நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதையே அறுவடை செய்வீர்கள்

நவம்பர் 14, 2013

பெங்களூரு, இந்தியா 


இன்று கடவுள் விழித்தெழுவதை கொண்டாடும் “உத்ஹன த்வாதஷி” தினமாக கொண்டாடுகிறோம். (கடவுள் உறக்கத்தில் இருந்து விழித்து எழும் நாளை நினைவு கூறுகின்ற புனித திருவிழா  மற்றும் துளசி விஷ்ணுவை திருமணம் செய்த நாளை நினைவு கூறும் விழா என்று தென் இந்தியாவில் கொண்டாடப்படும் தினம்).

சின்ன தீபாவளி அல்லது "தேவோத்கன த்வாதஷி" என்றும் அழைக்கப்படுகிறது.ஒவ்வொருவருக்கும் உள்ளே இருக்கும் தெய்வபக்தியை தட்டி எழுப்புவது என்பதே இதன் பொருள். ஏனென்றால் தெய்வீகம் நமக்குள்ளே உறங்கிக் கொண்டிருக்கின்றது. தட்டி எழுப்ப வேண்டியது தேவை. நீங்கள் உங்களுக்குள் இருக்கும் கடவுள் தன்மையை தட்டி எழுப்பி பின்னர் அவரிடம் உங்களுடைய விருப்பங்களையும் வேலைகளையும் பூர்த்தி செய்யுமாறு பிரார்த்தனை செய்கிறீர்கள். ஆகவே நீங்கள் எவ்வாறு உங்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தை தட்டி எழுப்புகிறீர்கள். தியானம், வழிபாடு, மந்திரங்கள் உச்சரிப்பு மற்றும் இவைகளப் பற்றி உங்களுக்குள் ஒரு விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் இதை செய்ய முடிகிறது.

பாரம்பரியமாக இன்று புனித துளசி செடியை வழிபடுகின்றோம். துளசி செடியை சுற்றிலும் எண்ணெய் விளக்குகளை ஏற்றி பின்னர் துளசி செடிக்கு நெல்லி செடியுடன் திருமணம் செய்து வைக்கின்றனர். நெல்லி செடியின் சில கிளைகளை கொண்டு வந்து திருமணத்தை நடத்தி அதை கொண்டாடுகின்றனர். நெல்லி துளசி ஆகிய இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது என்பதே இதன் பொருள். இப்போது குளிர் காலம் தொடங்க இருக்கின்றபடியால், நெல்லி மற்றும் துளசி ஆகிய இரண்டும் மிகவும் அவசியமான தேவைகள். இரண்டும் நம்முடைய உடலமைப்பை  வலுப்படுத்துகிறது.அவைகளில் ஆண்டியாக்சிடண்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளவை.  நம்மை பல நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. அதனால் தான் இந்த இரண்டு செடிகளும் மிகவும் புனிதம் வாய்ந்தவைகளாக கருதப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் துளசி செடி வைத்திருக்க வேண்டும். துளசி நெல்லி ஆகிய இரண்டும் நம்முடைய உடலுக்கு புத்துயிர் அளிக்க வல்லவை.

ஏன் இந்த செடிகளையும் வீட்டில் வைக்கவேண்டும் என்று சிபாரிசு செய்யப்படுகிறது மற்றும் ஏன் அதை வைத்திருக்க வேண்டும் என்பதற்கு அறிவியல் கோணத்திலும் காரணம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும் இந்திய ஆயர்வேத தயாரிப்பான சவனப்ராஷ் என்னும் லேகியம் இந்த இரண்டிலும் இருந்து தான் செய்யப்படுகின்றது. இவை இரண்டையும் வைத்திருப்பது, வசந்தகாலம் வருவதற்கு முன்னே உங்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ளவும் காற்றில் பரவும் மகரந்தத்தினால் பாதிக்கப்படாமல் இருக்கவும் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்.           

