செல்வந்தர் மேலும் செல்வந்தர் ஆவார்

புதன்கிழமை, 1 அக்டோபர்,
பெங்களூரு, இந்தியா
இந்த நல்ல நாளில் அனைவருக்கும் ஆசீர்வாதம். இந்த ஆழ்ந்த திருப்தி உணர்வுடன் வாழ்வில் முன்னேறிச் செல்லுங்கள்.
இரண்டு விஷயங்கள் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நமது தெய்வீகத் தன்மை நமது களங்கமற்ற மற்றும் இயல்பான நிலையிலேயே அமைந்திருக்கின்றது.அதனால் தான், "சஹஜ் மிலே அவினாஷ் (ஒருவன் களங்கமற்ற மற்றும் இயல்பு நிலையிலேயே தெய்வீகத்தை அடைகின்றான்) என்று கூறப்பட்டுள்ளது.


இரண்டாவதாக நினைவில் கொள்ள வேண்டியது, என்னவென்றால், இறைமையிடமிருந்து நாம் நிறையப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். 



உங்கள் வாழ்வில் நிறைவானவற்றை பெற்றிருக்கின்றீர்கள் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது வேண்டும்,அது வேண்டும் என்றே எண்ணிக் கொண்டிருந்தால், மனம் ஓய்வற்று இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கும். நான் வாழ்வில் நிறைய பெற்றுக்கொண்டு விட்டேன் என்னும் எண்ணத்துடன் இருந்தால், மனம் அமைதி அடைந்து திருப்தி ஏற்படும். இன்னும் வேண்டும் இதை அதை அடைய வேண்டும் என்றே எண்ணமிட்டுக் கொண்டிருந்தால் துன்பத்தையே அனுபவிப்பீர்கள். நிறைய அடைந்து விட்டோம் என்னும் எண்ணத்தில் நிலைத்திருந்தால், நீங்கள் மேலும் மேலும் அதிகமாக அடைவீர்கள்.
அது போன்று,பிறருக்கு நிறையச் செய்து விட்டோம் அல்லது பிறருக்கு அதிகம் அளித்து விட்டேன் என்று எண்ணினால், அப்போதும் நீங்கள் துன்பத்தையே அடைவீர்கள். இந்த உணர்வு உங்களுக்குத் திமிரை அளிக்கும்.நான் நிறையப் பெற்றுக் கொண்டு விட்டேன், பிறருடன் பகிர்ந்து கொள்ள என்னிடம் நிறைய உள்ளது என்னும் உணர்வே ஞானத்தின் அடையாளம்.இதுவே உண்மையான திருப்தியும் ஆகும்.
எனவே இப்போது மூன்று விஷயங்களைக் கூறியிருக்கின்றேன்.
1. களங்கமில்லாமல் இயல்பாக இருங்கள். அவ்வாறிருந்தால் இறைமையை அடைய எந்தத் தாமதமும் இருக்காது. அப்போது உங்களுக்கு வேண்டும் என்று இருந்தாலும் இறைமையினின்று விலகி இருக்க முடியாது. இதுதான், இறைமையிடம் ஒருவன் கொள்ள வேண்டிய அசைக்க முடியாத பக்தி ஆகும்.
2. எனக்கு நிறைய அளிக்கப்பட்டுள்ளது, பிறருடன் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுவே மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் வழிகாட்டும் பாதை.
3. நான் நிறைய கொடுத்து விட்டேன்,எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்பது துன்பம் மற்றும் பாதிப்பினை ஏற்படுத்தும் பாதை. இங்கு நடத்தப் படும் யஞ்யங்கள் உலக நன்மைக்காக,  உலகெங்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சுபிக்ஷத்தை கோரி நடத்தப்படுபவை. இந்த யஞ்யங்கள் தரும் பலன்கள் விரிந்து பரந்த உலகெங்கும் சென்று அடைகின்றன. நாம் செய்ய வேண்டியது ஒன்றே: நமது மூலாதாரமாகிய இறைமையுடன் தொடர்பு கொண்டு அனைத்தும் நமக்கு இருக்கின்றது என்பதை தெளிவாகப் புரிந்து உணர்ந்து கொள்வதே ஆகும்.