வந்து செல்லும் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிக்கோள் உள்ளது.

டிசம்பர் 24, 2013 - போன், வட கரோலினா


பளபளப்பாக, பரிசுப்பொருட்கள் நிறைந்துள்ள கிறிஸ்துமஸ் மரத்தை போன்று இருங்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் ஒரு கிறிஸ்துமஸ் மரம். கிறிஸ்துமஸ் மரம் கொடுக்குமேயன்றி  தனக்கென எதுவும் எடுத்துக் கொள்ளாது. கொடுத்துக் கொண்டே இருக்கும். எனவே அது போன்று நான் கிறிஸ்துமஸ் மரம் என்று எண்ணிக் கொண்டே செல்லுங்கள். கோடைக்காலமோ, குளிர்காலமோ, இலையுதிர் காலமோ, எதுவானாலும் உதிர்வதுமில்லை,பூத்தேழுவதுமில்லை. ஆண்டு முழுவதும் பசுமையாகவே இருக்கின்றது, குளிர்காலத்தில் பரிசுகளை வழங்குகின்றது.

நான் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியுடனும் புன்முறுவலுடனும் காண விரும்புகின்றேன். மகிழ்ச்சி அலைகளை உருவாக்குங்கள், மற்றெதுவும் முக்கியமில்லை. இவ்வுலகில் சில இனிமையான மற்றும் சில இனிமையற்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. சில நீங்கள் விரும்பும் வகையிலும், சில நீங்கள் விரும்பாதவையும் நடக்கின்றன. எல்லாவற்றையும் ஒரு மூட்டையாக கட்டி ஓரமாக வையுங்கள். உங்கள் சந்தோஷத்தை எது ஒன்றினாலும்  எடுத்துக் கொள்ள முடியாது.

ஒரு நல்ல தியானத்தை செய்து முடித்து உங்கள் ப்ராணா உயர்ந்திருக்கும் போது எப்படி உணருகின்றீர்கள்? எதுவும் ஒரு பிரச்சினை இல்லை என்று உணருகிறீர்கள் அல்லவா? உங்களில் எத்தனை பேர் அவ்வாறு உணருகின்றீர்கள்? (பார்வையாளர்களில் பலர் கை உயர்த்துகிறார்கள்) எதுவும் பிரச்சினை இல்லை! இதை தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எதுவும் பொருட்டில்லை என்றுணரும் போது தான் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள். 

மகிழ்ச்சி என்பது நமது இயல்பு. எது அதை மறைத்து மூடுகின்றெதென்றால் " எனக்கு இது வேண்டும், அது வேண்டும், ஏதாவது வேண்டும்" என்பதெல்லாம்தான் மகிழ்ச்சியைக் குறைக்கின்றது. எதுவானாலும் ஒரு பொருட்டில்லை என்றுணரும்போது விடுதலை உணர்வு ஏற்படுகின்றது. இதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எதுவானாலும் அது ஒரு பொருட்டில்லை! இவ்வுலகில் எப்போதுமே, ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கும், சில இனிமையான சில இனிமையற்ற நிகழ்வுகள் இருக்கும்.சில நீங்கள் விரும்புபவையும், சில நீங்கள் விரும்பாதவையும் நடக்கும். இவையெல்லாம் படைப்பின் ஒரு பகுதி தான். எதுவும் ஒரு பிரச்சினையோ பொருட்டோ அல்ல என்று நீங்கள் எண்ணும்போது 90% நீங்கள் விரும்புபவை தானாகவே நடக்கும்.அல்லது எது நடக்கின்றதோ அது நீங்கள் விரும்புவதாக அமையும்.

எண்ணிறந்த மக்கள் திரளுள்ள வேற்றுமைகள் நிறைந்த இந்நாடக உலகில்  சிக்கலான இச்சமுதாய வாழ்வியல்  விளையாட்டு தவிர்க்க இயலாத ஒன்று.பல்வேறு விஷயங்கள் வந்து போகின்றன.வந்து போகும் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிக்கோள் உள்ளது.ஒரு முள்ளுக்கும் மென்மையான ரோஜா இதழுக்கும் கூட ஒரு குறிக்கோள் உள்ளது. இதன் குறிப்பு நமது முதல் குறிப்பாகிய முற்றிலும் வேறுபட்ட பண்புகள் ஒன்றுக்கொன்று ஈடு செய்யகூடியவை.