பலர் சவனப்ராஷ் இந்த உலகத்திலேயே மிக சிறந்தது என்று கூறியுள்ளனர். பல நிறுவனங்கள் செயற்கையான பொருட்களை சேர்த்து சவனப்ராஷ் தயாரிக்கின்றன. அவைகளில் தரம் இல்லை. ஆனால் நம்முடைய தயாரிப்பில் நெல்லியுடன் இயற்கையான மூலிகைகளும் உண்மையிலேயே நம்முடைய உடலமைப்பை உயர்த்தச் செய்யும் பொருள்களும் சேர்க்கப்படுகின்றன. சவனப்ராஷ் தயாரிப்பதற்கு அவசியமான அனைத்துப் பொருள்களும் கண்டிப்பாக நம்முடைய வேதங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளவாறு சேர்க்கப்படுகின்றன.

இன்று நெல்லிக்காய்கள் சந்தைகளுக்கு வரும் நாள். அவை குச்சிகளுடனே விற்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆகவே மக்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் வழமை பெறுவதற்காக மூலிகைகளை வழிபாடு செய்து அவைகளின் ஆசிர்வாதத்தை பெறுகின்றனர்.

கேள்வி பதில்கள்:

குருதேவ்! உண்மையிலேயே உங்களுக்கு அனைவருடைய மனதிலும் இதயத்திலும் என்ன நடந்து கொண்டிருகிறது என்று தெரியுமா? அப்படிஎன்றால் உங்களுக்கு தெரியும் என்று அறிந்து கொண்டே யாராவது ஒருவர் பொய் சொன்னாலோ அல்லது நொண்டி சாக்கு சொன்னாலோ என்ன செய்வீர்கள்?

நான் அனைவருக்கும் நீளமான கயிற்றை கொடுத்துள்ளேன். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதை செய்யலாம், அதைப் பற்றி என்ன செய்யலாம் என்று பிறகு பார்த்துக் கொள்ளலாம்.யாராவது பொய் சொல்லுவதை பார்த்தால் எனக்கும் கஷ்டமாகவே உள்ளது, ஆனால் அவர்கள் சீக்கிரமே மேம்படுவார்கள் வாழ்க்கையில் நன்றாக வருவார்கள். ஒன்று அல்லது இரண்டு முறை அவர்கள் பொய் சொல்லலாம், ஆனால் விரைவிலேயே அவர்கள் தம்முடைய தவறை உணர்ந்து என்னிடம் ஓடி வருவார்கள். காலில் விழுந்து" குருஜி! பொய் சொன்னது குறித்து வருத்தப்படுகிறேன்" என்று கூறுவார்கள். எனவே நீங்கள் செய்வது சரியா? தவறா? என்று நீங்களே உணரவேண்டும்.

ஒரு காலத்தில், வயதான துறவி இருந்தார். அவருக்கு மக்களை, அவர்கள் எப்படி இருந்தாலும்,  புகழ்ந்து பேசும் பழக்கம் இருந்தது. மற்றவர்கள் அதை பார்த்து ஆச்சரியம் அடைந்து "எதனால் நீங்கள் நல்லவர்களாக இல்லாதவர்களை கூட புகழ்ந்து பேசுகிறீர்கள்?" என்று கேட்டனர். நீங்கள் மற்றவர்களிடம் அவர்களுடைய நல்ல குணங்கள் பற்றி மட்டுமே பேசுகிறீர்கள்? அவர்களிடம் உள்ள குறைப்படுகளையும் எடுத்துக் கூறவும் என்று சொல்லுவார்கள். அதற்கு அந்த துறவி " உங்களுடைய துன்பங்களே உங்களிடம் உள்ள குறைகளையும் கெட்ட குணங்களையும் பறை சாற்றும். நான் வேறு எதற்கு அதை சொல்ல வேண்டும்?" என்று கேட்பார்.  

