ஆயுர்வேதம்: ஆரோக்கியம்

சனிக்கிழமை, 06 டிசம்பர் 2014 ,

பெங்களூர், இந்தியா



முறைப்படி இருப்பதை விட சாதாரணமான வழக்கத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்துவது தான், நமது பாரம்பரியம். சத்சங்கத்திலும் இப்படித் தான். சத்சங்கத்தில் எந்த ஒரு விதிமுறைகளை கடைபிடிக்க தேவையில்லை அனைவருடனும் சகஜமாக உட்கார்ந்து இருப்பது தான். 

ஆயுர்வேத பாரம்பரியத்தை இன்று நாம் மரியாதையுடனும், கௌரவத்துடனும் விழா எடுத்து கொண்டாடி வருகிறோம். மாட்டுவண்டி செல்வது போல் ஆயுர்வேதவும் சற்று முந்தைய காலம் வரை மிக மெதுவாகவே முன்னேறியது. ஆனால், தற்பொழுது நமது பிரதமமந்திரி அதற்கு முக்கியத்துவம் கொடுத்து உயர்த்துவதால், அது “ஜெட் பிளேன்” வேகத்தில் உள்ளது! (கூட்டத்தில் சிரிப்பு) உண்மையில் தகுதியுள்ள “ஆயுர்வேதா”வை (உயரிய விஞ்ஞானத்தை) மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியுள்ளார்.

இந்த செயல்பாடுகளில், நமது அன்பர் ஒருவர், அரசாங்கத்துடன் இணைந்து மிகுந்த நெருக்கத்துடன் செயலாற்றி வருகிறார். ஆயுர்வேதவின் வளர்ச்சியையும், பிரபலத்தையும் இனி நிறுத்த முடியாது என உறுதியாக நினைக்கிறேன். நமது நாட்டில் உண்மையிலேயே அதன் வளர்ச்சியும், பிரபலமும மிகுந்த வேகமான பாதையில் சென்று கொண்டுள்ளது, மற்றும் எல்லா இடங்களுக்கும், நிறைய மக்களை சென்று அடைய முடியும் என நினைக்கிறேன்.

யோகா, ஆயுர்வேதம் மற்றும் ஜோதிடம் அனைத்தும் நடைமுறைக்கான விஞ்ஞானம் தான். முந்தைய நாட்களில், தியான வகுப்புகள் நடத்தும் போது, அன்பர் ஒருவர் ஆயுர்வேத வகுப்புகளும் நடத்தவேண்டும் என வேண்டுவார். அந்த சமயங்களில், எனது நோக்கம் தியான வகுப்பு எடுப்பதில் தான் இருந்தது மற்றும் ஆயுர்வேத விசயத்தில் ஈடுபாடும் இல்லை. ஆனால், இன்று ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத கல்லூரி நமது நாட்டின் மிக உயர்ந்த தரத்துடன் இருப்பதை காணலாம்.விஞ்ஞானத்தில், நமது ஆயுர்வேத ஆசிரியர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கையை தான் இது காட்டுகிறது.

சீடன் ஞானத்தில் குருவை விட மிஞ்சி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு குருவும் ஆசைப்படுவார் என்று தென்னிந்தியாவில் சொல்வது வழக்கம். குரு ஞானத்தை சொல்லி கொடுத்து விட்டு,பிறகு அனைத்தையும் மறந்துவிடுவார். ஞானத்தையே கெட்டியாக பிடித்து கொண்டிருந்தால், பின் விடுதலை (மோட்சம்) அடைய முடியாது. மோட்சத்தை அடைய, கற்ற அனைத்தையும் சில காலங்களுக்கு பின் மறந்து விட வேண்டும். சீடன், ஒரு நாள் குருவையே மிஞ்சி அவரையே தோற்கடிக்கும் அளவிற்கு மிகப்பெரிய முன்னேற்றம் அடைவதையே குரு எப்பொழுதும் விரும்புகிறார். அதன் பிறகு, குருவின் வேலை முடிந்து விட்டது.

இன்று, நீங்கள் அனைவரும் இந்த கல்லூரியில் படித்து ஆயுர்வேத டாக்டர்களாக பட்டம் பெற்றுள்ளீர்கள். யாவரும் கடினமாக உழைத்து, உங்கள் ஆசிரியர்கள் பெருமையுடன் ஒருநாள் “எனது மாணவர்கள் மிகுந்த திறமையுள்ளவர்களாக, என்னை மிஞ்சியவர்களாக இருக்கிறார்கள்” என்று சொல்லவேண்டும். அதை விடுத்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் வந்து எதையும் கற்றுக் கொள்ளாமலும், ஆசிரியர்கள் எதையும் மறக்காமலும் இருந்தால், ஆசிரியர்கள் அவரது பணியை சரிவர செய்யவில்லை என்றாகி விடும்.

