நம் வாழ்கையில் மாற்றம் ஏற்படுத்த என்ன தேவைப்படுகிறது?


டிசம்பர் 30 - 2012, பாட், ஆண்டோகாஸ்ட், ஜெர்மனி

கே: அன்பான குருதேவா! இந்தியாவில் கற்பழிக்கப் பட்ட பெண்ணின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்டதால், நான் மனம் உடைந்து போயிருக்கிறேன். இந்தியாவில் ஏன் இப்படி கொடூரமான கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன?

குருதேவர்: அப்படி நடப்பது ஒரு இடத்தில் மட்டும் இல்லை. இந்தியாவில் மட்டுமல்ல. இந்தச் சம்பவம் மிக அதிகமாக பொது மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இப்படிப்பட்ட கொடூரமான சம்பவங்கள் உலகில் பல்வேறு இடங்களில் நிகழ்கின்றன. பெண்கள் மீது மட்டுமல்ல. குழந்தைகள் மீதும், வயோதிகர்கள் மீதும் கொடுமை இழைக்கப்படுகிறது.
இப்போது தான் வாழும் கலையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர், கென்யா நாட்டின் நைரோபியில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி என்னிடம் சொன்னார். மக்கள் அங்கு பாதுகாப்பின்றி இருக்கிறார்கள். அதைக் கேட்ட நான் அப்பெண்மணியிடம் “இப்படிப்பட்ட நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது” என்று சொன்னேன். அதற்கு அவர் “மக்கள் தங்கள் வீட்டுக்குள் இருக்கவே பயப்படுகிறார்கள். ஏனென்றால் மக்கள் வீட்டில் இருக்கும் போதே பல கொள்ளைகள் நடந்து வருக்கின்றன” என்று சொன்னார். மக்கள் கார்களில் வெளியே செல்லும்போது பாதுகாப்பாக உணர்கிறார்கள்.

உன் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மும்பையில் வயதானவர்கள் தனியாக இருக்கும் வீடுகளில் கொலை,கொள்ளை நடப்பது சகஜமாகி விட்டது. இப்படிப்பட்ட குற்றங்கள் ஏறக்குறைய உலகில் பல பாகங்களில் நடக்கின்றன.

இத்தாலி, ஸ்பெயின் மற்றும் துருக்கியிலும், இங்கு ஜெர்மனியில் கூட இப்படிப் பல குற்றங்கள் பதிவாகின்றன. இல்லையா? ரஷ்யாவில் இதை விட அதிகமாக குற்றங்கள் நிகழ்வதாக அறிந்தேன். ரஷ்யாவில் தெருக்களில் கூட பாதுகாப்பாக நடக்க முடியாது என்கிறார்கள். கேள்விப்படும் போது நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்று வியப்படைகிறேன். 

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒரு பெரிய போராட்ட அலையை எழுப்பியது. உங்களுக்குத் தெரியுமா? வாழும் கலையைச் சேர்ந்தவர்கள் முதன் முதலாக இந்த நிகழ்ச்சியைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினார்கள். முதல் நாள் யெஸ் ப்ளஸ் இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து கைகளில் மெழுகுவத்தி தீபமேற்றி இந்தியா கேட்டுக்கு அணி வகுத்துச் சென்றார்கள்.

நாம் எதை ஆரம்பித்தாலும் பெரிய பரிமாணத்தில், பெரிய அளவில் மக்களைச் சென்றடைகிறது. எல்லா இடங்களிலும் மக்களிடையே இப்படிப்பட்ட விழிப்புணர்வு பெருகும் போது, குற்றங்கள் குறைய உதவும். நாமனைவரும் சேர்ந்து ஒரு வன்முறையற்ற, மன அழுத்தமில்லாத சமுதாயத்தை உருவாக்க செயல்பட வேண்டும்.
குற்றவாளிகளைத் தூக்கில் போட வேண்டும் என்ற கோரிக்கையைப் பற்றி நான் அறிவேன். அதன் பின்னும் தங்கள் காம இச்சைகளையும் உணர்ச்சிகளையும் அடக்க முடியாத, அவர்களின் நடத்தை அதிக கொடூரமாகிறது. என்ன செய்ய முடியும்? எவ்வளவு பேரைத் தூக்கில் போட முடியும்? எவ்வளவு பேருக்குத் தண்டனை அளிக்க முடியும்? அப்படிப்பட்ட கொடியவர்களை சீர் திருத்துவது அவசியம்.

இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கொடூரமான நிகழ்ச்சிகள் அடங்கிய திரைப் படங்களை பார்க்கிறார்கள். அவர்கள் விளையாடும் வீடியோ விளையாட்டுக்களும் கொடூரமாக இருக்கின்றன. உலகில் வளரும் குற்றங்களுக்கு அவர்களும் பொறுப்பாகிறார்கள். சிறுவர்கள் வீடியோ விளையாட்டின் போது துப்பாக்கியால் சுடும் போது, அவர்கள் கற்பனை உலகுக்கும் நடைமுறை உலகுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வதில்லை. அவர்கள் மனதில் இரண்டு உலகங்களுக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு தான் எல்லையாக இருக்கிறது.

கற்பனை உலகில் மனிதர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவது பெரிய விஷயமாகத் தெரிவதில்லை. அமெரிக்காவில் கனெக்டிகட்டில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது ஒரு அறியாச் சிறுவன், தன் தாயையும், மற்றும் பல சிறுவர்களையும் நிஜ துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, தன் உயிரையும் போக்கிக் கொண்டான்.

சென்ற வருடம் நார்வே நாட்டிலும் ஒரு சம்பவம் நடந்ததைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இது மிகவும் கொடுமையானது. உலகம் முழுவதும் இப்படி நிகழ்கின்றது. மெக்ஸிகோ நாட்டில் இரு டாக்ஸி ஓட்டுபவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அவர்கள் டாக்ஸியை விட்டு வெளியேறி ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டு இறந்தார்கள். டாக்ஸியில் இருந்த பயணிகள் உள்ளே இருக்கும் போதே இது நிகழ்ந்து விட்டது. ஒரு சாதாரண வாக்கு வாதம் துயரில் முடிந்தது. மக்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து விட்டது.

ஈராக்கில் இப்படிப் பட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்துத் பார்த்து மக்கள் மனம் மரத்துப் போய் விட்டார்கள். சமீபத்தில் வன்முறை காரணமாக 40 பேர்கள் இறந்து விட்டார்கள். ஒவ்வொரு நாளும் இப்படி நடந்தாலும் யாரும் இதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. சிரியாவிலும், எகிப்து நாட்டிலும் என்ன நடக்கிறது என்று பாருங்கள்? மக்கள் தொகையில் பாதிபேர் அழிக்கப்பட்டு விட்டார்கள். வாழும் கலையில் நாம் செய்யும் காரியம் எவ்வளவு முக்கியமானது என்று அறிந்து கொள்ளுங்கள்.

வன்முறையற்ற மன அழுத்தமற்ற சமுதாயத்தை உருவாக்குவது மிகவும் முக்கியம். பல இடங்களில் வாழும் கலை மையங்கள் ஏற்படுத்தி, ஆசிரியர்களை அனுப்பி பயிற்சி அளிப்பது அவசியம். அங்கு வாழும் மக்களுக்கும் ஆசிரியர் பயிற்சி அளித்து மேன் மேலும் இந்த ஞானத்தை மக்களிடையே பரப்புவதால், அவர்களை வன்முறையிலிருந்து திசை திருப்ப முடியும். அவர்கள் அமைதியை நோக்கிச் செல்வார்கள்.

நம் ஆசிரியர்கள் சிறைக்கைதிகளுக்கு பயிற்சி அளிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் நான் அர்ஜெண்டினாவில் உள்ள சிறைச் சாலைக்குச் சென்றேன். அங்கு பல குற்றங்களும், வன்முறைச் சம்பவங்களூம் நிகழ்ந்திருந்தன. சிறைச்சாலைக்குள் இருக்கும் அறைகளிலேயே ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது வழக்கமாக இருந்தது. அங்கு வாழும் கலைப் பயிற்சி அளித்த பின்பு, பயிற்சி பெற்ற கைதிகள் “நாங்கள் வன்முறையில் ஈடு படமாட்டோம்” என்று எழுதிய பட்டைகளை அணிவது பழக்கமாகியிருக்கிறது. அர்ஜெண்டினா சிறையில் இருக்கும் 5200 பலசாலிகளான மனிதர்களின் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது. “எங்கள் வாழ்க்கையே மாறி விட்டது. இந்த ஞானம் எங்களுக்கு ஏன் முன்னமே கிடைக்கவில்லை” என்று சொல்லி வருத்தப் பட்டார்கள்.