குருதேவ்! நீங்கள் ஒரு சாட்சியாக இருப்பதைப் போலத் தான் நாங்களும் இருக்கிறோம். பிறகு நமக்குள் என்ன வித்தியாசம்?

நான் எந்த வித்தியாசத்தையும் பார்க்கவில்லை. எங்கே வித்தியாசம் உள்ளது என்று நீங்கள் தான் சொல்லவேண்டும். நீங்கள் என்னவோ அது தான் நான். நான் என்னவோ அது தான் நீங்கள். நான் உங்களில் இருக்கிறேன். நீங்கள் என்னில் இருக்கிறீர்கள். அதனால் எந்த வித்தியாசத்தையும் பார்க்க வேண்டாம். குணங்களில் வித்தியாசம் காண வாய்ப்பு உள்ளது. குருதேவிடம் வித்தியாசமான குணங்கள் உள்ளன, உங்களிடம் வேறு குணங்கள் உள்ளன என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். நாம் குணங்களுக்கும் நல்லொழுக்கங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள். நம்முடைய உண்மையான இயல்பு குணங்களையும் பண்புகளையும் கடந்து செல்லுகிறது.     

குருதேவ்! எப்போது யுத்தம் நியாயப்படுத்தக்கூடியது?

அமைதி மற்றும் நீதியை கொண்டு வரக்கூடிய அனைத்து வாய்ப்புகளும் தோல்வியுறும் போது யுத்தம் கடைசி விருப்பமாகிறது. ஒவ்வொரு பேச்சுவார்த்தையும் தோல்வி அடையும் போதும் நேர்மையான உணர்வு இல்லாமல் இருக்கும் போதும் பேரழிவு தவிர்க்க முடியாததாகும் போதும், மிகப் பெரிய அழிவு ஏற்படுவதை தவிர்க்க யுத்தம் அவசியமாகிறது. அநீதியையும் பேரழிவையும் கொண்டு வரப்படுவதை தடை செய்வதற்காகவும் யுத்தம் அவசியமாகிறது.

ஏன் இவ்வுலகில் ஏழ்மையும் துன்பமும் இருக்கின்றன?

உங்களுடைய இதயங்களை திறக்கவும் நல்ல சேவையினால் மற்றவர்களை மேலே எழுப்பி விடவும் இவை இருக்கின்றன. அதன்பின் நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டம் வாய்ந்தவர் என்பதை உணரலாம். உங்கள் அன்பை வெளிப்படுத்தவும் மற்றவர்களை பராமரிக்கவும் நீங்கள் ஏதாவது செய்வதற்காகவே இவை உள்ளன. ஒரு வேலை இங்கே ஏழ்மையும் துயரமும் இல்லை என்றால் உங்களுடைய இரக்கத்தன்மையையும் பெருந்தன்மையையும் எப்படி உங்களால் வெளிப்படுத்த முடியும்? இதை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.  

ஏன் நம்முடைய வாழ்வில் நடந்த கெட்ட அனுபவங்களை நம்மால் மறக்க முடியவில்லை?  யாராவது நம்மை அவமதித்தால், வாழ்நாள் முழவதும் நாம் அந்த சம்பவத்தையே திரும்ப ஞாபகத்திற்கு கொண்டு வருகிறோம். இந்த பிரச்சனையில் இருந்து எப்படி விடுபடுவது?

அதை மறந்துவிட்டு, நிகழ்காலத்துக்கு வாருங்கள். அனைவருமே ஒரு நாள் இறக்கத் தான் போகிறோம். நீண்ட நாட்கள் அதை ஞாபகம் வைத்திருப்பதனால் என்ன பயன்? உங்களை அவமதித்தவரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறார் என்பதை தெரிந்து கொள்ளவும். நீங்களும் அவ்வாறே! கோபத்திற்கு, அவமரியாதைக்கும் எங்கே இடம் இருக்கின்றது?

