இந்திய இராணுவம்


15 ஜனவரி 2013 பெங்களூர் - இந்தியா

கே: குருதேவ், இன்று தாங்கள் தயவு செய்து இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படை பற்றி சிறிது சொல்ல வேண்டும். 

ஸ்ரீ ஸ்ரீ: உலகிலுள்ள மிகச் சிறந்த இராணுவங்களில் ஒன்றாக இந்திய இராணுவம் இருந்து வருகின்றது. மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. அவர்களது ஒழுங்குமுறை, அர்ப்பணிப்பு. சமத்துவம், நீதி  ஆகியவை அனைவரும் பின்பற்றி  நடக்க சிறந்த  உதாரணமாக உள்ளன.

இந்த இராணுவத்தினர் மிகச் சிறந்த முறையில்  ஒழுங்குமுறையினை வளர்த்துக் கொண்டுள்ளனர். இந்நாட்டு இளைஞர்களும் அந்த ஒழுக்கத்தினை நன்றாக உள்வாங்கி வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று விரும்புகின்றேன். அவர்களிடம் நாம் நேர்மை, பொறுப்பு, வேகமான இயக்க நிலை ஆகியவற்றைக் காணலாம். அதிருஷ்டவசமாக ராணுவப் பயிற்சி அவர்களிடம் சகிப்புத்தன்மை,கண்ணியம், அர்ப்பணிப்பு போன்ற குணங்களை சிறிது சிறிதாக பதிய வைத்துள்ளது. அவர்கள் வேலை, ஒழுக்கம் ஆகிய இரண்டிற்கும் மிக உறுதியாக அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர். 

உலகின் பல நாடுகளில் இளைஞர்களுக்கு இராணுவப்பயிற்சி ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இளைஞர்களுக்கென அதுபோன்ற சில பயிற்சிகள் இருக்க வேண்டும். இளைஞர்கள் பெருமளவில் அவற்றில் பங்கு பெற வேண்டும். ஜவான்களும் (இந்திய இராணுவத்திலுள்ள இளைஞர்கள்) அவர்களது குடும்பங்களும் உண்மையாக பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த நேரத்தில் நாம் சமீபத்தில் பாகிஸ்தானியர்களால் தலை துண்டிக்கப்பட்ட இரண்டு  ஜவான்களுக்காக நம் இரங்கலைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். இந்த வீரர்கள் மிகவும் கேவலமான,கோழைத்தனமான முறையில் பாகிஸ்தான் இராணுவத்தினரால் தலை துண்டிக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு செய்ததற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும். 

அந்த இரண்டு ஜவான்களின் குடும்பத்தினரும் வெட்டுண்ட தலைகளை திரும்பப் பெற வேண்டி இன்னமும் உண்ணா விரதம் இருக்கின்றனர். அந்தக் குடும்பங்களுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம்.

கே: மேலான கல்வியும் உடல்நலப் பாதுகாப்பும் கிடைக்குமென்றால் அதற்காக மதம் மாறுவதில் என்ன தவறு என்று கேட்பவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்வது?

ஸ்ரீ ஸ்ரீ: கல்வியும் பணமும் கொடுத்து மக்களை மதம் மாறச் செய்வதென்பது மிகப்பெரிய குற்றம் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். இந்த மாபெரும் குற்றத்தை நாம் செய்யக்கூடாது. தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்குத் தானே முடிவெடுக்கும் உரிமை இருக்கின்றது. நீங்கள் யாரையும் மதம் மாறும்படி வசியப்படுத்தக் கூடாது. மற்றவர்கள் மதம் மாற வேண்டுமென்று நீங்கள் ஏன் விரும்புகின்றீர்கள்? உங்கள் மதத்திலுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் அதன் மூலம் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.  அரசியலுக்காகவும் அதிகாரம் பெறுவதற்காகவும் மக்களை மதமாற்றம் செய்வதை கடவுள் மன்னிக்க மாட்டார். 

மதமாற்றம் செய்வதன் மூலம் நீங்கள் ஒரு கலாச்சாரத்தினை அழிக்கின்றீர்கள். ஒரு சமுதாயத்தின் மக்கள்தொகை அமைப்பை அழிக்கின்றீர்கள். இதற்கு நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். என் கடவுள் உன் கடவுளைவிட உயர்ந்தவர் என்று சொல்வதும் ஒரு விதத்தில் தீவிரவாதம் தான். உண்மையில் இதுவே தீவிரவாதத்தின் விதை. ஆகவே, மக்களை மதமாற்றம் செய்ய முயற்சி செய்பவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் செய்வதையே தான்  மறைமுகமாகச்  செய்கிறார்கள் என்று நான் சொல்வேன். 

