உள்ளுணர்வுத் திறனை வளர்த்துக் கொள்ளுதல்

4 டிசம்பர், 2013

பெங்களூரு, இந்தியா



குருதேவ், உள்ளுணர்வுத் திறன் என்பது  உணமையிலேயே இருக்கின்றதா? எனில், அதை எவ்வாறு அடைவது ? அதன் ரகசியம் என்ன ?

குருதேவ்: நீங்கள் அடைய முடியும். சீரான தியானம் மூலம் உங்கள் உள்ளுணர்வுத் திறனை வளர்த்துக் கொள்ளலாம். மனம் ஆசைகள் வெறுப்புக்கள், சிதைவுகள் இவற்றிலிருந்து விடுபட்டு, அமைதி அடையும், மிகக் கூர்மையாக இருக்கும். அப்போது தான் உள்ளுணர்வுத் திறன் வளர்கின்றது. ஆனால் உங்கள் மனம் இடைவிடாது, ஏதோ ஒரு ஆசையில் சிக்கிக் கொண்டு இருந்தால் அது நிகழாது. உங்கள் மனம் நிலை கொண்டு, அசைவற்று இருக்கும் போது இத்தகைய திறன்கள் உங்களில் வளரும்.

2011, ஆகஸ்ட் இறுதியில், அன்னாஹசாரேயும், அரவிந்த் கேஜரிவாலும் இணைந்திருக்க மாட்டார்கள் (இந்தியாவில் ஊழலுக்கெதிராக போராட) விரைவில் பிரிந்து விடுவார்கள் என்று நான் கூறியதைத் தற்போது நினைவு கூருகின்றேன். போராட்டம் துவங்கிய காலத்தில், யாருமே அவர்கள் பிரிவார்கள் என்று கற்பனை கூட செய்யவில்லை.ஆனால் அவர்கள் நெடுங்காலம் இணைந்திருப்பார்கள் என்று தோன்றவில்லை.

குரு (இங்கு அன்னா ஹசாரே) மற்றும் சீடர் (அரவிந்த் கேஜரிவால்) அவரவர் வழிகளில் பிரிந்து விட்டார்கள். நான் கூறியதை கேட்ட ஒருவர் கூட அந்தக் க்ஷணத்தில் அது உண்மையாகும் என்று நம்பவில்லை. அவ்வாறு நிகழ எந்த முகாந்திரமும் இல்லை என்றே அப்போது தோன்றியது. ஆனால் இப்போது என்ன நிகழ்ந்திருக்கின்றது பாருங்கள். ஒருவர் வட இந்தியாவில் தலைமையும், மற்றவர் தென்இந்தியா தலைமையும் என்று பிரிந்து சென்று விட்டனர்.

நாம் அசைவற்று,அமைதியாக இருக்கும் போது என்ன எண்ணங்கள் மனதில் தோன்றுகின்ற்னவோ அவை உண்மையாக உருவெடுக்கின்றன. ஒவ்வொருவரும் தம் வாழ்வில் ஏதோ ஒரு சமயத்தில் இதை அனுபவித்திருப்பீர்கள். எதிலும் ஆசை கொள்ளாமல், உங்களுக்குள்  இளைப்பாறும் போது  இத்தகைய சக்தி உங்களில் மலரும். எதிலும் ஆசை கொள்ளாமல் என்பதன் பொருள் அனைவரின் நலனை வேண்டாமல் என்பது அல்லநிச்சயம் வாழ்த்திப் பிரார்த்திக்கலாம். உங்களைச் சுற்றி இருக்கும் அனைவரின் நலனை  வாழ்த்திப் பிரார்த்திக்க வேண்டும். இந்த ஆழ்ந்த விருப்பமானது ஆசையற்ற நிலைக்கு ஒப்பானது.

குருதேவ், என் மனைவி நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று நான் கூறுவதில்லை என்று குறை கூறுகின்றாள். சொற்களில் என் அன்பை வெளிப்படுத்தும் இயல்பு எனக்கு இல்லை. அன்பை வெளிப்படுத்த வேண்டியது தேவையா?

