இறைவனிடம் புகலடைவது


25 நவம்பர் 2013

பெங்களூர், இந்தியா




கே: குருதேவா! பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் அவரிடம் புகலடைய சொல்கிறார். அதற்கு என்ன அர்த்தம்? தயவு செய்து விளக்குங்கள்.

குருதேவர்: புகலடைவது என்றால் (மனம்) தளர்வாக இருப்பது என்று அர்த்தம். நாம் இறைவனிடம் புகலடையும் போது, தன் தாய் வீட்டில் இருக்கிறாள் என்பதை அறியும் குழந்தையிடம் இருக்கும் உணர்வு போல் இருக்கும். ஒரு பாதுகாப்பான உணர்வு. தன்னம்பிக்கை, எனக்கு ஆதரவாக ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு, எனக்கு வழிகாட்டி அக்கறை காட்ட ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை, எல்லாம் சேர்ந்து ஒரு ஆழமான பாதுகாப்பான உணர்வு நமக்கு கிடைக்கும். இதை தான் இறைவனிடம் புகலடைவது என்கிறோம். இல்லையென்றால், மனச் சலனமான நேரங்களில் கவலைப்படும் போது, மன இறுக்கத்தோடு இருக்கும் போது, உனக்கு ஆதரவு தேவைப்படும். ஆதரவு கிடைக்கும் போது அதை ஏற்று கொள்வதை புகலடைவது (தஞ்சமடைவது / சரணாகதி அடைவது) என்று சொல்கிறோம்.

கே: குருதேவா ! இந்த கிரகத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஆன்மீகத்தைப் பற்றிய கருத்து ஒன்றிருக்கிறது. சிலர் மதச்சார்போடு இருப்பதை ஆன்மீகம் என்று எண்ணுகிறார்கள். சிலர் இவ்வுலக இன்பங்களை துறப்பதை ஆன்மீகம் என்று நினைக்கிறார்கள். ஆன்மீகம் என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன?

குருதேவர்: நாம் ஜடப்பொருளாலும் (கண்ணுக்குத் தெரியும் உடல்) கண்ணுக்குத் தெரியாத சூட்சும உடலாலும் (ஆத்மா) ஆக்கப் பட்டிருக்கிறோம். ஜடப்பொருள் – கார்போ ஹைட்ரேட்களாலும், அமினோ அமிலங்களாலும், புரோட்டின்களாலும் ஆக்கப் பட்ட உடல். ஆத்மா என்பது அமைதி, அன்பு, உற்சாகம், கருணை, முழுமை, நேர்மை முதலிய பண்புகளைக் குறிக்கும். அன்பு, அமைதி, உற்சாகம், கொண்டாட்டம், நகைச்சுவை உணர்ச்சி, முழுமை, நேர்மை, ஞானம் இவைகளை உயர்த்துவது தான் ஆன்மீகம் எனப்படும். ஆன்மா மேன்மையடையும் போது, நீ உடல் தவிர மற்றொன்றால் ஆக்கப்பட்டிருப்பதை உணர முடியும். நீ இந்த உலகத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறாய். இது தான் ஆன்மீகமாகும். இந்த உலகமனைத்தும் பேரண்டங்கள் அடங்கிய ஒரு பெரிய உடல் போல், ஓருயிர் போல் இயங்குகிறது என்று இன்றைய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதை ஒரு கருத்தாக மட்டுமன்றி, அனுபவத்தில் உணர்வதே ஆன்மீகமாகும். 

