வாழ்க்கை அதன் போக்கில் செல்லும்


நவம்பர்  23, 2013 - பெங்களூர்,  இந்தியா 

கே:  நான்  நேசிப்பவர்களிடமிருந்து தூரத்தில் தங்கியிருப்பது இரண்டு இடங்களுக்கிடையேயான தூரத்தின் இடைவெளி மட்டுமின்றி இதயங்களுக்கு இடையிலேயும்  இடைவெளி உண்டாக்கி விட்டதைப்போல்  உணர்வது ஏன்?  இதயங்களுக்கு  இடையிலான தூரம் என்னை பயமுறுத்துகின்றது.  

குருதேவ்:  பயம் வேண்டாம்.  கடலில் அலைகள் தாழ்ந்திருக்கும் போது கடற்கரையிலிருந்து கடல்நீர்  சற்றே உள்வாங்கி இருக்கும்.  கடல் அலைகள் உயர்ந்திருக்கும்போ து  கடற்கரைக்கு வரும் நீரின் அளவு மிகவும் அதிகமாக இருக்கும்.  ஆனால் இவ்வாறு கடலலைகள் உயர்ந்தும் தாழ்ந்தும் இருப்பது கடல் நீரின்  அளவில் எந்த மாற்றத்தையும்  ஏற்படுத்தாது.  கடல் நீரின் அளவு ஒன்றே தான்.  (கடல்நீர் என்பது இங்கே அன்பைக் குறிக்கின்றது)



மனதில் அன்பு  பயம் இரண்டுமே உண்டாகும்.  சில நேரங்களில்  தனிமை உணர்வு உண்டாகலாம். ஆனால் இந்த உணர்வுகளெல்லாம் வரும் போகும்.  ஒருவர்  வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் எப்போதும்  இருக்கும்.  அதனால் என்ன?  இவற்றை பற்றி கவலைப்பட்டு கொண்டு உட்கார்ந்திருப்பதில் பயனில்லை.  

அது நம் பொன்னான நேரத்தை  வீணாக்கும்.  உங்கள் உணர்வுகளைப் பற்றி  கவலைப்பட்டுக் கொண்டிருக்க  உங்களுக்கு நேரம் எங்கே இருக்கின்றது? இன்று, 'நான் இவ்வாறு உணர்கின்றேன்' என்று சொல்வீர்கள்.  நாளை 'நான் வேறு மாதிரி உணர்கின்றேன்' என்று சொல்வீர்கள்.  நீங்கள் உணர்வது எவ்வாறு இருந்தாலும் பரவாயில்லை. ஒருவர் எவ்வாறு உணர்கின்றார் என்பதை  பொருட்படுத்தாமல் வாழ்க்கை கடந்து சென்று கொண்டிருக்கும்.  தொட்டிலிலிருந்து சுடுகாடு வரை வாழ்க்கை சென்று கொண்டிருக்கும். உணர்வுகள் வந்து வந்து போகும்.  உங்கள் உணர்வுகளை எல்லாம் மூட்டை கட்டி ஓரம் தள்ளுங்கள்.  நீங்கள் மகிழ்ச்சியோடு வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல வேண்டும்.  நான் சொல்வது புரிகின்றதா?

கே:  என் உறவுமுறையில் உண்டாகும் சந்தேகங்களுக்கு என்னால் முடிவு கட்ட இயலவில்லை. ஆனால் அதற்காக என் உறவுமுறையினை  முடித்துக் கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. நான் என்ன செய்வது?   

