நாம் ஏன் மற்றவர்களின் கவனத்தை பெற ஏங்குகிறோம்?

பெங்களூரு, இந்தியா

டிசம்பர் 7, 2013


கேள்வி பதில்கள்:

அன்பு குருதேவ்! எதனால்  நான் எப்போதுமே மற்றவர்களின் கருவியாகவே   இருப்பதாகவே எண்ணுகிறேன்? ஆனால் நான் ஒரு உயர்ந்த நிலைக்கு செல்லவும் எனக்கென்று ஒரு பெயரை பெறவுமே விரும்புகிறேன். இன்னமும் இது சாத்தியமானதா?

நீங்கள் பெயரை எடுக்க விரும்புகிறீர்கள். அந்த சங்கல்பத்தை எடுத்துக்கொண்டு அதை மறந்து விடவும். உங்களுக்கு பெயர் கிடைக்கவேண்டும் என்னும் பரபரப்பிலேயே இருந்தால்,நிச்சயமாக நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள். பெங்களூரில் இருந்து சென்னை செல்ல விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் காரில் அமர்ந்து கொள்கிறீர்கள். அது ஐந்து மணி நேர பயணம். செல்லும் வழி முழுவதும் "நான் சென்னை செல்ல விரும்புகிறேன்" என்று சொல்லிக் கொண்டிருந்தால், சென்னை செல்லமாட்டீர்கள், மனநல மருத்துவமனை தான் செல்லுவீர்கள். இல்லையென்றால் நீங்கள் சென்னையை சென்றடைந்த உடனே மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவீர்கள்.
    
மனதில் ஒரு நோக்கம், அதிலே கவனம், அதன் பின் அது வெளிப்படுகிறது. இதுவே சங்கல்பம் எனப்படுகிறது. நல்லவராகவும், பிரபலமானவராகவும், அறிவாளியாகவும் ஆகவேண்டும் என்று விருப்பப்படுவதில் தவறு ஏதும் இல்லை.அந்த விருப்பங்கள் அனைத்துமே இயல்பானவையே. ஆனால் அது ஒரு நோக்கமாக மட்டுமே இருக்கவேண்டும் அது உங்களுக்குள் ஒரு பரபரப்பை ஏற்படுத்தக் கூடாது.   

பலமுறை பலர் மற்றவர்களுடைய கவனத்தை ஈர்பதற்காக இந்த மாதிரியான சண்டித்தனங்களை செய்கிறார்கள். ஒருமுறை நான் ரிஷிகேஷில் சிபிர் நிகழ்ச்சியில் சென்று கொண்டிருக்கையில் ஒரு பெண்மணி கீழே விழுந்ததை கண்டேன். அதை பார்த்தவுடன் அருகில் இருந்தவர்கள் அந்த பெண்மணியை நோக்கி சென்றனர். நானும் அவ்விடத்திற்கு அருகில் சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை நோக்கி ஓடி வந்து "குருதேவ்! ஒரு பெண்மணி கிழே விழுந்துவிட்டார்கள்" என்று கூறினர். "அப்பெண்மணி என்னுடைய கவனத்தை ஈர்க்கவே அவ்வாறு செய்தார்கள்" என்று நான் கூறினேன்.    
நான் நடைபயிற்சியில் இருந்து திரும்பி வரும்போது அந்த பெண்மணி அதே இடத்தில் அமர்ந்து   இருந்ததை கண்டேன். நான் அவர்களிடம் "இம்மாதிரி யுக்திகளை செய்ய முயற்சிக்க வேண்டாம்,  அவ்வாறு செய்து உங்களை சுற்றியுள்ள 10 பேருடைய நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்" என்று  கூறினேன். அதற்க்கு அவர்கள் நீங்கள் என் பக்கம் திரும்பவே இல்லை. அதனால் தான் நான் அவ்வாறு செய்தேன்" என்று கூறினார்கள்.

குழந்தைகள் இதை செய்கிறார்கள். அவர்கள் அமைதியாக விளையாடிக் கொண்டு தங்களுக்கு தேவையானதை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் வந்திருக்கும் விருந்தினருடன் நாம்  முக்கியமான விஷயங்களை பேசிக் கொண்டிருக்கும் போது மட்டும் அவர்கள் நம்மிடம் வந்து அவர்கள் செய்திருக்கும் ஓவியம் அல்லது கை வேலைப்பாடுகளை காண்பிப்பார்கள். ஆகவே குழந்தைகள் நம்முடைய கவனத்தை ஈர்க்க அவ்வாறு செய்வார்கள்.    

