எல்லோரையும் தன்னை சார்ந்தவனாக நினைப்பது ஒவ்வொரு இந்தியனின் மரபணுவில் உள்ளது


18, மார்ச் 2012
 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: வாழ்க்கைக்கு நம்பிக்கை மிகவும் அவசியம். நம்பிக்கையில் 3 விதம் அல்லது 3 நிலைகள் இருக்கின்றன. முதலாவது தன் மேல் நம்பிக்கை. அதாவது சுய நம்பிக்கை. இரண்டாவது சமூகத்தில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நம்புவது. மூன்றாவது மிகவும் முக்கியமானது. மிகவும் கடினம் போல் இருந்தாலும் மிகவும் சுலபமானது. அது தான் தெய்வ சக்தியின் மேல் வைக்கும் நம்பிக்கை.

தெய்வ சக்தி நம் எல்லோரிடமும் இருக்கிறது. அந்த சக்தி எப்போதோ இருந்து, இன்று இல்லாமல் இருப்பது அல்ல. அது ஒரு சமயம் பெரிய தேவ தூதர்களிடமும், அறிஞர்களிடமும், மகாத்மாக்களிடமும், அவதார புருஷர்களிடமும் மட்டும் இருந்து இப்போது இல்லை என்பதில்லை. அது இப்போதும் இருக்கிறது. பிரகாசமான உள்ளொளியாக நம்முள் இருக்கிறது.

நான் இங்கு வருவதற்கு ஒரே காரணம் தெய்வீக ஒளி நம் எல்லோர் உள்ளத்திலும், எல்லா நேரங்களிலும் இருக்கிறது என்று சொல்லத் தான். நம் பெற்றோர்கள் நம்மிடம் எவ்வளவு அன்பு காட்டினாலும், அதைவிட தெய்வீக அன்பும் நம்முடன் அதன் இணைப்பும், நூறு மடங்கு பலமாக இருக்கிறது. நான் இங்கு வந்தது உங்கள் உள்ளிருக்கும் அந்த தெய்வ நம்பிக்கையைத் தட்டி எழுப்புவதற்காகத் தான். நீ கேட்டால் அதை உறுதியாகப் பத்திரத்தில் எழுதிக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

சற்று நேரம் அமைதியாக உட்கார். சில கணங்களுக்கு உன் மனத்தை எண்ணங்களிலிருந்து பிரித்து விடு. இந்த உலகத்தையும், உலகத்தில் நடப்பதையும் மனத்திலிருந்து அகற்றி விடு. உன்னுள் ஒரு ஒளியைப் பார்க்கலாம். ஓ! இதைத் தான் வாழ்க்கை முழுதும் தேடிக் கொண்டிருந்தேன்என்று உணர்வாய். இதைத் தான் எல்லோரும் சொல்வதையும், பாடியிருப்பதையும், நம்புவதையும் பற்றிக் கேட்டிருக்கிறாய். அது உன் உள்ளேயே இருக்கிறது என்று உணர்வாய்.

இந்த ஆத்ம ஞானம் கிடைத்தால், உடல் புல் அரிக்கும். உலக நாயகன், உலகத்தை இயக்குபவர் என்னுள்ளே அமர்ந்திருக்கிறார் என்ற அனுபவம் வரும். அவ்வளவு தான்! உலகத்தில் எந்த சக்தியாலும் உன் முகத்தின் புன்முறுவலை அழிக்க முடியாது. அப்படிப்பட்ட மகிழ்ச்சி உன்னுள் இருந்து வெளிப்படும் போது மற்ற எல்லாம் குழந்தைத் தனமாகத் தோன்றும். இந்த ஜாதி, மத பேதங்கள், இதற்கான சண்டைகள் ஒரு நாடகம் போல் தோன்றும்.

தெய்வ நம்பிக்கை அணுவளவேனும் இருந்தால், நம் வாழ்வில் பெரிய திருப்பம் ஏற்படும். நாம் எதையும் குறையாக உணர மாட்டோம். எல்லோருமே நம்மைச் சேர்ந்தவர்கள். நான் 152 நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். நான் யாரையுமே புதியவராக நினைத்ததில்லை. அவர்களும் என்னை ஒரு புதியவனாகப் பார்க்கவில்லை. நான் அவர்களை என்னிலும் வேறு பட்டவனாகக் கருதவில்லை.இந்த உலகம் இறைவனுக்குச் சொந்தமாக இருக்கும் போது நாம் ஒருவரை ஒருவர் வேறு பட்டவராக எப்படி பார்க்க முடியும். நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்தவர்கள்.இது சுலபமான இயல்பான நிலை. ஆராய்ந்து பார்த்தால் இது நமக்குப் புரியும்.

அதனால் தான் இதை வாழும் கலை என்றேன். வாழும் கலை ஆரம்பித்து 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வடதுருவத்தின் கோடியில் இருக்கும் நகருக்குப் போங்கள். சூரியன் 2 மாதங்களுக்கு உதயம் ஆவதில்லை. மக்கள் சுதர்சன கிரியா செய்வதைப் பார்க்கலாம்.தென் துருவக் கோடியில் இருப்பவர்களும் சுதர்சன கிரியா கற்றிருக்கிறார்கள். உலகம் முழுவதும் மக்கள் மூச்சுப் பயிற்சி தங்கள் மனதை அமைதி ஆக்கும் இந்த செயல்முறையைக் கற்று பயன் அடைந்திருகிறார்கள். நீ எதை நம்பினாலும், எந்த மதத்தைத் சார்ந்தவனாகிலும், எந்த நன்னூல்களைப் படித்து அறிவை வளர்த்தாலும், ஒன்றை மட்டும் மறக்கக் கூடாது. நாம் அனைவரும் மனித சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். நாம் பெருமதிப்புக்குரியவர்கள். நான் இதைத் தான் வாழுங்கலைப் பயிற்சியில் சொல்கிறேன்.

ஆகவே மூன்று விதமான நம்பிக்கைகள் இருக்கின்றன.

முதல் நம்பிக்கை - தன் மீது நம்பிக்கை. (தன்னம்பிக்கை) எனக்கு எதன் மேலும் நம்பிக்கை இல்லைஎன்று சொல்பவர் கூட தன்னம்பிக்கையுடனே அதைச் சொல்கிறார். தன்னம்பிக்கை உள்ள ஒருவரால் தான் அப்படிச் சொல்ல முடியும்.தன்னம்பிக்கை இல்லாதவரால் ஒரு அடி
கூட எடுத்து வைக்க முடியாது. இன்று நாம் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை வர செய்ய வேண்டும். ஏழ்மையைப் போக்க இது தான் வழி. என்னால் இதைச் செய்ய முடியும் என்று ஒவ்வொரு மனிதரும் நினைக்க வேண்டும். மற்றவர்கள் எப்போதும் எனக்குக் கொடுத்து கொண்டேயிருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

இரண்டாவது நம்பிக்கை இந்த உலகில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை. நல்லவர்களின் மௌனத்தால் தான் இந்த உலகம் கெடுகிறது. உலகில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள். நாம் மனிதர்களில் உத்தமர்கள் இருப்பதை நம்ப வேண்டும்.

