முறையீடு செய்வதை நிறுத்துவீர்களா?

27 டிசம்பர் 2013

போன், வடகரோலினா

கொண்டாட்டம், பாடுதல், ஆடுதல், தியானம் இவற்றின் போது கேள்விகள் எழுவதில்லை. வாழ்வின் நோக்கம் என்ன? இவற்றுக்கெல்லாம் பொருள் என்ன? என்பது போன்ற கேள்விகள் எல்லாம் "இது" இல்லாதபொழுதோ, அல்லது "இது" மறைந்திருக்கும் பொழுதோ தாம் எழுகின்றன. 

கடவுளுக்கு ஐந்து கடமைகள் உள்ளன. படைத்தல், காத்தல், கரைதல், ஆசீர்வதித்தல், மற்றும் மறைத்தல். (கடவுள் எல்லாவற்றையும் காப்பவராயினும்,வெளிப்படையாக்குவதில்லை). கடவுளின் பண்பு சத் சித் ஆனந்தா. சத் என்றால் உண்மை, சித் என்பது விழிப்புணர்வு, ஆனந்தா என்றால் பேரின்பம். கடவுளுக்கு நீங்கள் நெருங்கியவர் என்பதை  எவ்வாறு கண்டறிவீர்கள்? கடவுளுடன் இருக்கும் நிலையை நெருங்கும் போது நீங்கள் மிகுந்த பேரின்பத்துடனும், விழிப்புணர்வுடனும் இருக்கின்றீர்கள். 

மதுமயக்க நிலையில் ஏற்படும் நினைவற்ற நிலையன்று, பேரின்ப மயக்கநிலை. இது வேறுபட்டது. உண்மை (சத்) இதை மறுக்க முடியாது. நீங்கள் "அங்கு" இருப்பதை எவரேனும் மறுக்க முடியுமா? யாரேனும்," நான் அங்கு இல்லை" என்று கூற முடியுமா? அங்கு தான் நீங்கள் இருக்கின்றீர்கள்" என்று தெரியும். சில சமயங்களில் "நான் எதையும் நம்ப மாட்டேன்" என்று சிலர் கூறுகின்றார்கள். நீங்கள் எதையும் நம்ப மாட்டீர்களா? நீங்கள் கூறுவதை நம்புகின்றீர்களா? நீங்கள் கூறுவதையாவது நீங்கள் நம்ப, அங்குதான் இருக்க வேண்டும்.உங்கள் கூற்றையே  நீங்கள் நம்ப வில்லைஎன்றால் நீங்கள் கூறுவது செல்லாதது ஆகும். இது புலனாகின்றதா?

குருதேவ், சில சமயங்களில் ஏன் குரு தனது சீடர்களைப் பொருட்படுத்தாமல் இருக்கின்றார்கள்? ஒரு குருவால் தன்னுடைய சீடனைப் புறக்கணித்து விட, அல்லது சலிப்புற்று விட முடியுமா?

குருதேவ்: நீங்கள் மிக முக்கியமானவர் என்று எண்ணிக் கொண்டால் அப்போது நீங்கள் பொருட்படுத்தப்படாமல் இருப்பீர்கள். புரிந்ததா? புறக்கணிப்பு என்பதற்கு இடமேயில்லை. காற்று உங்களை புறக்கணிக்கின்றதா? சூரியன் உங்களைப் புறக்கணிக்கின்றதாபுறக்கணிப்பு என்பதே  கிடையாது. அவ்வாறு உணர்ந்தால், அது மனதில் உள்ள பிரச்சினை. கவலை கொள்வதற்கும், முறையிடுவதற்கும் எதுவும் இல்லையென்றால் மனமானது , கவலை, மற்றும் முறையீட்டுக்கு எதையாவது, தானே உருவாக்கும். இது மிக விசித்திரமான உண்மையாகும்.

