ஒரு துல்லியமான தராசு

செவ்வாய்க்கிழமை, 07 அக்டோபர் 2014

டில்லி, இந்தியா


(கீழே வருவது “(தொழில்) திறன் வாய்ந்த இந்தியாவை உருவாக்குவோம்“ என்ற பதிப்பைத் தொடர்கிறது)

பல நிறுவனங்களில் பல அடுக்குகள் கொண்ட மேலாண்மை உள்ளது. முதல் அடுக்கில் இருக்கும் நிறுவனத் தலைவர் 4ம் அடுக்கில் பணி செய்பவர்களிடம் நேராகத் தொடர்பு கொள்ள முடியாது. அவருக்குக் கீழே அடுக்கு வாரியாக பல மேலாளர்கள் இருப்பார்கள். நிறுவனத் தலைவர் 4வது அடுக்குத் தொழிலாளர்களுடன் நேராக பேசினால் இடையில் உள்ள அதிகாரிகள் ஒதுக்கி விடப்பட்டதாக எண்ணுவார்கள். ஆகவே இடையில் உள்ள அதிகாரிகளின் உணர்வை மதிப்பது அவசியம். அதே சமயம் கீழ்மட்டப் பணியாளர்களிடம் தொடர்பு கொள்வதும் அவசியம். அவர்களின் திறமைகளை வளர்க்கவும், உற்சாகமூட்டவும், நிறுவன தலைவருக்கும், இடையில் உள்ள அதிகாரிகளுக்கும் இப்படிப்பட்ட ஆற்றல் தேவை.யாரும் ஒதுக்கப்பட்டதாக நினைக்ககூடாது. அவர்களுடைய சக்தி குறைந்தாக உணரக்கூடாது. அதே சமயம் நிறுவனத்தில் பணிபுரியும் எல்லோரும், திறந்த மனதோடு ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டு, நிறுவன வளர்ச்சிக்காக ஒரே குழுவாகப் பாடுபட வேண்டும். அப்போது தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும். நடுவில் நிகழும் ஓரிரண்டு கசப்பான சம்பவங்களை மேற்பார்வை செய்ய முடியும். நிறுவனத் தலைவருக்கும், உயர் மட்ட அதிகாரிகளுக்கும் இப்படிப்பட்ட ஆற்றல் அவசியம் தேவை. நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா?

பல நிறுவனங்களில் நடக்கிறது. தொழிலாளிகள் தங்களுடைய மேலாளர்களை மதிக்காமல் எம்.டி யிடம் நேராகப் பேசி தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆகவே, இந்த சூழ்நிலையை சரியாகக் கையாளாவிட்டால் எல்லாம் குழப்பத்தில் முடியும். ஒவ்வொருவரும் நிறுவனத்தின் பல அடுக்கு அதிகாரிகளை மதித்து செயல் புரிவது அவசியம். அதே சமயம் 4ம் அடுக்கில் இயந்திரங்களுடன், (வாடிக்கையாளர்களுடன்) நேராகப் பணிபுரிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் தருவது மிகவும் அவசியம். எப்படி அமல்படுத்துவது என்று அமர்ந்து சிந்திக்க வேண்டும். திறமையோடு செய்ய பல வழிகள் உண்டு. இப்படிப்பட்ட திறமைகளை ஒருவர் வளர்த்துக் கொள்ள முடியும்.

