பாலங்கள் கட்டுவது

நவம்பர் 25, 2013

பாலமாய் இருப்பது என்பது மிகக் கடினமான ஒன்று, என்று உங்களுக்கு தெரியும். ஒரு பகுதி இந்தப் பக்கம் இருக்க வேண்டும் இன்னொரு பகுதி அந்தப் பக்கமும் இருக்க வேண்டும். ஒரு பாலம் தன் கால்களை ஒரு பக்கம் மட்டும் வைத்திருக்க இயலாது, இரண்டு பக்கமும் இருந்தாக வேண்டும். 

இலங்கையில் இந்த பிரச்சினை நடந்த போது, நாம் இரண்டு பக்கத்திற்குமான பாலமாக நாம் (வாழும் கலை) செயல்பட்டோம். இது மிகக் கடினமான வேலையாக இருந்தது. இலங்கை அரசுடனும் தொடர்பிலிருந்தோம் விடுதலைப் புலிகளுடனும் தொடர்பிலிருந்தோம்.

விடுதலைப் புலிகள் அமைப்பை சார்ந்தவர்கள் மீது நாம் உண்மையில் மிகுந்த பரிதாபம் கொண்டுள்ளோம். ஏனென்றால், அது கடந்த காலத்தில் நடந்திருந்தாலும் கூட, அநீதி இழைக்கப்பட்டது என்பது நமக்கு தெரியும். அதை செய்தது வேறு ஒரு அரசு. என்ன செய்தார்கள் என்றால், அங்கு ஒரே மொழி தான் என்று ஆக்கிவிட்டார்கள். சிங்கள மொழி தான் அரசு மொழி என்று கூறிவிட்டார்கள். அதன் பொருள், ஆயிரக்கணக்கான வருடங்களாக அங்கு வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு அரசு வேலை இல்லை, அவர்கள் அங்கு வேலை செய்ய முடியாது.

மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிகளில் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு செய்துவிட்டார்கள். ஆனால் இலங்கைத் தமிழர்கள் நன்கு படித்தவர்கள். தொழில் மற்றும் மருத்துவத் துறைகளில் முன்னணியிலிருந்தனர். அந்தச் சமூகம் சிறியது, 15 % லிருந்து 20 % இருக்கும், ஆனால் மருத்துவக் கல்லூரிகளில் 100%  அவர்களே இருந்தனர். எனவே, அரசாங்கம் இவர்களை எப்படியாவது மட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு இவ்வளவு மோசமான அழிவுக்கு வழி வகுத்தனர். ஏராளமான இளைஞர்கள் இறந்தார்கள், ஏறக்குறைய எல்லா இளைஞர்களும் ஆயுதமேந்தினர்.

இந்த அநீதி நடந்த போது, இந்திய அரசு தமிழர்களை ஆதரித்தது. பிரபாகரனை பூனாவிற்கு அழைத்து வந்து பயிற்சியளித்தனர், இந்திரா காந்தியின் ஆதரவுடன் அவர்கள் இராணுவ பலத்தையும் அடைந்தனர். பிறகு அவருடைய மகன் ஆட்சிக்கு வந்து, அவர் இலங்கையுடன் சமாதானமாக போக வேண்டும் என்று முடிவு செய்து, தமிழர்களிடமிருந்து ஆயுதங்களை அப்புறப்படுத்த முயற்சித்தார். இதற்கு பிரபாகரன் கூறினார், ‘சரி, நீங்கள் சில காலம் அமைதிப் படையாய் வந்து இருப்பீர்கள். நாங்களும் எங்கள் ஆயுதங்களை துறக்கிறோம், ஆனால் பிறகு என்ன? பிறகு நாங்கள் குறிவைக்கபடுவோம். எங்களுக்குத் தனி அடையாளம், எங்களுக்கென ஒரு அரசாங்கம் வேண்டும்.’

