விமர்சனங்களுடன் போராடுகிறீர்களா?


23 - ஜனவரி 2013 - பெங்களூரு - இந்தியா

கே: குருதேவ், கலியுகத்தில் தவத்தின் முக்கியத்துவம் என்ன? அதை நாம் எப்படி புரிந்துகொள்வது?

குருதேவ்: தவம் நம் உள்ளுறுப்புகளை தூய்மைப்படுத்தி, அசுத்தங்களை வெளியேற்றுகிறது. முழு உடம்பும் தூய்மையடைந்து, நம் உணர்வுப் புலன்கள் பலம் பெறுகின்றன. தவம் செய்வது நாம் இறைவனின் தயவைப் பெறவோ, அல்லது சுய உணர்வைப் பெறவோ அல்ல, ஆனால் உடம்பையும் மனதையும் உறுதியாக்குவதற்காகத்தான் தவம்.

பல துறவிகள் கடுந்தவம் புரிவதை பார்த்திருக்கலாம், குறிப்பாக ஜைனத் துறவிகள். அந்த சீனத் துறவிகள் வெறும் காலுடன் நீண்ட தூரங்கள் நடக்க முடிகிறது. குளிர் காலத்தில் குளிரும் தெரிவதில்லை, கோடையில் வெப்பமும் தெரிவதில்லை. அவர்களால் கடுமையான தட்ப வெப்பத்தை தாங்க முடிகிறது. தவம் செய்வதில் உள்ள பயன்களில் இது ஒன்று. ஆனால், இதை நீங்கள் அளவுக்கதிகமாக செய்யவே கூடாது. மிக அதிகமாக தவம் செய்து உங்கள் உடம்பை தொந்திரவு செய்வது செய்யத் தகுந்ததல்ல. அப்படிச் செய்வது தவறு.

நான்கு புறமும் தீ வளர்த்து, தலைக்கு மேல் இன்னொன்று வைத்து தவம் செய்யும் சிலர் இருக்கிறார்கள். இதை பஞ்சாக்னி தவம் என்பார்கள். இவையெல்லாம் தேவையில்லை. உடம்பை கொடுமைப் படுத்துவது தவறு, அதைச் செய்யக்கூடாது. ஆனால் சிறிதளவு தவம் அவசியம்.
‘தபோவை த்வந்த்வ சஹானாம்’ என்று சொல்லப்படுகிறது, அதாவது எதிர்மறைகளை தாங்கிக் கொள்வது என்பதே இதன் பொருள். உதாரணமாக ஒரு பேருந்தில் 12 மணி நேரம் பயணம் செய்ய உட்கார வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அதுவும் ஒரு வித தவம் தான்.
ஒரு சமான நிலையிலிருந்து, எது வந்தாலும், அது வெப்பமோ அல்லது குளிரோ, நல்லதோ கெட்டதோ, புகழ்சியோ இகழ்ச்சியோ, அதைத் தாங்கி நிற்பதுதான் தவம்.

உங்களைப் புகழும்போது அமைதியாய் இருப்பது போல உங்களை இகழும்போதும் சமமாக இருக்க முடியுமா? அதுதான் தவம். உங்களை ஒருவர் புகழ்ந்தால் ஒரு புன்னகையுடன் கேட்டுக் கொள்கிறீர்கள். ஒருவர் உங்களை விமர்சனம் செய்யும்போது, அதே புன்னகையுடன் சமமாக கேட்கமுடியுமா, உங்களுக்குள் என்ன நடக்கிறது என்று கவனியுங்கள்? அதுதான் தவம். உங்களுக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றாலும் அதை ஏற்றுகொள்ள முடிந்தால் அதுதான் தவம்.
உங்களுக்கு ஒன்று பிடித்திருந்தாலும், அதை ஒரு சாட்சி பாவத்துடன் கவனித்துகொண்டு, அதன் மீது ஜுரவேகம் கொள்ளாமல் இருக்கமுடிந்தால், அதுதான் தவம்.