குருதேவ்:  அவ்வளவு தான்.   இதை நீங்கள் அறிந்துகொண்டிருப்பதே போதுமானது.   நீங்கள் உங்கள் உறவினை எவ்வளவு தான் சந்தேகித்தாலும் அது எந்த முடிவையும் கொண்டு   வரவில்லை என்பது உறுதியாகிவிட்டது.   எனவே  மேற்கொண்டு செல்லுங்கள்.  வாழ்க்கையில் அனைத்துமே கர்மாவின் சில  மர்மமான  விதிகளின்  படி,  இயற்கையின் சட்டப்படி  நடக்கின்றது. நீங்கள் எந்த  தீங்கும் இழைக்காமலேயே சிலர் உங்களுக்கு எதிரியாக மாற்றியதை இங்குள்ள எத்தனை பேர் அனுபவித்திருக்கிறீர்கள்?    கைககளை உயர்த்துங்கள்.  நீங்கள் நல்லதே செய்திருப்பீர்கள்.  இருந்தாலும் அவர்கள் உங்களுக்கு எதிரியாக  மாறி இருப்பார்கள்.  நீங்கள் சிலருக்கு எந்தவித  உபகாரமோ உதவியோ செய்யாமலே  அவர்கள் உங்களுக்கு  நெருங்கிய நண்பர்களாக மாறிய அனுபவம் எத்தனை பேருக்கு ஏற்பட்டுள்ளது?  (பார்வையாளர்களில் பலர் கைகளை உயர்த்துகின்றனர்).  

ஆக,  சில நேரங்களில்  நம்முடைய   மிகச்சிறந்த   நண்பர்கள்  மோசமான எதிரிகளாக மாறுகின்றனர்.  விரோதிகள் நம் நெருங்கிய நண்பர்களாக மாறுகின்றனர்.  எல்லாமே விசித்திரமான கர்மாவின்படி நடக்கின்றன.   உலக நடப்புகள் இவையே.  இதை மீராபாய் ‘ கர்ம்கிகதின் யாரிஹை '  அதாவது கர்மாவின் பாதை மர்மமானது என்று மிகச் சரியாக சொல்லி இருக்கின்றார்.  

எனவே,  நீங்கள் உங்கள் நண்பர்கள் எதிரிகள் என்பவற்றை எல்லாம்  ஒதுக்கி தள்ளிவிட்டு வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்லுங்கள் .  நற்காரியங்களைச்  செய்யுங்கள்.  இந்தக் கிரகத்தில் நீங்கள் எவ்வளவு   காலம் இருந்தாலும்    நல்ல பயனுள்ள செயல்களையே செய்யுங்கள்.  நீங்கள் உங்களுக்காக செய்ய வேண்டிய பிரார்த்தனையும் இதுவே.  

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் அல்லது மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் எப்படி உணர்கின்றார்கள் என்பதைப் பற்றியெல்லாம் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க யாருக்கு  நேரம் இருக்கின்றது?  மக்கள்  என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். இவற்றில் எல்லாம்   நீங்கள் சிக்கிக்கொண்டு  விடாதீர்கள்.  அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யட்டும்.   நீங்கள்  எதை செய்ய வேண்டுமோ (உங்கள் கடமை)  அதை செய்யுங்கள்.   இதன் பொருள்   நீங்கள் மற்றவர்களுடைய உணர்வுகளை பற்றி கவலைப்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்  அல்லது பிறரை புண்படுத்த வேண்டும் என்பதில்லை.  அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தரப்பிலிருந்து உங்களை சுற்றி இருக்கும் யாரையும் புண்படுத்தவோ அல்லது  துன்பம் உண்டாக்கவோ செய்யாதீர்கள்.  நம் தரப்பிலிருந்து நாம்  காயப்படுத்த விரும்பவில்லை .  அப்படியிருந்தும் அவர்கள் துன்பப்படுகின்றார்கள் என்றால்  அதற்கு நாம் ஒன்றும் செய்ய இயலாது.  மற்றவர்களது மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ நம் கைகளில் இல்லை.  அவரவர் செயல்களை பொருத்தே  மக்கள் இன்பமும் துன்பமும் அனுபவிக்கின்றனர்.  

கே: ஒரு பக்தன் தன்னுடைய முழு நம்பிக்கையின் காரணத்தால்  எப்போதும் எதையும் சந்தேகிப்பதில்லை  கேள்விகள்   கேட்பதில்லை  என்று சொல்லி இருக்கின்றீர்கள்.  ஆனால் என் மனதில் பல கேள்விகள் எழுகின்றன.  இதற்கு என்னிடம் பக்தி இல்லை என்று  அர்த்தமா?  

