நல்ல காலமாயினும், கெட்ட காலமாயினும் வாழ்க்கை முழுவதுமே ஒரு வாய்ப்பு ஆகும்.

26 டிசம்பர், 2013

போன், வட கரோலினா



குருதேவ், சிவன் முழுநிறைவானவர். ஆயினும், ஏன் அவர் பார்வதியை மணந்து கொண்டார்?

குருதேவ்: கடவுள் நிறைவானவர், ஏன் இவ்வுலகை படைத்தார் என்று கேட்பது போலுள்ளது. ஒரு சிலந்தி நிறைவானது தான் ஆயினும் அது தன்னுடைய உமிழ்நீரினாலேயே ஒரு வலையைப் பின்னி அவ்வலையுனுள்ளேயே நகர்ந்து கொண்டிருக்கின்றது. சமுத்திரத்தில் அலைகள் எழுகின்றன, அவை எங்கே செல்கின்றன? வெளியே எங்கேனும் செல்கின்றனவாஏன் அவை எழுகின்றன? புரிந்ததாசமுத்திரம் முழு நிறைவானது தான், ஆயினும் அது அலைகளை எழுவிக்கின்றது.

சிவனும் சக்தியும் ஒன்றே. சிவன் பாதி, சக்தி பாதி என்னும் அர்த்தநாரீஸ்வரர் கோட்பாடு அதுவே ஆகும். நம் ஒவ்வொருவருக்குள்ளும்  அது உண்மையாகவே உள்ளது. தாயின் உயிர் அணுவும், தந்தையின் உயிர்  அணுவும் அதாவது ஆண், பெண் என்னும் இரு தன்மைகளும் சேர்ந்தாலே ஒருவர் முழு நிறைவு பெற முடியும். உடல்ரீதியாக நீங்கள் பெண்ணாக இருந்தாலும், உங்கள் தந்தையின் ஆண் தன்மை உங்களுள்ளே இருக்கும்.

பெண்களெல்லாரும், பெண்கள் வழியாகவும், ஆண்கள்  எல்லோரும் ஆண்கள் வழியாகவும் பிறக்கின்றார்களா என்ன? இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஆண் மற்றும் பெண் தன்மைகள் உள்ளன. சிவனும் சக்தியும் ஒன்றே, ஆயினும் அவர்கள் வேறுபட்டவர்கள். பார்வதி என்பதன் பொருள் சக்தி (தெளிவாகத் தெரிவிக்கப் பட்ட உலகம் அதாவது காற்று, நிலம், நெருப்பு, நீர், மனம், தான் எனும் அகந்தை, மற்றும் நினைவுத் திறன்), சிவன் வெளிப்படையாக தெரிவிக்கப் படாதவர். உருவமும் உருவில்லாமையும் மணம்  புரிதல் என்பது, உருவில்லாத  உங்கள் மனமும் உருவமுடைய உங்கள்  உடலும்  இணைந்திருப்பது போன்றது ஆகும்.

ஆயினும் சக்திச் சொட்டுப் பொறியியலின்படி பார்த்தால் இவை அனைத்துமே அலைகோவை தான். ஆண் பெண் என்று எதுவும் கிடையாது. இருந்த போதிலும், குழந்தை வேண்டும் என்று வரும்போது சக்திச் சொட்டுப் பொறியியலின்படி எல்லாமே ஒன்று என்று கூற முடியாது! அங்கு அது வேறு தான். உணருந்த வேண்டும் என்று விரும்பும் போது  சக்திச் சொட்டுப் பொறியியல் வேலை செய்யாது. எதை உண்ண வேண்டும் எதை உண்ணக் கூடாது என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும் அல்லவா? வேறுபாடுகள் நிறைந்த உலகமும், ஒன்றேயான உலகமும் இணைந்தே இயங்குகின்றன. ஆகவேதான் உருவில்லா சிவதத்துவம்  ஈடு இணையற்றது, இரண்டென்பதே  இல்லைஅது ஒன்றேயான முழுமைபெற்றது என்று கூறப்படுகின்றது.