எதிர்மறைகளை தாங்கிக் கொள்வதுதான் தவம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் அது வாழ்க்கைக்கு அத்தியாவசியாமானதும் கூட. வாழ்க்கையில் எந்த அளவுக்கு தவத்தை கடை பிடிக்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் வலிமையையும் உறுதிநிலையும் அடைகிறோம்.

கே: குருதேவ், நீங்கள் ஞானத்தை ஒரு சோப்பைப் போல உபயோகிக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுகிறீர்கள். ஆனால் அதை கழுவிவிட வேண்டிய அவசியம் நேரிடுவதால் அதை எப்படி நம் உண்மையான இயல்புநிலைக்கு உதாரணமாக கூறமுடியும்? எனவே அப்படி என்றால் ஞானம் நம் உண்மையான இயல்புநிலை இல்லையா?

குருதேவ்: ஞானம் இரண்டு வகைப்படும். ஒன்று, நம்முடைய சுயத்தின் உண்மையான இயல்பைப் பற்றிய அறிவு. மற்றொன்று அதை சோப்பைப் போல உபயோகிக்க வேண்டியதற்கான  ஞானம்.
ஏன் ஞானத்தை சோப்பைப் போல உபயோகிக்க வேண்டும் எனப்படுகிறது? ஏனென்றால் அந்த ஞானம் இருப்பதினாலேயே நீங்கள் முரட்டுத்தனமாய் நடந்துகொள்ளக் கூடாது என்பதினால்தான். ‘எனக்கு அவ்வளவு தெரியும்; எனக்கு எல்லாம் தெரியும்.’ என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அந்த ஞானம் இருப்பதைப் பற்றி உங்களுக்கு ஒரு அகம்பாவம் வந்துவிடக் கூடாது. அப்படிப்பட்ட அகம்பாவம் வந்துவிடக் கூடாது என்பதாலேயே அதை சோப்பைப் போல உபயோகிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இதுதான் உண்மையான அர்த்தம்.

கே: அன்பு குருதேவ், சூக்ஷும மனதின் சக்தி என்ன? அதை எப்படி உபயோகிப்பது?

குருதேவ்: உங்கள் சூக்ஷும மனதின் சக்தியில் பத்தில் ஒரு பங்குதான் வெளி உணர்வு மனதிடம் உள்ளது. எனவே சூக்ஷும மனதிற்கு ஏராளமான சக்தி உள்ளது.

ஒரு விழா முடிந்து எட்டு பேர் ஒன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், யாராவது உங்கள் பெயர் சொல்லி அழைத்தால், நீங்கள் மட்டும் பதில் கொடுப்பீர்கள். மற்றவர்கள் தங்கள் ஆழ்ந்த உறக்கத்தை தொடர்ந்து கொண்டிருப்பார்கள். இல்லையா? இத கவனித்திருக்கிறீர்களா? உங்கள் பெயர் கூட உங்கள் சூக்ஷும மனதில் பொரிக்கப்பட்டிருப்பதை இது குறிக்கிறது. தியானமே அந்த சூக்ஷும மனதை உணர்வு கொள்ளச் செய்யும் வழி.

கே: குருதேவ், நம் திறமைகளை வளர்த்துக் கொள்வதால் நம் வேலைகளை நன்கு சாதித்துக் கொள்ள முடியும் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். நம் திறமைகளை எப்படி வளர்ப்பது?

குருதேவ்: தியானமும், மௌனம் பயில்வதும் நம் திறமைகளை, வல்லமையை, கைத்தேர்வை வளர்க்க உதவும். நமக்கு வேண்டியதை சாதிக்க கைத்தேர்மை அவசியம். நீங்கள் தளர்ந்து, ஓய்வாய், மௌனத்தில் ஆழ்ந்து தியானம் செய்யும் போது இவை மூன்றும் அதிகரிக்கிறது.
செயல்பாடு மற்றும் ஓய்வில் ஒரு மிதமான அளவு முக்கியம்.

