காலம் அனைத்தையும் நகர்த்தும், உங்களால் காலத்தை நகர்த்த முடியும்

புதன்கிழமை, 31 டிசம்பர் 2014,

பாத் அண்டோகஸ்ட் ஜெர்மனி



அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

2015: ஒரு நாளுக்கு இரு முறை (2) வெறுமையடையுங்கள் (0) ஒன்றாவதற்கு (1) ஐந்திற்கு அப்பாற்பட்ட ஒன்றுடன் (5) புரிந்ததா? இவ்வுலகம் பஞ்ச பூதங்களின் இணைப்பு, இந்த பஞ்ச பூதங்களுக்கு அப்பாற்பட்டது ஆத்மா, எனவே ஆத்மாவுடன் இணையுங்கள் !!

காலத்தை வணங்குகின்றேன், ஏனெனில் அது மனதை விட உயர்ந்தது.காலமே மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.காலமே ஏழையை இளவரசனாக்குகின்றது, இளவரசனை ழையாக்குகின்றது. காலம் முட்டாளை புத்திசாலியாக்குகின்றது, காலமே ஒரு புத்திசாலியின் மூலம் முட்டாள்தனமான விஷயங்களை நிகழ வைக்கின்றது. காலம் நட்புக்களை உருவாக்கி, நட்புக்களை பிரிக்கின்றது.  அமைதியை ஏற்படுத்தும் காலமே போரையும் உருவாக்குகின்றது.காலம் மனதை விட உயர்ந்தது. எனவே அதை நான் வணங்குகின்றேன். காலத்தை விட பெரியது ஒன்று இருக்கின்றதா? ஆம், அதுதான் ஆத்மா. காலம் அனைத்தையும் நகர்த்துகின்றது, ஆனால் நீங்கள் காலத்தை நகர்த்த முடியும், அதுதான் ஆத்மாவின் சக்தி.

காலத்தை விட சிறந்தது ஒன்று உண்டா? ஆம் அதுதான் ஆத்மா. ஆத்மா காலத்தையும் நகர்த்தும், அது காலத்திற்கும் அப்பாற்பட்டது. உங்கள் மனதின் கீழ் நீங்கள் இருக்கும் வரையில் நீங்கள் காலத்தின் கட்டாயத்தில் உள்ளீர்கள். ஆனால் நீங்கள் உங்களது ஆத்மாவை அறியும் போது ஐம்பூதங்களுக்கும் அப்பாற்பட்டு காலத்தையே நகர்த்துகின்றீர்கள். நான் கூறிய இந்த சில சொற்களை நீங்கள் ஆழ்ந்து அறிந்தால், அவை உங்களுக்கு மேலும் அர்த்தமுள்ளதாகும்.ஞானத்தில் ஆழ்ந்து வசித்தால்,அது உழ்மூழ்கி, அனுபவமாகும்.மேலும் அதிகப் பொருட்பயனை தரும்.

எனவே, காலம் அனைத்தையும் நகர்த்துகின்றது, ஆனால் நீங்கள் காலத்தை நகர்த்த முடியும். அதுதான் ஆத்ம சக்திஅது சுதந்திரமாக கிடைக்கும் தான், ஆயினும் அணுக முடியாதது. எப்போது மனதிலிருந்து விடுபடுகின்றோமோ அப்போது தான் அதை அணுக முடியும்.

ஆகவே # 2015 என்பது: ஒரு நாளுக்கு இரு முறை (2 ) வெறுமையடையுங்கள் (0) ஒன்றாவதற்கு (1)  ஐந்திற்கு அப்பாற்பட்ட ஒன்றுடன் (5). மிக நன்றாக இருக்கின்றதல்லவா? இந்தப் புத்தாண்டில், நாம் அனைவரும் நம்மில் நம்பிக்கையை உருவாக்குவோம். நல்லது மட்டுமே எனக்கு நடக்கும் என்னும் நம்பிக்கை.மேலும் உலகெங்கும் நல்லதே நடக்கும் என்னும் இந்த நம்பிக்கையை சமுதாயத்தில் ஏற்படுத்துவோம்.நல்லதே நடக்கும் என்னும் நம்பிக்கையை மக்கள் சமுதாயத்தில் இழக்கும்போதுதான் அவர்களது மனவலிமை குறைகின்றது. ஆனால் நல்லதே நடக்கும் என்னும் நம்பிக்கை சமுதாயத்தில் இருந்தால், மக்களின் மனவலிமை மேலே உயரும். நல்லவை மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் உங்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆகவே இந்த இரண்டு பரிமாணங்களையும் 2015 ஆம் ஆண்டு நம் வாழ்வில் உயிர்ப்பிப்போம். இது உங்களது புத்தாண்டு  தீர்மானமாக இருக்கட்டும்:  உங்களுக்குள்ளும், சமுதாயத்திலும், உலகெங்கிலும் நம்பிக்கையை உருவாக்குதல்

