உங்கள் செயல்களின் பலனை நீங்களே அனுபவிக்க வேண்டியிருக்கும்


மார்ச் 02 , 2012

இன்று, இங்கு ஆஸ்ரமத்தில், யாரோ ஏழு  சந்தன மரங்களைத் திருடி இருக்கிறார்கள். நமது வேத பாடசாலையிலுள்ள மரங்களை இன்று காலை ஒரு மணியிலிருந்து நான்கு மணிக்குள் வெட்டி எடுத்து போயிருக்கிறார்கள். இதனால் ஆஸ்ரம அதிகாரிகள் மனம் கலங்கி இருக்கிறார்கள். நல்ல பாதுகாப்பு, நிறைய பாதுகாவலர்கள் இருந்தாலும் இது நடந்திருக்கிறது. இந்த மரங்களை அனைவரும் கூடி நட்டு, பேணி வளர்த்திருக்கிறார்கள். அவைகள் வேரோடு வெட்டப்பட்டு திருடப்பட்டிருக்கின்றன. என்ன செய்வது?

நேற்றைய செய்தித்தாளில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. அதில் கர்நாடகத்தில் தான் சிறந்த சந்தன மரங்கள் வளருவதாகவும், அதில் அறுபத்தைந்து சதவீதம் சட்ட விரோதமான வியாபாரத்திற்கு எடுக்கப்படுவதாகவும் வெளி வந்துள்ளது. இந்த திருடர்கள் மிகுந்த சாமர்த்திய சாலிகள். சிறிது கூட சப்தம் எழாமல் மரங்களை வேருடன் வெட்டி எடுத்திருக்கிறார்கள்.இவ்வாறு ஏழு மரங்கள் திருடப்பட்டிருக்கின்றன.

உங்கள் வீட்டில் ஏதாவது திருட்டுப்போய்விட்டால் வருத்தப்படுவீர்கள் அல்லவா? என்ன ஆகிறது?  யார் என்று தெரியாத, கண்ணுக்கு புலப்படாத திருடன் மீது கோபம் வருகிறது. உங்கள் முன் இல்லாத ஒருவர் மீது கோபம் வரும்போது உங்கள் மனதிற்கு என்ன ஆகிறது? மன அமைதி இன்றி தலைவலி ஏற்படுகிறது.

திருட்டு என்பது தொன்று தொட்டே நடந்து வருகிறது. இது கர்மபூமி. நாம் அனைவரும் நமது கர்மாக்களை செய்யவே இங்கு வந்திருக்கிறோம். சிலர் நல்லது செய்து மறைகிறார்கள்; சிலர் தீயது செய்து மறைகிறார்கள். ஒவ்வொருவரும் மறைந்து போகிறார்கள். அவரவர் செய்த வினைக்குப் பயனை  அனுபவிக்கிறார்கள் திருடர், தம் வினை பயனை எதாவது ஒரு நேரம் அனுபவிப்பான்.நாம் நல்லது செய்தால் நல்லதே நடக்கும் என்பது உண்மை.

ருத்ராபிஷேகத்தின் போது இசைக்கும் பண்ணில் " நமோ வஞ்சதே பரிவஞ்சதே ச்தேயுனம் பத்யதே நமோ நமோ, நிஷங்கி நிஷுதிமதே தஸ்கரணம் பத்யதே நமோ நமஹா ''  " ஏமாற்றுபவர்  திருடர் ஆகியோருக்கும் நீயே கடவுள்" என்று  கூறப்படுகிறது.  திருட்டு என்பது யுக யுகமாக நடந்து கொண்டு வருகிறது.

இது கர்ம பூமி. என்ன வினைகளை செய்ய வேண்டுமோ அவைகளை செய்யும் இடம் இது.
உங்கள் செயல்களுக்கெல்லாம் பலன் உண்டு என்பதை மனதில் கொள்ளுங்கள். மற்றவர் வினைகளை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்? அவரவர் வினைக்கு அவரவர் அனுபவிப்பார்கள் அல்லவா? நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா?

இவ்வுலகில் தீயது செய்பவர்கள்  இருந்துகொண்டே தான் இருப்பார்கள். நமது ஆஸ்ரமத்தில் கூட உண்டு. ஆஸ்ரமத்தில் இருந்துகொண்டே அதை பற்றி வெளியில் அவதூராக பேசுபவர்கள் உண்டு." குருஜி! அப்படிப்பட்டவர்களை வெளியேற்றி விடுங்கள் '' என்று என்னிடம் பலர் கூறுகிறார்கள். நான் ' இல்லை, அவர்கள் தன் வினைப்பயனை அனுபவிக்கவே,  இப்படி , இங்கு இருக்கிறார்கள்  என்கிறேன். ஒருவன் தீயது செய்யும்போது யாராலும் அவனைக் காக்க முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் இங்கு வந்திருக்கிறார்களோ அதை செய்யட்டும். அவர்களது தவறுகளை எண்ணி நாம் எதற்கு உணர்ச்சி வசப்பட வேண்டும்? இதுதான் விவேகம். உங்களை யாராவது இழிவு படுத்தி அவ மரியாதையாக பேசினால் நீங்கள் ஏன் உணர்ச்சிவசப்பட வேண்டும்? அவன் அவ்வாறு பேசி தனது கர்மத்தை செய்கிறான். செய்யட்டும். உண்மையில் நீங்கள் " என்ன வேண்டுமோ பேசு, உன் வினைக்காகவே இங்கு வந்துள்ளாய், செய்து முடித்துச் செல் '' என்று கூட கூறலாம்.

