நல்லவனாக இருப்பது உனக்கு நல்லது…

6 நவம்பர் 2013

பெங்களூர், இந்தியா



கே: குருதேவா ! சில மக்கள் எல்லா நேரத்திலும், இங்கு இல்லாத ஒருவரைப் பற்றி விமர்சிக்கிறார்கள்.  அப்படிப்பட்ட மக்களுக்கு என்ன ஆகும் ?

குருதேவர்: விமர்சனம் மேம்போக்காக இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும். நாம் இப்போது நவரசங்களை பற்றிப் பேசினோம். நவரசம் என்பது ஒன்பது வகையான உணர்ச்சிகள். அவை அன்பு, சிரிப்பு, கருணை, கோபம், தைரியம், பயங்கரம், வெறுப்பு, ஆச்சரியம் மற்றும் அமைதி என்பனவாகும். விமர்சிப்பதும் நவரசங்களில் ஒன்று தான்.

உன் இதயத்தின் ஆழத்திலிருந்து (ஆத்ம பூர்வமாக) ஒருவருக்குக் கெடுதல் நடக்க வேண்டுமென்று விரும்பும் போது, நீ உனக்கே கெடுதல் ஏற்படுத்திக் கொள்கிறாய். நீ யாரைப் பற்றி விமர்சனம் செய்கிறாயோ, அவர் பாதிக்கப்பட மாட்டார். அதற்காக நீ எப்போதும் மேலோட்டமாக அவரைப் பற்றி நல்லதே சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவருடைய தவறுகளை எடுத்துக் காட்டலாம். ஒரு ஆப்பிள் அழுகிய நிலையிலிருக்கும் போது, அது நன்றாக இருக்கிறது என்று சொல்வது உண்மைக்குப் புறம்பானது.

“சாப்பாடு எப்படி இருக்கிறது?” என்று யாராவது உன்னை கேட்கும் போது, “மிக நன்றாக இருக்கிறது” என்று நீ சொல்லியிருப்பாய். ஆனால் அந்த உணவை உண்ணும் போது உனக்குப் பிடிக்கவில்லை என்றால், நேர்மையல்ல. பிரச்சினை இருந்தால் அதை சுட்டிக் காட்டுவது அவசியம். ஆனால் இதயத்தில் வெறுப்போடு அதைச் செய்ய வேண்டாம். அப்படி செய்தால் உனக்குத் தான் கெடுதல். வேறு யாராவது அப்படிச் செய்தால், அதை பொருட்படுத்த வேண்டாம். நீ அதற்காக என்ன செய்ய முடியும்? அது ;அவர்களுடைய ரஜோ குணத்தாலும், தமோ குணத்தாலும் ஏற்படும் எதிர்மறையான நடத்தையாகும். அதற்காக நீயும் எதிர்மறையாக நடந்து கொண்டால், நீயும் அவர்களைப் போல ஆகிவிடுவாய். ரஜோ குணம், தமோ குணம் மற்றும் சத்வகுணம் மூன்றுமே இயற்கையோடு இயைந்திருக்கின்றன. அக்குணங்களின் விளையாட்டையும், வெளிப்பாடுகளையும் ஒரு சாட்சி போலப் பார்க்க வேண்டும்.

ஒருவருடைய நலனில் உனக்கு அக்கரை இருந்து, அவருடைய குறைகளை எடுத்துச் சொல்ல வேண்டுமென்றால், அதை கருணையோடு செய். “இன்று இரண்டு மணி நேரம் நீ விமர்சனம் செய்திருக்கிறாய். இது உன் ஆக்க பூர்வமான, கற்பனை வளம் நிறைந்த சக்தியை பாதிக்கும். அதிகமாகப் புகார் சொல்லச் சொல்ல உன் சக்தியும் அதிகமாக விரயமாகும்.” என்று அவருக்கு எடுத்துச் சொல்.

