தவறு செய்வது மனித இயல்பு , மன்னிப்பது தெய்வ இயல்பு

வியாழக்கிழமை, 10 டிசம்பர்,

பெங்களூரு, இந்தியா

ஏதேனும் கெட்ட பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்னும் தூண்டுதல் உங்களுக்கு இருந்தால் ஆழ்ந்த பிரார்த்தனை அதனை செய்யும். 

தெய்வீகம் அறநெறிக்கு அப்பாற்பட்டது என்று ஸ்ரீ கிருஷ்ணரை பொருத்தவரையில் கருதப் படுகின்றது. உண்மையில், இவ்வுலகில் அறநெறியின் சம்பந்தம் என்ன ?

குருதேவ்: அறநெறியின் அடிப்படை என்னவென்றால்,எதை பிறர் உங்களுக்குச் செய்யக்கூடாது என்று கருதுகின்றீர்களோ அதைப் பிறருக்கு நீங்கள் செய்யாதீர்கள். உங்கள் கணவர் வேறொருவருடன் ஊர் சுற்றக் கூடாது என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் அதை செய்யாதீர்கள். அவ்வளவு தான்.

ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன் சுற்றிக் கொண்டிருந்தான். அதைத் தவறு என்று அவன் எண்ண வில்லை. அவன், பரஸ்பர சம்மதத்துடனேயே அதை செய்தோம்" என்று கூறினான். நான் அவனிடம், உன்னுடைய சகோதரனின் மனைவி வேறொருவருடன் சுற்றிக் கொண்டிருந்தால் எண்ண செய்வாய்?" என்று கேட்டேன். அவன் "காலை உடைப்பேன்" என்று கூறினான். சகோதரனின் மனைவி சகோதரனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நீ விரும்பினால் எவ்வாறு நீ அதையே பிறருக்கு செய்வாய்? என்று கேட்டேன். இந்த உறவு வருங்காலத்தில் பயனுள்ளதானால் சரி, அவ்வாறில்லாத போது ஏன் ஒரு குடும்பத்தை உடைக்கின்றாய்? என்று கேட்டேன்.அவனுடைய மனதை அக்கேள்வி சுண்டி இழுத்து, அவன் தான் செய்தது தவறு என்று அறிந்து கொண்டான்.

உங்களுக்கோ, உங்களுடைய நெருங்கிய உறவினருக்கோ எது செய்யப்படக் கூடாது என்று எண்ணுகின்றீர்களோ, அதை நீங்கள் பிறருக்கு செய்யக் கூடாது. உங்களுடைய மகள் அல்லது மகனிடம் ஒருவர் தவறாக நடந்து கொள்ளக்கூடாது என்று நீங்கள் விரும்பினால் எவ்வாறு வேறொருவருடைய மகள் அல்லது மகனிடம் நீங்கள் தவறாக நடந்து கொள்ளக்கூடும்? 

மது அருந்தி விட்டு வாகனங்களை பிறர் ஓட்டக் கூடாது என்று நீங்கள் எண்ணினால் எவ்வாறு அதையே நீங்கள் மட்டும் செய்யலாம்? உங்களுடைய செலவத்தை ஒருவர் கொள்ளையடிக்கக் கூடாது, உங்களை ஏமாற்றக் கூடாது என்று எண்ணினால் நீங்கள் பிறரை ஏமாற்றக் கூடாது.
ஒரு வேலை யாரேனும் போலிக் கையெழுத்திட்டு ஏமாற்றினால்," ஒ நான் ஆன்மீகவாதி, போலிக் கையெழுத்திட்டால் என்ன? இதெல்லாம் ஒன்றுமேயில்லை, இதெல்லாமே மாயை " என்று எண்ண மாட்டீர்கள். உங்களுடைய பாக்கெட்டில் கையைவிட்டால், "நாம் அனைவருமே ஒன்று, ஏன் ஒருவர் தான் என்னும் அகந்தையுடன்  இருக்க வேண்டும்?" என்று கூறுவீர்களா? இது அறிவினை தவறாகப் பயன்படுத்துவதாகும். அறநெறிக்கு புறம்பான செயலுக்கு அறிவுத்திறன் பயன்படுமானால் அது தவறு ஆகும். உங்களுக்கு பிறர் எதைச் செய்யக் கூடாது என்று கருதுகின்றீர்களோ, அதைப் பிறருக்கு நீங்கள் செய்யாமல் இருப்பதே அறநெறி ஆகும்.