பொதுவாக நாம் எதைச் சந்தேகிக்கிறோம்? நேர்மையைச் சந்தேகிக்கிறோம். நேர்மையானவர்
ஒரு முறை தவறினால் அவர் நேர்மையற்றவர் என்றே கருதுகிறோம். அவர் நேர்மையில் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். யாராவது நான் உன்னை நேசிக்கிறேன்என்று சொன்னால் உண்மையாகவா?” என்று கேட்கிறாய். ஒருவர் நான் உன்னை வெறுக்கிறேன்என்று சொன்னால் நீ உடனே அதை நம்பி விடுவாய். சந்தேகம் எப்போதும் உண்மையைப் பற்றியும் நல்லவைகளைப் பற்றியும் இருக்கிறது. அதனால் தான் கடவுளைப் பற்றி சந்தேகப் படுகிறோம். ஏனென்றால் அது தான் உண்மை. ஆகவே சமுதாயத்தில் நேர்மையானவர்களை நம்ப வேண்டும். இல்லா விட்டால் நாம் மனச்சிதைவுக்குள்ளாவோம். எல்லோருமே திருடர்கள். யாருமே சரியானவரில்லை. யாருமே நல்லவர் இல்லைஇதை நீ நம்பினால், நீ எப்போதுமே பயத்தில் இருப்பாய். மேலே ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.

நம்பிக்கையில் தான் சமுதாயமே இயங்குகிறது. டெலிபோன் கம்பெனி, நீ பணம் கட்டி விடுவாய் என்ற நம்பிக்கையில் உனக்கு இணைப்பு கொடுக்கிறது. நாம் மாதக் கடைசியில் பணம் கட்டி விடுவோம் என்ற நம்பிக்கையில் நமக்கு மின்சாரம் கிடைக்கிறது. எல்லா விதமான கொடுக்கல் வாங்கல்கள் இந்த நம்பிக்கையின் பேரிலேயே இயங்குகின்றன. உனக்கு நன்மை செய்வார் என்ற நம்பிக்கையில் தேர்தலில் ஒருவரை நீ தேர்ந்தெடுக்கிறாய். இந்த வாழ்க்கை முழுதும் நம்பிக்கையின் அலை தான். இது இரண்டாவது விதமான நம்பிக்கை.

நான் ஏற்கனவே மூன்றாம் விதமான நம்பிக்கையைப் பற்றிச் சொன்னேன். ஒரு பரம் பொருள் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்கிறது என்ற நம்பிக்கை தான் மூன்றாவது நம்பிக்கை.

நாம் குழந்தையாக இருந்த போது நான் இப்போதும் குழந்தை தான்! நான் இப்போதும் ஒரு குழந்தையாகவே உணர்கிறேன்.நான் வளரவே இல்லை நாம் குழந்தையாக இருந்த போது ஏதாவது தொல்லையாக இருந்தால் என்ன செய்தோம்? அழுது கொண்டே அம்மாவிடம் செல்வோம். நமக்குக் கஷ்டமானவைகளை அம்மா அல்லது அப்பாவுக்குக் கொடுத்தபின் பாரம் இறங்கின மாதிரி உணர்வோம். அம்மாவின் மடியில் சென்று உட்கார்ந்ததும் நம் அழுகை நின்று விடும்.முகத்தில் புன்முறுவல் வரும். கஷ்டங்கள் மறந்து விடும். நாம் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் போது, அம்மா அப்பாவிடம் சொல்ல முடியாத போது ஆசிரியர், குருவிடம் சென்று நம் மனதில் உள்ளவைகளைப் பங்கிடுவோம். மனம் லேசானதை உணர்வோம். இன்று நாம் இந்த செயல்முறையை மறந்து விட்டோம். இதற்கு அப்பால் இறைவன் இருக்கிறார். இறைவன் மேல் நம்பிக்கை வைத்து, சரண் அடைந்து நம் துக்கங்களை முறையிட்டோமானால் நம் மனம் காலியானதை / லேசானதை உணரலாம்.

பழைய நாட்களில் அம்மா, அப்பா, குரு மற்றும் இறைவனுக்கு சரண் புகுந்து நம் தொல்லை களையும் துக்கங்களையும் விட்டு விட்டோமானால், அமைதியாக, புன்முறுவலோடு காரியங்களைக் கவனிக்கலாம். இது தான் எல்லா மதங்களின் நோக்கமாகும். ஆன்மீகம்
என்பது இது தான்.

ஆன்மீகம் என்பது என்ன? ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு ஏதோ காரியம் செய்வது இல்லை. ஆன்மீகம் என்பது ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது. இதை மேலும் மேலும் வளர்க்க வேண்டும்.

ஒருவரை ஒருவர் சார்ந்தில்லாத போது லஞ்சம் துவங்குகிறது. யாருமே அவருடைய சொந்த மனிதர்களிடத்தில் லஞ்சம் கேட்க முடியாது. ஆகவே சட்டத்தை மட்டும் வைத்து லஞ்சத்தை ஒழிக்க முடியுமென்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சட்டம் தேவை தான். கடுமையான சட்டம் தேவை. அதோடு சமூகத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதின் பயனை எல்லோருக்கும் உணர்த்த வேண்டும். எல்லாரும் என்னைச் சேர்ந்தவர்கள் என்ற அலையை உருவாக்க வேண்டும். அந்த அலை மேலும் மேலும் உயர வேண்டும். இந்தப் பண்பு இந்தியாவுக்கே உரித்ததாகும். வருவோர் எல்லாரையும் ஆதரித்து ஏற்றுக் கொள்வது நமக்குக் கைவந்த கலை. நடுவில் நாம் இந்தப் பண்பைத் தொலைத்து விட்டோம். இன்றுமே இப்படிப் பட்ட பண்பை நம் கிராமங்களில் காணலாம்.

இந்த உலகத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்”,என்று அடிக்கடி சொல்வேன். உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவரிடமிருந்து ஒருவர் நாம் நிறையக் கற்றுக் கொள்ளலாம்.

ஜப்பானியர்களிடமிருந்து நாம் எப்படி ஒரு குழுவில் சேர்ந்து நன்றாகச் செயல் பட முடியும் என்று கற்றுக் கொள்ள வேண்டும். ஜப்பானியர்களின் குழுக்களின் செயல் திறன் மிகவும் சக்தி வாய்ந்தது.

