மகிழ்ச்சியின் ரகசியம்


வியாழக்கிழமை, 4 டிசம்பர், 2014,

பெங்களூரு, இந்தியா


தங்களை போன்று எப்போதும் புன்முறுவலுடன் மகிழ்ச்சியாக இருப்பது நடைமுறையில் சாத்தியமா? தங்களது வர்த்தக ரகசியம் என்ன? ஒருநாளும் நான் தங்களுடன் போட்டியிட மாட்டேன் என்று உறுதி கூறுகின்றேன்.

போட்டி எனக்குத் தேவை! அனைவரும் போட்டியிட வேண்டும் என்றே விரும்புகின்றேன். உங்களுடைய உறுதிமொழி எனக்கு வேண்டவே வேண்டாம். உண்மையில் நீங்கள் என்னுடன் போட்டியிடுவேன் என்றே கூற வேண்டும்." சிஷ்யத் இச்சத் பராஜயம்"  ஒரு ஆசிரியர் தன்னுடைய மாணவனால் தோற்கபடவே விரும்புவார் என்று ஒரு முதுமொழி உண்டு. அதுவே ஆசிரியருக்கு பெருமை.

புன்முறுவலின் ரகசியம் என்ன?
1. உங்கள் பார்வையை விரிவு படுத்திக் கொள்ளுங்கள். அன்றாடம் நிகழும் அற்ப விஷயங்களுக்கு மேற்பட்டது வாழ்க்கை. இனிமையற்ற நிகழ்வுகள், அவை ஏற்படுத்தும் அசௌகர்யம் அல்லது வேதனை இவையே உங்களது புன்முறுவலை கொள்ளை அடிக்கின்றது. ஆனால், இன்ப துன்பங்கள், இனிமையான இனிமையற்ற நிகழ்வுகள் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது வாழ்க்கை என்று நீங்கள் அறிந்துணரும் போது உங்களுடைய முகத்திலிருந்து புன்முறுவல் மறைந்து போகாது.
2. ஒரு சக்தி உங்களுக்கு வழிகாட்டி, உங்களைக் கவனித்துக் கொள்ளும் என்று  நீங்கள் அறிந்தால், உங்கள் புன்முறுவல் மறைந்து போகாது.
3. வேறு எந்தத் தேவைகளையும் விட அதிகமாக உங்களது பங்களிப்புத் தேவைப்படும் மக்களுக்கு நீங்கள் கொடுக்கும் போது, அச்செயல் கடினமான தருணங்களை நீங்கள் கடக்க உங்களுக்குப் பலம் அளிக்கின்றது.

குருதேவ், மகிழ்ச்சியின் ரகசியம் என்ன?

ஆசைகளைத் துறந்து, எவ்வாறு பிறருக்கு உதவலாம் என்று கவனத்தைக் குவிப்பதே மகிழ்ச்சியின் ரகசியம். அதிகத் தொண்டு அதிக மகிழ்ச்சியை அளிக்கும்."எனக்கென்று எதுவும் தேவையில்லை, நான் திருப்தியுடன் இருக்கின்றேன்” என்னும் உணர்வே மகிழ்ச்சியினை அளிக்கும். மூன்றாவதாக மகிழ்ச்சியை அளிப்பது ஞானம்.ஞானமின்றி வாழ்வில் மகிழ்ச்சியில்லை.

ஒரு காலத்தில், பெண்கள் மிகுந்த சக்தியுடன் இருந்தனர், இயற்கை கூட அவர்கள் சொற்படி கேட்கும் என்று கூறியிருக்கின்றீர்கள். ஆனால் இப்போது அவ்வாறு இல்லை. என்ன மாற்றம்?