மாணவர்களும் 100% மதிப்பெண்கள் பெற்று, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள். இந்த மிகப்பெரிய செயலுக்கு உண்டான பெருமை நமது ஆசிரியர்களையே சாரும். மாணவர்கள் ஞானத்தை அடைய வேட்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். நமது திறமைகளையும், ஞானத்தை பெறக்கூடிய திறனையும் தியானத்தின் மூலம் வளர்த்துக் கொள்ளலாம். இந்த மாதிரியான நல்ல வாழ்க்கையை நடத்தும் பொழுது, நாம் நமக்கும், நம்மை சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் பயனுள்ளவர்களாக இருக்க முடியும். வாழ்க்கையில் ஞானத்தில் திடமாக இருக்கும் போது நமக்கும், சுற்றியுள்ளவர்களுக்கும் உபயோகமுள்ளதாக இருக்கும். இந்த நிகழ்ச்சியை இன்று கொண்டாட,  மாணவர்கள் நிறைய விளக்குகளை இங்கு ஏற்றியுள்ளார்கள். ஆரோக்கியம் மற்றும் ஞானம் எனும் விளக்கை நாம் ஒவ்வொரு வீட்டிலும் ஏற்ற வேண்டும். நமது புனிதமான கடமை மற்றும் பொறுப்பு. 

ஆரோக்கியமான உடல் மட்டுமே முழு ஆரோக்கியம், நல்வாழ்வுக்கான அடையாளமல்ல. மாறாத புன்னகை ஒருவரிடத்தில் இருந்தால் அதுவே உண்மையான ஆரோக்கியத்துடன் இருப்பதாக அர்த்தம். முகத்தில் சிரிப்பு, மனதில் அன்பு மற்றும் உடலில் உறுதியும், தெம்பும் இருந்தால், அவனே ஆரோக்கியமான மனிதன். இந்த நிலைக்கு வர மருந்து மட்டுமே உதவாது. ஆன்மீக பயிற்சியிலும் ஈடுபட வேண்டும்.

ஒருவருக்கு நல்ல நடத்தையும், சேவை செய்ய சுய ஆர்வமும், ஞானத்துடன் சேர்ந்து இருக்க வேண்டும். தன்னலமற்ற சேவை செய்யபவர்களாக ஆயுர்வேத மருத்துவர்கள் இருக்கும் போது, அவர்கள் மிகப்பெரிய குணப்படுத்த கூடியவர்களாக ஆகிவிடுகிறார்கள். நமது வைத்தியர் ஒருவர் ஒவ்வொரு நாளும் பின் தங்கிய கிராமங்களுக்கு சென்று, வைத்தியம் தேவையான மக்களுக்கு சேவை செய்து வருகிறார். எந்த மாதிரியான சூழ்நிலையிலும்,எந்த  தட்பவெப்ப நிலையிலும் அவர் கிராமங்களுக்கு சென்று மக்களை  சந்தித்து சேவை செய்வதில் எப்பொழுதும் உறுதியாக இருக்கிறார். இது தான் அவரது அர்ப்பணிப்பு.

“ஆயுர்வேதா” வின் முன்னேற்றத்திற்காக சோம்பலின்றி உழைக்கும் ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத கல்லூரி நிர்வாகத்திற்கு, ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களை மறுபடியும் தெரிவித்து கொள்கிறேன். உலகமே நம்மை சார்ந்து இருப்பதால், இது போல் இந்த வேலையை நமது உற்சாகமான, துடிப்பான செயலை தொடர வேண்டுகிறேன். யாரும் நமக்கு அன்னியர்கள் அல்ல. ஒருத்தரை ஒருத்தர் பரஸ்பர ஒற்றுமையுடன் மற்றும் அமைதியான சூழ்நிலையில், அன்புடன் எங்கும் வாழ்ந்தால் ஒழிய, நமது வேலை முடியாது.

“ஆயுர்வேதா”வின் தேவையை பிரபலப்படுத்த அன்பர் “ஸ்ரீபாத் ஜி”யை பிரதமர் தேர்ந்து எடுத்துள்ளார் என அறியும் போது மகிழ்ச்சியாக உள்ளது.அவர் செய்யும் செயலை முழு ஈடுபாடுடனும், எந்த சூழநிலையிலும் எப்பொழுதும் அவர் புன்னகையுடன் இருப்பதை நான் காண்கிறேன். அவரது வேலைகள் மிக விரைவாக தொடர்ந்து நடக்கவும், அவரது பணியில் மிகப்பெரிய வெற்றி பெற, கடவுள் அருள் புரிய வேண்டி, அவரை வாழ்த்துகிறேன்.