நாம் மற்றவர்களின் கவனத்திற்காக ஏங்குபவர்கள். இந்த வழக்கத்தை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? ஏனென்றால் நாம் நம்மை கவனிப்பதே கிடையாது. நாம் நமக்குள் இருக்கும் ஒளியையோ அமைதியையோ அல்லது அழகையோ அறிந்து கொள்வது இல்லை. நம்மோடு நாம் திருப்தியுடன் இருப்பதில்லை. அதனால் தான் வேறு யாராவது ஒருவர்  நம்மை பற்றி ஏதாவது சொல்வதில் திருப்தி அடைகின்றோம்.
 
உண்மையிலேயே ஆச்சரியமாக உள்ளது. உங்கள் மனதை விட ஒரு சிறந்த பொழுது போக்காளர் கிடையாது. உங்கள் மனம் உங்களுக்கு இடைவிடாத 24 மணி நேர பொழுதுபோக்கை அளிக்க வல்லது. ஒன்றல்ல,100 ஒளியலை வரிசைகள் உங்கள் மனதில் ஓடுகின்றன. நகைச்சுவை, சோகம், சிலிர்ப்பு, ஆகிய அனைத்தும் ஓடிக் கொண்டிருக்கின்றன. இது ஆச்சரியமானது. அனுபவிக்கவும், ரிமோட் கண்ட்ரோலை உங்கள் கைகளிலேயே வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும். அது மனதில் எதை வேண்டுமானாலும் காண்பித்துக் கொண்டிருக்கட்டும். ரிமோட் கண்ட்ரோல் உங்கள் கையில் இருக்கும் வரை இது என் மனதில் ஓடக்கூடாது, அது ஓடக்கூடாது என்றெல்லாம் கவலை கொள்ளவேண்டாம். ரிமோட் உங்கள் கையில் இல்லாதபோது தான், வாழ்வில் உங்களுக்கு பிரச்சினைகள் உருவாகின்றன. 

குருதேவ்! தோல்வியை எப்படி எடுத்துக்கொள்வது? கற்றுக்கொள்வதோ, அறிவுரையோ அந்த சமயத்தில் உதவாது. நான் என்ன செய்வது?

நீங்கள் ஒரு நாள் இறந்து விடுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் அனைத்தையும் உங்கள் பின்னால் விட்டுச்செல்ல இருக்கிறீர்கள். நீங்கள் சொந்தம் கொண்டாடிய உங்களுடைய பட்டங்கள், விருதுகள், கழுத்து மாலை மற்றும் வைரங்கள், அனைத்தும் இங்கேயே இருக்கும். அதனால், ஒரு நாள் நீங்கள் அனைத்தையும் இங்கேயே உங்கள் பின்னால் விட்டு செல்ல இருக்கிறீர்கள் என்பதை அறியும் போது, நீங்களே சொல்லுவீர்கள், "தோல்வியா? பரவாயில்லை தோற்று விட்டோம். என்ன செய்வது? நான் அதையும் தைவீகத்திற்கே அர்ப்பணிக்கின்றேன்"

ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிக்கல் என்பதை நினைவில் கொள்ளவும். அதுவும் கற்றுக்கொள்ளும் செயல்முறையே. ஒருவேலை நீங்கள் இதை இந்த மாதிரியாக தான் பார்க்க வேண்டும். இரண்டு சந்தர்ப்பங்களே உள்ளன. ஒன்று நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அல்லது மற்றவர்களை வெற்றிபெற செய்வீர்கள். நீங்கள் மற்றவர்களை வெற்றி பெற செய்வதை பற்றி பெருமை கொள்ள வேண்டும். வீட்டிலே பெரியவர்கள், குழந்தைகளுடன் விளையாடும் போது அவர்கள் எப்போதுமே வெற்றி பெறுவதில்லை,பல சமயங்களில் குழந்தைகளை வெற்றி அடைய செய்து அவர்களுடைய சந்தோஷத்தை பார்த்து இவர்கள் சந்தோஷமடைவார்கள். ஆகவே மற்றவர்களை வெற்றியடைய வைப்பது பெருமனதின் அடையாளம். 