சிவன் என்பது ஆண் தன்மை அதாவது விழிப்புணர்வு, பெண் தன்மை என்பது உருத்தெரியும்  இவ்வுலகம் அல்லது உடல் ஆகும். நீங்கள் உடல் மற்றும் மனம் பற்றிப் பேசும் போது, இரண்டு விஷயங்கள் உள்ளன. உருவில்லாதது, உருத்தெரியக்  கூடியது. ஆனால் அணு மற்றும் சக்திச் சொட்டுப் பொறியியலின் அலைகோவை பற்றி பேசும் போது எல்லாமே ஒரே ஒரு அதிர்வலை தான்.

தொலைக்காட்சியை பார்க்கும்போது ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். அதை மற்றொரு கோணத்தில் எடுத்துக் கொண்டால், நீங்கள் மின்னணு அலைகளை உணர்ந்து கொண்டிருக்கின்றீர்கள். நிகழ்ச்சியின் மூலம் ஒரு புறம் காட்சியின் செய்தியை அறிகின்றீர்கள் மற்றொரு புறம் இது நிகழ்கின்றது. இவை வேறுபட்டவை அல்ல இயற்கையிலேயே ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றது.

இது சற்று விஞ்ஞான ரீதியானது; புரிய வில்லையென்றால் விட்டு விடுங்கள் ஏதோ ஒரு காலத்தில் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் இயற்பியல் மாணவராகவோ, அல்லது அதில் விருப்பம் உள்ளவராகவோ இருந்தால் இதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அக்கால இந்தியாவில் ஒருவர் முதலில் பஞ்சபூதங்களை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். ஆத்மா, கடவுள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம், பின்னால் பார்த்துக் கொள்ளலாம், முதலில் பஞ்ச பூதங்கள் அல்லது ஐந்து ஆக்ககூறுகள் ,அவற்றின் வரிசைப்பாடுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரு ஆஸ்ரமத்திற்கு ஒரு அணு விஞ்ஞானி வந்திருந்தார், அப்போது ஒரு சத்சங்கத்தில் நான் ஐந்து ஆக்ககூறுகளைப் பற்றிப் பேசினேன். அப்போது அவர், ஐந்தாவது கூறினைப் பற்றி, யாருக்கும் தெரியாது, விஞ்ஞானிகள் அண்மையில் தான் அந்த ஐந்தாவது கூறினைக் கண்டு பிடித்திருக்கின்றார்கள் என்று கூறினார். கிரேக்கர்களுக்கும் நான்கு கூறுகளை பற்றித் தான் தெரியும் என்றார்.

நான் அவரிடம் இந்திய மெய்யியலை அவர் அறியவில்லை என்றேன். பண்டைய காலத்திலிருந்தே இந்தியாவில் ஐந்து ஆக்கக் கூறுகள் பற்றி பேசப்பட்டிருக்கின்றது. மூன்று விதமான வெற்றிடங்கள் உள்ளன என்றும் கூறினேன் அவர் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து விட்டார். அவரிடம் நியூயார்க் பல்கலைக் கழக அச்சக வெளியீடான யோக வசிஷ்டம் நூலைப் படிக்குமாறு கூறினேன். இந்த ஞானத் தகவல் அதில் உள்ளது. எனவே, முதலில் ஐந்து ஆக்கக்கூறுகளை புரிந்து அறிந்து கொண்டு பின்னரே மனம், அறிவு தான் என்னும் அகந்தை ஆகியவற்றுக்கு செல்ல வேண்டும், அதற்கும் பின்னரே ஆத்மா மற்றும் இறைவன் பற்றி அறிய வேண்டும் அவசரப்பட்டுத் தேடாதீர்கள்  என்று அக்காலத்தில் கூறினர்.

குருதேவ்! நம்முடைய நற்பண்புகளும், செயல்திறமைகளும் நம்முடையவை அல்ல, அவை தேவதைகளின் விளையாட்டு என்றால், அந்த தேவதைகள் தனி  அடையாளம் உள்ளவர்களா அல்லது நம்முடைய ஒரு பகுதியா?

குருதேவ்: என்னுடைய சொந்தக்காற்று என்று ஏதேனும் இருக்கின்றதா? இது என்னுடைய காற்று என்று கூறுவீர்களா? நுட்பமான "என்னுடைய" என்பது அங்கில்லை. இன்னும் நுட்பமாக அறிந்தால், ஒரே களம் தான்,  அதையும் அதன் இயற்கை பண்பினையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளுகின்றீர்கள். இந்தச் செய்தியினையும்,கோட்பாடுகளையும் ஒரு புறம் வையுங்கள். ஒன்றியிருத்தலில் உங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள். அது ஆழ்ந்த தியானத்தில் தானாகவே நிகழும்.

