அன்பு தான் பதில்

சனிக்கிழமை 13 டிசம்பர் 2014

பெங்களூர் – இந்தியா


கேள்வி பதில்கள்

பாச பந்தத்திலிருந்து விடுபடுவது எப்படி?

ஏன் பாச பந்தத்திலிருந்து விடுபட விரும்புகிறாய்? ஏனென்றால் உனக்கு வலியை கொடுக்கிறது. அது உனக்கு வலியைக் கொடுக்காத போது அதிலிருந்து விடுபட விரும்பமாட்டாய். பாசபந்தம் உனக்கு வலியைக் கொடுக்கக் காரணம் அதோடு அஞ்ஞானமும் இணைந்திருக்கிறது. பாச பந்தத்திலிருந்து விடுபட முயலாதே. அதைக் கைவிட்டு நடுநிலையிலிருக்கக் கற்றுக் கொள். இப் படைப்பில் உன் வாழ்வை பற்றிய அறிவை விரிவாக்கிக் கொள். அப்படிச் செய்யும்போது பாசபந்தத்திலிருந்து விடுபட முயற்சிக்க தேவையில்லை. தானாகவே விலகி விடும். உங்களில் எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட அனுபவம் வந்திருக்கிறது? எத்தனை பேருக்கு க்ஷண நேரத்தில் பந்தத்திலிருந்து விடுபட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறது? கைகளை உயர்த்துங்கள். பார்வையாளரில் பலர் கைகளை உயர்த்துகிறார்கள்.) சிறு குழந்தைகளுக்கு பஞ்சு மிட்டாய் மிகவும் பிடிக்கும். இனிப்பை குழந்தைகளுக்கு முன் வைத்தால், உடனே அதை எடுத்துத் தின்ன விரும்புவார்கள். ஆனால் வளர வளர உங்களுக்கு இனிப்பு மற்றும் விளையாட்டுப் பொருள்களில் இருந்த மோகம் (ஏக்கம்) தானாகவே விலகி விடுகிறது. இந்த ஏக்கத்திலிருந்து விடுபட எந்த முயற்சியும் தேவையாக இருக்க வில்லை. பாசபந்தத்திலிருந்து விடுபடுவது இயல்பாக நடக்கும் நிகழ்வாகும்.

ஞானத்தில் முதிர்ச்சி அடைந்து நீ மலரும் போது, உனக்குள் ஒரு விரிவு உதயமாக துவங்குகிறது. அப்போது வாழ்க்கையில் சின்னச் சின்ன (தேவையற்ற) விஷயங்களில் நீ சிக்கிக் கொள்ள மாட்டாய். இல்லாவிட்டால், யாராவது உன்னை சரியாக நடத்தாமல் அவமானத்துக்கு ஆளாக்கும் போது, நீ காயப்பட்டு நீண்ட நாட்கள், மாதக்கணக்கில், உன் இதயத்தில் காழ்ப்புணர்ச்சியோடு இருப்பாய். உனக்குள் “அந்த மனிதர் என்னைத் தவறாக நடத்தியதை, அவமானப்படுத்தியதை எப்போதும் மறக்க மாட்டேன்” என்று சொல்லிக் கொள்வாய். அப்படிப்பட்ட சிந்தனையோடு, உனக்கு நீயே ஏன் தீங்கு விளைவிக்க நினைக்கிறாய்? இப்படி நாம் பலமுறை நடந்து கொள்கிறோம். மனதில் காழ்ப்புணர்ச்சியோடு இருப்பது பெருமை என்று கர்வம் கொள்கிறோம். இது முட்டாள் தனம்.

மக்கள் பலவிதமாகப் பேசுவதை, பல்வேறு விதமான நடத்தை உள்ளவர்களாக, வேறு வழிகளில் காரியம் செய்வதை, தங்கள் உணர்ச்சிகளை பல வழிகளில் வெளிப்படுத்துவதை நீ கவனிக்க வேண்டும். அதனால் அவர்கள் இதயத்தில் அன்பு இல்லை என்று நினைக்க வேண்டாம். அப்படி அல்லவே அல்ல. அவர்களுடைய அன்பை நீ பார்க்க முடிவதில்லை அல்லது சரியான முறையில் அன்பை வெளிப்படுத்த அவர்களுக்குத் தெரியவில்லை.அவர்களுடைய கண்ணோட்டத்தில் பார். மாமியார் மருமகள் எவ்வளவு சண்டை போட்டாலும் அவர்களுடைய சண்டை முடிந்து விடும். எல்லாவற்றையும் ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார். சில வாரங்களுக்கு முன் ஒரு இளம்பெண் அவளுடைய குடும்ப பிரச்சினை பற்றிப் பேச வந்தாள். அவள் என்னிடம் “ குருதேவா ! என் மாமியார் என்னிடம் மிகக் கடுமையாக நடக்கிறார். அடிக்கடி கோபித்துக் கொள்கிறார்” என்று சொன்னாள். அவளிடம் “ ஏன் அப்படி நடக்கிறது?” என்று கேட்டேன். 

