நம்பிக்கை மூலம் வலிமை பெறுதல்

செவ்வாய், 14/10/2014,

கியூபெக், கனடா


கேள்வி பதில்

நம்பிக்கையை ஒருவர் வளர்ப்பது எப்படி? அல்லது இது ஒரு உடன் பிறந்த குணமா?

நம்பிக்கையை வளர்ப்பதென்பது முடியாது, உங்களிடம் உள்ள சந்தேகங்களை உணர்ந்து அவற்றை விட்டுவிட்டாலே போதும். உங்கள் சந்தேகங்கள் விடப்பட்டால், நம்பிக்கை ஏற்கனவே அங்கே இருக்கிறதுசந்தேகம் என்பது மனதை சூழ்ந்திருக்கும் மேகம் போல, விழித்தெழுந்து உணருங்கள், ‘இது என்ன சந்தேகம்? இது என்னைக் கீழே தள்ளி என் சுமையை அதிகரிக்கிறது. இது எனக்குத் தேவையில்லை.’ கடந்த காலத்தில் இருந்துவந்த பல சந்தேகங்கள் உங்களை அழுத்துவதை நீங்கள் மறுத்து விலக்கும்போது, நீங்கள் விழித்தெழுகிறீர்கள். பிறகு நீங்கள் விழித்தெழும்போது, நம்பிக்கை அங்கே ஏற்கனவே இருக்கிறது.

நம்பிக்கையை உருவாக்க முடியாது, ஆனால் சந்தேகங்களை விலக்க முடியும். சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு முடிவேயில்லை. சந்தேகங்களுக்கு விளக்க அளிக்க முயற்சி செய்யக் கூடாது, ஏனென்றால் ஒரு சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்கும் போது அது பத்து புதிய சந்தேகங்களை உருவாக்குகிறது. ‘இது என் மீது சுமையாய் அழுத்துகிறது, என்று உணர்ந்து அதை விட்டுவிட்டாலே போதும். அதை விட்டபின்னர், உங்களுக்குள்ளே ஆழத்தில், வலிமை, சத்தியம் மற்றும் உறுதி நிறைந்த இடத்திற்குச் செல்கிறீர்கள். இதுதான் நம்பிக்கை. எப்போதெல்லாம் 

உங்களுக்கு சந்தேகம் வருகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் பலவீனமாய் உணர்வதை அனுபத்திருப்பீர்கள். உங்களிடம் நம்பிக்கை இருக்கும் போது, நீங்கள் மிக வலிமையாய் உணர்கிறீர்கள். உங்களுக்குள் ஏறக்குறைய வெல்லவே முடியாதவர் என்ற உணர்வைப் பெறுகிறீர்கள். எனவே, உங்களுக்கு முன் உள்ளே வாய்ப்புகள் இரண்டு, வலிமையான உங்களை யாரும் வெல்லவே முடியாத உணர்வு அல்லது பலவீனமான உணர்வு.

சந்தேகம் எப்போதும் ஏதாவது நல்லவை பற்றியே எழுகிறது. எதிர்மறை விஷயங்களைப் பற்றியோ தீமையான விஷயங்களைப் பற்றியோ நாம் சந்தேகப்படுவதே இல்லை. ஏதாவது நல்ல விஷயங்களைப் பற்றியே சந்தேகம் கொள்கிறோம். உங்களை சந்தேகத்திலிருந்து காக்க இந்த ஒரு புரிதல் மட்டுமே போதும்.