அன்புக்கும் இது பொருந்தும். உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. ஒவ்வொருவரும் உன்னில் ஒரு பகுதி என்று உணர்வது ஆன்மீகம். இந்த வாழ்க்கையின் உண்மையை, குவாண்டம் பௌதீகத்திலும் இன்றைய விஞ்ஞானிகள் எடுத்துரைக்கிறார்கள். அதை அறிவதே ஆன்மீகம்.
குவாண்டம் பௌதீகப் படி, இவ்வுலகம் ஒரு அலையால் ஆனது.இவ்வுலகில் திடப்பொருள் என்று ஒன்றுமே கிடையாது. எல்லாமே அலைகள் தான். இதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறீர்களா? இவ்வுண்மையை அறிவது தான் ஆன்மீகம். ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது நாம் இந்த உண்மையோடு இணையலாம். எனவே தியானம் என்பது ஆன்மீகத்தில் ஒரு அங்கமாகும். அதே போல் நாம் செய்யும் செயல்கள் சேவையோடு இணைந்தது. சேவையும் ஆன்மீகத்தின் ஒரு  அங்கமாகும்.

கே: குருதேவா ! கடவுள் நம்பிக்கை இல்லாதவர் ஆன்மீக வாதியாக முடியுமா?

குருதேவர்: ஆம்! நிச்சயமாக ஆகலாம். ஆன்மீகவாதிக்கு ஒரு குறிப்பிட்ட (மத) நம்பிக்கை இருக்க அவசியமில்லை. ஒருவருக்கு பகுத்தறிவதில் விருப்பம் இருந்தால் அவரை ஒரு ஆன்மீகவாதி என்று சொல்லலாம். 

ஆன்மீக வாதிக்கு எப்போதும் அதீத உற்சாகமிருக்க வேண்டும். இந்த அண்ட வெளியின் உண்மையை அறிந்தால், நீ அறிந்தது மிகமிகக் குறைவு என்று தெரியும் போது, நீ ஆன்மீகப் பாதையில் செல்கிறாய் என்று சொல்லலாம். மிகுந்த உற்சாகத்தோடு, மகிழ்ச்சியோடு பிறருக்கு சேவை செய்து, உன் மகிழ்ச்சியை பிறரோடு பகிர்ந்து கொண்டால் அது ஆன்மீகத்தின் ஒரு அங்கமாகும். ஆழ்ந்த திருப்தியோடும், முழுமையான உணர்வோடும் இருப்பது ஆன்மீகத்தின் அங்கமாகும். 

கே: குருதேவா ! அன்பும் பற்றின்மையும் சேர்ந்திருக்க முடியுமா? அவை ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருக்கின்றன.

குருதேவர்: அது இரண்டும் சேர்ந்தே இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நீ இப்படி இருக்க மாட்டாய். மூச்சை உள்ளிழுப்பதும், மூச்சை வெளி விடுவதும் முரண்பாடாக இருக்கின்றன. ஆனால் இரண்டுமே தேவை. நீ மூச்சை உள்ளே இழுக்கும் போது மூச்சை வெளியே விட முடியாது. அவை மாறி மாறி வரும். அதே போல் அன்பும் பற்றின்மையும் வாழ்வில் அவசியமாகிறது. அன்பு என்றால் ஒன்றின் மேல் ஆசைப் படுவது. ஆசைப்படுவதும், அதே சமயம் பற்றில்லாமல் இருப்பதும் வாழ்வில் உன்னை அறிவாளியாக நடு நிலையில் வைக்கும்.

கே: குருதேவா ! சிலர் பூநூல் (உபநயனத்தின் போது அணிவிப்பது) அணிந்திருந்தாலும், பொறுப்போடு நடந்து கொள்வதில்லை. புனிதமான பூநூல் அணிவதால் மட்டும் நமக்குப் பொறுப்பு வரும் என்று எண்ணுகிறீர்களா?

குருதேவர்: பூநூல் அணிவது ஒரு அடையாளம் மட்டுமே. வந்தே மாதரம் என்ற அடையாள வில்லை அணிவதால் மட்டும் நீ ஒரு நாட்டுப் பற்றுடையவனாக முடியாது. அதே போல் பூநூல் அணிந்திருப்பதால் மட்டுமே நீ பொறுப்புள்ளவன் என்று சொல்ல முடியாது. பூநூல் அணிவதால் மட்டும் பயன் இல்லை. நிறைய பேர் எதற்காக பூநூல் அணிந்திருக்கிறோம் என்பதையே அறியாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. 

