வாழ்க்கையை கொண்டாட ஆபரணங்கள்

31 டிசம்பர் 2013

குருதேவர் இன்று சொன்னது என்ன?

பொதுவாக கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மௌனத்தின் பெருமையை உணர்வதில்லை. மௌனத்தில் மகிழ்ச்சி அடைபவர்கள் கொண்டாட்டத்தில் பங்கு பெறுவதில்லை. மௌனத்தில் இருப்பவர்கள் முகத்தில் மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தெரியாது. மௌனத்தில் இருப்பவர்களின் முகம் பொதுவாக கடுகடுப்பாகவும், துக்கமாகவும் இருக்கும். ஆனால் நம் சிறப்பு என்னவென்றால், “நாம் மௌனமாக இருக்கும் போதும் கொண்டாட்டத்தில் பங்கு கொள்கிறோம். புது வருடத்தை வரவேற்க இது ஒரு அழகான சிறப்பான வழியாகும். 

இப்போது நாம் 2013 ம் ஆண்டுக்கு நன்றி சொல்வோம். 2013 ம் ஆண்டு பல நிகழ்ச்சிகளில் ஒன்று கூட வைத்தது. பல விதமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வைத்து நம்மை வலிமையானவர்களாக ஆக்கியது. பல விதமான பரிசுப் பொருட்களை நமக்கு அளித்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாம் அறிவு வளர்ச்சி அடையாமல் எந்த ஆண்டும் கடந்ததில்லை. 

ஒவ்வொரு ஆண்டும் நமக்கு பல விஷயங்களைப் பற்றிய அறிவைக் கொடுக்கிறது. முன்பை விட அறிவாளிகளாக ஆக்கியிருக்கிறது. நாம் புத்தாண்டை நோக்கி முன்னே செல்வோம்.
காலம் (நேரம்) என்பது ஒரு ஓடும் நதியைப் போன்றது. ஒரு நதியில் கூட நீங்கள் அணைகட்டி நீரோட்டத்தைத் தடுக்க முடியும். ஆனாலும் நீரோட்டத்தை முற்றிலும் நிறுத்த முடியாது. நீர் மட்டம் உயர்ந்தால் அணையில் மேல்புறமாக நீர் ஓடி விடும். அதை நீங்கள் விட்டுத்தான் ஆக வேண்டும். ஓரளவுக்குத் தான் நீரைத் தேக்கி வைக்க முடியும். ஆனால் காலத்தை சிறிது கூட நாம் தடுத்து வைக்க முடியாது. காலம் என்பது மிக வேகமாக ஓடும் நதி போன்றது. காலம் வலுவாக வீசும் காற்றும் போன்றது. யாராலும் தடுக்க முடியாதது. காலம் நம் பூமி சுற்றிவரும் சூரியனைப் போன்றது. காலம் நம் மனதைப் போன்றது. மிக மிகப் பழமையானது. ஆனாலும் புத்தம் புதிய பொலிவோடு இருப்பது. நம் மனமும் மிகப் பழமையானது. இருந்தாலும் என்றும் புதிதாக இருப்பது.

ஆகவே புத்தாண்டைக் கொண்டாடுவது, காலத்தை மதித்து மரியாதை செய்வதை போன்றது. காலத்தை மதித்து மரியாதை செய்வதும் நம் மனத்துக்கு மரியாதை செய்வதும் ஒன்று தான். நம் மனத்துக்கு மரியாதை செய்வதும் ஆத்மாவுக்கு மரியாதை செய்வதும் ஒன்று. 

நாம் ஒரு குற்றவாளியோ, பாதிக்கப் பட்டவரோ இல்லை என்பதை அறிவதே ஆத்மாவுக்குச் செய்யும் மரியாதையாகும்.