குருதேவ்! மனம் என்பதன் குறிக்கோள்  என்ன? கட்டுத்தளையும் வருத்தமுமே அதனுடன் இணைந்தவையாகக் காண்கின்றேன்.  நமது உயிருக்கு அந்த படிநிலை தேவையா?

குருதேவ்: இருக்கட்டுமே! மனத்தைக் கையாளும் ரகசியமே அது. மனதிலிருந்து விடுபட வேண்டும் என்று முனைந்தால் அது அரக்கனாகி விடும். அதை இருக்க அனுமதித்தால் அது மறைந்து விடும்.!
உங்கள் மனதில் ஏற்படும் சூழ்ச்சிகளையும், மூடக்கருத்துக் குவியல்களையும் பற்றி நீங்கள் விழிப்புணர்வுடன் இல்லையென்றால் வாழ்வே துன்பமாகி விடும். ஏனெனில் வாழ்க்கையே மனதின் அடிப்படையில் தான் அமைகின்றது.

எல்லாமே உங்கள் மனதில் உள்ளவைதாம் (பிறரையும்  நிகழ்வுகளையும் மதிப்பிடுதல்தன்னை பற்றியும் பிறரைப் பற்றியும் கருத்துக்களைப் பிடித்து வைத்துக் கொள்ளுதல்) என்று கண்டறியும் போது நீங்கள் உங்கள் மனதை மிகவும் குழப்பிக் கொள்ளுகின்றீர்கள் என்பதை அடையாளம் காண்பீர்கள். இது இப்படித் தான் இருக்க வேண்டும், அது இப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் எண்ணங்கள் வரும் போது, மனம் தனது விளையாட்டை ஆரம்பித்து விட்டது என்று பொருள்; இது உலக வாழ்வின் இயல்பு. இங்கு தான் நீங்கள், மாற்றமில்லாத, மறைபொருளான, கண்ணுக்குப் புலப்படாத, சக்தியைப் பற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தாழ்பற்றிக் கொள்ளும் போது, மனதின் பிடியில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள். மனதின் பிடியில் நாம் இருக்கும் போது நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் துன்புறுத்துக் கொண்டிருக்கின்றோம்.பிறரைப் பார்க்காமல் 

உங்கள் மனதைத் திரும்பிப் பாருங்கள், என்னன்ன கூத்துக்கள், வலிகள் ஆகியவற்றை அது உருவாக்கியிருக்கின்றது என்று கவனியுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யும் போது, வலி இருக்காது, அது கேளிக்கையாகவே தோன்றும். அது, நகைச்சுவை, மர்மம், நிகழ்வுத் தொகுப்பு மற்றும் துயர் இவற்றை தரும் ஒரு பல்சுவை தொலைகாட்சி நிகழ்ச்சியைப் போன்று தோன்றும். அதனால் தான், அனைத்து துறவிகள், கவிஞர்கள் ஆகியோர், தங்கள் மனதை நோக்கி, ''என் இனிய மனமே! எவ்வளவு கவர்ச்சியாக இருக்கின்றாய்! ஏன் இவ்வாறு பலவிதமான விஷயங்களில் சிக்கிக் கொள்ளுகின்றாய்! ஏன் நீ பெருந்தகைமையும் அழகும் ஆனதை கண்டறிந்து கொள்ளாமல் இருக்கின்றாய்?” என்று கேட்கின்றார்கள். ரூமி கபீர்,போன்ற அனைத்து மகான்களும் தங்கள் மனதை பற்றி கவி புனைந்திருக்கின்றார்கள். பகவத்கீதையிலும் மனமே உங்களது விடுதலைக்கும், கட்டுத்தளைக்கும் காரணமானது என்று கூறப்பட்டிருக்கின்றது.