அவர் கூறியது மிகச் சரியானதே. நடந்த நிகழ்வுகளை பார்த்து, அவருக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால், இந்திய அரசாங்கம் மிக முட்டாள்தனமான செயலைச் செய்தது. பின்னாட்களில் வெகுவாகக் கொண்டாடப்பட்ட, ஆகச்சிறந்த நேர்மையான தலைமைத் தேர்தல் செயலராகப் போற்றப்பட்ட T.N.சேஷன் அவர்கள் அப்போது பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்தார். மிகத் திறமையானவர். எனக்கு மூன்று நாட்கள் கொடுங்கள், நான் இலங்கையை தமிழ் மாநிலம், சிங்கள மாநிலம் என இரண்டு மாநிலங்களாக ஆக்கிவிடுகிறேன் என்று இராஜீவ் காந்தியிடம் கூறினார்.
நமக்கு ஏற்கனவே பல சுமைகள் இருக்கின்றன அதற்கு மேல் இன்னும் ஏன் எனக்கூறி இராஜீவ் காந்தி மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, தமிழர்களிடமிருந்து ஆயுதங்களை அகற்ற ஆரம்பித்து இந்திய இராணுவம் அவர்களுடன் சண்டை போட ஆரம்பித்துவிட்டது. அது ஒரு பெரும் துயரம். அமெரிக்கா வியட்நாமில் செய்தது போல இந்தியா இலங்கையில் செய்தது. இறுதியில் இராணுவத்தை திரும்ப அழைத்துக் கொண்டது, ஆனால் இலங்கை பிரிந்தே இருந்தது. தமிழர்கள் தங்களுக்கென ஒரு பகுதி வைத்திருந்தனர், சிங்களர்கள் தங்களுக்கென ஒரு பகுதி வைத்திருந்தனர், ஒவ்வொருநாளும் சண்டை சச்சரவு நீடித்தது.

நாம் சும்மா இருக்ககூடாது, அமைதி திரும்ப நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று நாம் நினைத்தோம். எனவே, இலங்கையின் அதிபரான இராஜபக்ஷேவைச் சென்று பார்த்தேன். அவர் சொன்னார், ‘குருதேவ், நானும் பிரபாகரனும் ஒன்றாக அமர வேண்டும். நீங்கள் அதற்கான முயற்சி எடுக்க வேண்டும்.’ ஏனென்றால் அப்போது தமிழர்கள் இலங்கை மீதும் இந்தியாமீதும் நம்பிக்கை இழந்துவிட்டிருந்தனர். அவர்களே ஒரு இராணுவமாக இருந்தனர், சர்வதேச அளவில் நார்வே, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உதவி செய்துகொண்டிருந்தது. மேலும், அப்போது நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் அகதிகளாய் உலகெங்கும் பரவி இருந்தனர். இலண்டன், அமெரிக்கா, கனடா மற்றும் பல பகுதிகளில் வெளி தேச அரசாங்கம் அமைத்திருந்தனர்.

நான் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு பயணம் செய்த போது அகதிகளாய் அங்கிருந்த இலங்கைத் தமிழர்களைச் சந்தித்த போது தங்கள் பயங்கர அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் எவ்வளவு கடினமான சூழ்நிலையில் இருந்தனர், எப்படி தப்பித்தனர், எப்படி அங்கு வந்து சேர்ந்தனர், எப்படி தங்கள் குடும்பங்கள் தவித்துக் கொண்டிருக்கின்றன என்று பலவற்றை கூறினர். ஒவ்வொரு நாளும் பொய்யான குற்றச்சாட்டுகளில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். எந்த ஒரு இளைஞனையும் கூட்டிச் சென்று சுட்டுக் கொள்வது நடக்கக்கூடியதாய் இருந்தது. இலங்கை இராணுவம் யாழ்பாணம் மற்றும் பிற பகுதிகளை சூறையாடி கொண்டிருந்தது. அவர்கள் ‘குருதேவ், நீங்கள் தியானம் மற்றும் அமைதி பற்றி பேசுகிறீர்கள். தயவு செய்து எங்களுக்கு அமைதியை கொடுங்கள். ஏதாவது செய்யுங்கள்.’ ‘நிச்சயமாக’, என்றேன் நான்.

பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்த கனடாவிலிருந்த ஒருவர், அனந்தராமன், நான் மற்றும் சுவாமி சத்யோஜதா ஆகிய மூவரும் இந்தியா திரும்பியபின் இலங்கைக்கு சென்றோம். இலங்கை அதிபர் கூறினார், ‘நானும் பிராபகரனும் தனியாக அமர்ந்து பேசுகிறோம்.’ எனவே அவர்கள் எனக்காக ஒரு ஹெலிகாப்டரை அழைத்து அதன் மூலம் என்னை அவர்கள் பகுதிக்கு அருகில் இறக்கிவிட்டனர், அந்தப் பகுதி ஐக்கிய நாடுகள் கண்காணிப்பில் இருந்ததால் அவர்களால் உள்ளே வரமுடியவில்லை. காவல்துறை அதிகாரிகள் கூறினார்கள், ‘உங்களை நாங்கள் இங்கே விட்டுவிடுகிறோம். என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. எங்களால் உள்ளே செல்லமுடியாது.’

அங்கே நாங்கள் சென்ற போது, அங்கே சிறுவர்கள் துப்பாக்கியுடன் இருந்தனர். அவர்கள் மிகவும் பயந்து போயிருந்தனர். அவர்கள் நாங்கள் உள்ளே செல்ல அனுமதி வாங்கி வரும் வரை காத்திருந்து பின்னர் அவர்கள் பகுதிக்குச் சென்றோம். எங்கு பார்த்தாலும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பற்றிய சுவரொட்டிகள் இருந்தன. பெரிய புத்தர் படங்களை வைத்து அதில், ‘வன்முறை, இனப்படுகொலை – இவற்றையா புத்தர் போதித்தார். எனவே, எங்கு பார்த்தாலும் உயிர்த் தியாகம் செய்த, கொல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் படங்கள். பிறகு விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் இருக்கும் இடம் என்று சொல்லப்பட்ட இடத்தை அடைந்தோம். அங்கு சென்ற போது அவருடைய உதவியாளர் கூறினார், ‘குருதேவ், நான் உங்களை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.’ நான் கூறினேன், ‘நீங்கள் மட்டுமே ஏதாவது செய்ய முடியும். நீங்கள் அமைதியை கொணர முடியும்.’

அவர் சொன்னார், ‘சரி, அப்படியே செய்வோம்.’ உங்கள் தலைவரை பார்க்க வேண்டும் என்று கூறி அங்கே காத்திருந்தோம். முதலில், அவர் அங்கே இருப்பதாக கூறினார், பின்னர் இல்லை அவர் காட்டில் எங்கோ மறைந்திருக்கிறார் என்று கூறினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இறுதியில் நான் அவரை சந்திக்க விடவில்லை. முதலில் சம்மதித்தவர்கள் பிறகு பின் வாங்கிவிட்டனர். மதத் தலைவர்கள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் மீது அப்படி ஒரு முன் அனுமானம் வைத்திருந்தனர். உலகில் பல இடங்களில் இந்து மத ஆன்மீகத் தலைவர்கள் இப்படிப்பட்ட முன் அனுமானத்தை சந்திக்க நேரிடுகிறது. முன் அனுமானத்தை சந்தித்த அப்படி ஒரு நிகழ்வு அது. நவராத்திரி ஆரம்பித்து நான் மௌனத்தில் இருக்க வேண்டிய நேரமாதலால், அடுத்த நாள் நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அது நவராத்திரிக்கு இரண்டு நாள் முன்பு, எனவே அடுத்த நாள் நான் கிளம்பிவிட்டேன். மறு பக்கத்தில் ஹெலிகாப்டர் வேறு எங்களுக்காக காத்திருந்ததால் எங்களால் மேலும் காத்திருக்க முடியவில்லை. கொழும்புவிற்கு மூன்று மணி நேரப் பயணம், இந்தப் பக்கமிருந்து அந்த பக்கத்திற்கு எந்த வித தகவல் தொடர்பும் இல்லாததால் அந்த பக்கமிருந்தவர்கள் கவலை கொண்டனர். எனவே நாங்கள் காத்திருந்து விட்டு இருளடைந்த நேரத்தில் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம்.