அதே போல் ஜெர்மானியர்களிடமிருந்து நாம் தொழில் நுட்பத்தைக் கற்க வேண்டும்.அவர்கள் செய்யும் ஒவ்வொரு இயந்திரமும் தவறில்லாமல் வடிவமைக்கப் பட்டு நன்கு இயங்கும். ஒரு குற்றமும் கண்டு பிடிக்க முடியாது. அவர்கள் சொன்ன நேரத்தில் காரியம் செய்வார்கள். ஒரு முறை ஜெர்மனியில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றேன். 7 மணிக்கு துவங்க வேண்டிய கூட்டத்துக்கு 10 நிமிடம் முன்னதாகச் சென்றேன், அந்தப் பெரிய அரங்கத்தில் யாருமே இல்லை. காலியாக இருந்தது. என்னை அழைத்தவரிடம், “இங்கு யாருமே இல்லையே. நான் வந்த இடத்தில் யாருமே இல்லாமல் இருப்பது என் முதல் அனுபவம்என்றேன். அவர் சொன்னார். குருஜி, நிகழ்ச்சி துவங்க இன்னும் 7 நிமிடங்கள் இருக்கின்றன.7 மணிக்கு 1 நிமிடம் இருக்கும் போது அரங்கம் முழுவதும் நிரம்பி விட்டது! எல்லோரும் தம் இருக்கையில் அமர்ந்து தயாராக இருந்தார்கள். திட்டமாய், நுட்பமாய் இருப்பது எப்படி என்று நாம் ஜெர்மானியர்களிடமிருந்து
கற்க வேண்டும். நேரம் தவறாமை, வாக்களித்த படி செய்தல் அவர்களிடம் நிறைந்த பண்பு.

நாம் ஆங்கிலேயர்களிடமிருந்து என்ன கற்கலாம்? சபைப் பழக்கம், ஒழுக்கம், மரியாதை முதலியவற்றைக் கற்கலாம். ஆங்கிலேயர்கள் ஒழுக்கமானவர்கள். ஒழுக்கம் மரியாதையை கற்பது அவசியம்.

நாம் அமெரிக்கர்களிடமிருந்து என்ன கற்க வேண்டும்! தெரியுமா? விற்பனைத் திறைமையைக் கற்கலாம். அமாவாசை அன்று சந்திரனை விற்கும் திறமை படைத்தவர்கள் அமெரிக்கர்கள். ஒன்றுமே இல்லாத இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து வியாபாரத்தைப் பெருக்குவதில் நிபுணர்கள்.

அதே போல், மனிதாபிமானத்தையும், ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் பண்பையும் இந்தியர்களிடமிருந்து கற்கலாம். எந்த ஒரு கிராமத்துக்குச் சென்றாலும்,அவர்களிடம் ஒரு டம்ளர் லஸ்ஸி (கடைந்து எடுத்த மோர்) இருந்தாலும் அதில் பாதியை உங்களுக்கு அளிப்பார்கள். இந்தியாவில் குறிப்பாக கிராமங்களில் இந்த உபசாரத்தை, ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்வதைப் பார்க்கலாம். பெரியவர்களை (வயதானவர்களை) மரியாதையாக நடத்துவதும், போற்றுவதும் இந்தியர்களின் வழக்கம்.

இதில் ஒரு விஞ்ஞான இரகசியம் இருக்கிறது. உனக்குத் தெரியுமா?

வீட்டில் திருமணத்தின் போது வீட்டிலேயே பெரியவரிடம் முதல் நல்வாழ்த்துப் பெறும் வழக்கம் இருக்கிறது. இல்லையா? இதில் ஒரு விஞ்ஞான உண்மை இருக்கிறது. அது என்ன உண்மை தெரியுமாயார் நல்வாழ்த்து அளிப்பது (ஆசிர்வதிப்பது) என்று யோசித்திருக்கிறாயா? யாருக்குத் எந்தத் தேவைகளும் இல்லையோ அவரே நல்வாழ்த்து அளிக்கத் தகுதியானவர். அப்படிப் பட்டவர் மற்றவர்களை வாழ்த்தலாம்.எவ்வளவு வயதானவரோ அவர் அவ்வளவு திருப்தியான வாழ்க்கை வாழ்பவர் என்று பொருள் கொள்ளலாம். அவர் தன் பொறுப்புகளை நிறைவேற்றி விட்டவர்.
அவரின் தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆகிவிட்டன. அவரே மற்றவர்களை வாழ்த்தத் தகுதி பெற்றவர்.

நீ திருப்தியானவனாவதற்கு வயதில் முதியவனாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.நான் அப்படிச் சொல்ல வில்லை. உன் சிறு வயதிலேயே நீ திருப்தியானவன் ஆகலாம்.அப்படியாகும் போது உன்னுள்ளே ஒரு தனி சக்தி உருவாகும். உன் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்கிறார். நீ மற்றவர்களை வாழ்த்தும் போது அவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். 100%. கட்டாயம் நடக்கும்.

ஆகவே உன் மனம் மகிழ்ச்சியாக, திருப்தியடைந்தவனாக இரு. மனதில் சஞ்சலம் இருக்கக் கூடாது. கோபம் இருக்கக் கூடாது. இது உனக்கு ஒரு எளிய செயலாகும். நான் ஒன்று சொல்கிறேன். இந்த 55 வருடங்களில் என் வாயிலிருந்து ஒரு கெட்ட வார்த்தையும் வந்ததில்லை. நான் யாரையும் சபித்ததில்லை. நீ கடினமான வார்த்தைகளைப் பயன் படுத்தாமல் இருந்தால், மற்றவர்களை வாழ்த்த அதிக சக்தியைப் பெறுவாய்.

பொதுவாக வயது அதிகம் ஆக ஆக திருப்தி அடைய வேண்டும். ஆனால் பல சமயங்களில் அப்படிப் பார்க்க முடிவதில்லை. கடைசி மூச்சு வரை முதியவர்கள் தங்கள் சாவியை தன் குழந்தைகளின் கையில் தருவதில்லை. தன் பணத்தை வங்கியில் வைத்து விட்டு மரணம் அடையும் போது, அவர்களின் குழந்தைகள் பணத்துக்காகச் சண்டை போட வேண்டிய நிலை இருக்கிறது. இந்த அவலம் மாற வேண்டும். பெரியவர்கள் தங்கள் பொறுப்புகளை தக்க சமயத்தில் இளைஞர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக ஒரு இளைஞர் தேர்ந்தெடுக்கப் பட்டது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி. மக்கள் நல்ல எதிர் காலம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். இப்போது தான் 16 மாவட்டங்களின் பயணம் முடிந்து திரும்புகிறேன். கிராமங்களில் வறுமை மிகவுமிருக்கிறது. நாடு மாறும் என்று மக்கள் நினைக்கிறார்கள். காத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் நீதி கிடைக்கும் என்று எல்லா மதத்தினரும், எல்லா ஜாதியினரும் எதிர் பார்க்கிறார்கள். இளைஞர் தலைமையில் வந்திருக்கும் அமைச்சரவை மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் என்று நம்புகிறேன். உத்தரப் பிரதேசம் முன்னேற வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன். முன்னேற்றம் இருக்கிறது. இருந்தாலும் நாம் வெகு தூரம் செல்ல வேண்டும்.