மனம் ஒரு நண்பனும் எதிரியும் ஆகும். மனம் உங்களது எதிரியாக இருக்கும் போது, அது உங்களை கடந்தகால எண்ணப் பதிவுகள், மற்றும் அனுபவங்களில் கட்டுவித்து, புதுக் கண்ணோட்டத்தில் நிகழ்வுகளைப் பார்க்கவிடுவதில்லை. ஏனெனில் எல்லாவற்றையுமே நாம் மனதின் மூலமாகவே உணர்ந்தறிகின்றோம், ஞானம் கூட மனதின் மூலமாகவே உள்வாங்கப் படுகின்றது. மனம் உங்கள் எதிரியாக இருக்கும் போது, அது, உங்களைத் திறனாய்வு செய்யத் தூண்டி, துன்பம், கடினத்தன்மை மகிழ்ச்சியின்மை ஆகியவற்றைத் தருகின்றது.  மனம் உங்கள் நண்பனாக இருக்கும் போது, உங்களைத் இளைப்பாறச் செய்து, புன்முறுவல், மகிழ்வு, விடுதலை, ஆகியவற்றைத் தருகின்றது. எனவே மனம் நமது மோசமான எதிரியாகவும்,சிறந்த நண்பனாகவும் இருக்க முடியும்.

குருதேவ்! நாம் ஏன் இங்கு இருக்கின்றோம்? இவை அனைத்துமே உண்மையில்லை என்னும் பட்சத்தில் ஏன் மீண்டும் பிறந்து வாழ்கின்றோம்?

குருதேவ்: நாம் இங்கிருப்பது ஏனெனில், முதலில் இக்கேள்வியைக் கேட்க, இரண்டாவது அதற்கு ஒரு விடை கண்டுபிடிக்க! பலர் " நான் ஏன் இங்கிருக்கின்றேன்? என்னும் இக் கேள்வியை கேட்காமலேயே முழு வாழ்கையையும் வாழ்ந்து விடுகின்றார்கள். விழித்தெழுங்கள்! இக்கேள்வியை கேளுங்கள்! இதற்கு ஒரு விடை கண்டு பிடிக்க முயலுங்கள். விடை காண  அவசரப் படாதீர்கள்.கேட்டுக் கொண்டே இருங்கள், தக்க காலத்தில் தானாகவே விடை உங்கள் மடியில் வந்து விழும். இக்கேள்விக்கு எந்தப் புத்தகமும் விடை தராது, ஏனெனில் இக்கேள்வி வாழ்வைப் பற்றியது.  உங்களது வாழ்க்கையே தான் இதற்கு விடை. ஒவ்வொரு நாளும், நான் ஏன் இங்கிருக்கின்றேன்? என்று கேட்டுக் கொண்டிருந்தால் அனாவசியமானவை அகன்று, சரியானவையே முன்நிற்கும். எனினும், "நான் ஏன் இங்கிருக்கின்றேன்? என்னும் இக்கேள்வியை கேட்கும் முன்னர், ''எப்படியும், நான் இங்கிருக்கின்றேன், இவ்வுலகிற்கு நான் என்ன செய்யக் கூடும்?” என்று  கேளுங்கள். எல்லாமே பொருளற்றது, எதுவுமே களிப்பூட்டக்கூடியதல்ல என்று உணரும் போது, உங்களைச் சற்று ஆற்றுப்படுத்த இக்கேள்வியானது உதவும்.

நீங்கள் சோகமாக, அழுத்தமாக, தற்கொலை செய்து கொள்ளக்கூடிய அளவுக்குத் துன்பமாக உணரும் காலங்களில், நீங்கள்," என்னைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்திநான் இங்கு என்ன செய்ய முடியும் என்று கவனிக்கின்றேன்.எப்படியாயினும், ஒரு நாள் நான் மறைந்து விடுவேன், அதற்குள் ஏதேனும் நற்செயல்கள் இங்கு செய்கின்றேன். நான் எங்கு தேவைப் படுகின்றேன்? யாருக்கு நான் தேவை? எங்கு நான் உதவி செய்ய முடியும்?" என்று கேட்டுக் கண்டறியுங்கள். இக்கேள்விகள் இடைப்பட்ட நிவாரணத்தை அளிக்கும். சேவை செய்யுங்கள். அத்தகைய சேவையின் மூலம் பிறரை மகிழ்விக்கின்றீர்கள், பிற ஆத்மாக்களுக்கு சுகம் அளிக்கும்  அந்த அதிர்வலைகள் உங்களுக்கு மேன்மையை அளித்து, உண்மையில் நீங்கள் யார் என்று கண்டறிய உதவும்.