அன்பினால் கல்லையும் கறைய வைக்க முடியும்


2 ஜனவரி 2013  பெர்லின், ஜெர்மனி
கே: தாங்கள் எங்கும் நிறைந்திருப்பதாகவும், எல்லாவற்றையும் அறிந்திருப்பதாகவும் பல கதைகளின் மூலம் தெரிகிறது. இது சில சமயங்களில், எனது தவறுகள் அனைத்தையும் தாங்கள் அறிந்திருக்கக்கூடுமோ என்கிற பயத்தை எனக்கு ஏற்படுத்துகிறது.தவறுகள் பற்றி தங்கள் மனப்போக்கு என்ன? மீண்டும் மீண்டும் தவறுகள் செய்யும் என் மீது தங்களுக்கு கோபம் ஏற்படுகிறதா?
குருதேவ்: இல்லவே இல்லை.பக்தர்கள் குருவை விட ஆற்றல் மிகுந்தவர்கள்.  நீங்கள் என் குரு கதைகளைக் கேட்டிருப்பீர்கள். நான் பல பக்தர்களின் கதைகள் கேட்டிருக்கிறேன். அவற்றில் ஒன்றை உங்களுடன் இப்போது பகிர்ந்து கொள்கிறேன். நவம்பர் மாதக்கடைசியில் நான் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஒதுக்கமாயுள்ள சில இடங்களில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அதில் சில கிராமங்களுக்கு என்னால் செல்லவே முடியவில்லை. ஆனால் நிறைய மக்கள் என்னைக் காண வந்திருந்தார்கள்.
ஒரு கிராமத்தில், நான் என் உதவியாளரிடம் " மூன்று பேர் தங்கள் கை பேசியைத் தொலைத்து விட்டார்கள் அவர்கள் மிகுந்த ஏழைகள். ஆகவே மூன்று புதிய கை பேசிகளை என் பையில் வைத்து விடுங்கள் " என்று கூறினேன்.மூன்று புது கைபேசிகள் அடங்கிய பையை நான் எடுத்துச் சென்றேன்.
அங்கு சென்று தொண்டர்கள் கூட்டத்தின் போது, "இங்கு சிலர் கைபேசியைத் தொலைத்து விட்டீர்கள். அது எனக்குத் தெரியும்.யார் யார் அவ்வாறு தொலைத்து விட்டீர்களோ அவர்களெல்லாம் எழுந்து நில்லுங்கள் என்றேன். சரியாக மூன்று பேர் எழுந்து நின்றார்கள். அதில் ஒருவர் பெண். அப்பெண்ணிடம் நான்,"  இரண்டு மூன்று மாத ஊதியத்தின் மதிப்புள்ள, விலை உயர்ந்த கைபேசி தொலைந்து போன விஷயத்தை எவ்வாறு குடும்பத்தினரிடம் கூறுவது என்று சென்ற  வியாழக்கிழமையன்று  நீங்கள் என் படத்திற்கு முன்னால் அழுது கொண்டிருந்தீர்கள். அதை நான் அறிவேன்.இதோ இந்த புதிய கைபேசியை எடுத்துக் கொள்ளுங்கள்." என்றேன்.
அப்போது, கூட்டத்திலிருந்து ஒரு இளைஞர் என்னிடம் வந்து தன்னுடைய  அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் முது நிலைப் பயிற்சியில் இருக்கும்போது, இல்லத்தில் இருக்கும் மனைவியிடம் பேசியாக வேண்டிய நிலை ஏற்பட்டது.அவரது கைபேசியில் மின்கலத் திறன் குறைந்து விட்டது.அதற்குரிய சார்ஜெரை அவர் வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்து விட்டார். அவர், தனது கைபேசியை என் படத்திற்கு முன்னால் வைத்து "குருதேவ்! என் கைபேசிக்கு மின்கலத் திறன் அளியுங்கள்" என்று வேண்டிக்கொண்டார்.அடுத்த நாள் காலை அவர் கண் விழிக்கும்போது அவரது கைபேசி முழுவதுமாக சார்ஜ் ஆகிருந்தது
அவ்விளைஞன் என்னிடம் தன கைபேசியைக் காண்பித்து, "பாருங்கள்! நான் என் சார்ஜெரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உபயோகிக்க வில்லை.தங்கள் படத்தின் முன்னால் என் கைபேசியை வைக்கிறேன் அது சார்ஜ் ஆகி விடுகிறது.என் சார்ஜெரை நான் தூக்கிப் போட்டுவிட்டேன்!" என்றார்.
இது ஒரு முக்கியமான  விஷயம்தான்.நான் என்னுடைய கைபேசியை சார்ஜெரில் போடும்போது , என்னுடைய பக்தர் என் படத்தின் முன்னிலையில் தனது கைபேசியை சார்ஜ் செய்கிறார்.