வருத்திக்கொள்ள எதுவும் இல்லையென்றால், பத்து நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு, அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவருடன் நிகழ்ந்த நிகழ்வு ஆகியவற்றை நினைவு கூர்ந்து அது அநீதி என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள். இதுதான் மனதின் இயல்பு. இதன் மூலம் நீங்கள் பலியான விழிப்புணர்வுக்குள் செல்கின்றீர்கள். இதில் கவனமாக இருக்க வேண்டும். ஆன்மீகப் பாதையில் இரண்டு விஷயங்கள் தீங்கிழைக்கக் கூடியவை:

1. குற்ற உணர்ச்சி: முற்காலத்தில், உங்களை குற்றவாளியாக உணர வைத்திருக்கின்றது. இத்தகைய குற்றவாளியாக உணரும் நிலை உங்களை ஆன்மீகத்திலிருந்து விலக்கிக் கீழே தள்ளுகின்றது. உங்கள் மனதை ஆட்டுவித்து, ஆழ்ந்த குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. துரதிர்ஷ்டவசமாக பலர் இந்த குற்ற உணர்வுடனேயே வாழ்ந்து மடிந்து விட்டார்கள். இக்குற்ற உணர்வு அவர்களது சிறு மனதிலிருந்து வெளிவர அனுமதிக்கவில்லை. அம்மக்கள், இறைமையுடன் ஒன்றுதல், ஆழமான அமைதி, இன்பம் இவற்றை உணராமலேயே வாழ்ந்திருக்கிறார்கள்.

ஏசுநாதர் "நானும் என் தந்தையும் ஒன்றே (அதாவது இறைமையுடன் ஒன்றியிருத்தல்) என்று கூறினார். ஒருபோதும், அவர், "நீ குற்றவாளி, கழிவிரக்கம் கொள்" என்று கூறவில்லை.உண்மையில் ஏசுநாதர் யாரும் பாபம் செய்தவர் என்று கருத்துக்கு எதிராகவே இருந்தார். பிற்காலத்தில், மக்களை அச்சமயத்திற்குள் இழுத்துக் கொள்ளும் பொருட்டு, சமயவாதிகள் குற்ற உணர்வை கருவியாகப் பயன்படுத்தினர்.

2. பலியான உணர்வு: ஒ! நான் பலியாகி விட்டேன். நான் தான் சரி, நீ எனக்கு விளக்கம் தர வேண்டும்.வேறு எதுவும் இல்லாவிட்டாலும் விளக்கமாகிலும் தர வேண்டும். மனமானது இரையாகி விட்டதாக அலை பாய்ந்து கொண்டிருக்கின்றது. இத்தகைய பலியான உணர்வு குற்ற உணர்வுக்கு முற்றிலும் மறு புறத்தில் உள்ளது.  இது மனித இனம் இரையாகி விட்ட மிகப் பெரிய பிரச்சினை ஆகும். குற்ற உணர்வு, பலியான உணர்வு இரண்டுமே ஆன்மீகப் பாதையில் தீங்கிழைக்க கூடியவை ஆகும். அவை உங்களை வருத்துபவை. பலியாகி விட்டதாக உணர்ந்தால், உங்களுக்கு சரியான ஓய்வு கிட்டாது. அழுது கொண்டோ, அல்லது பிறர் மீது கோபப் பட்டுக் கொண்டோ இருப்பீர்கள்.

குருதேவ், அஷ்ட வக்கிர கீதையில் நாம் செயல் முதல்வர் அல்ல என்று அறிகின்றோம்.சுய முயற்சி என்பதுடன் இது முரண்பட வில்லையா? முக்கியமாக தியானத்தில் சுயமுயற்சி எவ்வாறு பயன் படுத்தப்பட வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்துங்கள்.

குருதேவ்: நூறு சதவீதம் உங்கள் சுய முயற்சியை கொடுத்தால் தான் நீங்கள் செயல் முதல்வர் அல்ல என்பதை தெளிவாக அறிந்து கொள்வீர்கள். நீங்கள் கைகளைக் கட்டிக் கொண்டு எதுவும் செய்யாமலிருந்தால் நான் செயல்முதல்வன் அல்ல என்பதை ஒருபோதும் உணர மாட்டீர்கள்.
தியானம் முயற்சியற்றது. ஆயினும் தியானத்திற்குள் நுழைய சிறிது முயற்சி எடுக்க வேண்டும். நேற்று, முதலில் நாம் சற்று முயற்சி எடுத்தோம், கவனித்தீர்களா? முதுகில் தோள்களில் சற்று வலி ஏற்பட்டது, சில நிமிஷங்களுக்குப் பின்னர் அவையெல்லாம் மறைந்து விட்டன. முதலில் சிறிது முயற்சி தேவை, பின்னர் விட்டு விடுங்கள். அஷ்ட வக்கிரா (கீதை) நகர்ந்து செல்வது அல்லது அல்லது ராக்கெட்டுக்களுக்கிடையே பறப்பது போன்றதாகும்.