எது உன்னை ஆத்மாவுக்கு மரியாதை செய்வதைத் தடுக்கிறது ? நீ தவறு செய்து விட்டதாக நினைத்தால் உன்னை ஒரு குற்றவாளி என்று நினைக்கும் போது, நீ குற்ற உணர்ச்சியோடு உன்னை ஒரு பாவியாக கருதுவாய். நீ ஒரு பாவியாக உணர்ந்தால், உன்னால் எதையும் கொண்டாட முடியாது. எப்போதும் அமைதியாக இருக்க முடியாது. அந்த உணர்ச்சி ஆழ்மனத்தில் பதிந்து அரித்து எடுத்து விடும். குற்ற உணர்விலிருந்து வெளியே வந்தால் தான் உனக்கு அமைதி கிடைக்கும். உனக்கு உள்ளே ஆத்ம ஜோதி ஒளிர்விடும்.

உனக்குள் ஒரு ஒளிர்ச்சுடர் இருக்கிறது என்பதை நீ அறிய வேண்டும். நீ அந்த ஒளியின் ஒரு பகுதி; இவ்வுலகத்தின் அன்பில் ஒரு பகுதி; அன்பில் ஒரு தீப்பொறி என்பதை அறிந்து கொள். இவ்வுலகில் ஒவ்வொருவரும் அன்பை அனுபவிக்க விரும்புகிறார்கள். அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள். அந்த அன்பெனும் சுடரில் ஒரு தீப் பொறியாக இருக்க விரும்புகிறார்கள். நீ குற்ற உணர்ச்சியிலிருந்து வெளியே வந்தால் தான் அப்படி நடக்கும்.
மற்றொன்று. நீ உன் னை ஒரு பலி (இரை) போல் பார்ப்பது. இரை போல் உணர்ந்தால் உன்னால் உண்மையை ஒருபோதும் உரைக்க முடியாது. இறைத் தன்மையை எடுத்துச் சொல்ல முடியாது.
இறைவன் திருவுள்ளத்தினால் தான் நீ இங்கு வந்திருக்கிறாய். அதன் படி உன்னால் வாழ்க்கையின் எல்லா பரிணாமங்களையும் (அன்பு, மகிழ்ச்சி மற்றும் ஞானம்) அனுபவித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருப்பது ஒரு கொண்டாட்டமாகும். வாழ்க்கையில் அன்பு, மகிழ்ச்சி மற்றும் அறிவு பூர்வமான ஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதற்காகத் தான் நீ இங்கு வந்திருக்கிறாய். ஒரு சூழ்நிலைக்கோ, காலத்துக்கோ இரையாகி விட்டதாக அல்லது மற்றவர்களின் செயல்களால் ஒரு பலி ஆடு போல் ஆகி விட்டதாக நினைத்தால் வாழ்க்கையை கொண்டாட முடியாது.

எனவே இந்த பலி ஆட்டு நிலையிலிருந்து எப்படி வெளியே வருவது ? வாழ்க்கையில் சில துக்ககரமான, கடினமான அனுபவங்கள் உன்னை வலிமையானவனாக்க வந்திருப்பதாக அறிந்து அதற்கு நன்றி சொல். வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்கள் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக வருகின்றன. அதற்கும் நன்றி சொல்.

வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்து வரும். கஷ்டமான நேரங்களும், துக்ககரமான அனுபவங்களும் உன்னை ஒரு நடு நிலையில் கொண்டு வரும். துக்கமான அனுபவங்களே உன்னை ஒரு நடு நிலையில் வைக்க சிறந்தது. துக்கம் உன்னை வெளிப்புற செயல்களிலிருந்து ஓய்வளித்து உன்னை ஆத்மாவுடன் இணைக்கிறது. உன் ஆளுமையை மேலும் சிறப்படையச் செய்கிறது. வாழ்க்கையில்  ஒரு ஆழ்ந்த அனுபவத்தையும் அளிக்கிறது. 