கே: மதத் தலைவர்களும், மதம் சார்ந்த நிறுவனங்களும் தாங்கள் எங்களுக்கு அளித்திருப்பது போல், அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தக்கூடிய ஞானத்தினை அளித்தால்  மக்கள் எளிதில் புரிந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தினை உணர முடியும். இவ்வாறு  செய்ய முடிந்தால் சமுதாயம் இன்று எதிர் கொண்டிருக்கும் பல பிரச்சினைகள் மறைந்துவிடும் என்று நான் நினைக்கின்றேன். நான் சுதர்சன கிரியா பயிற்சி செய்கின்றேன். உங்களை பின்பற்றி நடக்கின்றேன். ஆதே சமயம் மற்ற மதங்களின்  குருக்களையும் பழக்க வழக்கங்களையும் மதிக்கின்றேன். நான் கோவிலுக்கும் அதே சமயம் மசூதிக்கும் செல்கின்றேன். 

ஸ்ரீ ஸ்ரீ: ரொம்ப நல்லது. உண்மையில் அப்படித்தான் இருக்க வேண்டும். இனிமையான வழிகளில் மக்களை சம்மதிக்க வைத்து கோவில்களுக்கு செல்லவைத்தல், அல்லது நமாஸ் செய்யும்படி வற்புறுத்துதல் மற்றும்  தவறாக வழிநடத்துதல் எதுவும் பயன் தராது.  உண்மையில் மக்களின் தேவை என்னவென்றால், ஆன்மிகத்தை உணர்தல், இறைவன் ஒருவனே என்பதை உணர்ந்தறிதல். நாம் அனைவரும் ஒரே கடவுளின் குழந்தைகள்; நாம் நம்மிடம் இருக்கும் அன்பை எங்கும் பரப்ப வேண்டும். வெறுப்பை அல்ல. இதையே தான் நான் பாகிஸ்தான் மக்களுக்கும்  மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன்.  அங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள்.  இன்றும் அவர்களுடன் பேசினேன். அங்கே நம் வாழும் கலை மையங்கள் மூன்று இடங்களில் செயல்படுகின்றன. சுதர்ஷன் கிரியா செய்த பின் அங்குள்ள மக்கள் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்துள்ளனர். அவர்களது துன்பம் துயரமெல்லாம் துடைக்கப்பட்டு விட்டன. அங்கே பலர் என்னை அவர்களது கனவில் சந்தித்ததாக சொல்கின்றனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் மட்டுமன்றி ஈரான் போன்ற நாடுகளிலும் மக்கள் இதே அனுபவம் பெற்றுள்ளனர்.