உறவுகளின் முறிவு மிக்க வேதனையை அளித்திருந்தால்,அதற்கு காரணம் அவ்வுறவுகள் மிக்க இன்பத்தினை தந்திருக்கும். அடங்காத ஆசையே அதிக வேதனையை அளித்து, தற்போதுள்ள உணர்ச்சிக்குவியலுக்குள் விட்டு வைத்திருக்கின்றது. தவறு செய்பவர்கள் உயரும் போது நீங்கள் உங்களது தைரியம்,நிர்ணயம்,அறநெறி, இவற்றை இழக்கின்றீர்கள். உங்களது பிடிப்பினை இழந்து, ஒடிந்து விடுகின்றீர்கள்.அப்போது தான், அவர்கள் உயர்வது கீழே வீழ்வதற்காகவே  என்று நீங்கள்  நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். தீய சக்திகள் வீழ்ந்தே ஆகவேண்டும், அதுவே அவர்களது இறுதியான இலக்கு. ஆனால் வீழ்வதற்கும் சற்றே உயர வேண்டும்,அப்போது தான் உண்மையில் வீழ்ந்து உடைய முடியும். ஆகவே அவர்கள் உயர்ந்து பெரிதாக கீழே வீழ்ந்து விடுகின்றார்கள்.   இந்த உண்மையை நீங்கள் அறிந்து கொண்டால், எதுவுமே உங்களை அசைக்க முடியாது. எந்த நிகழ்வும் உங்களைப் பாதிக்காது, எந்த அதிர்ச்சியும் அணுகாது, எந்த மனமுறிவும் ஏற்படாது. உங்களுடைய மனஉறுதி இந்த நம்பிக்கையினால் வலுப்பெறும்.

ஒவ்வொரு நிகழ்வும்,சில அறிவு செய்திகளையும், உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். பெரும்பாலும், நிகழ்வுகள் உணர்ச்சிகளுடன் கூடிய  சில படிப்பினைகளை கற்பிக்கும். ஆனால் சாதரணமாக நாம் என்ன செய்கின்றோம்? நிகழ்வுகளிலிருந்து படிப்பினைகளை ஏற்காமல், உணர்ச்சிகளை மட்டுமே மேலெடுத்துச் செல்கின்றோம். அந்த உணர்ச்சிகளே நம்மை ஒரு தழும்பு அல்லது ஏக்கமாக முற்றுகை இட்டுக் கொண்டிருக்கின்றன. உண்மையறிவு கற்றுக் கொள்ளப்படாமல் உணர்ச்சிக் குவியலே மிஞ்சுகின்றது. நேர்மறையாயினும், எதிர்மறையாயினும் தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் அது உங்களை தொல்லைப்படுத்த போகின்றது. மகிழ்ச்சிகரமான அனுபவத்திற்கு  வலுவான ஏங்கினால், தற்போது அதிக வலி இருக்கும். ஏனெனில் மகிழ்ச்சிகரமான அனுபவம் தீவிரமான ஏக்கத்தை உங்களுக்குள் உருவாக்கி ஒரு பெரிய குழப்பத்தில் வைத்திருக்கும். நான் கூறுவது தெளிவாக இருக்கிறதா?

அறிவாளி என்ன செய்வான்? படிப்பினையை அறிந்து, கடந்த கால உணர்ச்சிகளை விட்டு விலகி விடுவான். கோபம், ஏமாற்றம் வெறுப்பு இவற்றை விடுத்து, படிப்பினையை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை யாராவது ஏமாற்றினால்,அந்த அனுபவத்திலிருந்து  படிப்பினையை எடுத்துக் கொள்ளுங்கள். ஏமாற்றும் போது என்ன செய்தீர்கள்,ஏமாற்ற அனுமதித்து எவ்வாறு புத்தியின்றி இருந்தீர்கள் என்பது போன்ற படிப்பினையை அறியுங்கள், கோபம், ஏமாற்றம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றை பிறர் மீது எடுத்துச் செல்ல வேண்டாம்.