ஒருவர் ஓய்வே இல்லாமல் வேலை செய்துகொண்டிருந்தால், எதையும் செய்ய அவருக்கு சக்தி இருக்காது. அதே நேரத்தில், நாள் முழுதும் ஓய்வெடுப்பதும் உதவாது. நீங்கள் வேலை செய்ய வேண்டும், உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும், ஓய்வும் எடுக்க வேண்டும். தியானத்தில் உங்களுக்கு ஆழமான ஓய்வு கிடைக்கிறது, உங்கள் மனம் விழிப்புணர்வோடு இருக்கையில் உடம்புக்கு ஆழ்ந்த ஓய்வு கிடைக்கிறது. அந்த நிலையில் உங்களுக்கு திறமை அதிகரிக்கிறது, வல்லமையும் மலர்கிறது.

கே: அன்பு குருதேவ், புத்தியை விட்டுவிட்டு, கள்ளமில்லாத குழந்தைத்தனம் கொள்வது எப்படி? அப்படிச் செய்வது நடிப்பது போல ஆகாதா?

குருதேவ்: புத்தி முதிர்ச்சியடையும்போது, நீங்கள் தன்னால் கள்ளம கபடமற்ற நிலை அடைகிறீர்கள். மேலும் உணர்வு பொங்கி உங்களை ஆளுமை செய்யும்போதும் கள்ளம கபடமின்மை அடைகிறீர்கள். இது வாழ்கையின் ஒரு பரிமாணம், இது எல்லோருக்கும் உண்டு. இதன் வழியில் குறுக்கிடுவது என்னவென்றால், எடைபோடும் தன்மை போன்ற புத்தி சார்ந்த விஷயம், அல்லது ‘எனக்கு எல்லாம் தெரியும்’, என்ற எண்ணம், அல்லது ‘ எனக்கு அதிகம் தெரியும்’ என்ற எண்ணம். போன்றவை. இதுதான் புத்தியை முழுமையான முதிர்சியடையவிடாமல் தடுக்கிறது.

தியானமும் பிரணாயாமப் பயிற்சியும் இந்த பயணத்தை திசை திருப்பி புத்தியிலிருந்து குழந்தைத்தனத்துக்கு மாற்றுகிறது. மேலும், உங்களை விட அதிகம் தெரிந்தவர்கள் இருக்கும்போது, நீங்கள் உங்களுக்குத் தெரிந்தது எவ்வளவு குறைவு என்று நீங்கள் உணரும்போது, அப்போதும் குழந்தைத்தனம் எளிதாக உங்களிடம் மலர்கிறது. உங்களை நீங்களே தவறாக எடைபோடும்போது, உங்களுக்கு குழந்தைத்தனத்திலிருந்து விலகி விட்டது போலத் தோன்றும்.

கே: குருதேவ் பற்று வைப்பது பற்றியும் பற்றின்மைப் பற்றியும் பேசுங்களேன்.

குருதேவ்: பற்று வாழ்க்கைக்கு அத்தியாவசியம் ஆனால் அது மாறாமல் அப்படியே இருக்க வேண்டுமென்பதில்லை. அதில் எப்போதும் ஏற்ற இறக்கங்கள் உண்டு. பற்றின் தீவிரம் சில நேரம் ஏறியும் இறங்கியும் பின்னர் மறுபடியும் ஏறி காணப்படுவது ஆரோக்கியமானது. வழக்கமாக என்ன நடக்கும் என்றால் பற்று குறையும்போது நீங்கள் எதையோ இழந்தது போல சோகமாய் உணர்கிறீர்கள்.ஏதோ குறைவது போல உணர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறீர்கள். கவலை வேண்டாம் என்றே நான் சொல்வேன்.

பாருங்கள், பற்றிலும் கொஞ்சம் நிறைவு வேண்டும். சில நேரங்களில் நிறைவு கிடைக்கும்போது பற்று குறைகிறது. நிறைவிலும் லேசாக கொஞ்சம் பற்றின் வாசனை வேண்டும், இல்லையென்றால் நிறைவு நழவி ஆர்வமின்மையும் சோம்பலும் வந்துவிடும். எனவே நிறைவு நழுவி மந்த நிலை வராமலிருக்க கொஞ்சம் பற்று வேண்டும். அதேபோல பற்று அதிகமாகி சுர வேகம் வந்து உங்களை பதற்றமடையாமல் காக்க கொஞ்சம் நிறைவும் வேண்டும். இது உங்களுக்கு ஒரு சரியான சமானத்தை உண்டாக்கும்.

