போது அனைவருமே தவறு செய்வதாக உணருவீர்கள். மிகச் சிறந்த ஒருவரிடம் கூட தவறு காண்பீர்கள். அனைவரிடமும் உங்களிடமும் கூட குறை கண்டுபிடிப்பீர்கள். முதலில் இவர் செய்வது தவறு, அவர் செய்வது தவறு என்று  பிறரைக் குறை கூறுவீர்கள். ஏனெனில் உங்கள் தவறை நீங்கள் காண்பதில்லை. உங்கள் தவறை நீங்கள் அறியும் போது உங்களையே நீங்கள் குறை கூறிக் கொள்ளத் துவங்குவீர்கள்.அடுத்த கட்டம் மனச் சோர்வுக்கு ஆளாவது. இது தான் இயக்கவியல். இந்த வழியில் தான் நிகழ்கின்றது.

இதை நீங்கள் ஞானத்தின் மூலம் கடக்க வேண்டும். ஞானம் என்பது அறிவாற்றலும், அனுபவமும் இணைந்தது. அனைத்தும் தாற்காலிகமானவை என்று தெரிந்து கொள்வது அறிவாற்றல். நிகழ்வுகள் வந்து போகும் என்பதை நினைவு கூர்தல் அனுபவம். இதை கண்டறிந்து கொண்டால் உங்கள் முகத்தில் புன்னகை மீண்டும் தவழும். அப்போது நீங்கள் சிறிது பாதிக்கப் பட்டாலும் அதைப் பொருட்படுத்த மாட்டீர்கள். அன்பானவர்களே ! நீங்கள் தூய்மையான வெட்ட வெளி! உங்களை எதுவும் அணுக முடியாது!