கிளம்பும் போது என்னுடன் வந்தவர் கூறினார், ‘இந்த மக்களுக்கு இது நல்லதல்ல. இது ஒரு அபசகுனம் என்று நினைக்கிறேன். நீங்கள் அவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள் அவர்கள் உங்களை சந்திக்க மறுத்து விட்டார்கள். இது ஒரு நல்ல சகுனமல்ல என்று நினைக்கிறேன், ஏதோ பேரழிவு நடக்கப் போகிறது.’ அப்படியே அது நடந்தது. அந்த மக்களிடம் நான் சொன்னேன், ‘பாருங்கள், நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்பதை ஒத்துக் கொள்கிறேன். நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றே நானும் நினைக்கிறேன், ஆனால் இராணவ பலத்தை மட்டுமே நம்பி வெற்றி கொள்ள முடியாது. உங்களுக்குத் திறன் வேண்டும்.’

எனவே, நான் அவர்களுடைய கீழ் மட்டத் தலைவர்களிடம் பேசினேன், ‘நீங்கள் போய் உங்கள் தலைவரிடம் சொல்லுங்கள். பல டாங்க்குகள், சக்திவாய்ந்த இராணுவம் மற்றும் பல கருவிகள் இருப்பதாலேயே அவர் வெற்றி பெற்றுவிட முடியாது. ஐரோப்பிய பாராளுமன்றம் உங்களை தீவிரவாத அமைப்பு என்று முத்திரை குத்தியுள்ளது. முதலில் நீங்கள் அதிலிருந்து வெளி வரவேண்டும். நீங்கள் தீவிரவாதிகள் அல்ல என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். 

நீங்கள் ஏதுமறியா மக்களை கொல்லமாட்டீர்கள். கெரில்லா முறை போருக்கு சிறுவர்களை அழைக்க மாட்டீர்கள். அரசியல் ரீதியாக இருங்கள். உங்கள் அனைவருக்கும் ஜெனீவாவில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முயல்கிறேன். இவர்களுக்கு ஜெனீவாவில் ஏதாவது செய்ய நினைத்தேன். ஒரு கூட்டம் கூட்டி அமைதியான ஒரு புரிதல் ஏற்படுத்த நினைத்தேன். நான் சொன்னேன், ‘இப்போது உங்களிடம் ஏராளமான ஆயுதங்களும் வலிமையும் இருக்கிறது. 

நீங்கள் வலிமையோடு இருக்கும் போது தான் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். பலவீனமாக இருக்கும் போது பேச்சுவார்த்தைக்கு வந்து பயனில்லை. பரிதாபமாய் தோற்றுப் போவீர்கள்.’
‘மகாபாரதப் போர் யுக்தியினால், தந்திரத்தினால் வெல்லப்பட்டது. போரில் வெல்வதற்கான யுக்தி மற்றும் திறன் உங்களுக்கு வேண்டும், இலங்கை இராணுவத்தை விட வலிமையான இராணுவ பலம் என்னிடம் இருக்கிறது என்ற வறண்ட முரட்டுத்தனம் அல்ல. பிறகு எல்லா நாடுகளும் இலங்கையை ஆதரிக்கும். இந்தியாவின் ஆதரவு உங்களுக்கு இல்லை, வேறெந்த நாடுகளின் ஆதரவும் உங்களுக்கு இல்லை. என்ன செய்வீர்கள்? இந்தியப் பிரதமரை கொன்று நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள்.’