அதே போல் ரியோவில், ப்ரேசில் நாட்டு சிறைச்சாலையையும் நான் சென்று பார்த்தேன். அங்கு வாழும் கலை மையம் ஒன்று உள்ளது. ஒரு அறையில் என் ஃபோட்டோவையும், வாழும் கலை பற்றிய ஞானம் அடங்கிய புத்தகங்களையும் வைத்திருந்தார்கள். அந்த அறைக்குள் காலணிகள் அனுமதிக்கப் படுவதில்லை. யோகா செய்வதற்காக பல பாய்கள் வைத்திருந்தார்கள். பலர் அங்கு வந்து யோக சாதனைகள், தியானம், சித்திரம் வரைவது முதலான காரியங்களில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நிகழ்ச்சி என் மனதைத் தொட்டது.
இவ்வுலகை வரப்போகும் சந்ததியார் வாழத்தகுந்ததாகச் செய்வதற்கு, பல காரியங்கள் செய்யவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், உங்கள் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். எப்படிப்பட்ட உலகை நமக்காக, பெரியவர்கள் விட்டு சென்றிருக்கிறார்கள் என்று நினைப்பார்கள். ஒரு சிறந்த உலகை நாம் அவர்களுக்கு அளிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். ஒரு அன்பு நிறைந்த உலகை, வன்முறையற்ற அமைதியான உலகை நாம் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

உங்களுடைய சின்னச் சின்ன தேவைகள், நண்பர்களுடனும் மற்றவர்களுடனும் இருக்கும் சின்னச் சின்ன மன வேற்றுமைகளில் சிக்காதீர்கள். நல்ல சிந்தனைகளுடன், உலகில் வன்முறையைக் குறைக்க, மக்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க, உங்களாலான காரியங்களைச் செய்யுங்கள். இதைப் பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டும்.
மற்றவரின் நலனைப் பற்றிக் கவலையில்லாதவர்களுக்கு, காம இச்சைக்குள்ளாகி துன்புறுத்துபவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். உடலில் இருக்கும் ஹார்மோன்களின் சமநிலை தவறியதால் அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். கொடும்பாவ செயல்களை செய்கிறார்கள். அப்படிச் செய்யும் போது மற்றவர் படும் பாட்டைப் பார்க்காமல் அவர்கள் கண்கள் மறைக்கப்படுகின்றன. அவர்கள் மனமும் இருண்டு கிடக்கிறது. கண்ணிருந்தும் குருடராக நடந்து கொள்கிறார்கள். அறிவில்லாமல் நடந்து கொள்கிறார்கள்.

பேரூந்தில் கற்பழிப்பு. அதுவும் பலர் சேர்ந்து செய்த கொடுஞ்செயல். இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.சமுதாயத்தில், நன்னெறிக்கு ஒரு மரியாதை இருக்க வேண்டும். மக்களிடையே மனிதாபிமான குணங்களை வளர்க்க வேண்டும். மக்களுக்கு ஆன்மீகத்தைப் போதிக்க வேண்டும்.அப்போது தான் அவர்கள் நடத்தையில் மாற்றம் ஏற்படும் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள ஒருவரும் இப்படிப்பட்ட கொடுஞ்செயலைச் செய்ய மாட்டார்கள். இந்த தலைமுறையில் உலகிலிருந்து வன்முறையை அறவே ஒழிக்க முடியாமல் இருக்கலாம். ஆனாலும் நாம் அதற்காக உழைக்க வேண்டும். கட்டாயமாக வன்முறையை நம்மால் குறைக்க முடியும்.
சமீபத்தில் டெல்லி போலீஸ் 756 குற்றவாளிகளுக்கு வாழும் கலைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். 5 நாட்களுக்கான இந்தப் பயிற்சியில் குற்றவாளிகள் பிராணயாமம், சுதர்சன கிரியா கற்றுக் கொண்டு பயிற்சி பெற்றார்கள். அப்பயிற்சி முடிந்த பின் அவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட போது அது நம் மனதைத் தொட்டது. போதை மருந்துக்கு அடிமையான சிலர், 5 நாள் பயிற்சிக்குப் பின் போதை மருந்தை அறவே வெறுத்தார்கள்.

