தெய்வத்துடன் இருப்பது

வியாழக்கிழமை 02-10-2014

பெங்களூர், இந்தியா

(பெங்களூர் ஆசிரமத்தில் நவராத்திரி ஒன்பதாம் நாள் ரிஷி ஹோமம் நடந்த போது குருதேவர் பேசியது)


இப்போது வேத பண்டிதர்கள் சாம வேதத்திலிருந்து ஒரு அழகான பகுதியை ஓதினார்கள். இந்த உலகம் (சன்சார்), ஜடப் பொருள்களால் ஆன மாய உலகம் நம் மனதால் தோற்றுவிக்கப்பட்டது. நாம் காணும் உலகம் மற்றும் இப்படைப்பை புரிந்து கொள்வதற்குப் பின் நம் மனம் இருக்கிறது. இந்த துக்கம் நிறைந்த சாகரமான உலகைக் கடந்து செல்ல நாம் ஒரு பாலத்தை உபயோகிக்க முடியும். இந்த சாகரத்தைக் கடந்து செல்ல உதவும் பாலம் எது? அதன் மறு பக்கத்தில் என்ன இருக்கிறது?

ஒரு பக்கத்தில் அதானம் இருக்கிறது. அதானம் என்றால் பேராசை, அதர்மம். அதானம் என்றால் எனக்கு இது வேண்டும், இதுவும் வேண்டும் என்ற மோஹம். நமக்குக் கிடைத்ததை தர்மம் செய்ய, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை.இந்தப் பாடல் “நாம் இந்த அதான குணத்தைக் கைவிட்டு, நமக்குக் கிடைத்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். தாராளமாக தர்மம் செய்ய வேண்டும்“ என்று சொல்கிறது. மேலும் “நீ உன் கோபத்தைக் கைவிட்டு அமைதியாக இருக்க வேண்டும்“ என்று சொல்கிறது. 

இறுதியாக “ உன் சந்தேகங்களையும், தவறான நம்பிக்கையையும் கைவிட்டு திட நம்பிக்கையோடு தெய்வத்திடம் பக்தி செலுத்த வேண்டும்“ என்று சொல்கிறது. தெய்வத்தின் பால் அசைக்க முடியாத திட நம்பிக்கை இருக்கும் போது, உன் சந்தேகங்களும், எதிர்மறை பண்புகளும் மறைந்து விடும். அதே போல், சத்தியத்தை நாடி, உண்மையில் ஒருமைப்பட்டிருக்கும் போது நம்மிடமிருந்த கள்ளத் தனங்களும், எதிர்மறை குணங்களும் மறைந்து விடும். எனவே சம்சாரத்தைக் கடக்க உதவும் பாலத்தின் இரு புறங்களிலும் இப்படிப்பட்ட குணங்கள் உள்ளன. இப் பாடலின் இரண்டாம் வரியில் “ துக்க சாகரத்தை கடப்பது மிகவும் கடினம். இருந்தாலும் நாம் நல்ல குணங்களை கடைப்பிடித்து கடந்து செல்ல வேண்டும். “ என்று சொல்லப்படுகிறது.

இடை விடாமல் நற்பண்புகளை அனுசரிப்பதால் உனக்கு என்ன கிடைக்கும்? நீ நிலையாக தெய்வத்தோடு ஒன்றி இருக்க முடியும். சம்சார சாகரத்தைக் கடந்து மீண்டும் பிறவா அமிர்த நிலையை அடைய முடியும். நீ ஒரு சிறப்பாக ஒளி விடும் ஜோதியாகலாம்.அடுத்த வரி. நீ தெய்வீகத்தின் ஒரு பகுதியானவன். உன் மூலமான தெய்வீகத்துடன் இணைந்து விடு. உன் மனம் கரைந்து எல்லோருடனும், எல்லாமுடனும் கலந்து விடு. எங்கிருந்து வந்தாயோ, அந்த தெய்வீக தத்துவத்துடன் ஒன்றி விடு இல்லாவிட்டால் நீ ஒன்றை நினைத்து ஒரு வழியில் செல்கிறாய். மற்றவர்கள் வேறு வழியில் செல்கிறார்கள். உங்கள் மனங்கள் இணைவதில்லை. அங்கு தான் பிரச்சினை துவங்குகிறது. இது ரிக் வேதத்தின் கடைசி பாடல். இந்திய நாட்டின் சட்டத்திலும் இறுதியாக இப் பாடல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்பாடல் நம் எல்லோருடைய மனங்களையும் ஒரே லயத்தில் தெய்வீக தத்துவத்துடன் இணைவதற்கான வேண்டுதலாக விளங்குகிறது.

எல்லோரும் எல்லாமும் எல்லா நிலைகளிலும் சமமாக மதிக்கப்பட வேண்டும். ஏனென்றால் இவ்வுலகில் எல்லோரும் எல்லாமும் அந்த தெய்வத்தை சேர்ந்தவை. நம் எல்லோருடைய மனங்களும் எந்த ஒரு முரண்பாடுமின்றி ஒன்றாகச் செயல்பட வேண்டும். அப்போது இவ்வுலகம் மிகவும் அழக்காகக் காட்சியளிக்கும்.