ராமாயணத்தில் ஒரு அழகிய கதை உள்ளது. "பாரத் மிலாப்" என்னும் அத்தியாயத்தில் பரதன், ராமரை சந்தித்த போது இருவருமே அவர்களுடைய பிரதிக்ஞையை மறந்து விடுகின்றனர். ராமர் பரதனிடம் நீ எதை விரும்புகிறாயோ அதை நான் செய்கிறேன் என்று சொல்லுகிறார். இதை கேட்டவுடன் பரதன் சந்தொஷம் மற்றும் உணர்ச்சியடைகிறான். ராமர் அவருடைய தந்தையின் சபதத்தை நிறைவேற்ற அரியணையை துறந்து அவராகவே 14 ஆண்டுகளுக்கு முன் நான் திரும்ப வரமாட்டேன் என்று சபதம் செய்கிறார். பரதனின் கோரிக்கையை ஏற்று அவர் நாடு திரும்பி இருந்தால், சபதத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டிருப்பார்.  
       
மேலும் ராமர் அவருடைய சபதத்தில் தீவிரமாக இருந்தார். உயிரே போனாலும் பரவாயில்லை கொடுத்த சபதத்தை மீறக்கூடாது என்பதில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆகவே ராமர் அவருடைய சபதத்தை மேலாக மதிக்கிறார் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டதனால், பரதன் அவனுடைய சபதத்தை உடைக்க தயாராகி ராமரிடம் "அண்ணா நீங்கள் உங்கள் விருப்பப்படியே நடக்கலாம்" என்று கூறினான். அவர்கள் இவருடைய எண்ணங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன என்று சொல்லப்படுகிறது. ராமருடைய மனம் பரதனிடம் சென்றது. பரதனுடைய மனம் ராமரிடம் சென்றது. இதைத்தான் நாம் அன்பின் அடையாளம் என கூறுகிறோம். இது இருவருக்குமே ஆசை எதுவும் இல்லாத ஒரு தனித்துவமான கதை. உயர்ந்த குறிக்கோள்கள். இந்த குறிக்கோள்கள் தான் நம்மை நமது கொள்கைகளில் இருந்து விலகிச் செல்லாமல் தடுக்கிறது. 

ஆன்மீகம் கொடுப்பதை பற்றியது. வர்த்தகம் பெருக்குவதை பற்றியது. எப்படி ஆன்மிகம் என்னை ஒரு நல்ல தொழிலதிபராக உதவும்?

நீங்கள் ஒரு அம்பை எய்ய நினைத்தால் என்ன செய்கிறீர்கள்? முன்புறம் செலுத்த வேண்டி நாணை பின்புறமாக இழுக்கிறீர்கள். இதைப் போலவே தான் கட்டிடம் உயரமாக கட்ட வேண்டும் என்றால் அடித்தளத்தை மிக ஆழமாக கட்டுகிறீர்கள். இவை அனைத்துமே எதிர்மறையான செயல்களாக தோன்றும், ஆனால் அவை ஒன்றை ஒன்று ஈடு செய்பவை. இன்றும் முந்தைய தலைமுறையினர் நல்ல செல்வவளமடையும் போது, யாவுமே அவர்களுடைய மூதாதையர்களின் நற்செயல்கள்   மற்றும் நல்வினைகளின் பலனே என்று எண்ணினர். தொழில் முன்னேற்றம் அடைந்த போது அதற்கான காரணம் பெரியவர்களுடைய கர்ம வினைப்பலன் என்றே கூறினார். இது உண்மையே.     

நீங்கள் செய்யும் நல்ல செயல்கள் உங்களுக்கு சிறப்பு தகுதியை தரும். நீங்கள் ஏதாவது செய்யும் போது அது உங்களுக்கு அதை விட அதிகமாக கொண்டு வருகிறது. இயற்கை எப்போதுமே உங்களுக்கு கொடுக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு துன்பத்தை கொடுத்தால் உங்களுக்கு அது திரும்ப கிடைக்கும். நீங்கள் இன்பத்தை கொடுத்தால் நீங்கள் அதை திரும்ப பெறுவீர்கள். உங்களிடம் உள்ளதில் சிறிதளவை மற்றவர்களுக்கு கொடுத்தால் அது உங்களுக்கு பன்மடங்காக திரும்ப கிடைக்கும். ஆகவே, ஆன்மிகம் என்பது இந்த உலகத்தை விட்டு செல்வது குறித்தது அன்று, அது மனதை நிர்மலமாக வைத்துக் கொள்வதை பற்றியது ஆகும். 

குருதேவ்! பரிணாம வளர்ச்சியில் உயர்வது எப்படி மற்றும் அங்கே செல்வது எப்படி?

