இன்பம் இறுதியில் துன்பத்திற்கு வழி வகுக்கின்றது

ஞாயிற்றுக்கிழமை, 5 அக்டோபர், 2014,

பெங்களூரு இந்தியா

இன்பம் எப்போதுமே உங்களை  பரபரப்பாக்கி ஓட விடுகின்றது. முதலில் இன்பம் உங்களை ஓட விடுகின்றது, பின்னர் விட்டு விலகி ஓட வைக்கின்றது. ஆனால் யோகா உங்களை நிலை நிறுத்துகின்றது. உங்கள் வாழ்க்கையில் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்துகின்றது. உடல், மனம், மற்றும் உணர்ச்சிகளில் பலமும், ஸ்திரமும் கொண்டவனே யோகி. இது மிக முக்கியமானது ஆகும். எதையோ நோக்கி நீங்கள் ஓடிக் கொண்டிருப்பதால் உங்களது உணர்ச்சிகள் மேலும் கீழுமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றீர்கள்? இன்பத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றீர்கள், அதை அடைந்தவுடன் அது, அதை விட்டு ஓட வைக்கும்.

உங்கள் வாழ்விலேயே இதை காணலாம். எதை நோக்கி ஓடினீர்களோ ஒரு காலகட்டத்தில், இனி அதை கையாள முடியாது என்ற நிலையில், அதுவே உங்களை விலக்கி இருக்கும். ஏதாவது ஒரு நிலையில், இதை விட்டு ஓடிவிட வேண்டும் என்று எண்ணும் மக்கள், அந்நிலைக்கு காரணம் அதை அனுபவித்து கொண்டிருப்பது தான் என்பதை உணர வேண்டும். அனுபவிக்கும் காலத்தில் தான், விட்டு ஓடிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.ஆகவே, ஸ்திர நிலையை அடைய இன்பத்தை தேட வேண்டும் என்னும் மனதின் அணுகுமுறையை மாற்றிக் கொண்டால் எதுவுமே பிரச்சினை இல்லை.

‘பிறருக்கு ஆறுதல் அளிக்கவே, நான் இங்கிருக்கின்றேன், நான் ஆறுதல் அடைவதற்காக அன்று’, என்று நீங்கள் உணர வேண்டும்.இந்த ஒரு மனப்பாங்கானது " ஓ இதைத் தாங்க முடியவில்லை, இதிலிருந்து ஓடி விட வேண்டும்" என்னும் எண்ணப் போக்கினை கட்டுப் படுத்தும். இன்பத்தைத் துய்க்க வேண்டும் என்னும் உணர்வே இந்த எண்ணப் போக்கிற்குக் காரணம் ஆகும். நீங்கள் ஸ்திரமாக இருக்கும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிறருக்குக் கொடுங்கள். சூரியன் " நான் மிக அதிக ஒளியைத் தருகின்றேன், நான் ஓடி விட விரும்புகிறேன்" என்று கூறுவதில்லை. தங்கம் நான் அதிகமாக மிளிருகின்றேன், என்று கூறுவதில்லை ஏனெனில் இவை இயல்பாகவே நிலையாக இருக்கின்றன. அவற்றின் முக்கியத்துவத்திலிருந்து வெளியேறுவதில்லை. யோகா உங்களை இயற்கையிலேயே நிலை நிறுத்துவது ஆகும். யோகா உங்கள் சொந்த இயல்பிலேயே ஸ்திரத்தன்மை பெறச் செய்வது ஆகும்.

குருதேவ், சிமரன் (ஓதுதல்) மற்றும் தியானம் இவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு என்ன?


குருதேவ்: சிமரன் தியானத்தின் ஆரம்பம், சமாதி அதன் முடிவு. சிமரன் என்பதன் பொருள் நினைவில் கொள்ளுதல் என்பது ஆகும். நீங்கள் ஒருவரை விரும்பினால், அவரை நினைவுகூரும் போது சில உணர்ச்சிகள் எழும், அல்லவா? அத்தகைய உணர்ச்சிகள் வழிந்தோடிய பின்னர் மனம் அமைதி அடைகின்றது. மனதில் ஏற்படும் கிளர்ச்சி அமைதி அடைந்து விடுகின்றது. அவ்வாறு உணர்ச்சிகள் வழிந்தோடி, மனம் அமைதி அடையும் நிலை தான் தியானம்.