யார் பெண்களின் கழுத்துச் சங்கிலியை அறுத்து ஓடினார்களோ, அவர்கள் அப்பழக்கத்தை விட்டு, குடிசைப் பகுதிகளில் சேவையில் ஈடுபட்டார்கள். நம் வாழும் கலை ஆசிரியர்கள் இக் கைதிகளுக்கு நல்ல முறையில் பயிற்சி அளித்து, நல் வாழ்க்கை வாழ வழி காட்டினார்கள். கடைசி நாள் பயிற்சியின் போது நான் அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் அனுபவத்தின் படி இவ்வுலகை நாம் வாழத் தகுந்ததாக நம்மால் மாற்ற முடியும் என்று நம்பலாம். நம்மால் வன்முறையற்ற வளமான சமுதாயத்தை உருவாக்க முடியும்

கே: குருதேவா! பயிற்சியின் போதும், அதற்குப் பின்னும் அபாரமான சக்தியை உணர்கிறோம். நம்முள் ஒரு வெடி குண்டு வெடிப்பதைப் போன்ற அனுபவமாக இருக்கிறது. ஆனால் 2 – 3 நாள் கழித்து நான் செய்த காரியங்களால் அந்த சக்தி குறைந்து விடுகிறது. அப்படி சக்தி குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

குருதேவர்: சக்தியில் ஏற்றத் தாழ்வு இருக்கும். ஆனால் அதைப் பற்றி பெரிதாகக் கவலை வேண்டாம். உன்னிடத்தில் உன் சக்தியைப் பற்றி யோசிக்க நிறைய நேரம் இருப்பதாகப் படுகிறது. அது மேலே போகிறதா அல்லது கீழே போகிறதா என்று பார்க்கிறாய். ஏதாவது காரியத்தில், சேவையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள். எல்லாம் சரியாகி விடும்.
மேலும் நீ காரியத்தில் முழுமையாக ஈடுபடும் போது கவலைப்பட நேரம் ஏது? நீ தூங்கி எழுந்தவுடன், காரியம் காத்திருக்கிறது. அவ்வேலைகளை முடித்தவுடன் நீ களைத்து தூங்கச் செல்வாய். சேவை செய்யும் போது குற்றம் சொல்ல, துக்கமாக இருக்கவும் நேரம் கிடையாது. தீவிர சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மனச் சிதைவு ஏற்படாது ஒரு வேலையும் செய்யாமல் அமர்ந்திருப்பவர்களுக்குத் தான் மனச் சிதைவு ஏற்படும்.
சேவை செய்யாமலிருக்கும் போது ஞானம் பற்றிய சிந்தனைகளில் பொழுதைக் கழியுங்கள். யோக வசிஷ்ட படியுங்கள். அதில் இருப்பது சிறந்த ஞானமாகும். நாரத பக்தி சூத்திரத்தின் விளக்கத்தைக் கேளுங்கள். அல்லது அஷ்டவக்ர கீதையை கேளுங்கள். இப்படிப்பட்ட ஞானம், எப்போதும் உங்கள் சக்தியைக் குறையாமல் வைத்திருக்கும்.

உங்களுக்குப் பிடித்த பாட்டைப் பாடுங்கள். நீங்கள் தனியாக இருக்கும் போதும் பாடலாம். அல்லது குளியல் அறையில் இருக்கும் போது ஐந்து நிமிடம் பாடலாம். குளியல் அறையில் நீ பாடுவதை யாரும் தடுக்க முடியாது. நீ மகிழ்ச்சியாக இருக்க பல யோசனைகள் சொல்லியிருக்கிறேன். இதையெல்லாம் மறந்து நீ துக்கமாக இருக்கத் தீர்மானித்தால், என்னால் என்ன சொல்ல முடியும்? 


நீ இவ்வுலகை வண்ண மயமாக்குகிறாய். 

எதிர்மறையாகத் தோன்றும் தத்துவங்கள் ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன நீ எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இரு. 


எப்படி இருந்தாலும் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன். நீ ஞானத்தின் மேல் விருப்பம் கொள்ளும் போது துக்கமாக இருக்க முடியாது. வாழ்வில் சில நாட்கள் இன்பமாகவும், சில நாட்கள் துன்ப மயமாகவும் இருக்கும் என்பதை நீ அறிவது தான் ஞானம். வாழ்க்கையில் சில நல்லவர்களையும், பொல்லாதவர்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். சில சமயம் நண்பர்கள் விரோதிகள் போல நடப்பார்கள். சில சமயம் உன் விரோதிகள் உன்னுடைய நண்பர்களாக மாறுவார்கள். வாழ்க்கையில் போக்கு. இப்படி நடக்கக் கூடும். இந்த அனுபவங்கள் உன்னைத் திடமாகவும், நடுநிலையில் வைக்கவும் உதவுகின்றன. எந்தவிதமான புயலும் உன்னை அசைக்க முடியாது.