யாரேனும் தவறு செய்தால், அதையே பிடித்துக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் மூலம் தவறு நிகழ்ந்துவிட்டால், பிறருடைய தவறுகளை மன்னிப்பது  போல உங்களை  நீங்கள் மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களையும் மன்னித்துப் பிறரையும் மன்னியுங்கள், பிறருடைய மற்றும் உங்களுடைய தவறுகளை மென்று கொண்டிருக்காதீர்கள். பிறருடைய தவறுகளை மென்று கொண்டிருந்தால் உங்களுக்குக் கோபம் வரும். உங்களுடைய தவறுகளை நினைத்து மென்று கொண்டிருந்தால், குற்ற உணர்வினால் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். இரண்டுமே நல்லதல்ல. ஆன்மிகம் இவற்றிலிருந்து உங்களை விடுவிக்கும்.

தவறுவது, மனித இயல்பு. நீங்களும் தவறு செய்கின்றீர்கள். உங்களுடையதோ பிறருடையதோ தவறுகளையே எண்ணி மறுகிக் கொண்டிருக்காதீர்கள். மன்னித்து மறந்து விடுங்கள். நீங்கள் தவறு செய்தால் மன்னிப்புக் கேட்டு நகர்ந்து செல்லுங்கள். அதிலேயே உழன்று கொண்டிருக்காதீர்கள்.
உங்கள் மீதே நீங்கள் வருத்தம் கொண்டால் எளிதாகப் பிறர் மீது கோபம் ஏற்படும். பிறர் மீது கோபம் கொண்டால் உங்களைப் பற்றியே நீங்கள் வருந்துவீர்கள். இரண்டுமே உகந்ததல்ல.

இது எல்லாம் ஒரு கனவு என்று கூறப்படுகிறது. யாருடைய கனவில்  நான் இருக்கிறேன்? நான் உங்கள் கனவிலா அல்லது நீங்கள்  என்னுடையதிலா?அல்லது நாங்கள் இருவரும் ஒரு பொதுவான கனவில் இருக்கின்றோமா? அதை கனவு என்றால், அதன் விதிகள் மற்றும் வடிவங்கள் யாவை?

குருதேவ்: கனவு என்றால் என்ன? அது ஒரு நினைவின் பதிவு. விழிப்புணர்வுடன் இந்தக் கணத்தில் பார்த்தால் கடந்து சென்ற அனைத்துமே கனவு தான். அனைத்தும் கடந்த கால நினைவுகளே. மனதிலுள்ள எண்ணப் பதிவுகளே ஆகும். வேறொன்றுமில்லை! எனவே அனைத்தும் மனதில் ஏற்படும் எண்ணப் பதிவுகளே ஆகும். நீங்கள் பார்ப்பது, கேட்பது, நுகர்வது ருசிப்பது தொடுவது அனித்தும் விழிப்புணர்வில் பதிவுகளாகின்றன. ஒருவருடைய கனவில் ஒருவர் வருவது ஒன்றும் பிரச்சினையில்லை. உங்களுக்கும் கூட கனவுகள் தோன்றலாம்.

ஒருவரை அவதாரம் என்று கருதுவதன் அடிப்படை என்ன? ஸ்ரீ கிருஷ்ணரை இந்து சமயம் தவிர பிற சமயங்களில் அவதாரமாகக் கருதுவதில்லையே?

குருதேவ்: முதலில் அவதாரம் என்றால் என்ன என்று நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அவதாரம் என்றால் தெய்வீகம் இறங்கி வருதல், எங்கெல்லாம் நீங்கள் ஞானத்தை காண்கின்றீர்களோ அங்கெல்லாம் தெய்வீகத்தின் வருகையை காண்கின்றீர்கள். வடிவமற்றதை ஒரு வடிவத்தில் காண்பது ஆகும். ஸ்ரீமத் பாகவதத்தில் இறைமை அன்னபட்சிகளிடமும், தீயிலும் மரங்களிலும் எல்லா விலங்குகளிடமும் இறங்கி வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்தப் படைப்பே இறைமையின் வெளிப்பாடன்றி வேறில்லை. எங்கிருந்தெல்லாம் இந்த ஞானச் செய்தியினை அடைகின்றீர்களோ அதனை நீங்கள் அவதாரம் என்று அழைக்கலாம். தத்தாத்ரேயா முனிவர் 24 வகையான வாழ்கை வடிவங்களைக் குறிப்பிட்டிருக்கின்றார். அன்னப் பறைவையிடமிருந்து ஞானம் பெற்ற அவர் அதனை விஷ்ணுவின் ஒரு வடிவமாகக் குறிப்பிடுகின்றார்.