ஈரான் நாட்டில் 60 முதல் 65 வாழும் கலை ஆசிரியர்கள் உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஈரானில்  சூழ்நிலை மிகவும் கடினமானது; கண்டிப்புகள் நிறைந்தது. அவர்கள் யோகப் பயிற்சிகளை அனுமதிப்பதில்லை. ஆனால் காவல் துறையினர் அங்கிருந்த இஸ்லாம் இனத்தைச் சேர்ந்த நம் வாழும் கலை பயிற்சி ஆசிரியர்களின் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த என் படங்களைப் பார்த்துவிட்டு "ஓ! குருதேவ் நமக்கு எல்லாவற்றையும் கற்றுத்தந்த நம் மூதாதையரைப் போலவே தெரிகின்றார். நமக்கு ஞானம் கற்பித்த நம் ஆன்மீகத் தலைவர்  போன்றே இருக்கின்றார்," என்று சொல்லியிருக்கின்றனர். எனவே, அவர்கள் அங்கே நாம் வேலை செய்வதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எந்தத் தடையுமின்றி நடக்க அனுமதி அளித்துள்ளனர். பல இளைஞர்கள் நம் வாழும் கலை பயிற்சியில் பங்குபெற்று, பின்னர், "ஓ! உண்மையில் நாங்கள் எங்கள் வாழ்வில் மிகப் பெரிய ஒன்றை தவற விட்டு விட்டிருக்கின்றோம். எங்கள் வாழ்வின் ஆரம்ப காலங்களிலேயே இந்த அனுபவங்களைப் பெற்றிருந்தால், இன்று நாங்கள் இன்னும் அதிக வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திருப்போம். அண்டை அயலாருடன் சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வந்திருக்கும்.  வெறுப்பும் விரோதமும் மறைந்து போயிருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த மாற்றம் நிகழ்வதை அனுமதிக்க விரும்பாத சில மதத் தலைவர்களும் பண்டித்தர்களும் இஸ்லாம் மதத்தில் மட்டுமன்றி இந்து மதத்திலும் இருக்கின்றனர். மக்கள் இந்த ஆன்மிக  அனுபவங்களை எல்லாம் தேடிச் சென்றுவிட்டால் இந்த தலைவர்கள் தங்கள் தொழில்களை எல்லாம் இழுத்து மூடிவிட வேண்டி வரும் என்று பயப்படுகின்றனர். இந்துக்களிடையிலேயே  சில ஆன்மிகத் தலைவர்கள் சுதர்சனக் கிரியாவின் விளைவுகளை ஒபியம் போன்ற போதை மருந்துகளின் விளைவுகளுக்கு ஒப்பிட்டுக் குறை கூறி மக்களை தவறாக வழி நடத்துகின்றனர்.  மற்றவர்கள் வாழும் கலை பயிற்சிக்குச் செல்ல விடாமல் தடை செய்கின்றனர். அதே போல்  இமாம்கள் (இஸ்லாம் மதத் தலைவர்கள்) இஸ்லாமியர்களை வாழும் கலை பயிற்சி என்பது வேற்று மதத்தினர் செய்யும் பயிற்சி என்பதனால் அதனை கற்கவோ பயிற்சி செய்யவோ கூடாதென்று தடை செய்கின்றனர். வாழும் கலை பயிற்சியில் தவறாக வழி  நடத்தப்பட்டு ஏமாற்றப் படுவீர்கள்  என்று சொல்கிறார்கள்.

தனி மனிதர்களின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டினை தடை செய்யும்  இதுபோன்ற மக்களை நாம் சமாளித்து எதிர்த்துப் போராட வேண்டும். மக்களுக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தரும் இந்த பயிற்சிகளையும் ஞானத்தையும் தடை செய்பவர்கள் சமாளிக்கப்பட வேண்டும். அவர்களது செயல்கள் நிறுத்தப்பட வேச்ண்டும். இஸ்லாம், கிறிஸ்துவம்  ஆகிய மதங்களில் மட்டுமின்றி இந்து மதத்தில் கூட சில தலைவர்கள் அறியாமையினால் இவ்வாறு செய்கிறார்கள். இவர்களுக்கு நல்லறிவை வழங்கும்படி நாம் இறைவனை பிரார்த்திப்போம்.  நாம் அனைவருக்கும் அளவற்ற அன்பை தாராளமாக வழங்குவோம்.
  
கே: குருதேவ், தேசப்பற்றும் , ஆன்மிகமும் ஒருங்கிணைந்து செல்ல முடியுமா? நாட்டின் மீதுள்ள பற்று நம் பரந்த மனப்பான்மையை வரையறுத்து விடுமா

ஸ்ரீ ஸ்ரீ:  இல்லவே இல்லை. இரண்டும் ஒருங்கிணைந்து செல்லலாம். இரண்டிற்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லை. 

நீங்கள் இந்த ஜனநாயகத்தின் ஒரு அங்கம். ஒரு குறிப்பிட்ட நாடு மற்றும் அதன் ஜனநாயகத்தில் நீங்கள் ஒரு பங்குதாரர். இந்த நாட்டின் நடவடிக்கைகளில் உங்களுக்கு பங்குண்டு என்பதனை நீங்கள் தைரியமாக வெளிப்படுத்தலாம். இவ்வாறு நீங்கள் செய்வது  உங்கள் உலகளாவிய சகோதரத்துவத்திற்கோ அல்லது உலகளாவிய ஒருமைப்பாட்டிற்கோ எந்த விதத்திலும் தடை செய்யாது.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு சமூக சேவகர்  என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது உங்கள் வீட்டில் குப்பை இருந்தால் உங்கள் வீட்டை சுத்தம் செய்வதுதான் உங்கள் முதல் கடமை. நான் என் வீட்டை சுத்தம் செய்தால், அது தெருக்களையும் பொது இடங்களையும் சுத்தம் செய்வதோடு முரண்பாடு ஆகுமா என்று கேட்கிறீர்கள். வெளி உலகை சுத்தம் செய்யப் போவதென்றால்  முதலில் உங்கள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். 