லஞ்சத்தை அறவே ஒழிக்க வேண்டும். வன் முறையை நீக்க வேண்டும். சமுதாயத்தில் வன்முறை எந்த ரூபத்திலும் இருக்கக் கூடாது. பெண்களுக்கு எதிரான வன்முறை நிறுத்தப் பட வேண்டும். இதற்கு அடிப்படைக் காரணம் மன அழுத்தம் தான். மன அழுத்தம் நீங்கினால், எல்லாருடைய மனங்களும் அமைதியடையும். இதயம் மலரத் துவங்கும். சமூகத்தின் கெட்டவைகள் மறையத் தொடங்கும். நான் சொல்வது அவ்வளவு தான்.

ஆகவே நீங்கள் எப்படி வாழ்த்துவது, எப்படி வாழ்த்துப் பெறுவது என்று தெரிந்து கொண்டீர்கள்.

சரி! உங்களுக்கு இன்னொன்று சொல்ல விரும்புகிறேன். இன்று இரவு ஒரு பட்டியல் போடுங்கள். உங்கள் தேவைகள் என்ன? நீங்கள் உங்கள் சமூகத்திலும், வாழ்க்கையிலும் என்ன பொறுப்பேற்க விரும்புகிறீர்கள்? பொறுப்புகள் அதிகமாகவும், தேவைகள் குறைவாகவும் இருந்தால் உங்கள் வாழ்க்கை அமைதியாகச் செல்லும். தேவைகள் அதிகமாகவும், பொறுப்புகள் குறைவாகவும் இருக்கும் போது வாழ்க்கை துக்கத்தை நோக்கிச் செல்லும். யார் ஒருவருக்கு தனி தேவைகள் இல்லையோ, சமூகத்தில் எல்லா பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறாரோ, அவர் ஒரு தலைவர். ஒரு சமூக நல ஊழியர். அவர் அரசியலில் செல்லத் தகுதியானவர். யார் தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு மற்றவர்களின் தேவைக்காக உழைக்கிறாரோ, பொறுப்பு எடுத்துக் கொள்கிறாரோ, சேவை மனப்பான்மை உடைய அவரே அரசியலில் வர வேண்டும்.

நாம் இதை கவனத்தில் கொண்டு வரவேண்டும். நான் எல்லோரையும் ஒரு சாதுவாகச் சொல்ல வில்லை. எனக்கு ஒன்றும் தேவையில்லை என்று ஒருவரால் சொல்ல முடியாது. உன் தேவைகளை ஒரு பட்டியலில் எழுது. கேள். உன் தேவைகள் நிறைவேறும். அதே சமயம் பொறுப்பை அதிகப்படுத்திக்கொள். நீ உன்னைச் சேர்ந்த, உன் குடும்பத்துக்கு, உன் இன மக்களுக்கு, உன் சமுதாயத்துக்கு பொறுப்பு எடுத்திருப்பாய். அதை இப்போது மேலும் விரிவாக்கு. உன் மகிழ்ச்சி பெறுகுவதை உணர்வாய். இது அவசியம்.

கடைசியாக, வாழும் கலை என்பது என்ன என்று பல பேருக்குத் தெரிய வில்லை. நிறைய பேர் இதைப் பற்றி அறிய விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள். வாழும் கலை 5 தத்துவங்களை அடக்கியது.. ஐந்தே ஐந்து தான்.

முதல் பாடம் : வாழ்க்கையில் இன்பம் வரும், துன்பம் வரும்.இன்பத்திலும் துன்பத்திலும் மனதை ஒரு சரி சமமான நிலைக்குக் கொண்டுவரப் பழக வேண்டும். இன்பத்திலும், துன்பத்திலும் நம் மனத்தை அடக்கி ஒரு சம நோக்கோடு அமைதியாக வைக்க வேண்டும். இது அவசியம் தான் இல்லையா? எதிர்மறையான நிகழ்வுகள் வாழ்க்கையில் வரும். வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம், இன்பம்-துன்பம், இவை வந்து போகும். ஆனால் மனிதன் மன அளவில் உடைந்து போனால் அவனால் எதுவும் செய்ய இயலாது. தன் மனதை அடக்கி கட்டுப்பாட்டுக்குள் வைப்பது வாழும் கலையின் முதல் பாடம்.

இரண்டாவது பாடம் : யார் எப்படி இருக்கிறார்களோ அவரை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். நாம் எல்லாரும் நம்மைப் போலிருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அது எப்படி முடியும்? மாமியார், மருமகள் தன்னைப் போல இருக்க வேண்டுமென்கிறாள். தந்தை மகன் தன் சொல்படி நடக்க வேண்டுமென்று விரும்புகிறார். இதனால் தான் வீட்டில், சமுதாயத்தில் கருத்து வேறுபாடு உருவாகிறது. அதனால் தான் நான் சொல்கிறேன்.அவர்களை அவ்வாறே ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் வழிக்கு வர சிறிது அவகாசம் கொடுங்கள். அவர்கள் அவர்களின் திறமைக்கேற்ப முன்னேறுவார்கள். இது இரண்டாவது பாடம்.

மூன்றாவது பாடம் : மற்றவர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப் படாதே. இவ்வுலகில் ஒவ்வொருவர் எண்ணப் போக்கும் வேறு வேறாகும். கருத்து வேறு படும். மற்றவர் உன்னைப் பற்றி என்ன நினைக்கிறாரோ, அப்படியே அவர் நினைக்கட்டும்.உனக்கென்ன கவலை? அதை நினைத்து வருந்தாதே. எவ்வளவு மனிதர்கள் மற்றவரின் கருத்தைப் பற்றி மனதில் ஏற்றிக் கொண்டு வருத்தத்துக்குள்ளாகிறார்கள்? அது உபயோகமில்லாத ஒன்று. நேரம் வீணாகிறது. வாழ்க்கை வீணாகிறது. உன் வாழ்க்கை விலை மதிப்பற்றது.அதனால் தான் நான் சொல்கிறேன். மற்றவர் கருத்துக்கு உதை பந்தாக வேண்டாம். இது மூன்றாவது பாடம்.

நான்காவது பாடம் : நாம் தவறு செய்யும் போது தவறு ஏற்பட்டு விட்டது என்று சொல்வோம். நான் என்ன செய்வது? அதே தவறு மற்றவர் செய்தால், “அவர் வேண்டுமென்றே அந்தத் தவறைச் செய்தார்என்று சொல்வோம். நம் பார்வையில் அவர் தவறு வேண்டுமென்றே செய்ததாகப் படுகிறது. அப்படிப் பார்க்காதே.அவர்களை மன்னித்து விடு. (யாராலும் தவறு ஏற்படலாம்) அவர்கள் மன்னிப்புக் கேட்டால் தான் மன்னிக்க வேண்டுமென்றில்லை. மன்னிப்புக் கேட்கிறார்களோ இல்லையோ நீ மன்னித்து விட்டால் உன் மனம் அந்த நிகழ்ச்சியிலிருந்து விடுபடும். நீ மகிழ்ச்சியாக இருக்க முடியும். மனம் லேசாகி விடும்.