அதற்கு அந்தப் பெண் “ அவர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் எது செய்தாலும் அதில் குற்றம் கண்டு பிடிக்க முயற்சிக்கிறார் “ என்று சொன்னாள். நான் அதைக் கேட்டு, “ சொல் ! உன் தாய் உன்னிடம் அப்படி நடந்து கொண்டதில்லையா? “ என்று கேட்டேன்.அவள் பதில் சொன்னாள். ஆமாம் குருதேவா ! அவளும் (அந்தப் பெண்ணின் தாய்) அப்படி நடந்து கொண்டதுண்டு. பல முறை சிறு விஷயங்களுக்காக சண்டை போட்டிருக்கிறேன்.
உன் தாயோடு சண்டை போடும் போது அது உன் இதயத்திலிருந்து வருவதில்லை. எத்தனை நாள் சண்டை போட்டாலும், அடுத்த நாள் சமாதானமாகி விடுகிறாய். அவளிடம் அன்போடு நடந்து கொள்கிறாய். இல்லையா? உன் மாமியாருக்கும் உன் தாயின் வயதாகிறது. அவள் உன்னிடம் ஏதாவது சொன்னால், நீ ஏன் காயப் படுவதுபோல் உணர்கிறாய்? அந்தப் பெண் இதைக் கேட்டு, “குருதேவா! எப்போதும் நான் இப்படி நினைத்ததில்லை“ என்று சொன்னாள். எனவே உன் எண்ணப் போக்கில் சிறிது மாற்றம் ஏற்படுத்திக் கொள். சின்ன விஷயங்களை மறந்து வாழ்க்கை நடத்து.
“ ஓ ! அவள் என்னிடம் மோசமான வார்த்தைகளை சொன்னாள். என்னை சரியாக நடத்தவில்லை “ என்று நினைத்து சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்தி சிக்கிக் கொள்ளாதே.

பார் யாராவது உன்னை மோசமாக நடத்தி, உன் மனதை காயப்படுத்தினால், அவர்கள் மன உளைச்சலோடு இருக்கிறார்கள். அறியாமல் அப்படிச் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள். அவர்களுக்குள் இருக்கும் காயத்தினால் நீ ஏன் காயப்படுகிறாய்? மனதை விரிவாக்கி, பரந்த கண்ணோட்டத்தில் எல்லாவற்றையும் பார். எல்லோரையும் அன்பால் வெல்ல முடியும். எந்த சூழ்நிலையையும் அன்போடு ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை நீ அறிவாய். இவ்வுலகில், வாழ்க்கையில் அன்பால் அடைய முடியாதது எதுவும் இல்லை. இப்போது இந்த விஷயத்தை மேலும் நீட்ட வேண்டாம். “குருதேவா! அன்பால் தாலிபானை வெல்ல முடியுமா ? என்று கேட்காதே. அவர்களை எதிர்கொள்ள 4 வழிகள் உண்டு.
·         சாம  -  மென்மையாக பேசி சம்மதிக்க வைப்பது
·         தான  - அக்கறையாகப் பேசி வேண்டிக் கொள்வது
·         பேத  -  பயமுறுத்துவது
·         தண்ட – தண்டிப்பது

வீட்டில் ஏன் சின்ன விஷயங்களில் சிக்கி மாட்டிக் கொள்கிறாய்? மாமியாரை வெறுப்பதால் உனக்கு என்ன கிடைக்கும்? குறைந்தபட்சம் உன் கண்ணொட்டத்தை விரிவாக்கி பரந்த நோக்கில் பார். என் ஆலோசனையைக் கேட்டு அந்த இரண்டு பெண்களும் இப்போது ஒருவருக்கொருவர் நன்றாகப் பழகி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எல்லா பிரச்சினைகளும், ஒன்றுமே இல்லாதது போல் தீர்ந்து விட்டன. அவள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனிக் குடித்தனம் செல்வதாக இருந்தாள். நல்ல வேளை! அப்படி ஏதும் நேராமல் குடும்பம் பாதுகாக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் கதை அல்ல. நாடு முழுதும், பல்லாயிரக் கணக்கான குடும்பங்களில் இப்படிப்பட்ட பிரச்சினை ஏற்படுகிறது. அதுவும் ஆசியா கண்டத்தில், குறிப்பாக இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிறது.