யாரைப் பற்றியாவது ஒரு மணி நேரம் புகார் செய்தபின் எவ்வளவு சக்தியை இழந்து விட்டார் என்பதை அவருடைய அனுபவத்தில் உணரச் செய். புகார் செய்ய ஆரம்பித்தால், மக்கள் நேரம் போவதே தெரியாமல், மற்றவர்களைப் பற்றி குறை சொல்லி விமர்சனம் செய்வார்கள். இது ஒரு நோயாளி தன்னுடைய நோய் பற்றி, உடல் வலியைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்வதில் மகிழ்ச்சி அடைவதைப் போல இருக்கிறது. ஒரு நோயாளியைப் பார்க்க பத்து பேர் வந்தாலும், திரும்பத் திரும்ப அவருடைய உடல் வலியைப் பற்றி எல்லோரிடமும் சொல்வார்.

காலையிலிருந்தே எனக்குக் கால் வலி அதிகமாக இருக்கிறது. இரவு முழுதும் என்னால் தூங்கவே முடிவதில்லை. இந்த அழுகையும் நாடகமும் திரும்பத் திரும்ப நடக்கும். அவர் இப்படித்தன் வலியைப் பற்றிப் புலம்புவதை விட்டு,வேறு ஏதாவது செய்ய வேண்டும். கற்பனை வளத்தோடு ஒரு கவிதை எழுதலாம். வேறு காரியம் ஏதாவது செய்யலாம். அப்படிச் செய்யும் போது அவர் தன் வலியை மறந்து மகிழ்வோடு இருக்க முடியும்.

திரும்பத் திரும்ப செய்யும் செயல், சொல்லும் வார்த்தை ஆத்மாவின் ஆழத்தில் பதிந்து விடும். அதனால் தான் மந்திரங்கள் திரும்பத் திரும்ப உச்சரிக்கப் படுகின்றன. உன் புகார்கள் உன் ஆத்மாவில் பதிவதை அனுமதிக்கக்கூடாது. அதற்குப் பதிலாக மந்திர ஜபம் செய். தியான நிலையில் தெய்வ சக்தியை நினைத்து ஒரு மந்திரமாக மனதுக்குள் ஜபிப்பது நல்லது.

கே: குருதேவா ! பகவான் ராமர் ராவணனை அழிப்பதற்காகப் பிறவி எடுத்தார். கிருஷ்ண பகவான் கம்சனை வதம் செய்யப் பிறவி எடுத்தார். அய்யப்பர் மஹிஷியை அழிக்கப் பிறவி எடுத்தார். பீமன் கீசகனைக் கொல்வதற்காகப் பிறந்தார். நீங்கள் எந்த அரக்கனை அழிக்கப் போகிறீர்கள் ?

குருதேவர்: அஞ்ஞானம், ஊழல், நேர்மையின்மை, வஞ்சகம் இவை சமூகத்தில் மலிந்திருக்கின்றன. இவற்றை அழிக்கப் ப்ரயத்தனம் செய்யத் தேவையில்லை. மெய் ஞானம் என்ற ஒளியை மக்களிடையே பரவச் செய். இருள் தானாகவே மறைந்து விடும்.

இரண்டு வழிகளில் யோசிக்க முடியும். ஒன்று  இருளை அழிப்பது. இதில் உன் கவனம் இருளில் (இருளைப் போக்குவதில்) உள்ளது. ஆனால் நீ ஒரு விளக்கின் ஒளியைப் பார்த்து, மேலும் மேலும் விளக்குகளை ஏற்றும் போது, இருள் தானாகவே விலகி விடும். நாம் செய்ய வேண்டியது அது தான். வாழ்க்கையில் ஆக்க பூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும். மக்கள் பொதுவாக மதம் அபாய நிலையில் உள்ளது என்று சொல்லி, மக்களிடையே பய உணர்ச்சியைத் தூண்டுகிறார்கள். பல நேரங்களில் இது வேண்டாத விளைவுகளில் முடிகிறது. பய உணர்ச்சி தூண்டப்பட்டு, உணர்ச்சி வேகத்தில் மக்கள் செய்யும் செயல்கள், மேலும் கசப்பை ஏற்படுத்தும். ஆனால் ஆக்க பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படும் போது, சமுதாயத்தில் மகிழ்ச்சி பெருகும்.

கே: குருதேவா ! நான் உங்களையே சார்ந்திருப்பது நல்லதா? அல்லது நான் சுதந்திரமாக இருக்க வேண்டுமா? நான் என்னை மேலும் மேன்மை படுத்திக் கொள்ள முயல்கிறேன். நான் எப்படி மேன்மை அடைய முடியும் ?