இல்லாவிடில் நீ யாரை வெறுக்கிறாயோ அவர்கள் உன் மனத்தை இரவும் பகலும் ஆக்ரமித்துக் கொண்டு உன் நிம்மதியைக் கெடுத்து விடுவார்கள். நீயும் அவர்களைப் போலாகிவிடுவாய். அதனால் தான் அவர்கள் மன்னிப்பு கேட்டாலும் கேட்கா விட்டாலும் மன்னித்து விடு. உன் மனதை நிம்மதியாக வை. மன்னித்தல் மிகப் பெரிய சிறந்த பண்பாகும். நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் நம் வாழ்வில் பிறரை மன்னிப்பது மிகவும் அவசியம்.

நீ விடுதலையை விரும்பினால், கருணை, மன்னிக்கும் குணம், நேர்மை, திருப்தி இவைகளை அம்ருதம் போல் நினைத்து பற்றிக் கொள் என்று அஷ்டவக்கிர மகா முனிவர் சொன்னார்.

இப்போது செய்ய முடியுமா? யாரையெல்லாம் வெறுக்கிறீர்களோ, தீவிரமாக பகைக்கிறீர்களோ அவர்களை இப்போது மன்னிக்க முடியுமா? ஒரு நிமிடம் தான் ஆகும். முடியுமா? எவ்வளவு பேரை மன்னித்தீர்கள்? பார்த்தீர்களா? எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.மன்னிப்பது மிகவும் கடினமாக இருந்தால் இன்னொரு வழி சொல்கிறேன். ஒரு குரு உங்கள் ஊருக்கு வரும்போது என்ன கடமை? அவருக்கு தட்சணை (அன்பளிப்பு)கொடுக்க வேண்டுமில்லையா? நான் உங்களிடம் இரண்டு பொருட்கள் குரு தட்சணையாகக் கேட்க்கிறேன். ஒன்று உங்கள் வெறுப்பு. வெறுப்பை யெல்லாம் என்னிடம் கொடுத்து விட்டு யாரை வெறுத்தீர்களோ அவர்களோடு இனிய உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். இரண்டாவது உங்கள் மனதில் இருக்கும் கவலைகள், தொல்லைகள் அனைத்தையும் என்னிடம் தட்சணையாகக் கொடுத்து விட்டு வாழ்க்கையை புன்முறுவலோடு எதிர் கொண்டு முன்னேறுங்கள். சேவையில் ஈடு பட்டு எல்லோருக்கும் உதவுங்கள். அதுவே இறைவனைத் துதிப்பதாகும்.

சமஸ்கிருதத்தில் ஆனெகானெ ப்ரகாரேன யஸ்ய கஷ்யபி தேஹின சந்தோஷம் ஜானெத் ப்ரஞ்ய ததேஷ்வர் பூஜனம்என்பார்கள்.இறைவனைத் துதிப்பதென்பது என்ன? எப்படியாயினும் ஏதாவது செய்து மற்றவர் இதயத்தில் மகிழ்ச்சி நிலவ, அவர்கள் திருப்தியாக இருக்கச் செய்யுங்கள். இதுவே இறைவனைத் துதிக்க உத்தமமான வழி. நம் முன்னோர்கள் எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்? பார்த்தீர்களா.

ஐந்தாவது பாடம் : வாழும் கலையின் ஐந்தாவது பாடம் நிகழ் காலத்தில் வாழ்வது. இப்போது! இப்போது!இப்போது! கடந்த காலம் எப்படி இருந்ததென்றாலும் கடந்து விட்டது. அதை (பிரேத)பரிசோதனை செய்வதால், அதை நினைத்து வருந்துவதால் உனக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. கடந்த கால நினைவுகளில் சமயத்தை வீணாக்க வேண்டாம். நாம் 70% லிருந்து 80% நேரத்தை கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகளை (அப்படி ஏன் நடந்தது. எவ்வாறு நடந்ததுஎன்று) நினைவு கூர்ந்து அசை போடுவதில் வீணாகக் கழிக்கிறோம். கடந்து போன நேரத்தைப் பற்றிக் கவலையில் ஆழ்வது முட்டாள் தனமாகும்.கடந்த கால நிகழ்ச்சிகளிலிருந்து என்ன பாடம் கற்றுக் கொள்ளலாம் என்று யோசித்து நிகழ் காலத்தில் முன்னேறுவது தான் அறிவுள்ள செயல். இது தான் வாழும் கலை.

குருஜி! இது கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் அப்படிச் செய்வது கடினமாக இருக்கிறது.என்று சொல்வாய்.சுதர்ஷன்க்ரியா,பிராணாயாமம் செய்து இது எப்படி கை கூடும் என்று பார்என்று நான் சொல்வேன். இன்று உலகம் முழுவதும் மக்கள் இதைச் செய்து அனுபவத்தில் உணர்கிறார்கள் அவர்கள் வாழ்க்கையில் மிக சிறந்த மாற்றங்கள் / அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறது.

நான் 3 முறை ஈராக் சென்றேன். அங்குள்ளவர்கள் (சிகப்பு நிறத்தில் அடையாளமிட்ட சில பகுதிகளுக்குச் செல்லும் போது) அது அபாய கரமான இடம். உங்களை அங்கு செல்ல விட மாட்டோம் என்று அனுமதி மறுத்தார்கள். ஈராக் அரசு எனக்கு பாதுகாவலுக்காக 12 காவல் ஊர்திகளும், 2 டாங்குகளும் ( ஒன்று முன்னால் , மற்றொன்று பின்னால் செல்ல) கொடுத்தார்கள். அதைத் தவிர பல கார்களில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் இருந்தார்கள். நான் அவர்களிடம் நான் இங்கு மக்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். இங்கு வந்து காவல் படையின் மத்தியில் வந்து அமர்வதற்காக அல்லஎன்று விளக்கினேன். நீங்கள் எது அபாயகரமான பகுதி என்று சொல்கிறீர்களோ அங்கே போக விரும்புகிறேன் என்றேன்.

அவர்கள் அது மிகவும் அபாயமான பகுதி. அங்கு போவதற்கு உங்களை அனுமதிக்க முடியாதுஎன்றார்கள். நான் விடாப்பிடியாக நான் அங்கு போக வேண்டும் என்று கூறிய பின் நீங்கள் எங்கள் விருந்தாளி. இவ்வளவு சொல்லியும் நீங்கள் போக விரும்பினால் போகலாம்என்று அனுமதி அளித்தார்கள். நான் அந்தப் பகுதிக்குள் சென்று ஷியா கவுன்சில் உறுப்பினர்களைச் சந்தித்தேன். எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர்களின் பழங்குடியினரையும் சந்தித்துப் பேசினேன். அவர்கள் குருஜி! இது உங்களுக்கு 2வது வீடு.இங்கிருந்து போகாதீர்கள். இங்கேயே எங்களுடன் இருந்து விடுங்கள்என்றார்கள். மிக அன்புடன் என்னை வரவேற்றார்கள்.