நான் பல வார்த்தைகள் மூலம் சொன்னேன், ‘உங்களுக்குத் திறன் வேண்டும், வெறும் வலிமை மட்டும் வேலை செய்யாது. உங்களுக்கு முதலில் இறைவனின் தலையீடு நிச்சயம் வேண்டும். இறைவனின் உதவியின்றி, உங்களால் சாதிக்க முடியாது, வெறும் இராணுவ உதவி அல்ல. நீங்கள் ஏன் தியானம் போன்றவற்றை செய்து, சற்று தளர்வாய் இருந்து யோசித்து யுக்தியுடன் செல்லக் கூடாது.’ கீழ் மட்டத் தலைவர்களிடம் நான் வைத்த இந்தக் கோரிக்கை எதுவும் மேலே உள்ளவர்களுக்குச் செல்லவில்லை. ஏனென்றால் அதற்குள் அவர்களுடைய தலைவர் எல்லாவற்றையும் சந்தேகப்படும், எல்லோரையும் கண்டு அச்சம் கொள்ளும் நிலைக்குச் சென்று விட்டார். அவருடைய பல ஆதரவாளர்கள் அவரைவிட்டு விலக ஆரம்பித்தனர். இலங்கையின் அதிபர் அவ்வளவு புத்திசாலியாய் இருந்தார். பலரை தன பக்கம் அழைத்து அவர்களுக்கு வசதியையும் பணத்தையும் தந்து அந்த இயக்கத்தை பிளக்க முயற்சிகள் செய்து வந்தார். அவர்களுக்கு ஆலோசனை சொல்ல யாருமில்லை. பிராபகரன் யாருடைய அறிவுரையும் கேட்கமாட்டார், தங்களுக்குத் தாங்களே பேரழிவை ஏற்படுத்திக் கொண்டனர்.

போர் உச்ச கட்டத்தில் இருந்த அந்த நேரத்தில், எனக்கு அழைப்பு விடுத்தனர். இதற்கு முன்பேயே நாம் சுவாமிஜியை சென்னைக்கு அனுப்பி அவர்களுடைய முக்கிய தலைவர்களை சந்திக்க அனுப்பி இருந்தோம். அப்போது அவர்கள் சொன்னார்கள், ‘நாங்கள் ஆன்மீகத் தலைவர்களை பார்ப்பதில்லை.’ ஆனால் அவர்களே இறுதிக் கட்டத்தில் எங்களை அழைத்து தலையிடும்படி கூறினார்கள், அதாவது போர் முடிய இன்னும் இரண்டு தினங்களே இருந்த வேலையில் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, ‘தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்.’ ஏறக்குறைய எல்லாவற்றையும் நீங்கள் இழந்துவிட்ட அந்த கடைசி தருணத்தில் நாம் என்ன செய்ய முடியும்? சிறிய இடத்தில் மக்களுக்கு நடுவே நீங்கள் இருக்கிறீர்கள். மக்களையே கேடையமாகக் கொண்டு அமர்ந்திருக்கிறீர்கள்.

ஆனாலும் நாங்கள் அதிபருடன் பேசினோம். அதிபர் கூறினார், ‘குருதேவ், அவர்களை வெள்ளைக் கோடி அசைத்தபடி வரசொல்லுங்கள், நாங்கள் அவர்களுக்கு புகலளிக்கிறோம்.’ எனவே நாங்கள் இதை அவர்களுக்குக் கூறினோம். போரின் இறுதி நாளன்று, அவர்களுடைய மூன்று தலைவர்கள் வெள்ளைக் கொடி அசைத்தபடி வெளி வர, இலங்கை இராணுவம் அவர்களை வெகு அருகில் இருந்து சுட்டுக் கொன்றது. அவர்கள் அந்த மூன்று பேரையும் சுட்டுக் கொன்றனர். அவர்களை வெள்ளைக் கொடி அசைத்தபடி வரச் சொல்லி அதிபர் தாமே உறுதி கூறியிருந்தார். இப்போது 
அவர்கள் வெள்ளைக் கோடி அசைத்தபடி வந்தனர், ஆனால் மூவரையும் அவர்கள் சுட்டுவிட்டனர்.
ஆனால், நான் தகவல் கொடுத்துவிட்டேன், இராணுவத் தலைவர் கேட்கவில்லை என்று அதிபர் பிறகு கூறுகிறார். அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பழி சொல்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் அடர்வு முகாம்களில் அடைக்கப்பட்டனர். நான் சென்றேன், என்னுடன் ஸ்வாமிஜியும் வந்தார், ஆனாலும் நாம் ஒரு பாலமாக இருக்க வேண்டும். உணர்ச்சிபூர்வமாக பாதிப்படையாமல் அல்லது கோபப்படாமல், அல்லது துயரம் கொள்ளாமல் அவர்களுடன் தொடர்பிலிருக்க வேண்டும்.
அந்த முகாம்களில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட ஒரே அரசு சாரா அமைப்பு நாம் தான். அவர்கள் செய்ததற்கு உண்மையில் நான் எதிர் வினை புரிந்து கோபமோ அல்லது துயரமோ அடைந்தால், அது நன்மை ஏதும் செய்திருக்காது. ஞானம் உதவுகிறது. ‘சரி, அவர்கள் செய்து விட்டார்கள், இப்போது என்ன செய்வது?’ நாம் அப்படியே மேலே செல்ல, அவர்களும் நம்மை வேலை செய்ய அந்த மக்களுக்கு உதவிகள் செய்ய அனுமதித்தார்கள்.