குருதேவ்:  இதை  நீங்களாகவே தான்   தெரிந்து கொள்ள வேண்டும்.  உங்களிடம் பக்தி இல்லை என்று நீங்கள் உணர்கின்றீர்களா?  இல்லையென்று நீங்கள் உணர்ந்தால் அது இல்லை தான்.  

நீங்கள் பசியோடு  இருக்கின்றீர்களா இல்லையா என்று நான் அப்படி சொல்ல முடியும்?   "குருதேவ்  எனக்குப் பசிக்கின்றதா?" என்று என்னிடம் வந்து கேட்பீர்களா?  பசி எடுத்தால் அது உங்களுக்கே தெரியும்.  நீங்கள் தாகமாக இருக்கும் போது அது உங்களுக்கு தானாகவே   தெரியும். இல்லையா?  அதே போல் இதையும்  நீங்களாகவே தான் தெரிந்து கொள்ள வேண்டும்.  

மனதில் நிச்சயம் கேள்விகள் எழும்.  ஆனால் அறிந்து கொள்ளும் ஆர்வத்தினால் எழும் கேள்விகள்  வேறு விதமானவை.  ஒன்றைப்பற்றிய வெறும் சந்தேகங்களால் எழும் பயனற்ற கேள்விகள்  ஒரு வகை.  சந்தேகத்திற்கும் அறிந்து கொள்ளும் ஆர்வத்திற்கும் வேறுபாடு உள்ளது ஆர்வத்தினால் கேள்வி கேட்கும் போது நீங்கள் உண்மையிலேயே ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றீர்கள்.  அது பரவாயில்லை.  சந்தேகம் என்பது என்ன? சந்தேகம் என்பது ஏற்கெனவே தெரிந்ததைப் பற்றிய கேள்வி.  ஏற்கெனவே தெரிந்த ஒற்றை சந்தேகிக்கின்றீர்கள்.   ஒரு உண்மையான பக்தன் தனக்குத் தெரிந்ததை சந்தேகிப்பதோ கேள்விகள்  கேட்பதோ கிடையாது.  

கே:  குருதேவ், என்னுடைய பயத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?  

குருதேவ்:  இப்போது அதைப்பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம்.  இது உங்களுடைய நிழலைக் கட்டுப்படுத்துவதோ அல்லது அதிலிருத்து விடுபடுவதோ எப்படி என்று கேட்பது போன்றது.  உங்கள் நிழலை நீங்கள் எப்படி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்?  நிழலைப் பிடிக்க வேண்டும் என்று யார் முயற்சி செய்வார்கள்?  வெளிச்சத்தை  விட்டு விலகிச் செல்லும்போதுதான் நிழலைப் பார்க்க முடியும்.  அதாவது மனம் உங்களுக்குள் செல்லாமல் வெளியில்   இருக்கும்போதுதான்  நிழல் தோன்றும்.  நீங்கள் உங்களுக்குள்ளே உள்முகமாகத் திரும்பும்போது நிழல் பற்றிய கேள்விக்கு இடமே இல்லை.  

அன்பு, பக்தி, இறைவனிடம் அர்ப்பணிப்பு  போன்றவை உங்களிடம் நிறைந்திருக்கும் போது பயத்திற்கு இடம் எங்கே இருக்கின்றது.  நீங்கள் இறைவனிடம் முழுமையாக சரணடையும்போது பயம் இருக்காது.  உங்கள் வாழ்க்கை அனைவர்  மீதும் கொண்ட அன்பினால் நிறைந்திருக்கும் போது அங்கே பயம் இருக்காது.   ஒரு பொருளோ, ஒரு மனிதரோ, ஒரு குறிக்கோளோ ஒரு நோக்கமோ அல்லது இதுபோன்ற ஏதோ  ஒன்றின் மீது அசைக்க முடியாத அன்பு இருக்கும்போது அங்கே பயத்திற்கு இடம் கிடையாது.

