உங்கள் மகிழ்ச்சி உங்கள் பொறுப்பு

வெள்ளிக்கிழமை,12 டிசம்பர் 2014,

பெங்களூரு, இந்தியா

மனித உடலின் மையப் பகுதி, சூரிய பின்னல் அமைப்பு போன்ற நரம்புகள் ஆகும். அதுவே புவியீர்ப்பு மையமும் ஆகும். யோகிகளின் உடலில் இத்தகைய சூரியப் பின்னல் மிகப் பெரியது. தியானம் செய்யாதவரின் உடலில் இது ஒரு சிறிய நெல்லிக்காயின் அளவு சிறியதாக இருக்கும். ஆனால் முறையாக தியானம் செய்தால் அதன் அளவு பெரிதாகிக் கொண்டே வந்து ஒரு முழு நிலவின் அளவில் இருக்கும். நமது அத்தனை உணர்ச்சிகளும் இந்த சூரியப் பின்னலிலேயே சேமிக்கப்பட்டிருக்கும். இந்தப் புள்ளியிலிருந்தே உங்களது உணர்வுத் தோன்றல்கள் எழும். விஞ்ஞானிகளும் இந்தக் கருத்தையே கூறுகின்றார்கள்.

நமது முன்னோர்கள் இந்த சூரியப் பின்னலுக்கு பத்மநாபா என்று பெயரிட்டிருந்தனர். அதாவது, இந்த சூரியப் பின்னல் முற்றிலும் மலர்ந்த தாமரையை போன்றது என்னும் பொருள் ஆகும். விஷ்ணு பகவானின் உருவத்தை பார்த்தீர்களானால் அவரது தொப்புளிலிருந்து மலர்ந்து எழும் தாமரையிலிருந்து பிரம்மன் உதயமாவதைக் காண்பீர்கள்.

இது எதைக் குறிக்கின்றது? விஷ்ணு பகவான் யோகா நித்திரையில் இருப்பதையும்,அப்போது மலர்ந்து எழும் தாமரையிலிருந்து உதயமாவது பிரம்மா என்றும் குறிக்கின்றது.

எத்தனை பேர் இதைக் கேள்விப் பட்டிருக்கின்றீர்கள்? (பலர் கை உயர்த்துகின்றனர்) இதன் ரகசியம் என்னவென்றால், யோகநித்திரையில் இருக்கும் போது, உங்களது நாபி பகுதி (தொப்புள் பகுதி ) மலர்ந்து, ஏராளமான படைப்பு திறனை ஏற்படுத்துகின்றது. விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்களோ அதை நமது அறிவுமிக்க முன்னோர்கள் பல அழகான அடையாள கதைகளுடன் ஏற்கனவே கூறிவிட்டனர். சாதரணமாக மக்கள், ஏதேனும் ஒன்று உருவாக்கப்பட்ட பின்னரே அதை வளர்த்து, பராமரிக்க முடியும் என்று கருதுகின்றனர்.ஆனால் இந்தக் கதையில்,போஷித்து வளர்க்கும் விஷ்ணு, படைக்கும் பிரம்மா எழும் முன்னரே தோன்றிவிட்டதாகக் கூறப்படுகின்றது. ஒன்று உருவாதற்கு முன்னரே பராமரிக்கும் துறை தோன்றிவிட்டது! இது உச்ச வினையின் அடையாளம். படைப்பு உண்மையில் பின்னரே ஏற்பட்டது.

நமது முன்னோர்களும் ரிஷிகளும் மிகச் சிறந்த அறிவாளிகளாக இருந்திருக்கின்றனர். இன்று மக்கள் இத்தகைய கதைகளை கேட்டு அவற்றில் மறைந்திருக்கும் அடையாளங்களை அறியும் போது அவற்றின் ஆழத்திலும் அழகிலும் மிகவும் வசீகரிக்கப்படுகின்றனர்." காலம்காலமாக இந்நாட்டில் மிகுந்த அறிவும், திறனும் இருந்திருக்கின்றன" என்றே எண்ணுகின்றனர். " தன்னைப் பராமரிப்பவரிடமிருந்தே படைப்பு தோன்றியது" என்று அடையாளபூர்வமாக கூறியிருக்கின்றனர். 

குருதேவ், உணர்வுபூர்வமாக தவறாக நடந்து கொள்பவர்களை எவ்வாறு கையாள்வது?

