மனதிலிருந்து விடுதலை

டிசம்பர் 30, 2013


பாத் அண்டோகஸ்ட், ஜெர்மனி 




சிறை குற்றவாளிகள் 5000 பேர் வாழும் கலை பயிற்சியை முடித்து விட்டதாக இன்று இந்தியாவிலிருந்து எனக்கு செய்தி வந்துள்ளது. செய்தி தாளில், இதைப் பற்றி ஒரு முழுப் பக்கத்திற்கு செய்தியும், அவர்களின் அனுபவங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

நமது கட்டுத்தளைக்கும், விடுதலைக்கும் நமது மனமே காரணம். நமது மனம் நம்முடைய நெருங்கிய நண்பனும் தீய விரோதியும் ஆகும். ஆகவே மனத்திலிருந்து விடுதலை என்பது தான் நாம் பார்க்க வேண்டியது. மனம் எப்போதும் தீர்ப்பளித்து கொண்டும், வேறுபாடு கண்டறிந்து கொண்டும் இருக்கின்றது. சில சமயங்களில் நாம் நம் மனதிடம், "சற்று இளைப்பாறு'' என்று கூற வேண்டும். எப்போது மனம் இளைப்பாறி, நீங்கள் விழித்து கொண்டிருக்கின்றீர்களோ அது தான் தியானம். சாதாரணமாக மனம் பல சண்டித்தனங்கள் செய்து கொண்டு நீங்கள் உறங்கிக் கொண்டிருந்தால் அது அறியாமை. மனம் ஒய்வு எடுத்துக் கொண்டு நீங்கள் விழிப்புடன் இருந்தால் அது ஞானம். அது தான் தியானம், அது தான் ஆனந்தம்.

எப்போதெல்லாம், நீங்கள் ஆனந்தத்தை அனுபவக்கின்றீர்களோ அப்போது என்ன நிகழ்கின்றது? சதா அலட்டிகொண்டிருக்கும் மனம் அதை நிறுத்தி, அசைவற்றதாகின்றது, அல்லது ஒய்வு அடைகின்றது. அப்போது நாம் மகிழ்ச்சியை உணருகின்றோம். மனம் அறிவு இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. அவை இருவேறு வகைப் பட்டவை. அறிவு என்பது காரணக் கூறுகள், வேறுபாடுகள், தீர்ப்புகள், புரிதல் இவற்றுக்குதவுகின்றது. அது தேவையானது. காரணக்கூறுகள் மூலம் நம்பிக்கை அடைகின்றோம். நம்பிக்கை என்பது தெரிந்து கொள்ள முடியாதது, காரணக்கூறுகள் தெரிந்து கொள்ளக் கூடியதில் சுழன்று கொண்டிருப்பவை.  அது திருப்பி திருப்பிக் கூறுவது.   நம்பிக்கை என்பது அறிவுக்கு எட்டாததை நோக்கி அடியெடுத்து வைப்பது. வாழ்க்கையில் இரண்டுமே அவசியம். நம்பிக்கை என்பது ஒரு வீரச்செயல், ஏனெனில் 
அது அறிவுக்கு எட்டாதது.

மனிதர்கள் ராக்கெட்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு, அல்லது சந்திரனுக்கு விண்வெளியில் செல்கின்றார்கள். திரும்பி வருவோம் என்னும் நம்பிக்கையில் செல்லுகின்றார்கள்.ஆகவே நம்பிக்கை என்பது தெரியாததை நோக்கி செல்வது. மக்கள், வானவெளியில் தாம் பத்திரமாக இருப்போம் என்னும் நம்பிக்கையுடன் முக்குளிக்கின்றார்கள். நம்பிக்கை இருப்பதால் அத்தகைய வீரச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். புதிய கண்டுபிடிப்புக்களுக்காக  அமேசான் காடுகளில் மலையேறிச் செல்லுகின்றார்கள். அத்தகைய ஆய்வுப் பயணங்களுக்கு நம்பிக்கை தேவை. அது போன்று நமது உள் இடத்தை ஆய்வது தியானம், அதற்கும் நம்பிக்கை தேவை. நம்பிக்கையுடன் தான் அது என்ன என்று கண்டறிய முயல்கின்றோம். தமிழ் நாட்டில் ஒரு நகைச் சுவை நடிகர் இருந்தார். அவருக்கு சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் விசிறிகள் உண்டு. அனைவருக்கும் தெரிந்தவர். தென் இந்தியாவில் மதுரையில் அவர் எனக்காக ஒரு பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அவர் கூறியது பின்வருமாறு:


