நம்பிக்கை போதுமானது

 திங்கள்கிழமை, 13 அக்டோபர் 2014

குபெக், கனடா.


உண்மையான சரணடைதல் கடவுள் அருளியதா? எவ்வாறு மனிதர்கள் அதை அடைய முயற்சி செய்யலாம் ?

குருதேவ்: கடவுள் மீது ஆணையாக, சரணடைய முயற்சிக்காதீர்கள். சரணடைதல் என்னும் சொல்லானது, பல தடவைகள் அச்சம் ஏற்படுத்தக் கூடிய அளவில், தவறான முறையில் பயன் படுத்தப்படுகின்றது. ஆகவே, அந்தச் சொல்லை தவிர்த்து விடுங்கள், வேண்டுமென்றால் ஏரியில் தூக்கிப் போடுங்கள். இயல்பாக எளிமையாக இருங்கள், சரணடைய முயற்சிக்காதீர்கள். உங்களுக்கு மேலான ஒரு சக்தி உங்களைக் கவனித்து உங்களுக்கு உதவுவதாக நம்பிக்கை இருந்தால், அது போதும். எதை  உங்களால் கையாள முடியாதோ, அதை "நான் விட்டு விடுகிறேன்" என்று கூறி விடுங்கள். அப்போது சரணடைந்து விடுகின்றீர்கள். இதை விரக்தியுடன் செய்யலாம், அல்லது முழுமையான தளர்வுடன் செய்யுங்கள்.

குருதேவ்:ஆம் என்னும் நேர்மறையான மனப்போக்கை கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு கற்பிக்கின்றீர்கள். சில சமயங்களில் பலவற்றிற்கு நான் ஆம் என்று கூறி விடுகின்றேன், ஆனால் என்னால் அவற்றை பூர்த்தி செய்ய முடிவதில்லை. இந்த ஆம் மனப்போக்கிற்கும் நேர மேலாண்மைக்கும் இடையே மோதலை நான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன்.

குருதேவ்: அது மோதல் இல்லை. ஆம் எனும் மனப்பான்மைக்கு எதற்கும் கண்மூடித்தனமாக அனைத்திற்கும் ஆம் என்று கூறவேண்டும் என்னும் பொருள் இல்லை. நேர்மறையான  அறிவு பூர்வமான சிந்தித்தல் என்பதே அதன் பொருள் ஆகும். ஆம் என்னும் மனப்பான்மை எப்போதுமே அறிவுடன் கூடியதாகச் செல்ல வேண்டும் முட்டாள்தனமாக அன்று. ஒருவர், இந்த ஏரி நீர் இளம்சூடாக இருக்கின்றது, அதில் நீ குதிக்கலாம் என்று கூறினால், ஆம் என்று நீங்கள் கூற முடியாது. நீங்கள், "உன்னுடைய கருத்து வேறுவிதமாக இருக்கின்றது என்றே எண்ணுகின்றேன். இது கோடைக்காலம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். இப்போது கடும் குளிர் காலம்" என்றே கூறவேண்டும். எனவே, ஆம் மனப்பான்மை யார் எதை கூறினாலும் அதற்கு தலையாட்டுவதாக இருக்கக் கூடாது, அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும்.

படைப்பில், உயிரினங்கள் எந்த நிலையில் ஆத்மாவை அடைகின்றன? கொசுக்கள், மரங்கள், பாக்டீரியாக்கள் திசுக்கள் போன்றவற்றைக் குறிப்பிடுகின்றேன்.

குருதேவ்: ஆன்மா, எறும்பிலிருந்து பாக்டீரியா வரையில் அனைத்திலுமே உள்ளது. ஆனால் முதிர்ந்த ஆன்மாவானது ஒரு உயிரில் ஒரு காலகட்டத்தில் நுழைகின்றது, கருத்தரிக்கும் காலத்திலேயோ நான்காவது அல்லது ஐந்தாவது மாதத்திலேயோ அல்லது பிறக்கும் காலத்திலேயோ கூட இது நிகழலாம்.இவை தாம் மூன்று சாத்தியக் கூறுகள். ஆனால் இதை  அறிய முடியாது. அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டியது தான்.

தங்களிடமிருந்து நாங்கள் எந்த முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்?