நடுமட்ட அதிகாரிகள் பாதுகாப்பின்மையை உணரும் போது நிறுவன வளர்ச்சிக்கு இடையூறுகள் ஏற்படும். தன் மேலாளரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக பலர் உண்மையற்றவைகளை சொல்லி நல்ல பெயர் பெற விரும்புகிறார்கள். “பாருங்கள். நான் இதைச் செய்தேன். அதைச் செய்தேன்“ என்று பொய்யாகச் சொல்வார்கள்.மேலதிகாரிக்கு உண்மை தெரிய வரும் போது, இது அவர்களுக்கு எதிராகி விடும். இப்படிப்பட்ட செயல்களால் பெரிய பெரிய நிறுவனங்களை (ஆலைகளை) மூடும் படியான சூழ்நிலை வந்திருக்கிறது. அவர்கள் தங்கள் திறமையை நிரூபிப்பதற்காக அப்படி கதைகளை சொல்கிறார்கள். சிலர் கதைகளை ஜோடிப்பதில்லை. ஆனால் அவர்கள் தாங்கள் சொல்வதை நிஜம் என்று நம்புகிறார்கள். அவர்களுடைய நம்பிக்கை உண்மைக்குப் புறம்பானது என்பதை அவர்கள் அறிவதில்லை. அவர்கள் தங்கள் தவறான நம்பிக்கையை மாற்றிக் கொண்டு உண்மையைக் காண மறுக்கிறார்கள். அவர்களின் தவறான நம்பிக்கையால் நாட்டுக்கு எவ்வளவு நஷ்டம் விளைந்திருக்கிறது என்பதை நம்ப மறுக்கிறார்கள் (இந்த நாட்டில் மட்டுமல்ல. உலக அளவில் அவர்கள் இருக்கிறார்கள்)நடுமட்ட அதிகாரிகள் தங்கள் பாதுகாப்பற்ற நிலைமையிலிருந்து வெளியே வந்து செயல்பட வேண்டும். தங்களுடைய நிர்வாகத் திறமை நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்தவோ, அல்லது அழிவை நோக்கியோ செலுத்த வல்லது என்பதை உணர வேண்டும்.

நடுநிலை அதிகாரிகள் திறமையாக செயல்படும் போது தொழிலாளர் பிரச்சினைகள் தலை தூக்காது. பல தொழிலாளர் பிரச்சினைகள் சரியான பேச்சு வார்த்தை இல்லாததால் வளர்ந்திருக்கின்றன. ஒருவரை சேர்ந்தவர் என்ற உணர்வு குறைவதால் இப் பிரச்சினைகள் வளர்கின்றன. நாம் மன அளவில் விழிப்புணர்வு, உடல் ஆரோக்கியம், உணர்ச்சிபூர்வமாக ஒருவரோடு ஒருவர் இணைந்திருப்பது, ஆன்மீக மேம்பாடு முதலியவற்றில் கவனம் வைத்தால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இந்த நான்கு விஷயங்களும், தனி மனிதருக்கும், மேல்மட்ட மேலாண்மை அதிகாரிகளுக்கும், நடுமட்டத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கும் 4வது அடுக்கில் பணி புரியும் தொழிலாளிகளுக்கும் பொதுவானது.

கேள்வி பதில்கள்

குருதேவா ! நான் ஒரு சார்ட்டர்ட் அக்கௌண்டன்ட். பல தொழிலதிபர்களை சந்திக்கிறேன். நம் குடும்பத்தில் ஒருவர் போல் அவர்களோடு பழகும் போது, அவர்கள் நம்மிடம் மிக உரிமை எடுத்துக் கொள்கிறார்கள். தவறான காரியம் செய்யச் சொல்கிறார்கள். இந்த சூழ்நிலையிலிருந்து வெளி வருவது எப்படி ?