இந்த கிரகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் சொர்க்கத்திற்கு செல்வதில்லை.  சிலர் நரகத்திற்கும்  செல்ல வேண்டியிருக்கும்.  இல்லையென்றால் நரகம் காலியாகி விடும் இல்லையா? (குருஜி சிரித்து கொண்டே சொல்கிறார்)  இங்கே வந்து தீய செயல்களை செய்பவர்கள் நரகத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்.

நான்  யாரையாவது திருட வேண்டாம் என்று சொல்வதோ அல்லது பாடம் கற்பிப்பதோதீய வார்த்தைகள் பேச வேண்டாம் என்று சொல்வதோ அவர்கள் மீதுள்ள பரிவினால் தானே தவிர அது என்னை காயப்படுத்துகிறது  என்று அல்ல.  யாரும் எதுவும் என்னை காயப்படுத்த முடியாது. 

நீங்கள் தீய வார்த்தைகள் பேசினால் அதன் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும்.  அதனால்தான் நான்  மகிழ்ச்சியற்ற  எதையும் பேசாமல் இனிமையான  வார்த்தைகளை மட்டுமே பேசுகிறேன். நீங்கள் தவறாக பேசினால் நான் காயப்படுவதாக நினைக்க வேண்டாம். எனினும் வார்த்தைகள் வார்த்தைகளே, என்ன பேசினார்கள் என்பதைப்பற்றி கவலைப்படவேண்டாம். ஆனால் சிலருடைய குணம் அவ்வாறு உள்ளது.  என்ன செய்வது?

ஒருவர் தவறான செயல்களை செய்தால்  அதன் பலனை அவரே அனுபவிக்க வேண்டும். நீங்கள்  செய்யும் தவறுகளுக்காக  வருத்தப்பட்டால் மீண்டும் அதே தவறினை செய்ய மாட்டீர்கள். மற்றவர்கள் தவறுகளுக்காக  நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் தங்கள் கர்ம வினையை அனுபவிப்பதற்காகவே இங்கே  வந்திருக்கிறார்கள்அதனால்தான் அப்படி செய்கிறார்கள் என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

மற்றவர்கள் தவறுகளுக்கு பரிவு காட்ட வேண்டும்.  உங்கள் தவறுகளுக்கு வருத்தப்பட வேண்டும்.  மற்றவர்களின் தவறுகளுக்கு கருணை காட்டினால் தான் அவர்களுக்கு கற்று தர முடியும்.  என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா? 

நீங்கள் ஒரு தவறு செய்திருந்தால். அதை மீண்டும் செய்ய மாட்டேன் என்று சங்கல்பம் எடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகும் அதே தவறினை செய்தால், மறுபடியும் சங்கல்பம் எடுத்த கொள்ளுங்கள். அதன் பிறகும் தவறு செய்யும் வட்டத்திலிருந்து உங்களால் வெளி வர முடியவில்லை என்றால் கடவுளைப் பிரார்த்தனை செய்து அவரிடம் சமர்ப்பித்து விடுங்கள்.  நம்முடைய தவறுகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள இவை இரண்டும் தான் சிறந்த வழிகள்.மற்றவர்கள் தவறு  செய்யாமல் காக்க கருணை வேண்டும். அது  உங்களுக்கு தீமை செய்யும்.  ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள் ?   என்றுதான் நீங்கள் சொல்ல வேண்டும்.அப்படியும் அவர்கள் தவறு செய்தால் நீங்கள் என்ன செய்ய முடியும்?  இந்த உலகத்தில் தவறு செய்வதற்கென விதிக்கப்பட்ட ஒருவனை யாராலும் தடுக்க முடிவதில்லை.  ஒருவன் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தே தீருவான்.

துரியோதனன் போர் தொடுக்க வேண்டியிருந்தது. பகவான் கிருஷ்ணர் அவனுக்கு ஒன்று அல்ல மூன்று தடவை புரிய வைத்தார்..ஆனால் அவரால் போரை தடுக்க முடியவில்லை. போர் நடந்தது. ஆனாலும் நாம் முயற்சி எடுக்க வேண்டும், இது நம் கர்ம பூமி என்றும், நாம் இங்கு நமது கர்மங்களிலிருந்து  இருந்து விடுபட்டு இங்கிருந்து போக வேண்டும்.என்றும் உணர்ந்து மேலே செல்ல வேண்டும்.