வரலாற்றாசிரியர்களைக் கேட்க வேண்டும். பெண்கள் ஒரு காலத்தில் தங்களுக்கு இருந்த அரிய  சக்தியை ஏன் இழந்து விட்டனர் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுவார்கள். ஆனால் இன்னும் மிகத் தாமதமாகி விட வில்லை. பெண்கள் வலிமையை வேண்டிக் கேட்கக் கூடாது. "எனக்கு அதிகாரம் வேண்டும்" என்று அவர்கள் கேட்கக் கூடாது. நான் அனைத்துப் பெண்களுக்கும் ஒன்றினைக் கூற விரும்புகின்றேன். "யாரோ ஒருவர் வந்து உங்களுக்கு அதிகாரத்தைக் கொடுப்பார்கள் என்று காத்திருக்காதீர்கள். உங்களிடமே சக்தி உள்ளது என்று உணர்ந்து செல்லுங்கள்” நேற்று நான் டெல்லியில் இருந்தபோது காஷ்மீரிலுள்ள பெண்களுக்கு தங்களுடைய சொந்த சொத்தின் மீதே அதிகாரம் கிடையாது என்பது பற்றிய விவாதம் நிகழ்ந்தது. ஒரு காஷ்மீரப் பெண் கொல்கத்தாவிலுள்ள ஒருவரை திருமணம் செய்து கொண்டாள். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. கணவன் இறந்த பிறகு அவள், காஷ்மீருக்குத் திரும்பிச் சென்றாள். அவளுக்கு சொத்து இருந்த போதிலும், சட்டம், அதனைத் தன்னுடைய பெண் குழந்தைகளுக்கு மாற்றித் தரமுடியாது என்று கூறுகின்றது.

நம் நாட்டில் இத்தகைய பாகுபாட்டினை ஏற்றுக் கொள்ளக்கூடாது. நான் பெண்களிடம், இதை நீதி மன்றத்தில் எடுத்துச் சென்று அறைகூவல் விடுங்கள் என்று கூறினேன். எவ்வாறு இரு குழந்தைகளையுடைய ஒரு விதவைத் தாய், தன்னுடைய சொத்தினை தனது மகள்களுக்கு அளிக்க மறுப்பு ஏற்பட முடியும்? அதை அரசிற்கு அளிக்க வேண்டுமாம்! கற்பனை கூட செய்ய முடியுமா என்ன? தன்னுடைய வீட்டையும் சொத்தினையும் மகள்களுக்கு தர முடியாது, அரசாங்கத்திற்கு தர வேண்டும்! எப்படி? காஷ்மீரிகளுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி அல்லவா இது?

காஷ்மீர் பற்றிய அனைத்து அரசியல் நிர்ணய நிபந்தனைகளையும் அறிந்த வல்லுனர்கள் என்னிடம் இந்த மாநிலம் ஜவஹர்லால் நேருவினால் ஏமாற்றப்பட்டது என்பதை புள்ளி விபரங்களுடன் விளக்கிக் கூறினார்கள். பாராளுமன்றத்தின் அனுமதியின்றி நேரு ஒரு சிறப்பு அந்தஸ்தை இம்மாநிலத்திற்கு அளித்திருக்கின்றார். சில சட்டங்கள் இப்பகுதிக்கு பொருந்தாது என்னும் விஷயமே நமக்குத் தெரியாது. நமது நாடு ஒன்றே என்னும் பட்சத்தில், ஒரே ஒரு கொடி, ஒரே ஒரு அரசியல் சட்டம், என்பதே பொருள் ஆகும். ஆனால் இது மிகவும் ரகசியமாகவே கையாளப்பட்டிருக்கின்றது. நம் நாட்டு அறிஞர்கள் அரசியல் சட்டத்தின் 370 வது நிபந்தனையினை நன்றாகப் படிக்க வேண்டும். அம்மாநில மக்களுக்கு அது அநீதியை இழைக்கின்றது.

இந்த ஒரு உதாரணத்தைப் பாருங்கள். ஒரு பெண்மணி தன்னுடைய மகள்களுக்கு சொத்தினைத் தர முடியாது. அவள் இறந்து விட்டால், அந்த இரண்டு பெண் குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியேறி எங்கு செல்வார்கள்? உங்களில் எத்தனை பேர் இது அநீதி என்று கருதுகின்றீர்கள்? (அனைவரும் கை உயர்த்துகின்றனர்) விவேகமுள்ள யாரும் இதனை சரியானது என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது போன்ற பல சட்டங்கள் மற்றும் அம்சங்கள் உள்ளன.