படிப்பினையை விடுத்து உணர்ச்சிகளை மட்டுமே எடுத்துச் செல்வது புத்திசாலித்தனமல்ல. உணர்ச்சிகளை விடுத்து, படிப்பினையை எடுத்துச் செல்வதே நிகழ்வுகளால் பாதிக்கப்படாமல், களங்கப்படாமல், போலியற்ற புன்னகையுடன் உங்களை வாழச் செய்யும். உங்கள் உற்சாகத்தை உயர்வாகவே வைத்திருங்கள். இப்போதே!இப்போதே!!(நிகழும் தருணத்தில் என்னும் பொருள்பட விரல்களைச் சொடுக்கி) வாழ்க்கை என்பது இனிமையான இனிமையற்ற விஷயங்களைக் கொண்டது, நீங்கள் விரும்புபவை விரும்பாதவைகளைக் கொண்டது,  இவைகளின் கலவையே வாழ்க்கை.

புத்தாண்டு தினத்தன்று  உணவு மேஜையில் குழந்தை இனிப்பு பழவகையையே மட்டுமே உண்ண விரும்பும். இல்லை, சூப், சாலட் பிற உணவு வகைகளையும் உண்ண வேண்டும். ஒரு தாய்க்கு சமச்சீர் உணவினை எவ்வாறு குழந்தைக்குத் தர வேண்டும் என்பது தெரியும். குழந்தைக்கு இனிப்பு பழவகை மட்டுமே விருப்பம் என்பதால் அதை மட்டுமே ஊட்ட மாட்டாள், அவ்வாறு செய்தால் அவள் சிறந்த தாய் அல்ல. அது போன்றே இயற்கை சூப்,சாலட், நூடுல்ஸ், புளிப்பு, காரம், இனிப்பு அனைத்தையும் தருகின்றது.(சிரிப்பு) இயற்கை பல்சுவை உணவினை அளிக்கின்றது. அறிவாளி அனைத்தையும் மகழ்வுடன் ஏற்றுக் கொள்வான். நீங்கள் ஆலிவ்வை சுவைப்பீர்கள், அதையே ஒரு குழந்தைக்குக் கொடுத்தால் அது துப்பி விடும்.எனவே, காலப் போக்கில் பல்வேறு சுவையினை ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்கின்றோம். 

வாழ்க்கையில் அளிக்கப்பட்டுள்ள சமச்சீர் உணவினை பாராட்டி ஏற்றுக் கொள்வதற்குரிய தருணம் வந்து விட்டது. பல்வேறு தினுசுகள் தட்டில் உள்ளன. அவற்றை அனுபவியுங்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய தட்டு உணவு உங்களுக்கு அளிக்கப்படுகின்றது. எனவே கெட்டுப் போன பழைய உணவினை உண்ணாதீர்கள். உங்களுடைய புதிய காலண்டரில் பழைய தேதிகளை நிரப்பாதீர்கள். 31 செவ்வாய்கிழமை என்று இருக்கும் பழைய காலண்டரையே வைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த ஆண்டு அது புதன்கிழமை.


புத்தாண்டு வியாழக்கிழமையில் துவங்குகின்றது.ஹிந்தியில் வியாழக்கிழமை குருவார் என்று அழைக்கப்படுகின்றது. அதாவது குருவின் தினம். இப்புதிய ஆண்டு ஞானம் தரும் ஆண்டு.வியாழன் துவங்கும் இந்த ஆண்டில் பழைய காலண்டரை வைத்துக் கொள்ளாதீர்கள். அது சரியாகாது. உங்களை புதுப்பித்துக் கொண்டே இருங்கள். காலத்துடன் பொருத்திக் கொள்ளுங்கள், காலத்தினைப் பிடியுங்கள், காலத்தினை நகர்த்துங்கள்.எவ்வாறு  பொருத்திக் கொள்வீர்கள், எதைப் பிடித்துக் கொள்வீர்கள் எதை நகர்த்துவீர்கள் என்பதை உங்களுக்கே விட்டு விடுகின்றேன்.(சிரிப்பு) சிந்தியுங்கள்!!