உங்கள் வீட்டின் விரிவாக்கமே உங்கள் நாடு. அதன் விரிவாக்கமே இந்த உலகம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட  நாட்டைச் சேர்ந்தவராக இல்லையென்றால் நீங்கள் அந்த நாட்டில் நிலவும் ஊழல் பற்றி பேச முடியாது. அந்நாட்டு மக்கள் "இது எங்கள் உள்நாட்டு விவகாரம்.  எங்களை கேள்வி கேட்க நீங்கள் யார்?" என்று கேட்கலாம். நீங்கள் உங்கள் அடுத்த வீட்டுக்காரரிடம் "நான் உங்களைச் சேர்ந்தவன், உங்கள் வீட்டை சுத்தம் செய்யப் போகிறேன் " என்று சொல்ல  முடியாது. அப்படி சொன்னால், அவர்கள் உங்களிடம், "நன்றி, தயவு செய்து உங்கள் வீட்டில் செய்யுங்கள்; அதுதான் நல்லது" என்று சொல்வார்கள். உங்கள் வீட்டில் நீங்கள் விரும்பிய எதையும் செய்ய உங்களுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால் அதே உரிமையை நீங்கள் அடுத்த வீட்டில் பயன்படுத்த முடியாது. அடுத்த  வீட்டுக்காரர் ,"தயவு செய்து வாருங்கள்.  எங்கள் வீட்டை சுத்தம் செய்ய உங்கள் உதவி தேவைப்படுகிறது" என்று அழைத்தால் நீங்கள் தாரளமாக செய்யலாம். 

நீங்கள் ஒரு நாட்டில் குடியிருப்பவராக இல்லாமல், ஒரு சுற்றுலாப் பயணியாக இருந்தால், அந்நாட்டு  விவகாரங்களில் தலையிட முடியாது. அவ்வாறு  செய்வது சட்டப்படியும்  சரியாகாது.  இந்த இடத்தில் உருவ நிலையும் அருவ நிலையும் வேறுபடுகின்றன. அருவ நிலையில் நாம் உலகிலுள்ள அனைவருக்கும் சொந்தம் என்ற உணர்வுடன் இருக்கலாம்.  உணர்வுபூர்வமான நிலையில் நாம் "இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா என்று இடங்களில் என்ன வேறுபாடு இருக்கின்றது?எங்கு சென்றாலும் என் சொந்த ஊரில் இருப்பது போலவே உணர்கின்றேன். சொந்த வீட்டில் இருப்பது போலவே முழுமையாக  உணர்கின்றேன்" என்று சொல்லலாம். ஆனால்  அதே சமயம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி நடந்துகொள்ள முடியாது.  ஒவ்வொரு  இடமும் அதற்கென தனிப்பட்ட நடைமுறை விதிகளைக் கொண்டுள்ளன.  நாம் அவற்றைப் பின்பற்ற வேண்டும்.

கே: தேசப் பற்று என்பது என்ன? அது உலகளாவிய சகோதரத்துவத்திற்கு முரண்பாடானதாஉலகளாவிய சகோரத்துவத்தினை உள்ளடக்கும் வண்ணம் தேசப்பற்றினை விரிவுபடுத்துவது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ: உலகளாவிய சகோதரத்துவம் என்கின்ற உணர்வுதான் முதலில் தோன்றுகின்றது. உலகளவில்  நீங்கள் பங்குதாரராக செயல்பட முடியாது. ஆனால் உங்கள் நாட்டில் நீங்கள் வாக்குரிமை பெற்றவர்.  அதற்கென சில கடமைகள் உடையவர். உங்கள் கருத்துக்களையும் தேவைகளையும் வெளிப்படுத்தவும் சில நடவடிக்கைகள் எடுக்கவும் உரிமை உள்ளவர்.  

உலகளவில் நீங்கள் மனித நேயத்தை பரப்பலாம். நட்புணர்வோடும் கருணையோடும் அனைவருக்கும் நல்லதையே விரும்பலாம்.  ஆனால் அநீதியை எதிர்த்துப் போராட வேண்டுமென்றால் உங்கள் நாட்டில் தான் செய்ய முடியும். எனவே இரண்டும் முரண்பாடானவை அல்ல.