குருதேவர்: இது ஒரு நல்ல கேள்வி. நான் எப்படி என்னை மேம்படுத்திக் கொள்வது? ஆனால் அந்தக் கேள்வியிலேயே சிக்கி விடாதே. எப்போதும் நீ உன்னைப் பற்றியே சிந்தித்திருந்தால், எனக்கு என்ன ஆகும் என்று எண்ணிக் கொண்டிருந்தால், நீ எப்போதாவது தவறு செய்யும் போது, தன்னைத் தானே குற்றம் சொல்லும்படி நேரிடும். இரண்டு எல்லைகளின் இடையில் ஆடும் பெண்டுலம் போலாகி விடுவாய். ஒன்று குற்ற உணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை. மற்றொன்று தன்னைப் பற்றி மிகவும் உயர்வாக எண்ணி பெருமைப் படுவது. இப்படிப்பட்ட குழப்பங்கள் வருவது இயல்பு.

உன்னால் முடிந்ததைச் செய்து ஓய்வாக இரு! மற்றவர்களை எதிர் பார்ப்பது, மற்றவர்கள் உன்னை எதிர்பார்க்க வேண்டும் என்று எண்ணுவது இரண்டிலுமே நீ உன்னைப் பற்றி அதிகம் சிந்திக்கிறாய். இயல்பாக இரு! ஒரு மலர் தன் நறுமணத்தை பரப்ப முயற்சி செய்வதில்லை. மலர் நறுமணத்தை உடையது. நறுமணம் தானாகவே பரவும் இயல்புடையது. ஒரு விளக்கு தன் ஒளியை நம் கண்ணுக்குள் அனுப்ப முயற்சி செய்வதில்லை. அது ஒளிவிடும் தன்மை உடையது. ஒளி பரவுகிறது. உனக்கும் அது பொருந்தும். நீ யாரையோ சார்ந்திருப்பதாக நினைக்கத் தேவையில்லை. மற்றவர்கள் உன்னைச் சார்ந்திருக்க வேண்டுமென்ற விருப்பமும் தேவையில்லை. இதெல்லாமே மனதின் குழப்பமான நிலையில் தோன்றுகின்றன. இதை மூட்டைகட்டித் தூக்கி எறி! நல்ல காரியம் செய்ய எப்போதும் தயாராக இரு! திறமைகளை ஆக்க பூர்வமாக மற்றவர்களின் நன்மைக்காக உபயோகிக்க வேண்டும். 

எனக்கு ஆக்கபூர்வமாக சிந்தித்து செயல்படுபவர்கள் நிறைய தேவையாக இருக்கிறது. உன் திறமை எதுவானாலும் அது மற்றவர்களுக்குத் தேவைப்படும். உன்னால் முடிந்த சேவையை செய். ஆசிரமத்தில் மக்கள் தங்க வசதி செய். அறைகளை சுத்தம் செய்ய பலர் தேவைப்படுகிறார்கள். உனக்கு நேரம் இருந்தால் இந்த சேவையைச் செய். தோட்ட வேலையில் ஈடு பட விரும்பினால், இங்குள்ள தோட்டக்காரர்களிடம் பேசி, செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது, களையெடுப்பது போன்ற சேவைகளைச் செய். ஒரு இடத்தில் வெறுமனே அமர்ந்து, நான் யாருக்காவது தேவைப் படுவேனா? நான் உபயோகமானவனா? என்னை மற்றவர்கள் விரும்புவார்களா? என்று சிந்திப்பதில் ஒரு உபயோகமும் இல்லை. இப்படி ஒரு குழப்பமா? இது நேரத்தை வீணாக்குவது. நீ மகிழ்ச்சியாக, அறிவாளியாக இருக்க வேண்டும், மேலும் அறிவாளியாக வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

கே: குருதேவா ! நான் ஒரு இளைஞன். மனம் ஓய்வாக இருக்க புகை பிடிக்கிறேன். மக்கள் என்னைத் திட்டுவதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. என் மனநிலையை எப்படி மாற்றிக் கொள்ள முடியும்? தியானம் செய்வது எனக்கு வெறுப்பாக இருக்கிறது. எனவே என்னை தியானம் செய்யச் சொல்லாதீர்கள்.