எனவே “நான் என் வாழ்க்கையில் 20 ஆண்டுகளை விரயப்படுத்தி விட்டேன். அந்த மனிதர் எனக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டார்” என்று சொல்வதை விட “இந்த கஷ்டமான காலம் என்னை வலிமையானவனாக ஆக்கியதற்காக நன்றி சொல்கிறேன்” என்று சொல்.
உன் உண்மையான திறமையைக் காட்டி, வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க உதவிய மகிழ்ச்சியான நேரத்துக்கும் நன்றி சொல்.

இன்பமான மற்றும் துன்பமான காலத்துக்கு நன்றி சொல்லும் போது, நம்மால் பலி ஆட்டு உணர்விலிருந்து விடுபட முடியும். வரும் புத்தாண்டை ஒரு திடசங்கல்பத்தோடு வரவேற்போம். ஒரு மிக நல்ல காரியத்தை மிகத் திறமையாக செய்வோம். மற்றவர்களுக்கு உதவியாக இருப்போம். மகிழ்ச்சியாக வாழ்ந்து மற்றவர்களும் மகிழ்ச்சியாக வாழ உதவுவோம். மற்றவர்களிடையே மகிழ்ச்சியைப் பரப்புவது மிக அவசியமாகும்.

உனக்குத் தெரியுமா ? நீ துக்கப்படுவதற்கு ஒரு காரணம் தேவை. ஆனால் ஒரு காரணமும் இல்லாமல் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஒரு காரணமும் இல்லாமல் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற உண்மையை அறிவது தான் ஞானம் எனப்படும். இது நம் மனதில் எப்போதும் இருக்க வேண்டும்.

நான் துக்கப்படும் போது, ஏன் துக்கப்படுகிறேன் என்று காரணத்தை தேடுவேன். நீயும் அதைச் செய்ய வேண்டும். வேறு யாராலும் உன் துக்கத்தின் காரணத்தைத் தேட முடியாது. உன் துக்கம், நீ யாரையோ (உணர்ச்சி பூர்வமாக) அல்லது எதையோ (பொருள் தேவையினால்) சார்ந்திருப்பதால் ஏற்பட்டிருந்தால், அதன் காரணத்தை நீ அறிந்து கொள்ள வேண்டும். பொருள் தேவை அல்லது மன உணர்ச்சி தேவை உன் துக்கத்துக்கு காரணமாகிறது. முதலில் மன உணர்ச்சியின் தேவையை எப்படி நிறைவு செய்வது என்பதை அறிய வேண்டும்.

மன உணர்ச்சி தேவை என்றால் என்ன ?
மற்றவர்களிடமிருந்து பாராட்டு – என்னை மற்றவர்கள் பாராட்ட வேண்டும். என்னைப் புகழ வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு. மற்றவர்களுடன் வாக்கு வாதம் செய்ய முடியாத நிலை. அல்லது வாக்கு வாதத்தில் தோல்வி. தன்னைப் பற்றிய உயர்வான எண்ணம். – நாம் மிக நல்லவன். நான் எல்லோருக்கும் நல்லதே செய்வேன்.ஆனாலும் எல்லோரும் என்னை கெட்டவன் என்று நினைக்கிறார்கள்.

இப்படிப்பட்ட மன உணர்ச்சி சம்பந்தமான குழப்பத்தை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம். இதற்கு நாம் தான் பொறுப்பு. மற்ற யாரும் குழப்பத்தை உண்டாக்குவதில்லை. ஞானமும் தியானமும் நம்மை இப்படிப்பட்ட நிலையிலிருந்து விடுவிக்க வழியாகும். மன உணர்ச்சி சம்பந்தமான குழப்பத்திலிருந்து வெளிவர ஞானமும் தியானமும் உதவும். 