8000 பேர் ஷியா கிராமத்திலிருந்து வெளியேற்றப் பட்டிருந்தார்கள். நான் சன்னி இமாமுடன் ஷியா கிராமத்துக்குச் சென்றேன். இரு தரப்பாரையும் பேச்சு வார்த்தைக்கு உடன்பட வைத்தேன்.எனக்கு அரபி மொழி தெரியாத காரணத்தால் ஒரு மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் அமர்ந்து அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற உதவினேன். கிராமத்தை விட்டு வெளியேற்றப் பட்டவர்கள் தங்கள் கிராமத்துக்குத் திரும்பினார்கள்.

நான் அவர்களுக்கு, “நீங்கள் இரு பிரிவாரும் அல்லாவையும், முகம்மது நபியையும் நம்புகிறவர்கள். ஏன் மூன்றாம் மனிதனுக்காக சண்டையிடுகிறீர்கள்?” என்று புரிய வைத்தேன்.
ஈராக்கில் 7 லட்சம் பெண்கள் கணவனை இழந்து தவிக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் யாருக்கும் இதயம் உருகிவிடும்.ஈராக்கிலிருந்து 50 இளைஞர்கள் பெங்களூர் ஆசிரமம் வந்து அமைதி தூதர்களாகப் பயிற்சி எடுத்துக் கொண்டார்கள். ஈராக் அரசு அதிகாரிகள் குருஜி! இது வரை எங்களுக்குத் தெரிந்தது சாகும் கலை தான். நாங்கள் வாழும் கலை என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம்என்று சொன்னார்கள்.அதன் பிறகு அங்கு நிலவரம் அமைதியாகத் தொடங்கியது. நாம் செய்தது மிகச் சிறிய துளி தான். சில சமயம் அந்தச் சிறு துளி நன்றாகச் செயல் படுகிறது.

அதனால் தான் சொல்கிறேன். நம்முடைய டி.என்.ஏ வில்(மரபு அணுவில்) அமைதியும், தோழமையும் அடங்கியிருக்கிறது. எல்லோரையும் அணைத்து ஏற்றுக் கொள்ளும் பண்பாடு இந்தியாவுக்குரியது. இதை நினைவில் கொண்டு, முக்கியத்துவம் கொடுத்து நம் நாட்டில் அமைதி நிலவ பாடு பட வேண்டும். அந்த அமைதி உலகின் மற்ற நாட்டவர்க்கும் கிடைக்கும் படியான காரியங்கள் செய்ய வேண்டும்.

நான் 8 வருடங்களுக்கு முன் லக்னௌ வந்தேன். அதே வருடம் பாகிஸ்தான் சென்றேன். இந்த ஆண்டு பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு லக்னௌ வந்திருக்கிறேன். பாகிஸ்தான் மக்கள் எனக்கு உற்சாகத்தோடு வரவேற்பளித்தார்கள். 3 வாழும் கலை மையங்கள், அமைத்திருக்கிறார்கள். ஆயிரக் கணக்கானோர் யோக ஆசனங்கள், பிராண யாமம், சுதர்சன கிரியா கற்றிருக்கிறார்கள். அதனால் அமைதியை அனுபவித்து இருகிறார்கள் .அங்குள்ள பிரபல மக்கள் தலைவர்களையும், மதத் தலைவர்களையும் சந்தித்து உரையாடினேன். எல்லோரும் என்னை அன்புடன் வரவேற்றார்கள். வேற்று நாட்டில் இருப்பது போல் நான் உணர வில்லை. இந்தியாவில் இருப்பது போலவே என்ன அன்பு? என்ன உற்சாகம்? எல்லோரும், “குருஜி! நீங்கள் எங்களைச் சார்ந்தவர். நாங்கள் உங்களைச் சார்ந்தவர்கள்என்று சொன்னார்கள்.

இந்த உணர்ச்சி நம் பிறவிக் குணமாகும். அதற்காக நாட்டுப் பற்று இருக்கக் கூடாது என்று அர்த்தம் அல்ல. நமக்கு நாட்டுப்பற்று இருக்க வேண்டும். அதனால் தான் இறையன்பும், நாட்டுப்பற்றும் ஒன்றோடு ஒன்றாக இணைந்து செல்லும்.

நன்றாகச் சேவை செய்து உங்கள் நாட்டுப் பற்றைக் காண்பிக்கலாம். இங்கு லட்சக் கணக்கானோர் கூடியிருக்கிறோம். எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு ஞாயிற்றுக் கிழமை 2 மணி நேரம் நம் நகரத்தைச் சுத்தம் செய்வதில் செலவிட்டால், லக்னௌ நகரம் திங்கள் கிழமை எவ்வளவு சுத்தமாக, பளிச்சென்று துலங்கும் தெரியுமா? எல்லா அழுக்குகளும், குப்பைகளும் நீங்கி விடும். இந்தக் காரியம் லக்னௌ முனிசிபாலிடியின் பொறுப்பு மட்டும் அல்ல. நாம் எல்லோரும் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு அவர்களுக்கு உதவலாம். நீங்கள் அப்படிச் செய்வீர்களா?

அடுத்த ஞாயிறு அன்று காலை 8 மணிக்கு எல்லாரும் ஒன்று திரண்டு தங்கள் சுற்றுப் புறத்தை 10 மணி வரை சுத்தம் செய்யுங்கள். செய்வீர்களா?

உங்கள் இல்லத்தைத் தூய்மை ஆக்குங்கள். உங்கள் தெருக்களைச் சுத்தமாக்குங்கள். உங்கள் இணைப்புச் சாலைகளையும் சுத்தமாக வையுங்கள்.உள்ளத்தூய்மை, மற்றும் வெளிச் சுற்றுப்புறத் தூய்மை நம் கடமையும் பொறுப்புமாகும். நாம் அனைவரும் தூய்மையின்மைக்கு எதிராக ஒன்று சேர்ந்து செயல் படுவோம்.