கே: குருதேவா ! குழந்தைகள் எந்த திசையில் தலை வைத்துப் படுக்க வேண்டும். கிழக்கு, மேற்கு அல்லது தெற்கு திசையா?

குருதேவர் : கிழக்கு / மேற்கு திசையில் தூங்குவது நல்லது. ஏனென்றால் பூமியின் மின்காந்த அச்சுக்கு செங்குத்தாகப்படுப்பது நல்லது.

கே: குருதேவா ! நிறைய பணம், செல்வம் இருக்கும் போது தானாகவே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் மனித மனத்துக்கு எவ்வளவு பணம் நமக்குப் போதும் என்று அறிவது மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது. எனக்கு இது போதும் என்பதை எப்படி அறியலாம்? மனம் எப்போதும் அதிகத்தை விரும்புகிறது.

குருதேவர் : மக்கள் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் போதும் மேலும் திருடுகிறார்கள். இது மிகவும் துரதிஷ்டவசமான ஒன்று. பேராசை ஒருவரைக் கொன்று விடும். மற்றவர்களையும் அழித்து விடும். உன் வருமானத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை தொடாமல் தனியாக எடுத்து வை. உதாரணத்துக்கு நீ X சம்பாதிக்கிறாய் என்றால், அதில் 10 % உனக்காக சேமிக்க வேண்டும். மீதியை செலவழிக்கலாம். நம் எதிர்காலத்துக்காக சேமிப்பது அவசியம். அப்படி திட்டமிட்டு சேமிக்க வேண்டும். நீ சேமிப்பதில் 3 அல்லது 5 சதவிகிதத்தை பிறருக்கு உதவ வேண்டும். யாருமே நன்கொடை அளிக்க முடியும். நன்கொடை அளிக்க நிறைய வருமானம் வேண்டும் என்று நினைக்காதே. உன் வருமானத்தில் சிறு பகுதியை நன்கொடைக்காக ஒதுக்கலாம். 

படிக்கும் போது உன் பெற்றோர் உன் செலவுக்காகக் கொடுக்கும் பணத்தில் கூட 3 % அல்லது 5 % நன்கொடைக்காக எடுத்து வைக்கலாம். பெற்றொர் கொடுக்கும் முழு பணத்தையும் உணவு, சினிமா மற்ற விஷயங்களில் செலவிடாமல் சிறிது எடுத்து வைத்து பிறருக்கு உதவ வேண்டும். இந்த பழக்கத்தை வளர்த்துக் கொள். வாழ்வில் பற்றாக்குறை என்பதே இருக்காது. வறுமை ஒழிந்து நீ மகிழ்வோடு வாழ்வாய்.

கே: குருதேவா ! ராஜ யோகம்  என்றால் என்ன? ராஜ யோகம் அரசர்களுக்கு மட்டும் தானா? 

குருதேவர் : பெரு முயற்சி இல்லாமல், (மிகக் குறைந்த உழைப்பில்) நம் காரியத்தை திறமையாக நடத்திக் கொள்வதே ராஜயோகம் எனப்படும். நீ இப்போது செய்வதை ராஜயோகம் என்று சொல்லலாம். இங்கு உனக்கு வேண்டியது எல்லாமும் ஒரு தட்டில் வைத்துக் கொடுக்கப்படுகிறது. பகவான் புத்தர் செய்ததையெல்லாம் நீ செய்ய அவசியம் இல்லை. எத்தனை வருடம் மைல் கணக்காக (ஞானத்தைத் தேடி) அவர் நடக்க வேண்டியிருந்தது? என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது.? பல மாதங்களாக அவர் உணவு உண்ணாமல் இருந்தார். யாரெல்லாம் என்ன சொன்னார்களோ, அத்தனையும் செய்தார்.