குருதேவர்: உனக்குத் தனித்திறமை வேண்டும். ஒருவரோடு ஒருவர் நெருங்கியிருப்பது தவறல்ல. அதே சமயம் மற்றவரின் தவறான செயலுக்கு உடன்படக் கூடாது. இது ஒரு சிறப்பான ஆற்றல். உன் மன எழுச்சிகளோடு மட்டுமில்லாமல் அறிவையும் பயன்படுத்த வேண்டும். மற்றவர் உன்னை உபயோகப்படுத்த அனுமதிக்க வேண்டாம். அதே சமயம் மிகக் கடுமையாக முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டு) நடந்து கொண்டால் யாரும் உன்னோடு பழக விரும்பமாட்டார்கள். ஒரு கம்பி வாத்தியத்தின் கம்பிகள் சரியான டென்ஷனில் இருந்தால் தான் இசைக் கலைஞர் அதை வாசிக்க முடியும். கம்பிகள் மிகத் தளர்வாகவோ, மிக இறுக்கமாகவோ கட்டப்பட்டிருந்தால் இசை சரியாக வராது. எனவே உன் மன எழுச்சிகளுக்கும், உன் அறிவுக்கும் ஒரு துல்லியமான சம அளவு (தராசின் தட்டுகள் சமமாக இருப்பது போல்) இருக்கும் படி நடந்து கொள்ள வேண்டும்.

நம் வாழ்க்கை லஞ்சம், தூய்மையற்ற சுற்றுப்புறம், நெறியில்லாத பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப் பிரச்சினைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. லஞ்சத்துக்கும், லஞ்ச ஊழலுக்கும் நாம் மிகவும் இடம் கொடுத்து ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த சக்கர வ்யூகத்திலிருந்து வெளி வருவது எப்படி?

குருதேவர்: புது அரசும், நிர்வாகமும் லஞ்ச ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். லஞ்சத்தை ஒழிக்க பல மட்டத்தில் மக்களை விழிப்புணர்வு பெறச் செய்ய வேண்டும்.
·         மக்கள் நிலையில் (லஞ்சம் கொடுக்காமல் இருப்பது)
·         அதிகாரிகள் நிலையில் (லஞ்சம் வாங்காமல் இருப்பது)
·         அரசாங்கத்தின் நிலையில் (லஞ்சத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுப்பது)

மக்கள் வேறொரு அரசைக் கொண்டு வரக் காரணமே, ஊழலற்ற, லஞ்சமில்லாத அரசியல் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான். ஒரு தனி மனிதனால், சிறு தொழிலதிபரால், லஞ்சத்தை எதிர்த்துப் போராடுவது மிகக் கடினமாக இருக்கும். ஆனால் நாமனைவரும் ஒன்று சேர்ந்து போராடும் போது லஞ்சத்தை ஒழிக்க முடியும். ஒரு தொழிலாளியால் தனித்து போராட முடியாது. ஆனால் தொழிலாளர் சங்கத்தில் இணைந்த பல தொழிலாளிகள் தங்கள் உரிமைகளை பேச்சு வார்த்தை மூலம் பெற முடிகிறது. அதே போல் CRF அல்லது MSM முதலிய அமைப்புகள் பொது மேடைகளில் லஞ்சப் பிரச்சினையை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்கி, லஞ்சத்தை எதிர்த்துப் போராட முடியும்.மக்கள் லஞ்ச ஒழிப்புக்கான வழிமுறைகளை தேர்ந்தெடுத்து செயல் பட வேண்டும். அது நல்லது. அப்படி செயல்பட முடியாதவர்கள் வாழும் கலையின் தன்னார்வலர்களை அணுகலாம். வாழும் கலையினர் உங்களோடு சென்று அதிகாரிகளை சந்தித்துப் பேசி, உங்கள் காரியங்களை லஞ்சம் வாங்காமல் செய்யும்படி தூண்டுவார்கள்.

ஒரு தொழிலதிபராக இருப்பது கடினம். அதுவும் ஒரு பெண் தொழிலதிபராக இருப்பது மிகவும் கடினம். குடும்ப வாழ்க்கையையும், தொழிலையும் துல்லியமான சமநிலையில் பார்த்துக் கொள்வது எப்படி என்று ஆலோசனை சொல்வீர்களா?