இதே போல் ஒன்று சேர்ந்து பற்றாக் குறையைத் தீர்க்க வேண்டும். வேலை யில்லா இளைஞர்கள் சிறு தொழில் அதிபர் ஆகலாம். நிறையக் காரியம் செய்ய வேண்டும். பல சிறு தொழில்கள் நம் நாட்டிலிருந்து சீனா தேசத்துக்குப் போய்விட்டது. ஏன்? எங்கேயோ நாம் சிறு தொழிற்சாலைகளை நிர்மாணிக்கும் திறமையை இழந்து விட்டோ,ம். அரசு நமக்கு உத்தியோகம் அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். எப்படி ஒரு அரசால் எல்லாருக்கும் உத்தியோகம் அளிக்க முடியும்? நீங்கள் உங்கள் கால்களில் நிற்கலாம். இதற்கான பயிற்சி உங்களுக்கு அவசியம் என்று எனக்குத் தெரியும். வாழும் கலையின் தனி நபர் வளர்ச்சி மையங்கள் இதற்கான பயிற்சியை அளிக்கத் தயாராக உள்ளது. இளைஞர்களுக்கு வேண்டிய பயிற்சியை அளித்து வருகிறது.

நாம் பறக்க விடும் பட்டம், நம் பிள்ளையார் மற்றும் மற்ற சிலைகள் சீன தேசத்தில் தயாராகி இங்கு விற்பனைக்கு வருகின்றன. அவைகளை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும். நம் நாட்டில் ஒவ்வொரு நகரமும் ஒரு பொருளுக்குப் பெயர் போனது. உதாரணத்துக்கு லக்னௌ எம்ப்ராய்டரி சட்டைகள் (குர்த்தா), புடவைகளுக்கு பெயர் போனது. பனாரஸ் பட்டு புடவைகள், காஷ்மீர் சால்வைகள், இமயமலையில் விளையும் ஆப்பிள் பழங்கள் மிகவும் பெயர் பெற்றவைகள். இவைகளின் உற்பத்தியை பெருக்க வேண்டும்.

சீன தேசத்தில் ஒரு கிராமம் முழுதும் ஒரே பொருளை உற்பத்தி செய்கிறது. ஒரு கிராமத்தில் ஊசிகள் மற்றும் செய்யப்படுகின்றன. ஒரு கிராமத்தில் பொத்தான்கள் மட்டும் உற்பத்தி ஆகின்றன. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் மேல் நிலைக்கு வருகிறது. நாமும் அவ்வாறு செய்ய வேண்டும். சுற்றுலா துறையின் முன்னேற்றத்தினால் நாம் நம் வருவாயைப் பெருக்க முடியும். நம் நாட்டில் பல சாதுக்கள், அவதார புருஷர்கள், முனிவர்கள் உத்தரப் பிரதேசத்தில் பிறந்திரு க்கிறார்கள். ஏன் அப்படி என்று இறைவனுக்குத் தான் தெரியும். ஶ்ரீ ராமர், ஶ்ரீ கிருஷ்ணர் இருவரும் பிறந்தது இந்த பூமியில் தான். கபீர்தாஸ் பிறந்ததும் இங்கே தான். புத்தர் பல காலம் உத்தரப் பிரதேசத்தில் வாழ்ந்திருக்கிறார். ஆனால் இந்த தெய்வீகத் தலங்கள் மாசு படிந்து தூய்மையில்லாமல் இருக்கிறது. இந்த இடங்களை சுத்தப் படுத்தி, பளிச்சென்று வைக்க வேண்டும். வெளி நாட்டு பயணிகளை இந்த இடங்களுக்கு வரும்படிச் செய்ய வேண்டும். நாம் அநீதிக்கு எதிராக எதிர்த்து நிற்க வேண்டும். நாம் லஞ்சத்துக்கு எதிராக நம் மறுப்பைத் தெரிவிக்க வேண்டும்.கைகளை உயர்த்தி லஞ்சம் கொடுக்க மாட்டோம். லஞ்சம் வாங்க மாட்டோம் என்று சத்தியப் பிரமாணம் செய்யலாமா?

இங்கு உட்கார்ந்திருப்பவர்களில் பலர் தயக்கத்துடன் லஞ்சத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். நான் சொல்கிறேன். ஒரு ஆண்டு காலம் லஞ்சம் வாங்க வேண்டாம். பிறகு என்ன ஆகிறது என்று பார்க்கலாம். நான் ஒரு வருடம் கழித்து வந்து சத்தியப் பிரமாணம் செய்விக்க வைப்பேன்.
ஆகவே இன்று லஞ்சம் வாங்க மாட்டேன் என்ற உறுதி மொழியுடன் வேலை செய்யப் பழகுங்கள்.

நீ லஞ்சம் வாங்கத் தயங்குப் போது, ஒருவர் வந்து மேஜை அடியில் லஞ்சம் கொடுத்தால் என்ன செய்வது? இங்கு உட்கார்ந்திருக்கும் யெஸ் ப்ளஸ் இளைஞர்கள் வந்து உங்கள் மேஜைகளில் நான் லஞ்சம் வாங்க மாட்டேன்என்று எழுதிய பட்டைகளை ஒட்டுவார்கள். இந்த இளைஞர்களே எழுதி ஒட்டுவார்கள். உங்களுக்குச் சிரமம் வேண்டாம். அதைப் பார்ப்பவர்கள் உங்களுக்கு லஞ்சம் கொடுக்க முன் வர மாட்டார்கள்.நீங்கள் பேசுவதற்கு அவசியம் இல்லை. ஆகவே நாம் அநீதிக்கு எதிராக ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

அடுத்தது இன வேறுபாடு, சாதி வேறுபாடு காரணங்களால் நடக்கும் அநீதிக்கு எதிராகவும் குரல் எழுப்பி, வேறுபாடுகளைத் தவிர்க்க வேண்டும். நம் பெரியோர்கள், சாதுக்கள், ஆயிரக்கணக் கானவர்கள் பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். கீழ்சாதி என்று கருதும் சாதிகளிலும் சாதுக்கள் பிறந்திருக்கிறார்கள். சாதி வேறு பாட்டை அறவே ஒழிக்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள். நாம் அனைவரும் ஒரே சாதி. ஒரே இனம். மனித இனம்.சரியா?

அஞ்ஞானம், படிப்பறிவின்மை முதலியவற்றையும் எதிர்த்து நிற்க வேண்டும். மூட நம்பிக்கைகள் இருக்கக் கூடாது. (எல்லோருக்கும் நல்ல கல்வி அளிக்க வேண்டும்) இப்போது எல்லோரும் சேர்ந்து தியானம் செய்யலாம். ஒரே குழுவாகப் பலர் தியானம் செய்வது ஒரு யாகம் செய்வதற்கு ஒப்பானது. யாகத்தின் பலன் எல்லோருக்கும் கிடைக்கும். உன் விருப்பம் ஏதாவது ஒன்றை நினைத்து தியானம் செய். அது கட்டாயம் நிறைவேறும்.

நான் மக்கள் கேட்ட மற்றோர் விஷயத்தை பற்றி பேசபோகிறேன் .பாருங்கள்,நீங்கள் எல்லோரும் உங்கள் முன்னோர்களுக்கு எள் தர்ப்பணம் செய்கிறீர்கள்.இல்லையா?இதன் முக்கியத்வம் என்ன?