உடல் ரீதியாக தவறாக நடந்தால், நீங்கள் அவர்களிடமிருந்து விலகி இருக்கலாம். உணர்ச்சி ரீதியாக என்றால், அப்போது அது உங்கள் முழுப் பொறுப்பாகி விடுகின்றது.அனுமதியின்றி யாரும் உங்களை உணர்ச்சி பூர்வமாகக் கையாள முடியாது.மகிழ்ச்சியின்றி இருக்க வேண்டாம் என்று நீங்கள் எண்ணினால், யாரும் உங்களை மகிழ்ச்சியின்றி ஆக்க முடியாது. என்ன நடந்தாலும் சரி, என்னுடைய மனநிலையையும் உற்சாகத்தையும் உயரே வைத்து புன்முறுவலுடனேயே இருப்பேன், என்னவானாலும் சரி,  பிறருடைய தந்திர உபாயங்களில் சிக்கிக் கொள்ளமாட்டேன் என்று நீங்களே முடிவு செய்யுங்கள். அவ்வளவுதான். இதிலிருந்து வெளியேற ஒரே ஒரு சங்கல்பம் போதும்.

குருதேவ், நிபந்தனைகள் நிறைந்த இவ்வுலகில் நிபந்தனையின்றி எவ்வாறு அன்பு செலுத்துவது  ?

அன்பு செலுத்த முயற்சிக்காதீர்கள். அன்பு என்பதை வற்புறுத்தி செலுத்தமுடியாது. அது இயலாத செயல்.தளர்வாக விட்டு இயல்பாக இருங்கள். இந்த உலகத்தில் வரையறைகள் உண்டு என்று தெரிந்து கொள்ளுங்கள். மக்களுக்கு வரையறைகளும் விருப்பு வெறுப்புக்களும் உண்டு. எல்லா விதமான மக்களுடனும் வாழ்ந்தாக வேண்டும். வாழும் கலையில் அது ஒரு முக்கியக் கோட்பாடு: மக்களையும் சந்தர்ப்பங்களையும் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே ஏற்றுக் கொள்ளுங்கள்.

மக்களுடைய எண்ணங்களும்,அபிப்பிராயங்களும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன. நண்பர்கள் எதிரிகளாகவும், எதிரிகள் நண்பர்களாகவும் மாறுகின்றனர். ஒருவருடன் நட்பாக இருக்கின்றீர்கள், திடீரென்று எந்தக் காரணமும் இன்றி அவர் உங்களுக்கு எதிரியாகி விடுகின்றார். யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத போதிலும், உங்களுக்கெதிராக மாறி விடுகின்றனர். சில சமயங்களில் கொஞ்சம் கூட தெரியாத யாரோ உங்களுக்கு உதவுவார்கள். எதுவும் பெரிதாக அவர்களுக்கு நீங்கள் செய்யாத போதிலும் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.அதே சமயம், யாருக்கு மிகவும் உதவி செய்து கவனித்தீர்களோ அவர்கள் எதிரியாகி விடுவார்கள். இவ்வாறு உங்களுக்கு நிகழ்ந்திருக்கின்றதல்லவா? (பலர் கை உயர்த்துகின்றனர்)

நட்பும் பகைமையும் கர்மா என்னும் ஆழ்ந்த தத்துவத்தில் வேலை செய்கின்றன. உங்கள் காலம் நன்றாக இருந்தால், உங்கள் எதிரிகள் கூட நண்பர்களாவர். உங்கள் காலம் சரியில்லையென்றால், நெருங்கிய நண்பர்கள் கூட உங்களைத் தவறாக புரிந்து கொண்டு எதிரிகள் போன்று நடந்து கொள்வர். ஒரு பரந்த  கண்ணோட்டத்தில், இதைப் பார்த்தால், உள்மன பலம் உங்களுக்குள் மலர்ந்து, எந்த சந்தர்ப்பத்திலும் புன்முறுவலுடன் இருப்பீர்கள்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், வெளிநாடுகளில் யோகா மற்றும் தியான வகுப்புக்களை நடத்தும் போது அவற்றை மக்கள் அதிகமாக மதிக்கவில்லை. இந்தப் பயிற்சிகளை செய்பவர்கள் பைத்தியக் காரர்கள் என்றே கருதினர். உடலெங்கும் விபூதியுடன் ஒரு காலில் நிற்பது, சிரசாசனம் செய்வது போன்றவையெல்லாம் இயல்புக்கு மாறாகவே அவர்களுக்குத் தோன்றின. அவ்வளவு வெறுப்பு இருந்தது. யோகா என்பது சாதாரண மனிதனுக்கு உகந்தது அல்ல சமுதாயத்தில் கௌரவமானவர்கள் யோகா செய்ய மாட்டார்கள் என்றே கருதப்பட்டது. அக்காலத்தில் யோகா பொது மக்களிடையேயும், அரசுகளிடமும் அங்கீகாரத்தைப் பெறவில்லை. 

