ஒரு அரசனைப்போல் நட...


3 ஜனவரி 2013 பெர்லின் ஜெர்மனி




கே: தேவதைகளுக்கு ஏன் சிறகுகள் இருக்கின்றன? அவை எதைக் குறிக்கின்றன. கிறிஸ்தவர்களின் கலாசாரத்தில் தேவதைகளைப் பற்றி சொல்லியிருப்பதன் காரணம் என்ன என்று தயவு செய்து சொல்லுங்கள்.

குருதேவர்: மனிதனுக்கு எப்போதுமே பறப்பதில் ஒரு மோகம் இருந்திருக்கிறது. விண் வெளியை தன் வசப்படுத்த ஒரு ஆவல் இருந்திருக்கிறது. நம்மால் இந்த பூமியில் நடக்க முடிகிறது. சமுத்திரத்தில் நீச்சல் அடிக்கலாம். மூழ்கி ஆராய்சி செய்யலாம். பழங்காலத்தில் மனிதனால் வானத்தில் பறக்க முடியவில்லை. அதனால் தேவதைகள், நம்மைவிட சக்தி வாய்ந்தவர்கள், சிறகுகளுடன் இருப்பதாக கற்பனை செய்து அவைகளால் பறக்க முடியும், எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் என்று நினைத்தார்கள்.

இன்றைய தினத்தில் நம்மிடம் மிகவும் சக்திவாய்ந்த ஆகாய விமானங்கள் உபயோகத்தில் இருக்கின்றன. அவைகளின் வேகத்தோடு ஒப்பிட்டால், தேவதைகளால் அந்த வேகத்தில் பறக்க முடியாது. நாம் தேவதைகளுக்கு முன்னால் ஒரு இடத்தை அடையலாம். அவைகள் நமக்கு மிகவும் பின்னால் வந்து சேரும்.

எந்த பிராணியோ, பறவையோ, எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், சிறகுகளால் ஆகாய விமானத்தின் வேகத்தில் பறக்க முடியாது.எனவே தேவதை என்பது ஒரு கற்பனையே. நம்மை விட உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு வர்க்கத்தினரை தேவதை என்று பெயரிட்டார்கள். அவர்கள் அப்படி இருந்தால் தான் நமக்கு உதவ முடியும். தேவதைகள் நம்மை விட சக்தி வாய்ந்தவர்கள், நம்மை விட நன்றாக வளர்ச்சி அடைந்தவர்கள், நமக்கு உதவுபவர்கள் என்று நம்பினார்கள்.
இப்போது, தேவதைகள் சிறகுடன் வந்து உன்னைக் கூட்டிச் செல்லும். உனக்கு பூக்களைப் பரிசாக அளிக்கும் என்று நினைக்காதே.

மேலும் தேவதைகளைக் குழந்தைகள் போலச் சித்தரித்தார்கள். கிறிஸ்தவ மதப்படி தேவதைகளைக் குழந்தை முகத்தோடு சித்தரித்ததற்கான காரணம் தெரியுமா? தேவதைகள் குழந்தைகள் போல கள்ளம் கபடு இல்லாதவர்கள். நீ உயர உயர, தூய்மையானவனாக, கபடம் சூது இல்லாதவனாக ஆக வேண்டும். சூழ்ச்சி வஞ்சகம் செய்யக் கூடாது. யார் சூழ்ச்சி, வஞ்சகம் செய்கிறார்கள்? யாருக்கு ஒரு அரசனைப் போல நடை போடத் திறமை இல்லையோ, யாருக்கு சக்தி குறைவாக இருக்கிறதோ, அவர்கள் நயவஞ்சகமாக சூழ்ச்சியில் ஈடுபடுவார்கள்.

யார் கபடமாக இருக்கிறாரோ அவருக்குத் தன் மேல் நம்பிக்கை இருக்காது. அவர்கள் அடைய விரும்பியதை நேர்மையான வழியில் அடைய முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்குக் கிடையாது. அதனால் தான் எப்படியாவது நயவஞ்சகமாக அதை அடைய முயலுகிறார்கள்.
எனவே தேவதைகளை கபடமில்லாத குழந்தையாக சித்தரிக்கிறார்கள். இரண்டு மூன்று வயதான நல்ல செழுமையான குழந்தையாகச் சித்தரிக்கிறார்கள்.