பறப்பதில் பல விதங்கள் உண்டு. வரைபடத்தைப் பார்த்து, எங்கு செல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்ளுவது ஒரு வழி, ஆகாய வாணம் போன்று நேராக மூலத்தை அடைவது வேறொரு வழி. அது போன்று, ஞானத்திற்கும் பல படிகள்  உண்டு. அது தான் நமது இலக்கியப் பாரம்பர்யத்தின் செழுமை. அது, தன் சிறப்பான செழுமையால், புதிதாகத் துவங்குபவரிலிருந்து சிறந்த விஞ்ஞானி வரையில் யாருக்கு வேண்டுமானாலும் வழி கட்ட முடியும். ஒவ்வொருவருக்கும் வழங்குவதற்கு அதில் ஏதேனும் உண்டு.( பழங்காலத்தில், எந்த தலைமுறைக்கும் ஞானம் மறுக்கப்படவில்லை, நீங்கள் அதை தட்டி எடுக்க வில்லையெனில்  அது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை, ஞானம் அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாகவே இருந்திருக்கின்றது.)

இந்த ஞானத்தில் ஆழமாக செல்லும் போது மனத் தடுமாற்றத்தை உணர்ந்தறிவீர்கள். உங்கள் ஆத்மாவை மற்றும் விழிப்புணர்வை அறியும் போது சக்திச் சொட்டுப் பொறியியல் பற்றி முழுமையாக  அறிய முடியும். தற்காலத்தில் விஞ்ஞானிகள் கூறுவது என்னவென்றால் ஒரே ஒரு சக்திப் பரப்பு மட்டுமே உள்ளது, இதையேதான் பண்டையக் கால மக்களும் கூறினார்கள். கடவுள் என்பது தனியொரு மனிதர் கிடையாது, ஆயினும் கடவுளை அவன் அல்லது அவள் என்று அழைக்கலாம், ஏனெனில் அது விழிப்புணர்வு, உயிரோட்டமுள்ளது. கடவுள் ஒரு சடப்பொருள் கிடையாது, உயிரோட்டமுள்ள சக்தி ஆகும். மனம் என்பதை அவன், அவள், அது என்று அழைக்கலாம். மனதில் சிறிய மனம் பெரிய மனம் என்று உண்டு. பெரிய மனம் என்பது உளதாம் தன்மை, அதனுள் சிறு மனங்கள் உள்ளன.

நீங்கள் ஆழ்ந்த  தியானத்தில் செல்லும் போது, பாலின வேறுபாடு உள்ளதா என்ன? பாலினம் என்பது உடலுடன் மட்டுமே தொடர்புள்ளது. உயிரோட்டத்தில் ஆண் பெண், என்பதே கிடையாது. அத்தகைய அடையாளத்தை தாண்டிச் செல்கின்றீர்கள். இறைமை அந்த அடையாளத்திற்கு அப்பாற்பட்டது. அதனால் தான் கடவுள் தனி மனித உருவில் அமர்ந்திருப்பவர் அல்ல என்று அறிகிறோம். நிறையப் பேர் கடவுள் உருக்கொண்டு அமர்ந்திருப்பது போன்றும், அவருடன் தாம் பேசுவது போன்றும் கோட்படுத்தி கொள்கின்றனர். அது உங்கள் மனதுடன் நீங்களே பேசிக் கொள்வது ஆகும்.