சமீபத்தில் ULFA   இராணுவத்தினர்   350 பேர்  ஆசிரமத்திற்கு வந்து ஒரு மாதம் தங்கி இருந்தனர். ஒவ்வொருவருக்கும் உருக்கமான  மிகவும் ஆச்சரியமான ஒரு கதை இருந்தது.  அஸ்ஸாம் மாநிலத்தை இந்திய  யூனியனிலிருந்து  விடுவித்து  தனி அரசாக மாற்றுவதற்காக 17 அல்லது 18 வயது குழந்தைகள் தங்கள்  வீடு குடும்பத்தையெல்லாம் விட்டுவிட்டு வந்திருந்தனர். அஸ்ஸாம்  மக்கள் ஒடுக்கப்படுவதாகவும்  அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டு அவர்கள் பல ஆண்டுகள் தவறாக வழி நடத்தப் பட்டுள்ளனர்.  அவர்கள் காடுகளில் சென்று மறைந்து வாழ்ந்து  தங்கள் வாழ்வையே அஸ்ஸாம் விடுதலைக்காக அர்ப்பணித்து  விட்டனர்.  பல சமயங்களில் அவர்களுக்கு வாரத்திற்கு  ஒரு முறைதான் உணவு கிடைக்கும்.  அவர்களது வாழ்க்கைப் போராட்டம்  நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.  

போதுமான அரிசி இல்லாமையினால் அவர்கள் அரிசியை மீண்டும் மீண்டும்  4 அல்லது 5 முறை வேக வைத்து அதன் வடிநீரை மட்டுமே குடித்து வாழ்ந்து வந்துள்ளனர்.  உறங்குவதற்கு பாதுகாப்பான இடம் கிடைக்குமா என்று கூடத் தெரியாமல் அவர்கள் காட்டில் அலைந்து திரிந்தனர்.  17 அல்லது  18 வயதில் உயிர் வாழ உணவும் தண்ணீரும் கூட இல்லாமல்  கைகளில் துப்பாக்கியுடன்  அலைந்தனர்.   தீவிரவாதிகள் என்று அழைக்கப்படும் இவர்கள் தங்கள் நோக்கத்திற்காக இது போன்று பெரும் தவம் செய்தனர்.  இருந்தாலும் அவர்களிடம் பயம் இல்லை.  அவர்கள் சுதர்ஷன கிரியா பயிற்சி செய்தபோது அவர்களுக்குள் பெரும் மாற்றத்தை உணர்ந்தனர்.  அவர்களின் முகத்  தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டது.  அவர்கள் வாழ்க்கை மறுமலர்ச்சி அடைந்தது.  

கே: எனது மனம் அமைதியற்றுக் கலக்கமாக இருக்கின்றது. என்னால் அதற்குத் தீர்வு காண முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?  நான் நம்பிக்கையுடன் வழி நடக்க எங்கு எனது கவனத்தைச் செலுத்தி வர வேண்டும்?

குருதேவ்: கவலைப் படுவதை நிறுத்துங்கள். உங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள். உங்களது அனைத்துத் துன்பங்களும் குற்றங்களும் கானம் (பக்திப் பாடல்களைப் பாடும் சத்சங்கம்) ஞானம், தியானம் இவற்றில் அடித்து செல்லப்படும். இங்கு உங்களில் எத்தனை பேர் சத்சங்கத்திற்குப் பிறகு, புத்துணர்ச்சி பெற்றதாக உணருகின்றீர்கள்? (பலர் தம் கைகளை உயர்த்துகின்றார்கள்). பாருங்கள் ! எத்துணை  பேர் புத்துணர்ச்சியும் ஆற்றலும் பெற்றதாக உணருகின்றார்கள்!

கே: உடல் நோய்களும், சீர்கேடுகளும் நமது கர்மாக்களுடன் தொடர்புடையனவா?