நாம் நம் மனதை எப்படி கையாள்கிறோம் என்பதே மகிழ்ச்சியின் திறவுகோல். இடைவிடாமல் நாம் நம் யோக சாதனைகளை செய்ய வேண்டும். நாம் நம் மனதை அடக்கி, ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஓய்வெடுக்கப் பழக வேண்டும். நாமனைவரும் நம் கண்ணோட்டத்தை சற்று விரிவாக்கிக் கொண்டால், அது நம் வாழ்வில் பெரிய நன் மாற்றங்களைக் கொண்டு வரும். நாம் நம் வாழ்வில் மகிழ்ச்சியடைவது மட்டுமல்லாமல், நம்மைச் சுற்றியிருக்கும் மற்றவர்கள் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டு வர முடியும்.

நாம் பொதுவாக நம் வாழ்வில் நிகழும் சின்னச் சின்ன விஷயங்களில் மாட்டிக் கொள்கிறோம். நாம் வருத்தப் படுவது மட்டுமல்லாமல் நம்முடன் இருப்பவர்களும் வருத்தப்படக் காரணமாக இருக்கிறொம். இது அறிவற்ற செயல். (அஞ்ஞானம்) இதைப் புரிந்து கொள்ள நீ மகா பண்டிதனாக இருந்து பல அரிய நூல்களைப் படிக்கத் தேவையில்லை. ஒவ்வொரு நாளும் சற்று நேரம் தியானம் செய். நல்ல விஷயங்களைக் கேட்டு அறிந்து கொள். கற்றுக் கொண்டவைகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து அதன் படி நடந்து கொள்.

குருதேவா! நேபாளத்தில் சிவ பெருமானை பசுபதிநாத் என்ற வடிவில் வணங்கி வருகிறார்கள். பசுபதி என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன ?

பசு என்றால் ஹிந்தி மொழியில் விலங்கு என்று அர்த்தம். அப்படி என்றால் கட்டப்பட்டது அல்லது பாசத்தால் கட்டப்பட்டிருப்பவர் என்று பொருள். பாசம் என்றால் கயிறு என்று அர்த்தம். அப்படி என்றால் நீ கட்டுண்டு இருக்கிறாய். ஏதோ உன்னைத் தடுக்கிறது.எட்டு விதமான பாசம் இருக்கிறது. அதில் 8 விதமான விலங்குகள் கட்டப்பட்டிருக்கின்றன.

ஆங்கில மொழியில் “ மனிதன் ஒரு சமூக விலங்கு “ என்று ஒரு பழமொழி இருக்கிறது. எனவே ஒவ்வொரு மனிதனும் ஒரு வித பாசத்தினால் கட்டுண்டு இருக்கிறான். உதாரணமாக பேராசை, உறவுகளோடு இருக்கும் பந்த பாசம். சிவபெருமான் 8 விதமான பாசத்தால் (கயிறுகளால்) கட்டப் பட்டிருக்கும் இப்படைப்பின் தலைவர். அவர் இவ்வுலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் தலைவராவார்.

நேபாளத்தில் விலங்குகளை பலியிடும் வழக்கம் உள்ளது. கோவிலுக்குச் சென்று அப்படி எதுவும் செய்யாதே. அது கடவுளுக்கு விருப்பமாகாது. நீங்கள் அது பற்றி அறிந்திருந்தீர்களா? கடவுளை மகிழ்விக்க ஒரு உயிரைக் கொல்வது மகா பாவமான செயலாகும். பலியிடுவது அறியாமையால் செய்யப்பட்டு வரும் வழக்கம். விலங்குகளின் வதையை எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கொல்வதை தடுத்த வாழும்கலை ஆசிரியர்களையும், தன்னார்வலர்களையும் பாராட்டுகிறேன். விலங்குகளை பலியிடுவதை நிறுத்துவதற்காக அவர்கள் மிக நல்ல காரியத்தில் ஈடுபடுகிறார்கள். 40% லிருந்து 60% வரை விலங்குகள் பலியிடப்படுவது குறைந்திருப்பதாக அறிந்தேன். நீங்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு உயிரை உருவாக்கத் தகுதியில்லாத போது ஒரு உயிரைக் கொல்ல அவர்களுக்கு உரிமை கிடையாது. ஒரு அப்பாவி ஆட்டுக்குட்டிக்கு நீ உயிர் கொடுக்க முடிந்தால், அதன் உயிரைக் கொல்லவும் உரிமை பெறலாம். ஆனால் அதற்கு உயிர் கொடுக்க முடியாத நீ அதை பலியிடக் கூடாது. இவ்வுலகில் ஒவ்வொரு உயிரினமும் வாழ (தன் உயிரைக் காத்துக் கொள்ள) உரிமை பெற்றது. கடவுள் உயிர் பலியால் மகிழ்ச்சியடைவார் என்று நம் முன்னோர்களின் வாக்கில், நமக்கு கிடைத்திருக்கும் பண்டைய நூல்களில் எதிலுமே சொல்லப்படவில்லை.