நீங்கள் ஒரு நாள் இறக்கத் தான் போகிறீர்கள் என்பதை மறந்து விட்டீர்கள். அதனால் தான் நீங்கள் அதை பற்றி மோசமாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவ்வளவு தான். உங்களுக்கு தெரியுமா, அதனால் தான் ருத்ராபிஷேகம் உச்சரிக்கும் ("ம்ரித்யோர் - ம்ரித்யோர் நமாம்யஹம்") போது நான் திரும்ப திரும்ப இறப்புக்கும் அதற்கு உரிய  மரியாதையை தலைதாழ்த்தி வணங்குகிறேன். ஏனென்றால் அது ஒருவரை அனைத்து துன்பம் மற்றும் துயரங்களில் இருந்து விடுவிக்கிறது.

மேலும் அனைத்தையும் கடந்து செல்வதாக்க கூடிய மாற்றங்களை கொண்டு வரும் காலத்திற்கும் நாம் தலை வணங்க வேண்டும் என்பதை "கால நமஸ்காராஹ்", என்று சொல்லப்படுகிறது.அதனால் நீங்கள் எதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?

என்னுடைய இதயம் ஒன்றை விரும்புகிறது, ஆனால் எனக்கு இருக்கும் பொறுப்புக்கள் நான் அதை அடைய முயற்சிப்பதை தடுக்கின்றன. நான் என்ன செய்ய வேண்டும்?

முதலில் உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து நீங்கள் உங்கள் இதயம் விரும்புவதை கேட்டு அதை நிறைவேற்றலாம். நீங்கள் உங்கள் இதயம் விரும்புவதை மட்டுமே கேட்டு அதன்படி நடந்தால் தொந்தரவுக்கு உள்ளாவீர்கள்.

குருதேவ்! நீங்கள் எப்போதாவது உங்கள் அன்னையிடம் இருந்து திட்டு வாங்கியது உண்டா?

இப்போ பாருங்கள்! விஷமம் செய்யும் குழந்தைக்கு மட்டும் தான் குச்சி தேவைப்படும்! கீழ்படிகின்ற குழந்தையை திட்டவோ சப்தம் போடவோ தேவை இல்லை. என்னுடைய தாய் என் மீது சில நேரங்களில் கோபம் கொள்வதுண்டு. ஆனால் அவ்வாறு கோபம் கொள்ள அதிக வாய்ப்புகள் கொடுத்ததில்லை.

குருதேவ்! நாம் ஒருவரை மன்னிக்க வேண்டி இருக்கும் போதோ அல்லது ஒருவரிடம் இருந்து மன்னிப்பு கேட்கும் போதோ ஏன் கூக்குரலிடுகிறோம்?

நீங்கள் பார்த்தீர்கள் என்றால், யாரோ ஒருவரை மன்னிக்கும் போதோ அல்லது உங்களையே நீங்கள் மன்னிக்கும் போதோ அமைதியாகி விடுகிறீர்கள். நீங்கள் எந்த வழியை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவும். யாரோ ஒருவரை   மன்னிக்கும் போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஒருவரிடம் இருந்து மன்னிப்பு கேட்கும் போது ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல மனம் மிகவும் லேசாகி விடுகின்றது. எனவே அந்த நல்ல செயலை செய்வதை நாம் ஏன் தாமதப்படுத்த வேண்டும்? எப்போதாவது மன்னிக்க வேண்டி இருந்தாலோ மன்னிப்பு கேட்க வேண்டி இருந்தாலோ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்து விட வேண்டும்.

குருதேவ்! தற்போது இவ்வளவு பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. உண்ண உணவு கிடைப்பதில்லை மற்றும் குடும்பத்தை நடத்த முடியவில்லை. இந்த கடினமான சமயங்களில் எப்படி ஒருவர் வாழ்வது? ஏழைகளுக்கும் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கும் நாம் என்ன செய்ய முடியும்?