குருதேவ்: அன்பை வெளிப்படுத்திக் கூற பல வழிகள் உள்ளன. எது உங்களுக்கு பொருத்தமாக இருக்கின்றதோ அந்த வழியைக் கண்டெடுத்துக் கூறுங்கள். சொற்கள் மூலமாக வெளிப் படுத்தாவிட்டால், சைகை மூலம் வெளிப்படுத்துங்கள் அல்லது எழுதிக் கொடுத்துவிடுங்கள்.
நீங்கள் வேறிடத்திற்குச் சென்றால் அவளுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புங்கள். இக்காலத்தில் முழு வார்த்தைகளைக் கூட குறுஞ்செய்தியில் எழுத வேண்டியதில்லை. ஸ்மைலிக்களும் இமொட்ஐகான்களும் அவ்வேலையைச் செய்து விடுகின்றன. அவற்றை காலையில் ஒன்று, மதியம் ஒன்று, மற்றும் மாலையில் ஒன்று என்று அனுப்பி விடுங்கள்.

முயற்சி செய்து அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியது.நமது கடமை ஆகும். மகிழ்கின்றார்களா அல்லது இல்லையா என்பது அவர்கள் விருப்பத்தேர்வு. நீங்கள் வெளிப்படையாக அன்பைத் தெரிவித்தாலும் சிலர் நம்ப மாட்டார்கள். உங்கள் குறுஞ் செய்தியைப் பெற்றுக் கொண்ட பின்னர், “அனுப்பியிருக்கும் செய்தியை உண்மையாக உணர்ந்து செய்தாயா என்று கூடக் கேட்கக் கூடும். மனம் என்பது மிக மர்மமானது. அன்பு என்பது அனிர்வாச்சனியா (சொற்களுக்கு அப்பாற்பட்டது; அல்லது சொற்களால் முழுமையாக வெளிப்படுத்த முடியாத ஒன்று) நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள்! வாழ்த்துக்கள்! (சிரிப்பு)

குருதேவ்! புரட்சியின் பொது பொதுவாக மக்கள் கிளர்ச்சியுணர்வு  அல்லது ஆளுமை உணர்வு கொண்டு  தங்கள் சமயோசிதத்தை இழந்து விடுகின்றார்கள். சமுதாயத்தில்  மாற்றத்திற்கு சிறு அலைகள் எழுந்து விரைவில் அவை மறைந்து விடுகின்றன.  ஏனெனில் மக்களுக்கு  விழிப்புணர்வு இல்லை.  எவ்வாறு இயக்கு சக்தியையும், அமைதியான விழிப்புணர்வையும் ஒரே சமயத்தில் நிர்வகிக்க முடியும்?

குருதேவ்: அத்தகைய அமைதியான விழிப்புணர்வை எல்லோரும் பெறுவது சற்றுக் கடினம்.  ஆனால் நமது அரசியல் தலைவர்கள் இதை வளர்த்துக் கொண்டால், சமுதாயத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும் நமது பணி நிறைவேறும். தலைமை பொறுப்புக்களில் உள்ளவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால், மக்களைத் தவறான வழியில் தூண்டுவதை புகலிடமாக்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு மக்களின் உற்சாகத்தையும் ஆக்க சக்தியையும் சரியான வழியில் கொண்டு செல்ல இயலும். இதுதான் தேவையானதும் ஆகும்.

ஒரு சிலர் விழிப்புணர்வை அடைந்தால் கூட, அவர்களால் தன்னை சுற்றி இருப்பவர்களுடைய சக்திக்கும் உற்சாகத்திற்கும் நல் வழி காட்ட முடியும். அரசியல்வாதிகளே விழிப்புணர்வு இல்லாமல் சிற்ச்சிறு பூசல்கள், பிரச்சினைகள் இவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தால், நாடு உறுதியாகத் தவறான வழியிலேயே நடத்திச் செல்லப்படும்.

குருதேவ், சாங்க்ய யோகா என்றால் என்ன?

குருதேவ்: சாங்க்ய யோகா என்பது விழித்தெழுந்து இல்லாததை காண்பது ஆகும். ஒன்றே ஒன்று தான் உள்ளது, அதன் மூலமே அனைத்தும் செயல்படுகின்றன. எண்ணங்கள் கூட ஒன்றுமில்லாதவையே, அவையும் அதிர்வலைகள் தாம். சாங்க்ய யோகாவின் பொருள், ஆத்மா சாஸ்வதமானது என்பதே ஆகும். என்னுள் இருக்கும் ஒன்று அழிவில்லாதது, குறைவில்லாதது, முதுமையற்றது, நான் இவ்வுடல் அல்ல என்பதை அறிந்து கொளவதே ஆகும். இவ்வாறு உணர்ந்து இளைப்பாறுதல் சாங்க்ய யோகா ஆகும்.