அன்பு குருதேவ், நான் தாந்திரிக பயிற்சிகளில் ஈடுபடலாமா என்று தயவுசெய்து கூறுங்கள். பத்து வித மகாவித்தியாக்களில் ஒரு பயிற்சியை நான் கற்றுகொண்டிருக்கிறேன், நான் அதைச் செய்யலாமா?
குருதேவ்:
பாருங்கள், பத்து மகாவித்தியாக்களும் தெரிந்தவர்கள் வெகு சிலரே. எனவே அதைச் செய்வது தேவையில்லை. சற்றே தளர்ந்து மந்திர உச்சாடனங்களை கேளுங்கள். அப்படி பல ஒலிப்பதிவுகளை வாழும்கலை வெளியிடுள்ளன, அவை அனைத்தும் இதன் பகுதிகளே. சஹஜ் தியானத்தில் உங்களுக்கு தரப்படுபவை பீஜ மந்திரங்கள், சக்தி வாய்ந்தவை. பத்து மகாவித்தியாக்களையும் கற்றுத் தருவதாக யாராவது கூறலாம், ஆனால் அவை மிகச் சிக்கலானவை. அவர்களை நீங்கள் தூரத்திலிருந்து மரியாதை செய்யுங்கள் போதும். பயிற்சிக்கு, இங்கே கற்றுத் தரப்பட்டவையே பெரிது. விரும்பினால், இங்கே நடக்கும் வேத பாட வகுப்புகளில் சேர்ந்து கற்றுக் கொள்ளலாம். 40 நாட்களில் இவற்றை நீங்கள் வெகுவாக புரிந்துகொள்ளலாம். இந்தியாவிற்கு வந்தால், அங்கே உபநயனம் செய்விக்கிறோம்,அதிலும் நீங்கள் மந்திரங்களை கற்றுக் கொள்ளலாம். ‘நான் இதைக் கற்றுத்தருகிறேன், அதைக் கற்றுத் தருகிறேன்,’ என்று பலர் கூறலாம், ஆனால் அவையெல்லாம் குழப்பத்தைத்தான் தரும்.

யோக நித்திரையின் பலன் என்ன அது எப்படி வேலை செய்கிறது?

அது வேலை செய்கிறது, இல்லையா? உங்கள் கவனத்தை உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதிக்குக் கொண்டு செல்வத்தின் மூலம், உடலும் பேருணர்வும் எப்படி பிரிந்திருக்கிறது என்று காண்கிறீர்கள். ஆனாலும், அவை ஒன்றோடொன்று கலந்தவை.

பல கஷ்டங்களுக்கு இடையேயும், அநியாங்களுக்கு இடையேயும், உள் மன அமைதியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால், வன்முறையை தங்கள் கைவசம் வைத்துக்கொண்டு ஆதிக்கம் செய்பவர்களை, எல்லாவிதமான ஆதிக்கங்களையும் எதிர்க்கும் ஒரு ஆர்வலனாக எப்படி எதிர்கொள்வது? வேறு விதமாகச் சொல்வதென்றால், ஒரு சக்திவாய்ந்தவரை பலமில்லாதவர் எப்படி சமாளிப்பது?

நாம் கலங்கியிருக்கும் போது நம் செயல்களுக்குத் தகுந்த பலன் கிடைக்காது. நாம் சாந்தமாய் இருக்கும் போது உள்ளுணர்வுகள் நமக்கு எண்ணங்களைத் தருகிறது, இந்த எண்ணங்களை கொண்டு திட்டமிட்டு, அதன்படி செயல்படத் தொடங்குங்கள். அடக்குமுறை செய்பவரை தனியாக எதிர்கொள்ள முடியாது. விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, ஒரு குழுவாக செயல்பட்டால் அது முடியும். அதே நேரத்தில், உங்கள் எண்ணத்தை வலுவாக வைத்துக்கொண்டு, உங்களை ஆதரித்து வழிநடத்தும் சக்தி ஒன்று உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மகாத்மாகாந்தி அவர்கள் சில நேரங்களில் தனியாக நடக்க வேண்டியிருந்தது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில், விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த முழு கண்டத்தையே நடத்தி சென்றார் இல்லையா? அவர் எப்போதும் தியானம் செய்து வந்தார். தினசரி பஜனைகள் செய்து சத்சங்கத்தில் ஈடுபட்டுவந்தார். காலை வேலைகளில் பகவத்கீதை படித்து வந்தார். எனவே, ஆன்மீகப் பார்வை இல்லாமால் மாகாத்மாவால் அவர் அடைந்த இலட்சியத்தை  சாதித்திருக்க முடியாது.