ஆமாம். பணவீக்கம் இப்போது மிக அதிகமாகவே உள்ளது. இந்தியா அனலில் உள்ளது. பரவலான ஊழல், அநீதி மற்றும் மோசமான ஆட்சி முறை ஆகியவற்றால் இவ்வாறு உள்ளது. இந்தியா அனைத்து துறைகளிலும் போராடிக்  கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் இதற்கு எதிராக விழித்தெழ வேண்டும், நம்முடைய நாட்டிற்காக ஏதாவது செய்யவேண்டும். நிறைய காரியங்களை அல்லது அவைகளை அதிக அளவிலேயோ செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீங்கள் அனைவரும் எந்த வகையிலாவது நம் நாட்டிற்காக சிறிதளவு செய்ய வேண்டும். சோம்பலாக அமர்ந்து " இந்த ஏழ்மையான சூழ்நிலையில் என்னால் என்ன செய்ய முடியும்" என்று சிந்தித்து கொண்டிருக்க வேண்டாம்.

இந்த நிலைமையை சமாளிக்க ஒவ்வொரு நபரும் ஏதாவது செய்ய முடியும். காய்கறிகளின் விலை உயர்ந்து விட்டன என்றால் நம் வீட்டிலேயே காய் கறிகள் பயிரிடலாம். சில மூலிகை செடிகள், தக்காளி, கொத்தமல்லி போன்றவைகளை பயிரிடலாம். ஏதாவது செய்யுங்கள். ஒரு சிறிய துண்டு நிலத்திலேயே நிறைய செய்யலாம். ஒவ்வொருவருடைய வீடும் இந்த மாதிரியான தோட்டத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும் இல்லையா? ஆனால் பாருங்கள், நிலைமையை மாற்றவோ அல்லது சமாளிக்கவோ நாம் எதுவுமே செய்வதில்லை. பிறகு இந்த விலைவாசியை கட்டுப்படுத்த என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லுவதிலே முடித்து விடுகிறோம்.   

ஐந்தில் இருந்து பத்து பேர் சேர்ந்து ஒரு சிறிய தோட்டத்த அமைக்க முன்வரலாம். காய்கறிகள் பயிரிடலாம். நான் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது தமிழ் அகதிகளுடைய முகாம்களுக்கு சென்றிருந்தேன். அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர்கள் அனைவரும் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருகிறார்கள். ஆனால் கூடாரங்களை சுற்றிலும் அவர்கள் காய்கறி மற்றும் பழத் தோட்டங்களை வளர்த்துள்ளனர்.

ஒருவர் வாழைமரங்கள் வைத்துள்ளார், மற்றொருவர் பூசணி, மற்றொருவர் தக்காளி  மற்றும் உருளை என்று பயிரிடுகின்றனர். அனைத்துமே அகதிகள் முகாம்களிலேயே நடைபெறுகின்றன. எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மிக வலுவான மக்கள் என்று என்று நான் நினைத்துக் கொண்டேன். சண்டை மற்றும் கலவரம் நடக்கும் நாட்களிலேயே அவர்கள் இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால், சேறாகவும் தண்ணீர் தேங்கியும் உள்ள  இடங்களையும் அவர்கள் செடிகளை வளர்க்க இயற்கை உரமாக பயன்படுத்துகின்றனர். இது ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்மால் எதாவது நல்ல காரியத்தை செய்ய முடியும் என்பதையே இது காட்டுகிறது. நாம் உதவியற்ற நிலையில் இல்லை என்னும் நிலையான உறுதிநிலையை நாம் கொள்ள வேண்டும்.

யுத்தத்தில் இருக்கும் அகதிகளே! இவ்வளவு செய்யும்போது இயல்பான நிலையில் உள்ள நாம் ஏன் அதை செய்யக் கூடாது? நாம் அனைவரும் அதை செய்ய முடியும். அதிகம் சிந்திக்காமல் நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யவேண்டும்.