குருதேவ், ஆகமங்களில், தெய்வத்தாயின், ஆசனம் (புனிதமான பெரு மதிப்பிற்குறிய தெய்வீக ஆசனம் என்பதை இங்கு பொருள்) என்பது தர்மம், (நன்னடத்தை) மற்றும் அதர்மம் (தீய ஒழுக்கம் மற்றும் தீச்செயல்கள்) என்று கூறப்படுகின்றது. இதை விளக்கிக் கூற  முடியுமா?

குருதேவ்: சக்தி (ஆற்றலின் மூலக்கூறான தெய்வத் தாய்) தர்மம், மற்றும் அதர்மத்தில் இருப்பதாக பொருள் கொள்ளலாம் இல்லையெனில், ராவணன்,ஸ்ரீ ராமரை எதிர்க்கும் ஆற்றல் பெற்றிருந்திருக்க மாட்டான். மிகவும் பலமும், ஆற்றலும் பெற்றிருந்ததால் தான், அவன் ஸ்ரீ ராமரை எதிர்த்து நிற்கும் துணிவு அடைந்தான். மகிஷாசுரன் என்னும் அரக்கன் ஆற்றல் பெற்றிருக்கவில்லையென்றால் துர்க்கா தேவியைச் சந்தித்திருக்க முடியாது. போர் என்பது சம வலிமையுள்ளவர்களிடையே மட்டுமே நடைபெறும். ஐம்பது வயதுள்ளவன் ஐந்து வயதான சிறுவனை எதிர்த்து சண்டையிட மாட்டான். சமுத்ர மந்தன் (தேவர்களும்,அசுரர்களும் பாற்கடலைக் கடையும் நிகழ்வு) நடை பெற்ற போது தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் மறு புறமும் இருந்தனர். அவர்கள் இரு தரப்பினருமே சமமான வலிமை உடையவர்கள், வாசுகி என்னும் பாம்பினைக் கொண்டு கடைந்தனர். அசுரர்கள் அதிக வலிமை உடையவர்களாக இருந்திருந்தால், தேவர்களைத் தங்கள் பக்கம் இழுத்திருப்பார்கள். அது போன்று தேவர்கள் அதிக வலிமையுடையவர்களாக இருந்திருந்தால், அசுரர்கள் தோல்வியுற்று இருப்பார்கள்.ஆனால் அவ்வாறு இல்லை. இரு தரப்பினரும் சமமான வலிமையுடன் திகழ்ந்தார்கள். அதனால் தான், சில சமயங்களில் தேவர்கள் வென்றார்கள்சமயங்களில் அசுரர்கள் வென்றார்கள்.
சில சமயங்களில் தர்மம் வெல்லும், சில சமயங்களில் அதர்மம் வெல்லும். யார் வெற்றி பெறுகின்றார்கள் எனபதைப் பொறுத்தது. தர்மம் அதர்மத்தை வெல்லும் போது அதை சத்யுகா (நன்மைகளும் நல்லொழுக்கமும் நிறைந்த பொற்காலம்) என்று கூறுகின்றோம். அதர்மம் வெல்லும் போது அதைக் கலியுகா (மனிதப் பண்புகளற்ற ஒழுக்ககேடுகள் நிறைந்த இருண்ட காலம்) என்று கூறுகின்றோம்.

யார் வெல்லுவார்கள் என்பதைக் காலமே நிச்சயிக்கும். சத்வ குணம் (இது மூன்று குணங்களில்  ஒன்றான மெய்யறிவையும்,நேர்மையையும் குறிப்பிடும் குணம்) அதிகமாக இருந்தால், அதர்மத்தை தர்மம் வெல்லும். ரஜோ குணமும் (இது மூன்று குணங்களில் ஒன்றான கட்டுக்கடங்கா தீவிர உணர்ச்சி மற்றும் செயல்களைக் குறிப்பிடும் குணம்) தமோகுணமும். இது மூன்று குணங்களில் ஒன்றான எதிர்மறை மற்றும் செயலின்மையை குறிப்பிடும் குணம் மேலோங்கி இருந்தால், இறுதியில் அதர்மமே வெல்லும். முரண்பாடு என்பதே சமமானவர்களுக்கிடையே எழும் சண்டையைக் குறிப்பதாகும். பராசக்தி இத்தகைய முரண்பாட்டுக்கு அப்பாற்பட்டு, உயர்ந்திருக்கும் சக்தியாகும். பராசக்தி என்றால் என்ன? இருநிலையற்ற, முரண்பாடற்ற ஒன்று என்பது ஆகும். இத்தெய்வீக சக்தியின் முன் அனைவரும் சமமே.