நாம் மறைந்து மேலுலகம் சென்ற முன்னோர்க்களுக்கு சொல்வதல்லாம் "நீங்கள் மனதில் எதாவது ஆசையை விட்டு சென்றிரிந்தீர்கள் ஆனால் ,அவை இந்த எள் விதைக்கு சமம். அதை தட்டிவிட்டு சாந்தம் அடையுங்கள்.நீங்கள் இறைவனின் பாதத்தை அடையுங்கள். நாங்கள் உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறோம்"என்று சொல்லி எள்ளுடன் கலந்த நீரை தரையில் விடுகிறோம். ஆகவே அது தர்ப்பணம் என கூறப்படுகிறது. மூன்று முறை நாம்  பௌதீக , மானசீக ,ஆன்மீக ரீதியாக அவர்களை திருப்தியடைய சொல்கிறோம்.வாரிசுகள் தங்கள் முன்னோர்களுக்கு "திருப்தியடையுங்கள், திருப்தியடையுங்கள் "என பாடம் போதிக்கின்றனர். ஆகவே வாழும்போதே நாம் திருப்தியுடன் வாழ்ந்தால் சித்திகள் (ஆன்மீக சக்திகள்) நம்மை வந்தடைகின்றன. நாம் மற்றவர்களை ஆசிர்வதிக்கும் தகுதியை அடைகிறோம்.

கேள்வி: குருஜி,வாழ்க்கையில் மிகமேன்மையாக கருதப்படும் குறிக்கோள் எது? நல்லகுணமா?பொருளாதார வளர்ச்சியா?புகழா?அல்லது வேறு எதாவதா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: மிக மேன்மையை"(சுப்ரீம்) அடைவதுதான் சிறந்த குறிக்கோள் .மற்றவை எல்லாம் சிறிய குறிக்கோள்களே.

கேள்வி: குருஜி,சுய மரியாதைக்கும் ,அகந்தையுடன் கூடிய கர்வத்திற்கும் என்ன வித்தியாசம்?
 
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: கர்வம் ,மனதை துளைக்கிறது.,துன்பத்திற்கு காரணமாகிறது.சுயமரியாதை -அதை யாரும் நம்மிடமிருந்து பிரிக்க முடியாது.

கேள்வி: சரணடைதல் என்றால் என்ன?அது பொறுப்புக்களில் இருந்து விலகி ஓடுவதற்கு சமமல்லவா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இல்லை,செய்யவேண்டியதை எல்லாம் செய்த பிறகு, எதை செய்ய முடியவில்லியோ அதை சமர்ப்பணம் செய்து விடவேண்டும்.

கேள்வி: குருஜி,திருமணம் ஆத்மஅறிவு பெற தடையா?பின் நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?
 
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:, நான் வளரவில்லை,(குழந்தையே).ஆத்ம அறிவு பெற திருமணம் தடை இல்லை.பல பெரியவர்கள் மணந்தும் ஆத்ம அறிவு பெற்றுரிக்கிரார்கள் .

கேள்வி: குருஜி, உறவுகளை பேணுவதில் வாழ்க்கை விரிசல் அடைகிறது.உறவுகளை பேணவா?அல்லது வாழ்க்கையை காப்பாற்ற வேண்டுமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இரண்டையுமே பேனுவேதே அறிவான செயல்.

கேள்வி: குருஜி,இப்போது நிறைய குருக்கள் உள்ளார்கள், உண்மை குருவை எவ்வாறு கண்டுபிடிப்பது.?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நான் எவ்வாறு கூறுவது? நீங்கள் உட்சென்று உங்கள் இதயத்தை கேளுங்கள். நீங்கள் வெளியே செல்ல வேண்டாம். நீங்கள் உண்மையான சாதகராக இருந்தால் உங்களுக்கு உண்மையான குரு கிடைப்பார். ஒவ்வொருவரிடமும் சில நல்ல குணங்கள் உள்ளன.அவற்றை கடைபிடியுங்கள்.எது உங்கள் மனதிற்கு பிடிக்கவில்லையோ அவற்றை விட்டு விடுங்கள்.

கேள்வி: குருஜி,யாரை நாம் நேசிக்கிறோமோ ,அவர்களுக்கு எங்கள் நோக்கங்களை தெளிவுபடுத்த முடியவில்லை.நீங்கள் எவ்வாறு எங்கள் மனதில் ஓடும் எண்ணங்களை அறிகிறீர்கள்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அது என் தனிப்பட்ட ரகசியம்.நீங்கள் த்யானம் பயில்விக்கும் ஆசிரியராக முயலுங்கள். நீங்கள் புரிந்துகொள்வீர்கள். வாழும் கலை பயில்விக்கும் ஆசிரியராக மாறுங்கள்.

கேள்வி: விஞ்ஞானமும், ஆன்மீகமும் எதிர்மறை ஆனவைகளா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நிச்சயமாக இல்லை.உலகம் என்பது யாது?-இது விஞ்ஞானம்." நான் யார்"
இந்த ஆராய்ச்சி ஆன்மிகம்.அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை.எங்கு விஞ்ஞானம் முடிவடைகிறதோ, அங்கு ஆன்மிகம் தொடங்குகிறது. ஒன்று மனதிற்குள்ளே பார்க்க வேண்டும், மற்றொன்று புறம் நோக்க வேண்டும். இதுதான் கீதையில் கூறப்பட்டுள்ள அறிவு. "ஞான, விஞ்ஞான திருப்தா ஆத்மா".உங்களில் எவ்வளவு பேர் கீதையை படித்துள்ளீர்கள்? கையை தூக்குங்கள்.ஒரு முறையாவது கீதையை படிக்கவேண்டும்.

அதில் 700 ஸ்லோகங்கள் உள்ளன.அது நமது தேசிய வேதம். ஒருமுறையாவது முதலில்
இருந்து கடைசி வரை கீதையை படியுங்கள்.அதில் அவ்வளவு அறிவு பொதிந்துள்ளது. மகாத்மாகாந்தி ஒவ்வொரு நாளும் கீதையை படிப்பார். விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கீதையை படித்தவுடன் தன் தொலைநோக்கு பார்வை மாறியதாக கூறினார்.

கேள்வி: குருஜி,எங்களால் தினப்ரச்னைகளை கூட சமாளிக்கமுடியவில்லை,நீங்கள் எவ்வாறு மிக பெரிய பிரச்னைகளை வெகு இலகுவாக தீர்த்து விடுகிறீர்கள்? இதன் ரகசியத்தை சொல்லுங்கள்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ரகசியம் வாழும் கலை தான். த்யானம் செய்யுங்கள்.சேவை,சத்சங்கம் ஆகியவற்றில் ஈடுபடுங்கள். சேவையில் ஈடுபட்டால் மிக பிரம்மாண்டமான காரியங்களை உங்களால் சாதிக்க முடியும். சந்தோஷத்துடனும், திருப்தியுடன் இருங்கள். நாட்டுக்காக உழையுங்கள்.