கடவுளின் அண்மையை உணர முடியும். நீங்களே  இறைமையாக முடியும். உணருதல் இரண்டாம் பட்சம், இருத்தலே முதன்மையானது. இதையன்றி எதுவும் இல்லை என அறிதல், இப்போது என்ன உள்ளதோ அதுவே இருக்கின்றது. அதாவது உண்மை, இருத்தல், பேரின்பம்) மனதில் கடந்து போன எண்ணங்கள், முடிந்து போன தொடர்புகள், நடந்து முடிந்த நிகழ்வுகள் இவையனைத்தும் தற்போது இல்லை. இருக்கின்றனவா என்ன? அவையனைத்தும், நூலகத்திலுள்ள ஒளி நாடாக்களில் தாம் உள்ளன. யாரும் அவற்றைப் பார்ப்பதில்லை. இந்த க்ஷணத்தில் ஆயிரக்கணக்கான அலைவரிசைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஏழு நூறு கோடி மனங்களில் நூறாயிரம் கோடி எண்ணங்கள் வெளியாகின்றன. அனைத்தும் அடுத்த க்ஷணம் போய் விடுகின்றன. விழித்தெழுந்து படைப்பின் பேராற்றலை காண்கின்றீர்களா? நூறு கோடிக்கணக்கான கிரகங்கள் நூறுகோடிக் கணக்கான நட்சத்திரங்கள் உள்ள பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் ஒரு மிகச் சின்னஞ்சிறிய  சூரிய மண்டலத்தில் உள்ளோம்.

பண்டைய காலத்தில்,அனந்த வை லோக" எண்ணிக் கணக்கிட முடியாத அளவுக்கு எண்ணிலடங்கா உலகங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய பேரளவு மனதை திடுக்கிட வைத்து நிகழ் காலத்திற்கு அழைத்து வருகின்றது. எது நிகழ்ந்து கொண்டிருக்கின்றதோ அதுவே சரி மற்றவை அனைத்தும் விளையாட்டு. அதுதான் அஷ்ட வக்கிர கீதையின் சாரம்.  எல்லாமே கடலின் அலைகள் போன்றவைஎப்போதாவது கடலின் அலைகளைக் கணக்கிட முடிந்திருக்கின்றதா? கடலில் கரையில் மட்டுமின்றி  அனைத்துப் பகுதிகளிலும் அலைகள் உள்ளன. இந்த க்ஷணத்தில் எத்தனை அலைகள் என்பது ஒரு புறம் இருக்கட்டும், படைப்பின் துவக்கத்திலிருந்து எத்தனை அலைகள் எழுந்துள்ளனஅது போன்று தனிச் சிறப்புக்குறிய இவையனைத்தும் விழிப்புணர்வு என்னும் மாபெரும் கடலில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, இப்பெருங்கடலே சத் சித் ஆனந்தா.

குருதேவ், பிரம்மா படைப்பவர், விஷ்ணு காப்பவர் சிவா கரைப்பவர் என்பதானால், யார் மறைந்திருப்பவர்? யார் ஆசீர்வதிப்பவர்?

குருதேவ்:  ஐந்து செயல்களும் ஒரே கடவுளிடம் உள்ளது. அனைவரும் ஆசீர்வதிக்கின்றனர், நீங்கள் என்ன பெயரிட்டு அவரை அழைக்கின்றீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. கடவுள் இவ்வுலகனைத்தையும் காக்கின்றார். நாம் விரும்புவதெல்லாம் என்னவென்றால், அவர் அதை இன்னும் சற்றே வெளிப்படையாக்கினால் உங்கள் கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள் என்பது தான்.

குருதேவ், குண்டலினி சக்தி என்பது என்ன? காலி மற்றும் வெற்றிட தியானத்தின் போது அது எழுந்தால் என்ன ஆகும்?

குருதேவ்: குண்ட என்றால் மண்பானை. குண்டலினி என்பது பானையில் ஏற்படும் சக்தி. உடல் பானைக்கு ஒப்பானது. உடலின் சக்தி எழும்போது, பல அவதாரங்களை எடுக்கின்றது. பல்வேறு விதமான உணர்ச்சிகளும் ஒரு அழகான சக்தியின் வெளிப்பாடு ஆகும். ஒரே சக்தி உடலின் பல பாகங்களில் அவதரிக்கின்றது. முதுகுத் தண்டின் கீழ் பகுதியில் அது சோம்பல் மற்றும் உற்சாகம். சற்று மேலேறி, அது படைப்பாற்றல் (பாலுணர்வு) ஆகின்றது. அதற்கும் சற்று மேலே, அச்சக்தி மகிழ்ச்சி அல்லது தயாளம் அல்லது பொறாமை ஆக அவதரிக்கின்றது. இதயப் பகுதிக்குச் செல்லும்போது அன்பு, பயம் அல்லது வெறுப்பு எனத் தோன்றுகின்றது. பின்னர் தொண்டையில் அந்த சக்தி துக்கம் அல்லது நன்றியுணர்வு என வெளிப்படுகின்றது.