முதல் குழுவோடு நான் சென்று பார்த்தேன், சேரும் சகதியுமாக இருந்த அந்த முகாமில் ஆயிரம் ஆயிரம் மக்கள் இருந்தார்கள். இதயத்தை பிழிவதாக இருந்தது. அவர்கள் எல்லோரும் நல்ல வசதியான வீடுகளில் வசித்தவர்கள். அவர்கள் அனைவரும் வசதியான பின்னணி கொண்டவர்கள். தமிழர்களிடையே ஏழ்மை இருக்கவில்லை. அவர்கள் செல்வந்தர்களாய், போதுமான நிலம், மற்றும் பெரிய வீடுகளோடு இருந்தவர்கள். அதை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கம்பி வேலிகளுக்குள் கூடாரங்களில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. ஆழ்ந்த ஈடுபாட்டோடு கோவில்களில் பூஜை செய்துவந்த சுமார் 40 அர்ச்சகர்களும் அதில் இருந்தனர். காலையில் குளிக்காமல் சாப்பிடமாட்டார்கள் அவர்கள். தினசரி அவர்கள் பூஜை செய்ய வேண்டும், ஆனால் அங்கே எதுவுமேயில்லை. சிறு துளி உணவுக்காக வரிசையில் நின்றாக வேண்டும். அணிவதற்கு மாற்றுத் துணியுமில்லை. தண்ணீருக்குப் பஞ்சம். மாதக் கணக்கில் அங்கே தங்க வேண்டிய சூழல்.

நாம் அங்கு சென்ற போது, முதலில் அந்த அர்ச்சகர்களை விடுவித்தோம். பெண்களுக்கும் முதியவர்களுக்கும் உதவிகள் செய்தோம்; 60 வயதிற்கு மேற்பட்டவர்களை விடுவிக்கச் செய்தோம். பல யுவாச்சார்யார்களுக்கு (இளைஞர்கள்) பயிற்சி அளித்தோம். அவர்கள் குடும்பங்களை விட்டு பிரிந்தவர்கள். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் வேறு ஓர் நகரில் வேறு ஒரு முகாமுக்கு அனுப்பப்பட்டனர். பேரதிர்ச்சி தரும் மற்றொரு விஷயம், கர்பிணிகள் அனைவருக்கும் கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. அடுத்த தலைமுறைக்கு விடுதலை புலிகளின் இரத்தம் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. வாழும் கலை அந்தப் பெண்களுக்கு அந்த வேதனையிலிருந்து வெளிவர உதவி செய்தது. அரசுடன் நாம் நல்ல முறையான தொடர்பிலிருந்ததால், அவர்களுக்கு வாழும் கலை பயிர்ச்சி அளிக்க அனுமதி கிடைத்து, அவர்களை அந்தப் பெருந்துயரிலிருந்து வெளிக்கொணர உதவி செய்ய முடிந்தது.

இதற்கு நடுவே, இங்கே பல மாநாடுகளை நாம் நடத்தினோம். கொழும்புவில் இருந்த போது, கொழும்புவிற்கான அமெரிக்க தூதர் மற்றும் பல நாட்டுத் தூதர்களுடன் தொடர் சந்திப்புகள் நிகழ்த்தினோம்; இந்தியாவை தவிர. மிகவும் துரத்ருஷ்டமான ஒன்று அது. நம்முடைய இப்போதைய அரசாங்கத்திற்கு இந்தப் முழுப் பிரச்சினையை எப்படி கையாள்வது என்றே தெரியவில்லை. தமிழ் தெரியாத ஒருவரையே இலங்கைக்கு தூதராக நியமித்துவந்தது. இலங்கைக்கு பொறுப்பேற்ற அதிகாரிகளுக்கு தமிழர்களை பற்றி தெரியவில்லை. இந்த பிரச்சினையில் எல்லாவற்றையும் பாழ்படுத்திவிட்டனர். என்னுடன் அவர்கள் இது பற்றி பேசக்கூட இல்லை. அங்கே அமைதி ஏற்படுத்த நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்பது தெரியும். இலங்கையில் அமைதி திரும்பவதற்கான நற்பெயர் எனக்கு வந்துவிடக்கூடாது என்று விரும்பினர். 