மைக்கேல் ஆஞ்சலோவின் சித்திரங்களிலும் தேவதைகளை சிறு குழந்தகைளாகப் பார்க்கலாம். கபடு சூதில்லாத தூய்மையை இது குறிக்கிறது. சாதாரண மனிதர்களை விட தேவதைகள் சக்தி வாய்ந்தவைகளாக இருப்பதையும் இந்த சித்திரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் அனைவரின் உள்ளும் ஒரு தேவதை இருக்கிறது என்று சொல்வேன். கிறிஸ்தவ மதப்படி ஒவ்வொருவரையும் காக்கும் ஒரு தேவதை இருக்கிறது என்று நம்புகிறார்கள். அந்த தேவதை உன்னைக் காப்பது மட்டும் இல்லை. நீ அந்த தேவதையின் ஒரு பகுதி தான். நீ உன்னை ஒரு தேவதையாக அறிந்து கொள்ள வேண்டும். நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதற்கான சக்தி உன்னிடம் இருக்கிறது. இதை அறிந்து ஓய்வாக இரு.

கே: முன்னேற்றத்துக்காகப்  பாடு பட வேண்டுமா? என்ன செய்கிறேன் என்று அறிந்து, திருப்தியாக இருக்க வேண்டுமா? இந்த இரண்டுக்கும் இடையே சமன்பாடு கொண்டு வருவது எப்படி?

குருதேவர்: உனக்கு சைக்கிள் விடத் தெரியுமா? அதே போல்தான். திருப்தியாக இருப்பதற்கும், மேலும் முன்னேற்றத்துக்குப்  பாடுபடுவதற்கும் சைக்கிள் விடுவதைப் போல் ஒரு சமன்பாடு கொண்டு வரலாம். நீ எப்போது விரும்புகிறாயோ இந்த சமன்பாடு தானாகவே நிகழும். இப்படிப்  பட்ட எண்ணமே உன் வாழ்வில் ஒரு சமன்பாட்டை அளிக்கும். நீ அந்த திசையில் தான் ஏற்கனவே செல்கிறாய்.

இந்தக் கேள்வி உன் மனதில் எழும்போது, எப்படிச் செய்யவேண்டும் என்று உனக்கே தெரியவரும். உன் ஆத்மாவே இதற்குப் பதில் சொல்லும். நான் சம நிலையிலிருந்து தவறுகிறேன். இதைச் சரியாக்க வேண்டும் என்று உன் ஆத்மாவே உனக்குச் சொல்லும். நீ உன் வேலையில்  அதிகமாக ஈடுபட்டு இருக்கும்போது உன் ஆத்மா, “நீ உன் குடும்பத்தை, உன் மனைவியை, உன் கணவனை, குழந்தைகளை மறந்து விட்டாய்” என்று நினைவூட்டும். நீ உன் குடும்பத்தினரைக் கவனிப்பாய்.

நீ உன் குடும்பத்தாருடைய  பிரச்சினைகளிலே மூழ்கி இருக்கும்போது, மற்ற வேலைகளை மறந்து விட்டு கவனிக்காத போது, “கடவுளே! எனக்கு என்ன ஆயிற்று. குடும்ப வேலைகளில் மூழ்கி மற்ற சேவைகளில் மனம் செல்லாமல் இருக்கிறது. நான் உலகத்துக்கு ஏதாவது உபயோகமாக இருக்க வேண்டும். ஏதாவது சேவையில் ஈடுபட்டு என் இலட்சியப்  பாதையில் செல்ல வேண்டும் என்று மனம் சொல்லும்.