எதைப் பற்றியும் கவலைப் படாதீர்கள்.எதைப் பற்றியும் பயமோ கவலையோ கொள்ளாதீர்கள்." எனக்கு உலகைப் பற்றிக் கவலை இல்லை, என்னுடைய ஞானமார்க்கம் கடவுளுடன் தொடர்பு இவையே முக்கியக் கவலை என்று கூறிக் கொள்ளுங்கள்.நான் உறுதி கூறுகின்றேன்! கவலையே  படாதீர்கள்.ஒருபோதும் இறைமையுடன் உங்கள் தொடர்பு உங்களை விட்டு அகலாது.

இயேசு கிறிஸ்து தனது இறுதி காலத்தில், " கடவுளே ! என்னை நிராகரித்து விட்டீரா?" என்று கேட்ட போதிலும், உடனேயே கடவுள் கைவிடவில்லை என்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் சில சமயங்களில் வேதனை மிகுதியில் கடவுள் கைவிட்டு விட்டாரா என்னும் கேள்வி எழக்கூடும். இதன் கருத்துச் சாரம் என்ன? எதுவும் ஒரு பொருட்டில்லை.!

அஷ்டவக்கிர கீதையை மீண்டும் மீண்டும் கவனித்துக் கேளுங்கள். " அஹோ! நிரஞ்சன்! நீ தொடமுடியாத மாசற்றவன் " ஆத்மா தூய்மையானது, அழகானது மாசற்றது. அது அற்புதமானது. பல முறைகள் கேட்டிருக்கின்றோம், தெரிந்து கொண்டிருக்கின்றோம், உள்வாங்கியிருக்கின்றோம். ஆனால் மீண்டும் மீண்டும் அதைக் கவனிக்கும் போது புதிய வழிகள் திறக்கப்படுகின்றன. அஷ்டவக்கிர ஒரு விலைமதிப்பற்ற ஞானம் அல்லவாசில சமயங்களில் ஒரு புத்தகத்தைத் திறந்து படிக்கும் போது "ஆ! இது புதுமையானது" என்று எண்ணுகின்றோம். பத்து ஆங்குளுக்குப் பின்னர் அதே இரண்டு வரிகளைப் படிக்கும் போது," ஆ! இச்சிறு மனம் ஒரு பெருங்கடலின் ஒரு அலையை போன்றது. நானே அப்பெருங்கடல்" என்று தோன்றுகின்றது. இத்தகைய மெய்யுணர்வு உங்கள் மனதில் ஏற்படும்போது எது உங்களை பாதிக்கக் கூடும்? ஒன்றும் இல்லை! அப்படியும் உங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் பரவாயில்லை. விடுங்கள்!" சரி ! நான் பாதிக்கப்பட்டேன். அதனால் என்னமுன்னேறிச் செல்லுங்கள். நாளடைவில் இந்நிலை ஏற்படும் என்று நினைக்கின்றேன். சில சமயங்களில் எந்தக் காரணமும் இன்றித் திடீரென்று மகிழ்ச்சியாக இருக்கும்!

மூத்த ஆசிரியர் ஒருவர் எப்போதும் அவர் சந்தோஷமாக இல்லை என்று முறையிட்டு கொண்டே இருப்பார். அண்மையில் அவர்,"குருதேவ்! நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். 

என்ன நடந்தாலும்நான் மகிழ்ச்சியாக இருப்பதை உணருகின்றேன். எதுவுமே எனக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை.என்னுள் ஏதோ ஒன்று மாற்றம் அடைந்து விட்டது.நான் மகிழ்ச்சியாக உணருகின்றேன்! என்றார். நான்," ஆம்! அதை மக்கள் கவனித்து வருகின்றார்கள்" என்றேன்.

பல ஆண்டுகள் இந்த ஆன்மீகப் பாதையில் வழி நடந்தால், எதுவுமே ஒரு பொருட்டில்லை என்று உணருவீர்கள். உங்களை எதுவும் அசைக்க முடியாது. எதுவும் உங்களைப் பாதிக்காது. இனிமையானவை இனிமையற்றவை எல்லாமே வந்து செல்லும். ரொட்டி செய்வதற்கு முன்னர் மாவு பிசைவதை போன்று இயற்கை இதைச் செய்கின்றது. மாவு பிசைவதை போன்று தான் இயற்கை நம் மனதில் வேலை செய்கின்றது. அப்போது உங்களுக்கு "சரி நான் தயார் " என்று தோன்றுகிறது,

பல்வேறு முனைகளிலிருந்து அது உங்களைத் தாக்கும் போது நீங்கள் பலம் பெறுகின்றீர்கள். இயற்கை அன்னையின் ஒவ்வொரு தாக்குதலும்  கோபத்துடன் கூடியது அல்ல, அது நீங்கள் பலம் பெற வேண்டும் என்னும் அக்கறையுடன் கூடியது.