மன அளவில் சார்ந்திருப்பதிலிருந்து வெளியே வந்தபின், பொருள் சம்பந்தமான தேவைகளிலிருந்து நீ வெளியே வர வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். உன் திறமையில் நம்பிக்கையோடு உன்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு காரியத்தில் ஈடுபடு. உன் தேவைகளைக் குறைத்துக் கொள். ஆசைகளை குறைத்துக் கொள்.  உன் தேவைகளும், ஆசைகளும் அதிகமாக இருந்து, உன் திறமையும் உழைக்கும் சக்தியும் குறைவாக இருந்தால் நீ துக்கத்தில் இருப்பாய். உன் தேவைகளும், ஆசைகளும் உன் திறமை மற்றும் உழைக்கும் சக்திக்கேற்ப இருக்க வேண்டும். உதாரணத்துக்கு உன் பற்கள் வலுவாக இல்லாத போது, நீ ஒரு பாதாம் கொட்டையின் வெளி உறையை பல்லால் கடித்து உடைக்க நினைத்தால் நான் உனக்குச் சொல்வது இதுதான். “கொட்டை உடையாது. ஆனால் உன் பல் உடைவது நிச்சயம்.” எனவே, உன் பற்களில் எவ்வளவு வலிமை இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அதன் படி செய்ய வேண்டும்.

என்னால் 15 கிலோ தான் தூக்க முடியும் என்று தெரியும் போது 50 கிலோவை தூக்க முயற்சி செய்ய வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக நம் உடல் வலிமையை அதிகப்படுத்திக் கொண்டு 15 கிலோவை விட சற்று அதிக எடையைத் தூக்கப் பழக வேண்டும். சக்திக்கேற்ப, திறமைக்கேற்ப ஆசைப்படு. திறமைக்கும் ஆசைக்கும் இடைவெளி இருந்தால் நீ துன்பப்பட நேரிடும்.

நீ ஒரு இதய நோயாளியாக இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏற ஆசைப் பட்டால் நான் உனக்கு என்ன சொல்ல முடியும் ? உன் வீட்டு மாடிப்படி உச்சியில் எவரெஸ்ட் என்று எழுதி வைத்து விட்டு நீ ஏற முடியும். நீ மாடிப்படி ஏறுவதே, உனக்கு எவரெஸ்ட் ஏறுவது போன்ற அனுபவமாக இருக்கும்.எனவே உன் திறமைக்கும் சக்திக்கும் ஏற்ப ஆசைப்படு. சில விஷயங்களில் விட்டுக் கொடுத்தே ஆக வேண்டும். சில விஷயங்களில் முயற்சியைக் கைவிடக் கூடாது. நம்பிக்கையை கை விட வேண்டாம். அதிகப்படியான ஆசைகளை கை விடுவது நல்லது. அப்படிச் செய்தால் நீ மகிழ்ச்சியோடு இருக்க முடியும்.

எப்போதும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இரு.

“எனக்கு எப்போதும் நல்லதே நடக்கிறது. ஏதோ துக்ககரமான நிகழ்ச்சி ஏற்பட்டாலும், இயற்கை என் நன்மைக்காகவே அப்படிச் செய்திருக்கிறது. என்னை வலிமையானவனாக ஆக்குவதே அதன் நோக்கம்.” 

எப்போதும் இந்த நம்பிக்கையோடு இரு. கெட்ட நிகழ்ச்சி நடந்தால் அதை ஒரு விபத்தாக நினை. அக்கெட்ட நிகழ்ச்சி நடந்ததற்கு நீ காரணமென்றோ, நீ அந்த நிகழ்சிக்குத் தகுதியானவன் என்றோ நினைக்காதே.“கெட்ட நிகழ்ச்சி ஒரு விபத்து. எனக்கு எப்போதும் நல்லதே நடக்கும்” – இப்படி நினைப்பதால் உன் நம்பிக்கை மேலும் வளரும். ஆகவே இப்படிச் சில ஞான முத்துக்களைப் பெற்று, அதை விலை மதிப்பற்ற ஞானமாக ஏற்றுக் கொள்வதே உங்கள் வாழ்க்கையை கொண்டாட்டமாக்கும். இந்த ஞான முத்துக்கள் உங்கள் வாழ்க்கையை கொண்டாட உதவும் ஆபரணங்களாகும்.