இறைவன் இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் இருக்கின்றார் என்பதை அறியுங்கள். மிக மலிவாகக் கிடைக்கும் ஒரு பொருள் இறைமையே ஆகும். அது பூமி, நீர், நெருப்பு காற்று ஆகாயம் அனைத்திலும் உள்ளது. எல்லாமே ஒரே அதிரவளையால் உருவாக்கப்பட்டது. அதை பிரம்மன், இறைமை கடவுள் என்று எந்தப் பெயரிலும் அழைக்கலாம். அத்தகைய இறைமை ஒருவர் மூலம் கணம் அளித்து, அன்பினைத் தூண்டும் போது அவரை அவதாரம் என்று கருதுகின்றோம்.

கற்பனையுலகில் சஞ்சரிக்கும் பழக்கம் கொண்ட நான் அதை ஒரு பாதுகாப்புப் பொறி முறையன்று அறிந்து கொண்டேன். அந்த கற்பனையுலகில் எந்தக் குறைகளுமே இல்லை. நான் தியானம் செய்யும் போது கூட இது நிகழ்கின்றது. இதை எவ்வாறு கடந்து செல்வது?

குருதேவ்: எப்போது அது கற்பனை என்று அறிந்து கொண்டீர்களோ அப்போதே அதிலிருந்து வெளியே வந்து விட்டீர்கள். அதிலேயே நீங்கள் அமிழ்ந்திருந்தால்,அதையே உண்மை என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள். கற்பனையுலகம் என்று அதற்குப் பெயரளித்தவுடனேயே நீங்கள் கரை சேர்ந்து விட்டீர்கள்.அதில் மூழ்கி விடவில்லை.கவலைப்படாதீர்கள். கனவுகள் காண்பது நல்லதே பெரிதாகக் கனவு காணுங்கள். ஆனால் உண்மையின் பிடியிலிருந்து விலகி விடாதீர்கள்.இரண்டு கால்களும் தரையில் இருந்தால் நடனம் நிகழ முடியாது. ஒரு கால் உறுதியாகத் தரையிலும், மற்றொரு கால் உயரே காற்றிலும் இருந்தால் தான் அது நடனம்.

வாழ்க்கையிலும், நடைமுறையில் யதார்த்தத்தினை விட்டு விலகி விடக்கூடாது. அதே சமயம், வெவ்வேறு விதமாக, பெரிதாக, சிறப்பானதாக, சில சமயங்களில் சாத்தியமற்றதாக கனவு காணுங்கள். முற்றிலும் சாத்தியமற்றதாகக் கனவு கண்டால், நீங்கள் உங்களுக்கு உண்மையாக இல்லை என்பதாகும். முற்றிலும் சாத்தியமற்றது என்று நீங்கள் கருதி, அதே சமயம் முற்றிலும் சாத்தியமானதும் கூட, என்னால் செய்ய முடியும் என்று நீங்கள் கருதும் அந்தக் கனவைக்  கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள்.

சிவபுராணத்தில், சிவனை வழிபடுபவர்கள் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப் படுவர் என்று கூறப்பட்டுள்ளது. இது லஞ்சத்தின்  ஆரம்பமா?