பக்தர்கள் எவ்வளவு ஆற்றலுடன் இருக்க முடியும் என்று பாருங்கள்!
ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால், நமது உணர்வுகள், ஈடுபாடு, ஆழமான அன்பு இவைதாம் இதற்கு காரணம்.
இன்னொரு கதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் பத்து ஆண்டுகளுக்கு முன்  தென் ஆப்பிரிக்காவிற்குச் சென்றிருந்த போது ஒருவர் வீட்டில் விருந்தினராகத் தங்கி இருந்தேன்.அங்கிருந்து ஜோஹென்ஸ்புர்க் செல்வதற்காக எங்கள் பெட்டிகளை எல்லாம் தயார் செய்து கொண்டிருந்தோம். திடீரென்று நான் அருகிலுள்ள உதவியாளர்களின் அறைக்கு சென்று இங்குமங்கும் தேடத் தொடங்கினேன் நான் சாதரணமாக பிறர் அறைக்குச் செல்வதில்லை. எனவே அவர்கள் எல்லோரும் திடுக்கிட்டு "என்ன குருதேவ் அமைதியின்றி பிறர் அறைகளில் என்ன தேடி அலைகிறார்? என்றனர்.நான் அப்போது, ஒரு தேயிலைப் பொட்டலத்தை அங்கு கண்டு அது யாருடையது? என்று கேட்டேன். அவர்கள், யாருடையதோ  தெரியவில்லை" என்று கூறினார்கள்.
நான் தேநீர் குடிப்பதில்லை. ஆனால் அந்தப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு என்னுடைய பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொண்டேன். பிறகு தான் என்னால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. அந்த தேநீர் பொட்டலத்தைக் காணும் வரை அமைதியின்றியே இருந்தது. என்ன குருதேவ் இவ்வாறு தம்முடயது அல்லாத ஒரு தேநீர் பொட்டலத்தைத்  திருடி வைத்துக்கொள்கிறார் என்று வியந்து போனார்கள்.
நாங்கள், டர்பனில் இருந்து ஜோஹென்ஸ்புர்க் சென்றடைந்த போது ஒரு முதியவர் என்னை விமான நிலையத்தில் சந்தித்தார்." குருதேவ்! நான் உங்களுக்கு அனுப்பிய தேநீர் பொட்டலம் கிடைத்ததா?அது பிரத்தேயகமான தேநீர் இலைகள். நானே நேரில் சென்று அவைகளைப் பறித்து, உங்களுக்காக என்று அனுப்பினேன். என்னால் டர்பனுக்கு வர முடியவில்லை. ஆகையால் ஒருவர் மூலம் கொடுத்து அனுப்பினேன்." என்றார். அதை எடுத்து வந்தவர், அதை அடுத்த அறையில் போட்டு விட்டார். தொண்டர்களுக்கு நான் தேநீர் அருந்துவதில்லை என்று தெரியும்.ஆகவே அவர்கள் அதை என்னிடம் தெரிவிக்ககூட இல்லை. இதுதான்  நடந்தது. நான் அவரிடம் "ஆம் அந்த தேநீர் பொட்டலம் கிடைக்கப் பெற்றேன்" என்று கூறினேன். உங்கள் உணர்வுகளும் உணர்ச்சிகளும் தீவிரமாக இருந்தால்,  நான் உங்கள் கைபொம்மையாகி விடுகிறேன்.
இதுதான் நான் தேநீர் பொட்டலம் ' திருடிய' கதை. உண்மையில் இது திருட்டு அல்ல.  அப்பொட்டலம் என்னுடையதுதான்ஆனால் அத்தருணத்தில், எனக்கு உரிமை இல்லாத ஒரு பொருளை எடுத்துக் கொள்வது போன்று தோற்றம் ஏற்பட்டது.
இது போலப் பல நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. 
ஒரு முறை டெல்லிக்கு சென்றிருந்த போது, அரங்கில் ஏராளமான மக்கள் கூடியிருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்தவுடன், அவர்கள் அரங்கின் வெளிக்கூடத்தில், என்னைக் காண வரிசையில் நின்றிருந்தார்கள். அப்போதுஎன்னை அழைத்துச் சென்றவர்கள், '' நீண்ட வரிசை உள்ளது,வெகு நேரமாகி விடும்,குருதேவ் விமானத்தை பிடிக்க வேண்டும் என்று கூறி, காத்திருந்த மக்களைத் தவிர்க்க முடிவு செய்து, அரங்கின், கீழ் தளத்தின் வழியாக என்னைக் காருக்கு நேராக அழைத்துச் சென்று விட்டார்கள்.

ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் ஏமாற்றம், மற்றும் கோபம் அடைந்து விட்டார்கள். எனக்கு அன்று கடும் தலைவலி ஏற்பட்டு உடல் நலம் குன்றி விட்டது. என்னை நேராக விமான நிலையத்திற்கு அழைத்து வந்தவர்களிடம் நான்," என் இவ்வாறு செய்தீர்கள்? நான் யாரையும் ஏமாற்றத்திற்கு ஆளாக விரும்பவில்லை. இதுவரை ஒரு நாளும் யாரையும் ஏமாற்றியது இல்லை" என்று கூறினேன்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால், உணர்ச்சிகளும், அன்பும் மிக வலிமையானதாக இருந்தால், கல்லையும் கரைக்க முடியும். புரிந்து கொண்டீர்களா? இது போன்ற பல நிகழ்வுகள் உள்ளன.  தியானத்தை பயிற்சி செய்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் யாரையும் சபிக்கக் கூடாது. எந்த கெட்ட வார்த்தைகளையும் கூறாதீர்கள். அப்படிப்பட்ட எதுவும் உங்கள் வாயிலிருந்து வரக்கூடாது.

நான் என்னுடைய 56 வயது வாழ்கையில் எந்த கெட்ட வார்த்தைகளையும் கூறியதில்லை. இதை என்னுடைய தனிச் சிறப்பு என்று கூறவில்லை.இயல்பாகவே அப்படிப்பட்ட வார்த்தைகள் என் வாயில் வருவதில்லை. மிக மோசமான வார்த்தை என்று நான் உபயோகித்தது, " நீ ஒரு முட்டாள்" என்பதுதான்.

யாரையும் எங்கேயும், எனக்குள்ளேயே கூடசபித்தோ, தீய வார்த்தைகளைக் கூறியதாகவோ நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள். பயிற்சியாளர்கள் தீய வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை சக்தி மிகுந்தவை. தியானம் செய்பவர்கள், ஆசி வழங்கும் மற்றும் சபிக்கும் திறன் மிகுந்தவர்கள் ஆகிறார்கள்.

இவற்றில் சபிக்கும் திறன் முதலிலும், ஆசி வழங்கும் திறன் பின்னரும் ஏற்படுகின்றன. ஆகவே, தியானப்பயிற்சியாளர்கள், யாரையும் பற்றி தீயதாக நினைக்கவோ, பேசவோ கூடாது.நேர்மறை ஆகவே இருத்தல் வேண்டும்.கோபமே வரக்கூடாது என்று நான் கூறவில்லை. கோபம் என்பது, வாழ்வியலில்  ஒரு பகுதி.கோபம் வரும்போதும், உங்கள் கோப உணர்ச்சியையும், வார்த்தைகளையும் கட்டுப்படுத்துங்கள்.

சில சமயங்களில் கோபப்பட வேண்டிய அவசியம் இருக்கும், ஆனால் அப்போது அசிங்கமான வார்த்தைகளை வெளியிட்டு விடாதீர்கள். ஏன்? நீங்கள் கோபமான வார்த்தைகளைப் பேசும்போது, உங்கள் நல்ல சக்தியை அதிகமாக செலவழித்து  விடுகிறீர்கள்.ஒரு சில கோபமான தீய வார்த்தைகளால், ஒரு மாதம் தியானம் செய்து சேமித்த சக்தியை செலவழித்து விடுகிறீர்கள்.
இது சிக்கனமானதா? ஒரு டாலர் மதிப்புள்ள குளிர்பானத்திற்கு ஒரு ஆயிரம் டாலர் செலவழிப்பதைப் போன்றது.

இது! உங்கள் ஆற்றலை,சக்தியை, மன உறுதியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். தியானத்தின் மூலம் அதிக சக்தியை அடைகிறீர்கள். அதனால் தான், பண்டைய காலத்தில் முனிவர்கள், சீடர்களை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஏனெனில் அவர்கள் சக்தியை அடைந்து, விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறி விட்டால் பெரும் விபரீதங்கள் ஏற்படும். ஆகவே, அவர்கள் ஞானத்தை எல்லோருக்கும் அளிக்க மாட்டார்கள். சீடர்களுக்கு பல பரீட்ச்சைகளை வைத்து அவற்றில் தேர்ச்சி அடைபவர்களுக்கு மட்டுமே தியான முறைகளைக் கற்பித்தார்கள்.
ஆனால், நான் இது அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன். இது அவசியம் இல்லயெனில், இது'' கேட்ச் 22 '' என்கிற நிலையை (ஒரு தீர்வானது, விதிமுறையால் நிராகரிக்கப்படும் நிலை) ஏற்படுத்தும்.

ஒருவர் நல்லவராயிருந்தால் மட்டுமே, ஞானம் கிடைக்கப்பெறும். ஆனால் ஞானம் கிடைத்தால் தவிர ஒருவர் நல்லவராக ஆக முடியாது. 



நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன்.