குருதேவரின் தீபாவளி வாழ்த்துரை

வெள்ளி, 24/10/2014

சிகாகோ, ஐக்கிய அமெரிக்க நாடுகள்


எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

தீபாவளி தீபங்களின் திருவிழா, மகிழ்ச்சி, செல்வம், அறிவு, ஞானம் மற்றும் எல்லாவற்றுக்குமான திருவிழா. ஏனென்றால் ஒளி பலவற்றைக் குறிக்கிறது.ஒரு விளக்கை ஏற்றினால் போதாது, ஞானம் மலர, இருள் அகல பல விளக்குகள் ஏற்ற வேண்டும்.அதனால் தான் தீபாவளி பல விளக்குகள் ஏற்றப்படுகின்றன. நாம் ஏற்றும் விளக்கு ஒரு குறியீடு மட்டுமே. உண்மையான விளக்கு நீங்கள் தான். நீங்கள் ஒளிர்விட்டு, துடிப்பாக, புன்னைகையோடு, ஆனந்தமாக, சக்தி நிறைந்தவராக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான திருவிழா.ஞானத்தினால் மட்டுமே நடக்கும், வசதிகளினாலோ, மின்னணுக் கருவிகளாலோ, பணத்தாலோ அல்லது நண்பர்களாலோ நடக்காது. உண்மையான மகிழ்ச்சி ஞானத்தினால் கிடைக்கிறது. 

இறை எங்கும் நிறைந்திருக்கிறது,ஆனால் அது உறக்கத்தில் இருக்கிறது. பூஜை என்பது அதை விழிப்படையச் செய்யும் செயல்முறை. இறையுடன் தொடர்பிலிருப்பவர்களுக்கு எந்த விதமான இறப்பும் கிடையாது. அன்னை இறைவிக்கும், தேவதைகளுக்கும் மற்றும் எல்லா கடவுள்களுக்கும் நன்றி கூறும் இலட்சுமி பூஜை செய்து, ‘உங்களுக்கு மிக்க நன்றி. இந்த வருடம் முழுதும் என்னைக் காத்து எனக்கு வேண்டியதை அளித்தீர்கள். அடுத்த வருடத்திலும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டுகிறேன்.’ என்று கூறுகிறோம். அவர்களோடு நமக்குள்ள தொடர்பை புதுபித்துக்கொள்ள பிரார்த்திக்கிறோம்; ஒப்பந்தத்தை அல்ல தொடர்பை. இறையோடு உள்ள தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ள பிரார்த்தனை செய்கிறோம்.

இறையோடு தொடர்புள்ள யவருக்கும் எந்த விதமான இறப்பும் கிடையாது. மறுபடி தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது. (இது நம்முடைய ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறது, அதை விழிப்படைய செய்ய வேண்டும், அவ்வளவே.) இறை எங்கும் நிறைந்திருக்கிறது, ஆனால் அது உறக்கத்தில் இருக்கிறது. பூஜை என்பது அதை விழிப்படையச் செய்யும் செயல்முறை. இறையை எழுப்புவது!
இங்குள்ள மறையவர் ரிக்வேதத்திலுள்ள மிகத் தொன்மையான மனிதகுலத்தின் முதல் பிரார்த்தனையை இப்போது ஓதுவார். நமக்காக ஸ்ரீ சுக்தத்தை ஓதுவார்.

நம் வாழ்க்கையில் வரும் தடங்கல்கள் அனைத்தையும் விளக்க முதலில் கணபதி பூஜை செய்து விட்டு பிறகு கலச பூஜை செய்கிறோம்.இந்தக் குடத்திலுள்ள தண்ணீரில் எல்லா தேவதைகளையும் எழச் செய்து, இந்தப் புவியுலுள்ள அனைவருக்கும் நல்ல மனம், நல்ல இதயம், நல்ல புத்தி, நல்ல அறிவு ஆகியவற்றை அளிக்க ஆசி தருமாறு பிரார்த்தனை செய்கிறோம்.

ஒவ்வொருவருள்ளும் மூன்றுவிதமான சக்திகள் இருக்கின்றன. அவை:
1.        இச்சா சக்தி (ஒருவரின் விருப்பம்)
2.        கிரியா சக்தி (வேலை செய்ய சக்தி) மற்றும்
3.        ஞான சக்தி (அறிவு அல்லது ஞானம்)

அதைப்போல, மகாகாளி (சக்தியின் அடையாளம்), மகாஇலட்சுமி (செல்வத்தின் அடையாளம்) மற்றும் மகாசரஸ்வதி (ஞானத்தின் அடையாளம்). சூட்சுமமான சக்திகளால் ஆளப்படும் வாழ்கையின் வெவேறு பரிமாணங்கள் இவை. இந்த சூட்சும உலகை தொடர்புகொள்ளும் வழியே பூஜை. இந்த உலகில் நாம் பார்ப்பவை எல்லாம் ஒரு மிகப் பெரிய மலையின் ஒரு மிகச் சிறிய முனையையே. பூஜையும் மந்திரங்களும் உலகின் அந்தப் பக்கத்தைத் தொடர்புகொள்ளும் தொன்மையான முறைகள்.