நாட்டு மக்களின் மற்றும் அரசின் அங்கீகாரம் இன்றி எந்த சமய, அல்லது ஆன்மீகப் பாரம்பரியமும் நீண்ட நாள் பிழைத்திருக்க முடியாது. பல ஆண்டுகள் கிறுக்குகளே யோகா செய்வார்கள் என்று மக்கள் எண்ணியிருந்தார்கள். யோகா மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளை பற்றிய பயமும் மக்களிடையே இருந்தது. இத்தகைய எண்ணப் போக்கினை கவிழ்ப்பதற்கு பல ஆண்டுகள் ஆயின. நமது ஆசிரியர்கள் இடம்விட்டு இடம் சென்று யோகா மற்றும் தியானம் பற்றிய செய்தியினை பரப்பினர். உலகெங்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இதற்காக பணிபுரிந்தனர்.

சுவாமி பரமஹம்ச யோகானந்தாஜி அக்காலத்தில் தியானம் மற்றும் ஆன்மீகப் பயிற்சிப் போக்கினை துவக்கினார். அவருக்குப் பின்னர் மகரிஷி மகேஷ் யோகிஜி ஆன்மீக வளர்ச்சிக்கு மகத்தான பங்களித்தார். மேல்நாடுகளில் மிகப் பிரபலமாக இருந்த ஹிப்பி அலையினால்  போதைப் பொருட்களுக்கு அடிமையாயிருந்த மக்களைக் காக்கப் பெரும் பூர்வாங்க பணியினை செய்தார். சிறிது சிறிதாக மேலும் மேலும் மக்களை ஊக்குவித்து, யோகா மற்றும் தியானம் மூலம் நிவாரணமும், மகிழ்ச்சியும் அடைய வழிசெய்தார். ஆனால் அவர் காற்றில் (யோக ஆற்றல் மூலம்) மிதக்கச் செய்தல் போன்றவற்றைப் பேசத் துவங்கியதும் மக்கள் பயந்து இப்பயிற்சிகளிருந்து எச்சரிக்கையாக பின்வாங்கினர். பின்னர் 1980களில் மக்களின் மனநிலை மீண்டும் மாறி, யோகாவில் விருப்பம் கொண்டனர். இக்காலகட்டத்தில் பல யோகப்பயிற்சி நிலையங்கள் தோன்றின. எனவே காலப் போக்கில் மனப்பாங்கு மாறத் துவங்கியது.

இன்றுள்ள நடப்பு முற்றிலும் வேறானது, 152 நாடுகளில் மக்கள் தீவிரமாக யோகா மற்றும் தியானப் பயிற்சி செய்து வருகின்றனர். கூடுதலான மக்கள் இப்பயிற்சிகள் மூலம் மகிழ்ச்சி காண்கின்றனர். இன்று அனைத்துப் பெரிய விளம்பரங்களிலும் யாரோ ஒருவர் யோகாசனத்திலோ அல்லது கண் மூடித் தியானத்திலோ அமர்ந்திருப்பதைக் காண்பீர்கள். மக்களின் அபிப்பிராயங்கள் மாறி விட்டன. முந்தைய நாட்களில் யோகாவும் தியானமும் சாதாரண மனிதனுக்கு உகந்தது அல்ல என்ற எண்ணம் நிலவி வந்தது. அதனாலேயே இந்த அறக்கட்டளைக்கு வாழும் கலை என்று பெயரிட்டேன். அது ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தது. யோகா பயிற்சி என்று எங்களால் கூற முடியவில்லை. இங்கு வாழும் கலையின்  பயிற்சியில் யோகா ஒரு பகுதியே ஆகும். இந்த முழு செயல்முறையும் உங்களை நீங்கள் அறிந்து கொள்வதற்கு உருவாக்கப்பட்டதாகும். வெறும் யோகாவை விட இது இன்னும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.


தவறான அபிப்பிராயம் என்பது பெரிய பிரச்சினை. ஆனால் காலம் அதைக் கவனித்துக் கொள்ளும். அதனால் தான், நான் ஆசிரியர்களிடம் எப்போதுமே "கற்பித்தல் மற்றும் புறக்கணித்தல்" பற்றிக் கூறுவேன். ஒரு முக்கியமான முன்னேற்றம் என்னவென்றால், பிரதமர் ஸ்ரீ நரேந்தர மோடிஜி யோகாவை பிரபலப்படுத்த பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். முயற்சிகளினால், ஐக்கிய நாட்டு சபை ஆண்டிலேயே நீண்ட நாளான 21 ஜூன் சர்வ தேச யோகா தினம் என்று அறிவிக்கப்பட்டது. இது யோகாவிற்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய கௌரவம் என்று எண்ணுகின்றேன். ஆனால் இது மட்டும் போதாது. முக்கியமானது என்னவென்றால், ஒவ்வொரு நாட்டின் தலை வாசலையும்  யோகா அடைந்து, மேலும் மேலும் அதிக மக்கள் அதனால் பயன் பெறவேண்டும்.