உங்கள்  வாழ்வில் அற்பமான விஷயங்கள் அவற்றின் முக்கியத்துவத்தை இழக்கும்போது. நீங்கள் விழித்தெழுந்து "ஒ! இவை யாவும் மிக அற்பமான விஷயங்கள்" என்று உணரும்போது, நீங்கள் மற்றவர்களை பற்றி அவர்கள் பின்னால் பேசுவதையும் புகார் செய்வதையும் நிறுத்தும்போது. இவையாவும் மனதின் சொற்ப தந்திரங்கள். நீங்கள் எதிர்மரையானவற்றை பற்றி சோர்வடையும் போதே நீங்கள் வளர தொடங்கிவிட்டீர்கள். இந்த உலகத்தை ஏற்றுக்கொள்ளும் போது, இன்னும் ஒருபடி மேலே சென்று விடுகிறீர்கள்.  

குருதேவ்! நம்பிக்கை ஒன்று தான் தேவையான விஷயம் என்றால், ஒருவர் கடவுளை கூட நம்பாமல் தன்னை மட்டுமே நம்புவது சரியானதே. அப்படியா?

ஆம்.ஆனால், தன்னம்பிக்கை உள்ள ஒருவரிடம், அவருக்குள்ளேயே கடவுள் என்று அழைக்கப்படும் ஒரு மேலான சக்தி இருக்கும். உங்களால் அதை அறிய முடியாது, ஆனால் கண்டிப்பாக நீங்கள் அந்த மேலான சக்தியை நம்புகிறீர்கள்.  

குருதேவ்! பக்தமீரா பகவான் கிருஷ்ணனின் பேரை சொல்லிக்கொண்டு, விஷத்தை அருந்தினார் என்பதும் அது அவருக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தவில்லை என்பதும் உண்மையா? இதன் பொருள் என்ன?

இந்த உலகத்தில் பல அதிசயங்கள் ஏற்படுகின்றன. இதுவும் ஒன்று. நீங்கள் அதை முயற்சி செய்ய வேண்டாம். நீங்களும் உங்களை மீராபாய் என்று வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம், நீங்கள் விஷத்தை அருந்த வேண்டாம். உடலை வளர செய்யவேண்டும் என்ற உள்ளுணர்வும், அவருக்குள் இருந்த அதீதமான அன்பு மற்றும் பிரகாசமும் அவருக்கு விஷம் ஒரு பொருட்டாக வில்லை, அது உள்ளே சென்று விட்டது.

குருதேவ்! மற்றவர்களுடைய அன்பையும், அக்கறையையும் எப்படி கையாள்வது? ஒரு சமயத்தில் அவை மிகவும் அதிகமாக இருப்பது போல தோன்றுகிறது.

சில சமயங்களில் அன்பை கொடுப்பது ஒரு புறம் இருக்க, அன்பை ஏற்றுக்கொள்ளுவதும் சிரமமாக உள்ளது. நீங்கள் ஒருவரிடம் "நான் உங்களை அவ்வளவு நேசிக்கிறேன்" என்று கூறும்போது, அவர்களுக்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியாது. அவர்கள் ஒரு வெளிர்ந்த முகத்தோடு "சரி நீங்கள் என்னை அவ்வளவு நேசிக்கிறீர்கள், இப்போது என்ன?". என்று நோக்குவார்கள்.
  
பெருந்தன்மை அடையாவிட்டாலோ அல்லது அடையும் வரையிலோ,மேலும் அனைத்துமே அன்பினால் உருவாக்கப்பட்டது என்னும் உணர்வு ஏற்படும் வரையிலோ, மனம் சிறு சிறு விஷயங்களுக்கு உள்ளேயே வசிக்கும் வழக்கத்தையே கொண்டிருக்கும். நான் அது தான் என்னும் உணர்வு உங்களை ஸ்திரமாக்கும். மேலும் அன்பை பெறக்கூடிய மற்றும் நிபந்தனை எதுவும் இன்றி திருப்பி அளிக்கக் கூடிய திறமையையும் தரும். அதனால் தான் ஞானம் மிகவும் முக்கியமானது, தன்னை அறியும் ஞானம். 

ஏன் இந்து கடவுள்களில் ஆண் உருவங்களை நீல வண்ணத்திலும், பெண் உருவங்களை அவ்வாறு அல்லாதும் சித்தரிகின்றனர்?

பெண்ணுருவ கடவுள்களும் நீல வண்ணத்தில் சித்தரிக்கப்படுகின்றனர். சில சமயங்களில் துர்க்கை நீல வண்ணத்தில் சித்தரிக்கப்படுகிறார். வழக்கமாக  பெண் கடவுள்கள் பூமி, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றில் இருந்து உருவாக்கப்படுகிறார்கள். நீல வண்ணம் வெளிப்படைத்தன்மை, உள்ளிருக்கும் அகன்ற பரப்பு, முடிவற்றதன்மை ஆகியவற்றின் அடையாளம் ஆகும்.