குருதேவர்: உனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா? அதே போல் செய்ய வேண்டும். பெண் தொழில் நடத்துவது கஷ்டம் என்று நினைக்காதே. அதை ஒரு சவாலாக எடுத்துக்கொள். உன்னிடம் சக்தி உள்ளது. சவாலை ஏற்றுக் கொள்ள தகுதி மற்றும் இறையருள் உன்னிடம் இருக்கிறது. அதை கஷ்டம் என்று நீ நினைக்கும் போது அதை நீ மேலும் கடினமாக்குகிறாய். ஆழ்மனதில் அது கடினம் என்ற விதையை விதைக்கிறாய். கஷ்டம் என்ற வார்த்தையை உன் அகராதியிலிருந்து நீக்கி விட்டு அதை ஒரு சவாலாக எடுத்துக்கொள். உன் உள்ளிருந்தே அந்த சவாலை சமாளிக்கும் திறமை மற்றும் சக்தி பிறக்கும்.உன்னிடமிருந்த சிறப்பான தகுதிகள் வெளிப்படவே சவால்கள் எழுகின்றன. பெண் தொழிலதிபர்கள் சிறப்பாகத் தொழில் செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளன.

குருதேவா ! சிறு மற்றும் மத்திய நிலையில் உள்ள தொழிலதிபர்களுக்கு (SME) தங்கள் தொழிலாளர்களை மேலாண்மை செய்யும் வழிகள் பற்றிச் சொல்லுங்கள்.

குருதேவர்: உங்கள் தொழிலாளர்களனைவரையும் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களாக்கி கொள்ளுங்கள். நம் நாட்டில் வசுதெய்வ குடும்பகம் என்று சொல்கிறோம். இந்த உலகம் முழுவதும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதன் பொருளாகும். உலகத்தின் 700 கோடி மக்களை உன் குடும்பத்தவர் என்று ஏற்றுக் கொள்ள முடியாமலிருந்தாலும், உன் தொழிற்சாலையில் பணி புரியும் எல்லோரையும் உன் குடும்பத்தவராக ஏற்றுக்கொள். ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கு. அப்படிச் செய்ய முடியும்.

குருதேவா ! நான் சைவ உணவு உண்பவன். ஆனால் மீன்வளர்ப்புத் துறையில் வேலை செய்ய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆனால் மீன் வளர்ப்பை ஆன்மீக நெறிப்படி பார்க்கும் போது அதை உணவாக்கிக் கொள்வதற்காக விற்பது சரியல்ல என்று மனதில் ஒரு உறுத்தலிருந்து கொண்டேயிருக்கிறது. என்ன செய்யலாம் ?

குருதேவர்: உன் ஆத்மா அப்படிச் சொன்னால் அதைக் கேள். உன்னுள் எழும் குரலை நீ கேட்க வேண்டும். இது தலைமுறை தலைமுறையாக உன் தொழிலாக இருந்து, உன் மனம் உறுத்தாமலிருந்தால் அதைச் செய்யலாம். ஆனால் உன் ஆத்மா இதைத் தவறு என்று உனக்குச் சொன்னால், அதை நீ கேட்க வேண்டும்.

நமக்குத் தெரியாத விஷயத்தைப் பற்றிய பயத்தை நீக்குவது எப்படி?

குருதேவர்: கடந்து போன வாழ்க்கையை பார். இந்த பயம் புதிதானதா? இந்த பயம் இப்போது தான் புதிதாக வந்திருக்கிறதா அல்லது ஏற்கனவே வந்திருக்கிறதா? அப்படி வந்திருந்தால் நீ இப்போது எப்படி உயிரோடு இருக்கிறாய்? பயத்தை நீக்க சிறந்த வழி கடந்த காலத்தை நினைவு கூர்வது தான். உன் சொந்த அனுபவத்தை நினைவில் கொண்டு வா. இந்த பயம் அர்த்தமற்றது, தேவையற்றது என்று தெரிந்து கொள்வாய். பயத்தை நீக்க யோக சாதனை மற்றும் பிரார்த்தனை செய்வது மிகவும் நல்லது.