இன்னொரு விஷயம் என்ன வென்றால், நாம்  ஒரு தவறு செய்து  ஏதோ நஷ்டப்பட்டு விட்டோம் என்று நினைக்கிறோம்.மற்றவர்களை  பற்றி யோசியுங்கள், அவர்கள் இன்னும் முட்டாள் தனமாக    நடந்துகொண்டு இன்னும் பெரியதாய்  நஷ்டப்பட்டு விடுகிரார்கள். பேராசையும்,  இழப்பிற்கு ஒரு காரணம். ஒருவர் ஐம்பது லக்ஷம் சம்பாதித்தார்.. மற்றொருவர் அவரிடம் சொல்கிறார்- உனது பணத்தை என்னிடம் கொடுத்தால் , நான் உனது ஐம்பது லக்ஷத்தை  இரண்டு கோடியாக மாற்றி காட்டுகிறேன்  என்று.. அவர் அவனை நம்பி தன்னுடைய  பணத்தை கொடுத்தார், அந்த நபர் பணத்தை எடுத்துகொண்டு ஓடிவிட்டார். இப்பொழுது, இந்த மனிதர் அழுது கொண்டு இருக்கிறார்.
நேற்று இந்த மனிதர் சண்டிகரில்  என்னை சந்தித்து சொன்னார் - எவனோ ஒருத்தன்   என்னுடைய ஐம்பது லக்ஷம் பணத்தை எடுத்து கொண்டு ஓடி விட்டான்.அது என்னுடைய வாழ்கையின்  முழு வருமானம்.

நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு புரிகிறதா? நீங்கள் அது உங்களின் கர்மா என்று நினைத்து அதை விட்டு விடக் கூடாது! அவனை தேடி பிடித்து கண்டுபிடிப்பது உங்களின் கடமை..

அதனால் நான் இந்த தீர்வை ஆஷ்ரமத்தில் இருக்கும் அனைவரிடமும்  அளித்தேன்அவன் இங்கு அவனின் செயலை செய்ய வந்திருக்கான், கவலைப்படாதீர்கள். எல்லோரும் சற்றே ஆசுவாசப்படுத்தி கொண்டு  பிறகு, நீஙகள் காவல் துறையில் இது பற்றி  புகார் செய்ய வேண்டும் என்றும், அந்த நபரை பற்றி தகவல் சொல்பவர்களுக்கு (சந்தனைகட்டை திருடன்)ரூபாய் 25௦௦௦/  ஆயிரம்  பரிசு தொகையும் அறிவிக்கவேண்டும் என்றும் கூறினேன்.

இப்பொழுது பார்த்தால், இந்த ரெண்டு தீர்வும் ஒன்றுக்கு ஒன்று வேறுபாட்டுடன் இருக்கிறது. ஒரு வழியில் நாம் அந்த திருடனை பிடிக்க வேண்டும் என்று சொல்கிறோம். மற்றொன்றில் நாம் அது அவனின் கர்மா என்று சொல்கிறோம்-இது தான்  உண்மை, சத்யம். நாம் இதை எல்லோருடைய கர்மா என்று நினைத்து, திருடனை  பிடிக்க முயற்சி எடுக்க வில்லை, இந்த எண்ணத்துடன் நாம் சும்மா உட்கார்ந்தால், இது  "அகர்மன்யதா"  வாகி விடும்.(கடமையில் தவறியது). திருடனை  பிடிப்பது நம் கடமை. ஆனால் மனதில் இது எல்லாம் கர்மத்தின் விளையாட்டு என்று இருத்தி கொள்ள வேண்டும்.இது எல்லாம் இயற்கையின் விளையாட்டு..

இந்த உலகத்தில் திருடர்கள் இல்லை என்று நினைக்கமுடியாது - அது சாத்தியமும் இல்லை.நாம் அறிந்து கொள்ள வேண்டும் - எப்படி ஞான நிலையில்   இருந்துகொண்டு நம் கடமைகளை செய்ய வேண்டும் என்பதை .. 

சில மனிதர்கள் ஞான நிலையை   மட்டும் கடைபிடித்துகொண்டு கடமையை கைவிட்டு விடுகிறார்கள்.. சிலர் கர்மாவை மட்டும் செய்து கொண்டு, ஞானத்தை  விட்டுவிடுகிறார்கள்.
இவை ரெண்டுமே  முழுமை அடையாதன. அதனால், என்ன நடவடிக்கைகள்  எடுக்க வேண்டுமோ எடுங்கள், ஆனால் ஞான நிலையை மட்டும்  விட்டு விடாதிர்கள். நான் கூறினேன் ''யாராவது உங்களின் ஐம்பது லக்ஷம் ரூபாயுடன் ஓடிவிட்டார் என்றால் , அவரை விடாதீர்கள்.அவர் எங்கு இருக்கிறார் என்று தேடி கண்டுபிடியுங்கள்.அதே சமயத்தில் அவர் அவரின் வேலையை செய்து உள்ளார் என்று அறிந்து கொள்ளுங்கள், இது என்ன பெரிய விஷயமா? இந்த வகையில் நீங்கள் சமநிலையில் இருக்கவேண்டும் .