நான் முன் சொன்ன எல்லாவற்றையும் மறந்து விட்டாலும், இந்த 5 வரிகளை நினைவில் வைத்திருந்தால் அது போதும். நீ வெற்றி அடைந்து விட்டாய் என்று நான் சொல்வேன். அதனால் தான் வாழ்க்கையை மாயை என்று சொல்கிறார்கள். உன் எண்ணங்களை, உணர்ச்சிகளை உண்மை என்று நீ நினைக்கிறாய். ஆனால் அவை உண்மை அல்ல. மாயத் தோற்றம் தான். மற்றவர்களைப் பற்றியும், நம்மைப் பற்றியும் நாம் வைத்திருக்கும் கணிப்புகளும் பொய் தான். எல்லாவற்றையும் உதறி விடு. விழித்துக் கொள். நீ ஒரு சக்தியும், உற்சாகமும் பெருக்கெடுக்கும், அன்பின் ஊற்று என்று தெரிந்து கொள்ளலாம்.

கே: குருதேவா! “எடர்னிடி ப்ராஸஸ்” பற்றி தயவு செய்து விளக்குங்கள். அதனால் நமக்குக் கிடைக்கும் பயன் என்ன?

குருதேவர்: “எடர்னிடி ப்ராஸஸ்” என்பது உன் மனத்தைப் பின்னோக்கி எடுத்துச் செல்லும் ஒரு செயல் முறையாகும். உன் மனத்தில் புதைந்திருக்கும் நிகழ்வுகளை அறிவதும், அவைகளை ஒரு முறை வாழ்ந்து அனுபவித்து, விட்டு விடுவதும் இச்செயல் முறை மூலம் நடக்கிறது.

கே: குருதேவா! இறந்த பின் நம் உடல் உறுப்புக்களை தானமாக அளிப்பது, இந்த உறுப்புகள் பிறர் உடலில் பொறுத்தப் படுவது சரியான செயல் என்பீர்களா?

குருதேவர்: கட்டாயமாக! நீ உன் உறுப்புக்களை தானமாக அளிக்கலாம். அதில் தவறொன்றும் இல்லை.

கே: குருதேவா! வாழும் கலையில் முழு நேர ஆசிரியராக ஆவது எப்படி? எப்படிப் பட்டவர்கள் முழு நேர ஆசிரியராக முடியும்?

குருதேவர்: நல்லது! நீ முழுநேர ஆசிரியராக வேண்டிய அவசியம் கிடையாது. நீ ஒரு பகுதி நேர ஆசிரியராக ஆகலாம். ஒவ்வொரு நாளும் இரண்டு – மூன்று மணி நேரம் நீ கற்பிக்கலாம். பொதுவாக பயிற்சிகள் மாலை நேரத்தில் நடக்கின்றன. மக்கள் தங்கள் அலுவலக, வியாபார வேலைகளை முடித்துக் கொண்டு பயிற்சிக்கு வருவார்கள்.
நீ 3 நாள், 4 நாள் அல்லது 5 நாள் பயிற்சி அளிக்கலாம். மாதத்தில் 1 அல்லது 2 பயிற்சிகள் நடத்தலாம். 2 – 3 ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு பயிற்சி நடத்தலாம். உனக்கும் பாரமாகத் தோன்றாது. உன் மற்ற காரியங்களையும்  பாதிக்காது. ஒரு நாள் உன் குழந்தைக்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டியிருந்தால், நீ எனக்கு வகுப்பு இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். மற்ற ஆசிரியர் அன்று வகுப்பைப் பார்த்துக் கொள்வார். 2 ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு பயிற்சி ஏற்பாடு செய்வது நல்லது. நீ உன் தொழிலையோ, அலுவலக வேலையையோ பாதிக்காமல் மக்களுக்கு உதவியாக வாழும் கலைப் பயிற்சி அளிக்கலாம்.

உனக்கென்று தேவைகள் எதுவும் இல்லாமலிரூந்தால் (உனக்கு குடும்பப் பொறுப்பு ஏதும் இல்லையென்றால்) உன் வாழ்க்கையை இப்பணிக்காக அர்ப்பணிக்கலாம். “என் தேவைகள் மிகக் குறைவு. நான் முழுநேர ஆசிரியராக விரும்புகிறேன்” என்று நீ சொன்னால் முழு நேர ஆசிரியராகலாம். ஆனால் முதலில் பகுதி நேர ஆசிரியராகி சில நாட்கள் வேலை செய் என்று நான் சொல்வேன்.