குருதேவ்: இது எவ்வாறு இருக்கிறதென்றால், ஒரு மருந்துக் கடைக்குச் சென்று, எந்த சிறந்த மருந்தை நீங்கள் எனக்குத் தர முடியும் என்று கேட்பதை போன்று இருக்கின்றது. ஒன்றல்ல, என்னவெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் இங்கிருந்து நீங்கள் பெற முடியும். ஏன் ஒவ்வொருவருக்கும் ஒரு அறிவுரை என்று நான்  குறைத்துக் கொள்ள வேண்டும்? ஒருவர் இடது புறமாகச் சாய்ந்தால், வலது புறமாக நகருங்கள் என்று கூறுவேன். ஒருவர் வலது புறமாக சாய்ந்தால் இடது புறமாக நகருங்கள் என்று கூறுவேன். நடுவிலேயே இருங்கள்!

தாங்கள் வலது கையா அல்லது இடது கை பழக்கம் உள்ளவரா?

குருதேவ்: அனைத்தையும் சரியாக செய்பவன். நான் எது ஒன்றையும் விடுவதில்லை என்றே கருதுகின்றேன். எதையும் விடாததால் நான் சரியாக இருப்பதாகவே எண்ணுகின்றேன்.

விலங்குகளுக்கு மனம் உள்ளதா? எப்படி எந்த மனப் பிரச்சினைகளும் இல்லாமல் அவை இருக்கின்றன?

குருதேவ்: விலங்குகளுக்கும் மனம் உள்ளது, அவைகளுக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன. எப்படி ஒரு சிறுத்தை ஒரு குரங்குக் குட்டி பிழைக்க  உதவியது, எப்படி  ஒரு டால்பின் வகை மீனால் ஒரு நாய் காக்கப்பட்டது என்பது பற்றியெல்லாம் ஒரு கட்டுரை வந்திருக்கின்றது. இத்தகைய ஆச்சர்யமான விஷயங்கள் உள்ளன. சாதரணமாக நாம் "பூனையும் நாயும் போன்று சண்டையிட்டுக் கொள்வது" என்று கூறுவோம்.ஆனால் நமது ஆஸ்ரமத்தில் ஒரு நாய் ஒரு பூனைக் குட்டிக்கு பால் கொடுத்து வருகின்றது. பூனைக் குட்டி நாயின் முதுகில் சுகமாக அமர்ந்து கொள்கின்றது, நாயும் அக்குட்டியைக் கொஞ்சி மகிழ்கின்றது. அவையிரண்டும் மிக சிநேகமாக உள்ளன. ஒரு மாதத்திற்கு முன்பு, பானு என்னிடம், ஆஸ்ரமத்தில் ஒரு மயில் பாம்பிற்குக் காவலாக இருப்பதை பார்த்ததாகக் கூறினாள். சாதரணமாக மயில்களும் பாம்புகளும் தீவிரப் பகையுடன் ஒன்றையொன்று கொன்று விடும். அந்த இடத்தில் முயல்களும் இருப்பதால், பாம்பு முயல்களைக் கொன்று விடாமல் காப்பதற்காக மயில் பாம்பினைக் கண்காணித்து வருகின்றது.

ஆகவே விலங்குகளுக்கும் மனம் உண்டு. யானைகள் மிகுந்த புத்திசாலிகள். நமது ஆஸ்ரமத்தின் யானை நான் அரிசி கொடுத்தால் தனது தும்பிக்கையில் வாங்கிக் கொள்ளமாட்டாள், ஏனெனில் அது குளறுபடியாகி விடும் என்று அவளுக்குத் தெரியும். வாழைப்பழம் கொடுத்தால் தும்பிக்கையில் வாங்கிக் கொள்வாள், அரிசி கொடுத்தால் என்னுடைய கையை இழுத்துத் தன் வாயில் அரிசியைப் போடும்படி செய்வாள். மாவுத்தன் அவள் என்னுடைய அறைக்கு வரும் போது ஓடி வருவதாகவும், திரும்பச் செல்வதற்கு மறுத்து அடம் பிடிப்பதாகவும் கூறுகின்றான். "குருதேவ், தங்கள் அறைக்கு வரும் போது நான் கூறுவதையெல்லாம் கவனிக்கிறாள், திரும்பச் செல்லும் போது எனக்கு அடங்குவதேயில்லை" என்று மாவுத்தன் கூறுகின்றான்.

விலங்குகள் புத்திசாலிகள். அவைகளுக்கும் மனம் உண்டு. ஆனால் அவை இயற்கையோடு இணைந்து வாழ்கின்றன. இயற்கைக்குப் புறம்பாக எதுவும் செய்வதில்லை. அதிக உணவு உண்பதில்லை. அதிக உறக்கம் அல்லது உறக்கமின்மை கிடையாது. மனிதர்களை போன்று அதிகப் படியான இன்பம் போன்ற செயல்பாடுகள் கிடையாது. அவை இயற்கையோடு இயைந்து இருக்கும் படியான சீரமைப்பு கொண்டுள்ளதால் நன்றாகவே இருக்கின்றன.