இமயமலைக்கு சென்று தேடாமலே, பெரு முயற்சி இல்லாமலே, உனக்கு இங்கு நல்ல அனுபவம் கிடைத்து விட்டது. ஒரு அரசனைப் போல் அமர்ந்து உனக்கு வேண்டியவற்றை நீ அடைந்து விட்டாய். இது தான் ராஜயோகம்.ராஜா என்றால் அரசன். ராஜயோகம் என்றால் ஒரு அரசனைப் போல் வேண்டியதை ஒரு விரல் சொடுக்கினால் அடைவது. பெரு முயற்சி இல்லாமல் வேண்டியவற்றை அடைவது தான் ராஜயோகம்.

ஜோதிட சாஸ்திரப்படி உன் ஜாதகத்தில் கிரகங்களில் சேர்க்கைப்படி ராஜயோகம் வரும். அதன்படி நீ நல்ல குடும்பத்தில் பிறப்பாய். உன் உத்தியோகம், வியாபாரம் சிறப்பாக நடக்கும். செல்வம் பெருகும். நல்ல குழந்தைகளைப் பெறுவாய். திறமை வாய்ந்தவனாக விளங்குவாய். இதெல்லாம் (பேர், புகழ், செல்வம், திறமை……..) ராஜயோகத்தின் பலன்களாகும். பல விதமான ராஜயோகம் உண்டு.

கே: குருதேவா ! தியானம் செய்ய வைக்காமலேயே எப்படி பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு தியான யோகத்தையும் (தியானம்), கர்ம யோகத்தையும் (சேவை) கற்பித்தார்?

குருதேவர் : ஒருவர் யோகேஸ்வரராக இருக்கும் போது (யோகத்தின் அதிபதி), அதன் பலன் மற்றவர்களுக்கு உடனே போய் சேர்கிறது. மிக அதிகம் சொல்லத் தேவையில்லை. ஒரு முறை சொல்லும் போதே மற்றவர் மனதில் ஆழப் பதிந்து விடும்.சமஸ்கிருத மொழியில் ஒரு பழமொழி உண்டு. “ரிஷிநாம் யத் சித்தானாம் வாசம் அர்த்தோனு தாவதே”. இதன் பொருள் வருமாறு:

நீ ஆத்மாவில் ஒன்றியிருக்கும் போது, நீ சொல்லும் வார்த்தைகளின் அர்த்தம் வார்த்தைகளின் பின்னே செல்லும். ஆத்மாவில் ஒன்றியிருக்கா விட்டால், நீ ஒரு வார்த்தையை நூறு முறை சொன்னாலும் அது மற்றவர்கள் மனதில் ஒட்டாது.

கே: குருதேவா ! இந்த உலகை மாற்றி சேவையில் ஈடுபடுவது தான் என் இலட்சியம். திருமணம் ஆகாத நண்பர்கள் என்னைத் திருமணம் செய்து கொள் என்கிறார்கள். திருமணம் ஆனவர்களோ,“உலகத்தை மாற்றுவதை மறந்து விடு. உன்னால் உன் வீட்டு டி.வி. சானலைக் கூட மாற்ற முடியாது” என்று சொல்கிறார்கள். யார் சொல்வதைக் கேட்கலாம்?

குருதேவர்: உன் தேவைகளின் குரலைக் கேள். திருமணமாகி மிகத் துயரத்தில் இருப்பவர்களும் உண்டு. திருமணம் ஆகாதவர்களிலும் துன்பப் படுபவர்கள் இருக்கிறார்கள். அதே சமயம், திருமணமாகாமல் மகிழ்ச்சியோடு வாழ்பவர்களும், திருமணமாகி மகிழ்ச்சியோடு வாழ்பவர்களும் உண்டு. பின் சொன்ன குழுவில் சேருவது உனக்கு நல்லது.