ஒருவர் உடல் நலமற்று டாக்டரிடம் சென்றார். டாக்டர் அவரைப் பரிசோதித்து விட்டு உங்களுக்கு ஒன்றும் இல்லை என்றார். ஆனால் அவரோ "இல்லை நான் நோயுற்று இருக்கின்றேன் என்றார். டாக்டர் மீண்டும், இல்லை உங்களுக்கு எதுவுமே இல்லை மிக நன்றாகவே இருக்கின்றீர்கள் என்று கூறினார். அதை அவர் மறுத்து, இல்லை டாக்டர் எனக்கு ஏதேனும் மருத்துவம் செய்யுங்கள் நான் நோயுற்று இருக்கின்றேன் என்றே கூறினார். உடனே டாக்டர், சரி! நகரத்தில் ஒரு சர்க்கஸ் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது. நீங்கள் அங்கு சென்று அங்குள்ள கோமாளியை சற்று அங்கு அமர்ந்திருந்து கண்டு ரசியுங்கள். உங்களுடைய அத்தனை பிரச்சினைகளும் சரியாகி விடும் என்று கூறினார். அதற்கு அம்மனிதர் "டாக்டர் ! நான் தான் அந்தக் கோமாளி. அனைவரையும் நான் சிரிக்க வைக்கிறேன் ஆனால் நான் மகிழ்ச்சியற்று இருக்கின்றேன் என்று கூறினார். நகைச் சுவை நடிகர் என்னிடம், "இது என்னுடைய உண்மைக் கதை குருதேவ்! நான் அனைவரையும் சிரிக்க வைக்கின்றேன், ஆனால் நான் உங்களுடைய முன்னிலையில், இங்கு வந்து தியானம் செய்யும் போது தான் மகிழ்வாக உணருகின்றேன்" என்று கூறினார்.

இதை மிக நல்ல, கள்ளமில்லா விதத்தில் அவர் என்னிடம் கூறினார். நகைச்சுவையாளர்கள் மற்றவர்களை சிரிக்க வைத்தாலும், அவர்தம் உளஆவல் ஆழ்ந்த தியானத்தின் மூலமே திருப்தி அடைகின்றது.  ஞானமும் தியானமும் ஆன்மாவிற்கு உணவு. ஆகவே நாம் வரும் இரு நாட்களில்  நிறைய தியானம் செய்வோம். சில புதிய  நல்ல  தியானங்கள் உருவாகி உள்ளன. அவற்றைச் செய்வோம். இப்புத்தாண்டில்  அந்த புதிய தியானங்கள் உங்களுக்குப் பரிசு. நாம் செய்யலாம். நம்முடைய பயிற்சிக்கும் ஒரு புதிய பெயர் அளித்திருக்கின்றேன். நமது பயிற்சிகள் வாழும்கலை மகிழ்ச்சிப் பயிற்சி என்றும், நமது மையங்கள் மகிழ்ச்சி மையங்கள் என்றும் அழைக்கப்படும். இதை கூறும் போது எனக்கு சற்றுப் பதற்றமாக இருக்கின்றது. அதாவது நீங்கள் அனைவரும் இந்த மையங்களை மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்வோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாழும் கலையானது. பல்வேறு கூறுகள் நிறைந்த நிறுவனம். ஆட்டுமந்தை போன்று ஒரே விதமானவர்கள் அடங்கிய மரபுகோட்பாடு உடையது அன்று. இதிலுள்ளவர்கள் ஒவ்வொருவரும் வேறுபாடானவர்கள். நம்முடைய வளர்ச்சியுடன்,வேறுபாடுகளும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இதன் முக்கியத்துவமே, இத்தகைய வேற்றுமையில் ஒற்றுமையை காப்பது தான். இது ஒரு சவால். வேறுபாடுகளின் காரணமாக இந்த சவாலை நாம் ஏற்று வெற்றி காண வேண்டியது அவசியம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருந்த போதிலும் அனைவரையும் ஒருங்கிணைப்பது உண்மையான அன்பு. இதை நாம் நன்கு உணர வேண்டும். அன்பு என்னும் நூல் அனைவரையும் பின்னிப் பிணைப்பதை கண்டு உணருங்கள். அந்த தூய அன்பை கண்டு உணர்ந்து மரியாதை செய்யுங்கள். பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. நாம் என்ன செய்கின்றோம்? சிலர் நன்னடத்தை உள்ளவர்கள் சிலர் அவ்வாறு இல்லாதவர்கள். நம்மில் சிலர் பண்பும் கொடையும் நிறைந்தவர்கள். சிலர் ஆத்திரம் மிக்கவர்கள், கொடாதவர்கள். என்ன செய்ய முடியும்