காஷ்மீரை விட ஜம்முவின் மக்கள் தொகை அதிகம். நமது அரசியல் சாசனத்தின்படி, காஷ்மீரில் 12000 பேருக்கு ஒரு சட்ட மன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் ஜம்முவில் அறுபதாயிரம் முதல் ஒரு லட்சம் பேருக்கு ஒரு சட்ட மன்ற உறுப்பினர். இது நியாயமா? எத்தனை பேர் இது நியாயம் இல்லை என்று கருதுகின்றீர்கள்? (அனைவரும் கை உயர்த்துகின்றனர்)எத்தனை பேருக்கு இந்த விஷயமே தெரியாது? (பலர் கை உயர்த்துகின்றனர்) இந்த சட்டத்தினை 2035 வரை மாற்றவும் முடியாது. பாரூக் அப்துல்லா மாநிலத்தில் தாங்கள் ஆதிக்கம் செய்யும் பொருட்டு, தனது சட்ட மன்றத்தில் இதை பாஸ் செய்து விட்டார். இதுவா மக்களாட்சி? இது பெரும் அநீதி.

லடாக்கில் 54000 சதுர மீட்டர்களில் உள்ள மக்களுக்கு ஒரு சட்ட மன்ற  உறுப்பினர் பிரதிநிதியாக இருக்கின்றார். ஏழு மாதங்களில் அவர் தனக்களிக்கப்பட்டிருக்கும் 54000 சதுர மீட்டர்களிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் வருகை கூட தர இயலாது. அவ்வளவு பெரிய பகுதிக்கு ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர்! இது முற்றிலும் நியாயமற்றது ஆகும். இவ்வாறு தான் சட்டங்கள் உருவாக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்லாமலேயே ஜனாதிபதியின் ஆணையும் பெறப் பட்டுள்ளது. இது சட்ட விரோதம் ஆகும். வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் அறைகூவல் விடுக்க வேண்டும். எல்லோருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்.

ஜம்மு காஷ்மீரிலுள்ள பல பெண்கள் தங்களுடைய வீடுகள் மற்றும் சொத்துக்களின் மீது உரிமை இழந்து இருக்கின்றனர். கேட்டால், சகோதரர்களுக்கு எதிராக சொத்துக்களை திருடுவதைப் போன்று பேசப் படுகின்றனர். இது தவறு. அனைத்துப் பெண்களும் இதனை எதிர்த்து இவர்களுக்கு நீதி வழங்க உதவ வேண்டும். எத்தனை பேர் இதை ஏற்றுக் கொள்கின்றீர்கள்? (அனைவரும் கை உயர்த்துகின்றனர்) ஒரு மகனைப் போன்றே மகளுக்கும் உரிமைகள் உண்டு. காஷ்மீரில் நடை பெற்று வரும் நிகழ்வுகள் நல்லதன்று. அத்தகைய இடங்களில் சட்டங்களை மாற்றுவது மிகவும் முக்கியமானது ஆகும்.

நான் பகுதி நேர குறி ஜோசியம்  பார்ப்பவன். சிலர் என்னை இதிலிருந்து விலகி விடுமாறு கூறுகின்றனர். அவர்கள் குறி என்பது கீழ்நிலை ஆன்மாக்களுடன்  நம்மை இணைக்கும் கருவி என்று கூறுகின்றனர். நான் இதைத் தொடரலாமா அல்லது விட்டு விடுவதா என்று தங்களைக் கேட்க விரும்புகின்றேன்.

என்னைக் கேட்பதானால், விட்டு விடுங்கள் என்றே கூறுவேன்.

திருமணமானவர்கள் எவ்வாறு பக்கச் சார்பற்று சாந்தமாக இருப்பது?

எப்போதெல்லாம் உங்கள் துணையுடன் சண்டை ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் சாந்தமாக இருங்கள். நீங்கள் விரும்பாதவை நடக்கும் போது சார்பற்று சாந்தமாக இருங்கள். சாந்தம் என்பது வாழ்வின் ஒரு பகுதி. சாந்தமின்றி வாழ்க்கை நகர்ந்து செல்லாது. சாந்தமின்றி வாழ்வில் மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படாது. சாந்தமற்று இருப்பவன், கடந்து போனவைகளையே எண்ணி இழுத்துக்கொண்டு அவற்றையே வருங்காலத்திற்கும் முனைப்புடன் எடுத்துச் செல்வான். ஆனால் சார்பற்று சாந்தமாக இருப்பவன், இவ்வாறு செய்ய மாட்டான் ஏனெனில், அவன்  எப்போதுமே நிகழும் தருணத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பான்.