குருதேவ்: ஆம், எல்லாம் அல்ல, சில தொடர்புடையவை.சில முன்வினை பயன்கள், சில இப்போது நீங்கள் செய்யும் தவறுகளின் பலன்.அதனால் தான் அது  ப்ரஞ்யப்பரதா ( எது சரி எது தவறு என்று பிரித்துணரும் ஞானம் இருப்பினும் செய்யும் தவறு) என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் முழு கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இல்லாமல் செய்யும் தவறுகளால் உங்கள் உடல்நலம் பாதிக்கப் படுகின்றது.

கே: எந்த காரணமும் இன்றி துயரை அனுபவித்து கொண்டிருக்கின்றேன். அதினின்று எவ்வாறு விடுபடுவது? என்ன விதமான துன்பம் இது? ஏன் ஒருவன் இதை அனுபவிக்க வேண்டும்?

குருதேவ்: நீங்கள் எதிலுமே மகிழ்ச்சி காணவில்லை என்பதால் இத்தகைய துயரை அனுபவித்து சோர்வாக உணருகின்றீர்கள். இது வாழ்க்கைப் பாதையில் ஒரு விதமான தடை ஆகும்.அதனால் தான், நீங்கள் சாதனா, சேவை, மற்றும் சத்சங்கத்தில் மகிழ்ச்சி கண்டால், அனைத்துத் துன்பங்களும் சோர்வு உணர்வுகளும் உங்கள் வாழ்வில் மறைந்து விடும். தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்து, எனக்கு யார்? எனக்கு என்ன நடக்கும் என்று இருந்தால் உறுதியாக நீங்கள் சோர்வாக உணருவீர்கள்.

நமது எண்ணங்களை பரப்பி, நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொருவரின் நலனையும், நமது நாட்டின் நலனையும் பற்றிச் சிந்திக்கத் துவங்கினால் தன்னைப் பற்றி எண்ணி வருந்துவதற்கு நேரம் எங்கிருக்கும்? அல்லவா? இசை மற்றும்  ஒவ்வொருவரின் நலனுக்காகவும் அனைவரும் சேர்ந்து செய்யும் தொண்டு இவற்றில் ஈடுபடுத்திக் கொள்ளுவது அவசியம். இவ்வாறு செய்யும் போது உங்களது அனைத்து ஏமாற்றங்களும், உங்கள் வாழ்விலிருந்து மறைந்து விடும்.

கே: எப்போதாவது தாங்கள் வேறொருவராக இருக்க வேண்டும் அல்லது அவர்தம் வாழ்வினை ஒரு நாளாவது வாழ வேண்டும் என்று விரும்பியது உண்டா? உங்களுக்கு அப்படி ஒரு விருப்பத் தேர்வு கிடைத்தால், தாங்கள் மீண்டும் குரு ஆக விரும்புவீர்களா?

குருதேவ்: நான் யாரும் இல்லை, அதே சமயம் ஒவ்வொருவருமாக இருக்கின்றேன். எனவே நான் எனது செயல்பங்கினை மாற்றிக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ நினைக்கவே வேண்டியதில்லை.

கே: நேர்மறை சிந்தனைப் பற்றிப் பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. நேர்மறை சிந்தனைக்கும் சங்கல்பத்திற்கும் (உறுதி மொழி) உள்ள வேறுபாடு என்ன?

குருதேவ்: சங்கல்பம் என்பது ஜுரவேகம் இல்லாத ஒரு எண்ணம் அல்லது விருப்பம். எப்போது எது ஒன்றை  ஜுரவேகம் இன்றி  விரும்புகின்றீர்களோ அப்போது அது சங்கல்பமாகின்றது.

கே: ஒரு குழுவாகப் பணி புரியும் போது, யார் ஒருவரையும் வருத்தப்பட கூடாது என்று விழிப்புடன் இருக்கின்றேன். ஆனால் அடிக்கடி பிறரை நோகச் செய்து விடுகின்றேன். நான் அதிகார ஆளுமை உணர்வும், எதிர்க்கும் சுபாவம் கொண்டவனாகவும் தெரிகின்றேன். நான் என்ன செய்வது? நான் பின்னிருக்கையை எடுத்துக் கொள்வதா அல்லது எனது இலக்கை நோக்கி எனது கவனத்தை குவிப்பதா அல்லது நல்லிணக்கத்தின் பொருட்டு முன்னேற்றத்தில் எனது ஆர்வத்தை விட்டு விடுவதா?