குருதேவர்: நீ உன்னை மாற்றிக் கொள்ள விரும்புகிறாய். இல்லையா? அக்காரியம் துவங்கி விட்டது. தியானம் அலுப்பாக இருந்தால் யோக சாதனைகளில் ஈடுபடு. அதுவும் அலுப்பாக இருந்தால், எழுந்து நடனமாடு. மிகவும் களைப்படையும் வரை நடனமாடு. பிறகு படுத்து ஓய்வெடு. தியானம் தானாகவே நிகழும்.

உன் மனம் எப்படி அலைகிறது என்று எனக்குத் தெரியும். கொஞ்சம் விட்டாலும் அது உன்னை அலைக்கழிக்கும். அதனால் தான் நாம் மனதை தற்சமயத்துக்குக் கொண்டு வர பல யுக்திகள் வைத்திருக்கிறோம். அர்த்தமுள்ள சேவையில் ஈடுபடு. நீ சேவையில் 100% கொடுத்தால், உன் மனதை உன் கட்டுக்குள் கொண்டு வர முடியும். மனதை அடக்க முடியும்.

கே: குருதேவா ! ஈரானியர்களும், பாரசீகர்களும் கடவுளை “அஹூரா” என்றும் அசுரர்களை “தெய்வா” என்றும் அழைக்கிறார்கள். இந்தியர்கள் இதை மாற்றி அழைக்கிறார்கள். இதைப் பற்றிப் பேசுவீர்களா ?

குருதேவர்: இந்திய கலாசாரத்தில் “தைத்யா” என்று ஒரு சொல் உண்டு. அசுரர்களை தைத்யர் என்று அழைப்பது வழக்கம். ஆதித்யா என்பது தேவர்களைக் குறிக்கும் சொல். அதிதியிலிருந்து பிறந்தவர்கள் ஆதித்யர்கள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தந்தை ஒருவரே. தாய்மார்கள் இருவர். அதிதி மற்றும் திதி. தந்தை காஷ்யப ரிஷி. அதிதியிடம் பிறந்தவர்கள் சுரர்கள். (ஆதித்யர்கள்) திதியிடம் பிறந்தவர்கள் தைத்யர்கள் அல்லது அசுரர்கள். அதனால் தான் பாரசீகம் மற்றும் இந்தியக் கடவுள்களின் பெயர்களில் பல ஒற்றுமைகள் உள்ளன.

நீ ஆராய்ந்து பார்த்தால்,வேத காலத்தில், தீ வளர்த்து கொண்டாடும் வழக்கம் இருந்ததை அறியலாம். உருவ வழிபாடு மற்றும் கோவில்கள் அப்போது கிடையாது. தீ இல்லாமல் எதுவும் நகராது. மனித சமுதாயத்துக்கு முதல் முதல் கிடைத்த ரிக்வேத மந்திரம் “அக்னி” எனப்படும். அக்னி என்றால் புனிதமான நெருப்பு என்று பொருள். அக்னியை வழிபடாமல் ஒரு நாளும் கழியாது. “த்ரிகால அக்னி கார்ய” என்றால் காலை, பிற்பகல் மற்றும் மாலை மூன்று வேளைகளிலும் தீ வளர்த்து வழிபடும் வழக்கம் இருந்தது.

நெருப்புக்கும் வாழ்வுக்கும் (உயிர் மூச்சுக்கும்) ஒற்றுமை உண்டு. இரண்டும் ஆக்ஸிஜன் இல்லாமல் இருக்க முடியாது. உன்னை ஒரு (காற்றுப் புகாத) கண்ணாடிக் கூட்டுக்குள் அடைத்து வைத்தால், அதில் ஆக்ஸிஜன் இருக்கும் வரையில் மட்டுமே நீ உயிரோடு இருக்க முடியும். நெருப்புக்கும் அது பொருந்தும். ஆக்ஸிஜன் இல்லாமல் நெருப்பு கிடையாது. எனவே நாம் காணும் நெருப்பு தான் கண்ணுக்குத் தெரியாத ஆத்மாவின் வெளிப்பாடு என்று கொள்ளலாம். எனவே இறைவனை அடைய நீ தீயைக் கடந்து செல்ல வேண்டும். தீ தான் (அக்னி) இறைமையின் வாசல்படி.