கே: குருதேவ், ஆன்மிகத்திற்கும் மதத்திற்கும் இடைப்பட்ட கோட்டினை நான் எப்படி அறிந்துகொள்வது?

ஸ்ரீ ஸ்ரீ: நீங்கள் இந்தப் பாதையில் இருக்கும்போது ஏற்கெனவே ஆன்மிகம் உங்களுடன் இருக்கின்றது. நீங்கள் எந்த கோட்டையும் வரையவோ அழிக்கவோ அவசியமில்லை. இயல்பாக இருங்கள். வாழ்க்கை அப்படித்தான் இருக்க வேண்டும். உங்கள் பிறப்பினால் நீங்கள் ஒரு மதத்தைச் சேர்ந்தவர் ஆகின்றீர்கள். ஆனால் ஆன்மிகம் உங்களால் தேர்ந்தெடுக்கப்படுவது.

கே: குருதேவ், ஹிமாச்சலப் பிரதேசத்தில் இளைஞர்கள் போதை மருந்துப் பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருப்பது இன்றைய பெரும் பிரச்சினையாக உள்ளது. பொருள் வளம் என்பது கூடவே தீமைகளையும் அழைத்து வருவது ஏன் என்று தயவு செய்து விளக்குங்கள்.  மனித நேயத்தினை விலையாகக் கொடுத்து வளம் பெறுவது சரியா

ஸ்ரீ ஸ்ரீ:  நிச்சயமாக இல்லை. அத்தகைய வளம் ஒன்றிற்கும் உதவாது. மனித நேயம் இல்லையென்றால்  நீங்கள் வளமானவர் என்று சொல்வது அர்த்தமற்றது. உதாரணத்திற்கு, நீங்கள் தூக்கமில்லா வியாதியினால் அவதிப்படும் போது, உங்களிடம் எத்தனை அருமையான படுக்கை இருந்தாலும் பயனில்லை. அதே போல், உங்களுக்கு வயிற்றுப் புண் இருந்து நீங்கள் சாப்பிட முடியாத போது எத்தனை சுவையான உணவு உங்கள் முன் வைக்கப்பட்டாலும் பயனில்லை. மனித நேயம் இல்லாத வாழ்கை பயனற்றது. அதில் வளமை அர்த்தமற்றது.

கே: குருதேவ், உடல் பருமன் என்பது இறைவனால் அளிக்கப்பட ஒன்றா அல்லது ஒருவரின் செயல்களுக்கான விளைவா?

ஸ்ரீ ஸ்ரீ: கடவுள் உங்களுக்கு ஏதாவது ஒரு வேலையைக் கொடுக்கின்றார், உங்களுக்கு உடல் பருமனைக் கொடுத்தால், கூடவே உடல் எடையைக் குறைப்பதற்கான வேலைகளையும் கொடுப்பார். நீங்கள் மிக புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதுபோல் தெரிகின்றது. உடல் பருமனாகவே இருந்தால், அது கடவுள் உங்களுக்குக் கொடுத்தது என்று சாமர்த்தியமாக சொல்லிக்கொள்ளலாம். கடவுள் கொடுத்ததாக நீங்கள் உண்மையிலேயே நினைத்தால், அவர் உங்கள் எடை குறைவதற்கான வழிகளையும் வகுத்துள்ளார். 

கே: குருதேவ், துன்பமும்  துயரமும் அனுபவிக்கும்போது ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ: பொறுமையாக இருங்கள். நீங்கள் இங்கே ஆசிரமத்திற்கு வரும்போது உங்கள்  கவலைகளை எல்லாம் விட்டுவிட்டு தொடர்ந்து செல்லுங்கள். விடுபட முடியாத துன்பம் துயரம் என்பது எதுவுமில்லை. நகராமல் ஒரே இடத்தில் நிரந்தரமாக இருக்கும் மேகத்தினை எப்போதாவது பார்த்திருக்கின்றீர்களா? பார்த்திருக்கவே முடியாது. துன்பமும் துயரமும் மேகக் கூட்டத்தினைப் போன்றவை. சில மேகங்கள் உடனே மறையலாம். சில மேகங்கள் நீண்ட தூரம் சென்று மறையலாம். ஆனால் அவை நிச்சயம் மறையும். அது தவிர்க்க முடியாதது.