கே:குருதேவ், என் வாழ்வில் ஏராளமான மாற்றங்கள் நடக்கிறது. சில நல்லதாகவும் சில கெட்டதாகவும் இருக்கிறது. இந்த மாற்றத்தை நான் எப்படி கையாள்வது?

குருதேவ்: வாழ்க்கையில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது, ஏன் பிரபஞ்சத்திலும் கூட. பிரபஞ்சம் என்றாலே மாற்றம்தான். அனால் உங்களுக்குள் ஆழமாக ஏதோ ஒன்று மாறாமலிருக்கிறது, நீங்கள் அதை நங்கூரமாக்கிவிட வேண்டும். அதுதான் பக்தி.

கே: குருதேவ், நீங்கள் உணவைப் பற்றியும் மூச்சைப் பற்றியும் நிறைய பேசியிருக்கிறீர்கள். உடையைப் பற்றி நீங்கள் ஏதேனும் கூற விரும்புகிறீர்களா? மரபு உடைகளை மட்டும் தான் அணிய வேண்டுமா?

குருதேவ்: நல்ல வசதியாக இருக்குமாறு உடைகள் அணியுங்கள், ஆனால் அதிகம் செலவு செய்து வாங்கும் கிழிந்த ஜீன்ஸ் போன்ற உடைகளுக்கு நான் சிபாரிசு செய்ய மாட்டேன். அது அலங்கோலமாக இருக்கிறது. ஜீன்ஸில் ஓட்டைகள் இருந்தால் அதிக விலை என்று கேள்விப் பட்டேன்! இதை நீங்கள் செய்யக் கூடாது. பருத்தி உடைதான் சிறந்தது. அதில் கொஞ்சம் பாலியெஸ்டர் கலந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் முழுமையாக பாலியெஸ்டரில் செய்யப் பட்ட உடைகளை தவிர்க்க வேண்டும்.

தோலினால் செய்யப்பட்ட உடைகளுக்கும் முன்னுரிமை தரக் கூடாது. அதன் தோலுக்காக மட்டும் ஏராளமான விலங்குகள் கொல்லப்படுகின்றன. இவற்றையெல்லாம் விலக்க வேண்டும். அஹிம்சா பரமோ தர்மா’ என்று சொல்லப்படுகிறது. (எல்லா செயல்களிலும் அஹிம்சையே ஆகச் சிறந்த கடமை அல்லது தர்மம்). எல்லோரும் வன்முறை தவிர்த்த வழியில் பயணித்து, சைவ உணவை பின்பற்ற வேண்டும். இது மிக அவசியம். அப்போதுதான் உங்களால் நன்கு தியானம் செய்ய முடியும்.

கே: இந்தக் கேள்விகளுக்கு மேலே இரண்டு கேள்விகள் உள்ளன. முதலாவதாக, பட்டுப் பூச்சிகளை கொன்று செய்யப் படுவதால் பட்டு சேலை கட்ட வேண்டுமா? அது பாவமா?

குருதேவ்: அந்த வகையில் பார்த்தால், வாழை மரத்தையோ இல்லை அதில் ஒரு பாகத்தையோ எடுத்து அதில் உடை செய்தால் கூட பாவமாகக் கருதப் படலாம், ஏனென்றால் அவையும் ஒரு உயிரினமே.

மற்ற உயிரினங்களுக்கு குறைந்தபட்ச அளவு வலிக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை முற்றிலும் தவிர்க்க முடியாது. எனவே பட்டுசேலை பரவாயில்லை. பலவிதமான பட்டுக்கள் உள்ளன. பட்டுப்பூச்சிக்கு எந்த பாதகமும் செய்யாமல் செய்யும் ஒரு பட்டு வகை இருக்கிறது. அஹிம்சா பட்டு எனப்படும் பட்டு வகை இருக்கிறது. இதில் பட்டுப் பூச்சிகளை கொதிக்க வைப்பதில்லை, பட்டுப் பூச்சியைத் தொந்திரவு செய்யாமல் பட்டை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள்.