குருதேவ்: உங்களுடைய இலக்குகளை நோக்கி உங்கள் கவனத்தைக் குவித்துப் பணி புரியுங்கள், அதே சமயம் மக்களுடன் இணைந்து செல்லும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளுங்கள். அது ஒரே நாளில் ஏற்படாது, மெதுவாக படிப்படியாக அத்தகைய ஆற்றலை அடைவீர்கள்.

கே: வாழ்வின் நோக்கமே உயரிய விழிப்புணர்வின் ஒரு பகுதியே நாம் என்று உணருவதும், இறுதியில் இறைமையுடன் கலந்து விடுவதும் என்பதேயானால் ஏன் கடவுள் ஆதியில், பல உயிர்களாக தன்னை  பிரித்தார்?

குருதேவ்: ஆம், கடவுளுக்கென்று ஒரு தர்க்க இயல், வழிமுறைகள் இருந்தன. இப்போது நீங்கள் இந்த கேள்வியை கேட்டு என்ன பயன்? மிகத் தாமதமாகி விட்டது.! (சிரிப்பு) பாருங்கள்! நீங்கள் இதை இப்படியும் அதாவது, காற்றுக்கு வண்ணங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்றும் சிந்திக்கலாம். முன்னொரு காலத்தில் சாந்தாராம் என்பவர் எடுத்த திரைப்படங்கள் வெளி வந்து கொண்டிருந்தன. திரைப்படங்களில் பின்னணி இசையுடன் காற்றில் பல வண்ணங்கள் தூவப்படும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அது போன்று பிராணவாயுவிற்கும், கரியமிலவாயுவிற்கும் வண்ணங்கள் இருந்தால் மூச்சை உள்ளிழுக்கும் போது மூக்கு சிவப்பு நிறமாகவும், மூச்சை வெளிவிடும் போது மூக்கு நீல நிறமாகவும் மாறுவதைக் காணலாம். ஏன் கடவுள் காற்றிற்கு நிறமில்லாமல் செய்தார்? காற்று நிறமற்றது. ஒரு வேளை கடவுள் பல்வேறு விதமான வண்ணங்களில் பல வாயுக்களைப் படைத்திருந்தால் எல்லோருடைய மூக்குகளும் பல்வேறு வண்ணங்களில் மின்னிக் கொண்டிருக்கும்! (சிரிப்பு) இது மிக சுவாரஸ்யமான எண்ணம்! ஒரு வேளை ஒரு கண் முன்னாலும் மற்றொரு கண் தலைக்குப் பின்னாலும் இருந்தால் பிறரைத் திரும்பி பார்த்துப் பேச வேண்டியதே இல்லை! அல்லவா? இவ்வாறு பல எண்ணங்கள்.இத்தகைய கருத்துக்களை எல்லாம் அடுத்த படைப்பிற்கு என்று நீங்கள் வைத்துக் கொள்ளலாம் என்று நான் எண்ணுகின்றேன்.

கே: குருதேவ்! தியானம் செய்யும் போது அடிக்கடி நான் இது வரை சென்றிராத இடங்களுக்குச் செல்லுவது போன்றும், இது வரை சந்தித்திராத மனிதர்களை சந்திப்பது போன்றும் காண்கின்றேன். அது போன்று தேஜா' வு உணர்வு (அதாவது முன்பு ஏதோ ஒரு காலத்து அனுபவம் போன்று) அடைகின்றேன். நான் என்ன செய்வது? 

குருதேவ்: அது சரி தான். இதில் எந்தத் தவறும் இல்லை.இவையெல்லாம், உங்கள் மனதில் உள்ளார்ந்த எண்ணப் பதிவுகள். அவற்றைப் பற்றி அதிகம் கவலைப் படாதீர்கள். தியானத்தின் போது உள்ளார்ந்த எண்ணப்பதிவுகள் வெளிவரக் கூடும்.