குருதேவ்: இல்லவே இல்லை. ஊழல் / லஞ்சம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கோ உங்களுக்கு நெருக்கமானவருக்கோ எது நிகழக் கூடாது என்று எண்ணுகின்றீர்களோ அதைச் செய்வது ஆகும்.சிவ பூஜையையும் ஊழலையும் நீங்கள் இணைக்க முடியாது. மனம் நிறைவடையும் போது ஏற்படும் ஒரு உணர்வே பூஜை ஆகும்.உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் வாசலுக்கு சென்று வரவேற்கின்றீர்கள். உங்கள் மனதிற்கினிய ஒருவர் வரும்போது ரயில் நிலையத்திற்கோ விமான நிலையத்திற்கோ ஓடிச் சென்று நீங்கள் வரவேற்பதில்லையா ? இது கட்டாயத்திற்குச் செய்கின்றீர்களா? நீங்கள் அவர்களை ஒரு வாடகை காரில் வருமாறு கூறலாம், அனால் நீங்கள் உங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு சென்று அவர்களை வரவேற்று வீட்டிற்கு அழைத்து வருகின்றீர்கள். ஏன் அவ்வாறு செய்கிறீர்கள்? என்ன உணர்வு? அதை லஞ்சம் என்று கூற முடியுமா என்ன? ஆகவே பூஜை என்பது மன நிறைவின் வெளிப்பாடு.

புராணங்களில் பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. அனைத்து புராணங்களுக்கும் சார்பளிக்கும் வழக்கறிஞர் அல்ல.பல புராணங்கள் வெளிப்பாடுகளின் வழி முறையாகும். புராணம் என்பதன் பொருள் வெளிப்பாட்டின் புது வழி என்பதாகும். ஹிந்தியில் புராணா என்னும் சொல்லுக்கும் சமஸ்ரிதத்தில் புராணா என்னும் சொல்லுக்கும் முற்றிலும் மாறுபட்ட பொருள் ஆகும். ஹிந்தியில் புராணா என்றால் பழமையான என்று பொருள், சமஸ்க்ரிதத்தில் புராணா என்பது புதிய அல்லது நவீனமான என்னும் அர்த்தத்தில் கூறப்படும் வெளிப்பாட்டு வழிமுறை. அதை லஞ்சம் என்று கூறாதீர்கள். உங்களுக்கு அருள் செய்ய நீங்கள் உடைக்கும் ஒரு தேங்காய்க்காக காத்திருக்கும் அளவுக்குக் கடவுள் முட்டாள் அல்ல.

நீங்கள் செய்யும் அனைத்தப் பூஜைகளும் உங்களது நிறைவை வெளிப்படுத்தும் பொருட்டே செய்யப்படுபவை ஆகும், கடவுளை மகிழ்விக்க அல்ல. உலகில் இது உலகில் நிலவி வரும் ஒரு தவறான கோட்பாடு என்றே நான் கருதுகின்றேன்.கடவுளை மகிழ்விக்கவே நாம் அனைத்தையும் செய்வதாகக் கருதுகின்றோம்.இது ஒரு தவறான புரிதல் ஆகும். மக்கள் விரதம் இருந்து கடவுளை மகிழ்விப்பதாக எண்ணிக் கொள்கின்றனர். நீங்கள் விரதம் இருப்பது, உங்கள் உடலை சுத்தப் படுத்திக் கொள்வதற்காகவே.கடவுளை மகிழ்விக்க விரதம் தேவையில்லை. இது தவறான கருத்து.

குருதேவ், அரசனிடமிருந்து குரு விலகி இருக்கக் கூடாது அல்லது குருவிடமிருந்து அரசன் விலகி இருக்கக் கூடாது, இவையிரண்டில் எது சரியானது ?

குருதேவ்: குருவின் பார்வையிலிருந்து காணும் போது அனைவரும் ஒன்றே,அவரவர் ஏற்றிருக்கும் பங்கே வேறுபட்டது என்பதாகும். முதலாவதாக, நாம் அனைவரும் தெய்வீக ஒளியின் பகுதியே ஆவோம். ஒரே மனித இனம். ஒரே ஒரு பங்குடன் நிறுத்திக் கொள்ளமுடியாது. ஏற்றிருக்கும் ஒவ்வொரு பங்கும் ஒரு கோட்டைப் போன்றது, அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் அனைத்துப் பாத்திரங்களையும் சிறப்பாகச் செய்ய வேண்டும். ஒருவர் தன்னுடைய ஆசிரியரிடம் செல்லும் போது ஒரு மாணவனாகவே செல்ல வேண்டும். குருவைப் பொறுத்த வரையில், செல்வந்தரோ, ஏழையோ, முட்டாளோ, புத்திசாலியோ அனைவரும் சமமே.