அதை எப்படிச் செய்வது? அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தவாறு இந்த மந்திரங்களை கேட்க வேண்டும்,அதில் முழுதுமாக நனைய வேண்டும். இது மந்திர ஸ்நானம் (குளியல்) என்று அழைக்கப்படுகிறது, அதாவது அழ்ந்த தியானத்திலிருந்தவாறு மந்திரத்தின் ஒலியில் நனைதல். இந்த ஆதி மந்திரங்களின் அதிர்வுகள் நமது முழு சுயத்தை, நம் ஆத்மாவை சக்தியூட்டுகிறது. பூஜையில் நடைபெறும் அனைத்தையும் நம்மால் புரிந்துகொள்ள இயலாததாக  இருக்கலாம், அமர்ந்து கண்களைத் திறந்தவாறோ அல்லது கண்களை மூடியவாறோ அதை அனுபவித்து மகிழ்ந்தாலே போதும். இதுதான் ஷ்ரத்தா எனப்படுகிறது,பொருள் தெரியாததின் மீது அன்பில் ஆழ்வது. ஏதோ இருக்கிறது என்று தெரியும் ஆனால் அது என்னவென்று தெரியாது. அதன் மீது அன்புகொண்டவுடன் அது என்னவென்று அறிய ஆரம்பிக்கிறோம். ‘ஓ, இது ஒரு சக்தி,’ என்று உணர்கிறோம். அன்னை இறைவி என்பது யாரோ ஒருவரின் மனதில் உதித்த ஒரு தத்துவம் அல்ல அது ஒரு உண்மை என்பதை பிறகு உணர்கிறீர்கள். பிரபஞ்சத்தின் உண்மை இது. சூட்சுமமான சக்தி என்பது அவ்வளவு உண்மை. அது அவ்வளவு உண்மையானது வெளிப்படையானது என்று உணரப்படும் வரை இந்த தெரியாததின் மீது அன்பு வைப்போம்.
படிகள் உள்ளன.

1.        தெரியாததின் மீது அன்பு வைப்பது, நீங்கள் அதைச் செய்தபிறகு
2.        தெரியாததைத் தெரிந்துகொள்ள ஆரம்பிக்கிறீர்கள்

அதைத் தெரிந்துகொண்ட பிறகு, அது உங்களின் ஒரு பகுதி என்பதையும், அது உங்களிலிருந்து வேறானது அல்ல என்பதையும் அது உங்களில் இருந்து விலகி இருப்பதல்ல என்பதையும் உணர்கிறீர்கள். இதுதான் வேதம் மற்றும் அந்த வேதாந்தம், அதாவது, அதில் ஒன்றிவிடுதல்.
மேலும், இன்று குஜராத்திகளுக்கு புது வருடம். குஜராத்திகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், 

மற்றவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்! அன்னை இறைவிக்கும் மற்றும் பார்க்கக்கூடிய மற்றும் பார்க்க இயலாத இறை வெளிப்பாடுகளுக்கும் பிரார்த்தனை செய்தவாறு புது வருடத்தை ஆரம்பிப்பது மிக அருமையாய் இருக்கிறது! எல்லோரும் இங்கு அமர்ந்து ஒன்றாகப் பூஜை செய்து, ஒன்றாகத் தியானம் செய்து, ஒன்றாகப் பாடுவது யக்னம் அல்லது யாகம் என்று அழைக்கப் படுகிறது. யாகம் என்ன செய்கிறது? ஸ்வஸ்தி (ஆரோக்கியம் மற்றும் மைய நிலை), ஷ்ரத்தா (அசைக்க முடியாத நம்பிக்கை), மேதா (விழிப்படைந்த புத்தி) ஆகியவற்றை அளிக்கிறது. 

நம்பிக்கையும் புத்தியும் ஒன்றுகொன்று எதிரானது என்று கருதப்படுகிறது, ஆனால் யாகத்தில் இரண்டுமே கூர்மைப் படுத்தப்படுகிறது. நம்பிக்கை ஆழமாகிறது, புத்தி (காரணப்படுத்துதல்) மிகக் கூர்மையாகிறது. இதைப் போல யாகத்திற்குப் பல பலன்கள் உள்ளன; யாஷா (நல்ல பெயர்), பிரக்யா (உயர்ந்த பேருணர்வு),வித்யா (கல்வி), புத்தி (அறிவு), பலம் (வலிமை), வீர்யம் (வீரம் அல்லது சக்தி), ஆயுஷ் (நீண்ட ஆயுள்), ஐஸ்வர்யம் (செல்வம்), இன்னும் பலப்பல.