அந்த நற்பெயர் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்பினர், ஆனால் அதை எப்படி செய்வது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இந்தியா செய்த உச்சபட்ச அறிவீனம் இது.
இந்தியா செய்த இரண்டாவது அறிவீனமான செயல் நேபாளுடனானது. நம் நாட்டு கம்யுனிஸ்ட்டுகள் நேபாளின் மாவோயிஸ்ட்டுகளுடன் கை கோர்த்து அவர்களை வலிமையாக்கி விட்டனர். மாவோயிஸ்ட்டுகளை வலியாமையாக்கிய போது, அவர்கள் இந்தியாவிற்கு எதிராகத் திரும்பி விட்டனர்! பிறகு இவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மாவோயிஸ்ட்டுகள் சீனாவின் ஆதரவாளர்கள் என்று தெரிந்தே அவர்களை ஏற்றிவிட்டனர். மாவோயிஸ்ட்டுகளை ஆதரித்து, அவர்கள் அனைத்துக்கும் எதிராகத் திரும்பிவிட்டனர். உலகின் ஒரே இந்து நாடான நேபாளை திருப்பிவிட்டார், அங்கு இப்போது அப்படி ஒரு ஊழல். அந்த நாடு பாழாகியது. எல்லா தொழில்களும் படுத்துவிட்டன. மக்கள் சலிப்படைந்து நேற்றைய தேர்தலில் அவர்களை துடைத்தெரிந்து விட்டனர்.

மக்களுக்கு அந்தச் சக்தி இருந்தது, அவர்கள் எழுந்து நின்று கூறினார், ‘இல்லை, எங்களுக்கு இதற்கு மேல் மாவோயிஸ்ட்டுகள் வேண்டாம். எங்களுக்கு இந்த நாட்டில் தர்மம் வாழ வேண்டும்.’
இதற்கு முன் இல்லாத அளவு மத மாற்றம் நிகழ்ந்தது. மற்ற மதங்களுக்கு மாறுவது 200% அதிகரித்தது. நேபாளின் அடையாளம் தொலைந்து கொண்டிருந்தது, அதற்குக் காரணமும் நமது இன்றைய அரசாங்கமே. நமக்கு நிலையான மனநிலை உள்ள தலைவர்கள், சொந்த உணர்வுகள் மற்றும் இழிவுபடுத்தல்களை தாண்டிப் பார்க்கும் தலைவர்கள் வேண்டும். இங்கு தான் மக்கள் தவறு செய்கின்றனர். மற்றவர்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், அவர்களை எப்படி வரவேற்கிறார்கள் அல்லது வரவேற்கவில்லை என்பதில் சிக்கிவிடுகிறார்கள்.

யாராவது உங்களை இழிவுபடுத்தினால், அதனால் என்ன, அது அவர்களுடைய சொந்த இழிவுபடுத்தல்! நீங்கள் கவலைப்படக் கூடாது. அப்படித் தான் நான் அதைப் பார்கிறேன்.
SAARC மாநாட்டில் நமது இந்தியப் பிரதமருக்கும் நேபாள மன்னருக்கும் இடையே ஏதோ நடந்தது, மற்றவர் தம்மை இழிவுபடுத்திவிட்டதாக மாற்றி மாற்றி இருவரும் நினைத்தார்கள். அதனால் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வதை நிறுத்திவிட்டார்கள். கற்பனை செய்ய முடிகிறதா? இரண்டு நாடுகளின் தலைவர்கள் பேசிக்கொள்வதை நிறுத்தி விட்டார்கள். அறீவீனம்!