என்னிடம் சிலர்," ஏன் இத்தகைய பண்பில்லாத முரட்டுத்தனமானவர்களை சகித்துக் கொள்ளுகின்றீர்கள்? என்று கேட்கின்றார்கள்.என்னுடைய விடை,"அவர்களை நான் இங்கு வைத்துக் கொண்டிருப்பதன் காரணம் என்னவென்றால், அதன் மூலம் உலகம் ஒரு பத்திரமான இடமாக இருக்கும் என்பது தான்" அவர்களை நான் இங்கிருந்து போகச் சொல்லி விட்டால், அவர்கள் எங்கு செல்வார்கள்? எப்போது திருந்துவார்கள்? எனவே இங்கு மறுப்பு என்பதே கிடையாது. அதுவே ஒரு பிரச்சினைதான். சிலர் கடினமானவர்கள். எளிதில் கற்பதில்லை. எதையும் கவனித்து கேட்பதில்லை. இதெல்லாம் நமது பிரச்சினைகள் ஆனால் அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு சிரித்து மகிழ்ந்து கொண்டிருப்பது தான் எம் பலம். எல்லாமே எளிதாகவும் சரியாகவும் இருப்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. இங்கு யார் வேண்டுமானாலும் புன்முறுவலுடன் இருக்கலாம், சிரிக்கலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம். பல்வேறு விதமான  அறிவுத் திறன் ,உணர்ச்சித் தளங்கள் உள்ளவர்கள் இருந்தாலும் மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் இது வரை எமது வெற்றி ! (கண்ணேறு படாமல் இருக்கட்டும்)எங்கள் மகிழ்ச்சியை நாங்கள் இழந்ததே இல்லை.

நமது மகிழ்ச்சி மையங்கள் உண்மையில் மகிழ்ச்சியாக இருத்தல் வேண்டும்.புத்தாண்டிலிருந்து "மகிழ்ச்சி மையங்கள்" அறிக்கைப் பலகை கூட போட்டு விடலாம். யாருமே நான் மகிழ்ச்சி மையத்திற்குச் செல்ல விரும்ப வில்லை என்று கூற முடியாது! நான் மூச்சு விட விரும்பவில்லை என்று எப்படி யாரும் கூற மாட்டார்களோ அது போன்று யாருமே நான் மகிழ்ச்சி மையத்திற்குச் செல்ல விரும்பவில்லை என்று கூற முடியாது!   மகிழ்ச்சியின் மையத்தில் இருப்பதே மகிழ்ச்சி மையம். பலர் மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால் அவர்கள் மையம் கொண்டிருக்க மாட்டார்கள். அவ்வாறு மையம் கொண்டிராத போது மகிழ்ச்சி நீடித்திருக்காது. யாரோ ஒருவர் ,''நான் மையமாக இருக்கின்றேன் ஆனால் மகிழ்ச்சியாக இல்லை" என்று கூறினார். அப்போது மைய்யப்படுத்திக் கொண்டு என்ன பயன்? மகிழ்ச்சி மையங்கள் என்பவை உங்களை மையமாக்கி மகிழ்ச்சியாக்குபவை. இதுதான் நான் உங்கள் முன் வைக்கும் கருத்துரு ஆகும்.