வாழ்க்கையில் இப்படி தன் தேவைகளுக்கும், பிறர் சேவைகளுக்கும் சமன்பாடு வேண்டும் என்று நினைப்பதே போதும். ஒரு மின்சாரப் பாதையில் மின் ஓட்டம் அதிகமாகும் போது ஃப்யூஸ் வேலை செய்து மின் ஓட்டத்தைத் துண்டித்து மற்ற உபகரணங்களைக் காப்பது போல் உன் மனம் வேலை செய்யும். சிறிது குற்ற உணர்ச்சி ஃப்யூஸ் போல் செயல் படும். ஆனால் அதிக குற்ற உணர்ச்சி தேவையில்லை.

உணவில் சிறிது உப்பு அவசியம். உப்பு அதிகமானால் அதை சாப்பிட முடியாது. புரிந்ததா? தன் தேவைகளுக்கும் பிறர் சேவைகளுக்கும் இடையே சமன்பாடு வேண்டும் என்று நினைப்பது நல்லது.

கே: நான் உணர்ச்சி வசப்படுகிறேன். எளிதாக மனம் காயப்படுகிறது. உணர்ச்சி வசப்படுவதில் ஏதாவது நன்மை உண்டா? 

வாழ்க்கை என்பது அறிவு பூர்வமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் செயல் படுவதின் கலவையாகும். அறிவு பூர்வமான செயல் உன் தலையைச் சேர்ந்தது. உணர்ச்சி பூர்வமான செயல் உன் இதய சம்பந்தமானது.

பொதுவாக மக்கள் உணர்ச்சி வசப்படும் போது, நீதி, நியாயம் முதலியவற்றை மறந்து விடுவார்கள். புத்திக்கூர்மை மழுங்கி விடும். நீதி, நியாயப்படி நடக்கும் மக்கள், எப்போதும் நியாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவு பூர்வமாகச் செயல் படுவதால், மன உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.வாழ்க்கைக்கு இரண்டுமே அவசியம்.

உணர்ச்சி வசப்படுகிறவனாக இருந்தாலும், நீ வலிமையுடையவனாக இருக்க வேண்டும். பொதுவாக உணர்ச்சி வசப்படுவதால் திட சித்தம் இருக்காது. அதனால் அதிகமாக உணர்ச்சி வசப்படுவது நல்லதல்ல. நீ உணர்ச்சி வசப்பட்டு, உன் சித்தம் பலவீனமாக இடம் கொடுக்காதே. நீ வாழ்க்கையில் முன்னேற அறிவு பூர்வமாக உணர்ச்சிகளை உன் வசத்தில் வைப்பது அவசியம். புரிந்ததா? அறிவு பூர்வமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் செயல்படு.

கே: ஒரு ஜி.பி.எஸ் போல எங்கள் இலக்கையும், செல்ல வேண்டிய பாதையையும் காட்டுகிறீர்கள். எங்கள் இலட்சியமும், விதியும் என்ன?

குருதேவர்: எதெல்லாம் உன்னுடைய இலக்கு அல்ல என்பதற்கான ஒரு பட்டியலைத் தயார் செய். உன் இலட்சியம் என்ன? நீ என்ன செய்ய விரும்புகிறாய்? என்பதை நீயே கண்டு பிடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நீ ஒரு அதிர்ஷ்டசாலி என்பதை நீ அறிய வேண்டும்.உன் காலத்தில் உலகின் முன்னேற்றத்துடன் இணைந்திருக்கிறாய்.. உன் காலத்தில் மக்கள் சுய தேவைகளை மட்டும் மனதில் வைக்காமல், சுய நலமான சமுதாயத்தை மாற்றி ஒரு அழகான உலகைப் படைத்தார்கள் என்று சரித்திரத்தில் உன் பெயர் எழுதப்படும்.

கே: நாம் எப்போதுமே இங்கிருக்கும் பழைய ஆத்மாக்கள் என்னும் போது நமக்கு புதிய அனுபவம் வர முடியுமா?

குருதேவர்: வாழ்க்கை என்பது மிகவும் பழமை வாய்ந்தது. அதுவே புதிய உருவெடுக்கிறது. சூரியன் மிகவும் பழமையானது. பூமி கிட்டத்தட்ட 200 கோடி ஆண்டுகளாகவோ அதை விட அதிகமாகவோ இருக்கிறது. சூரியன் அதையும் விட மிக மிக பழமையானது. 10000 கோடி ஆண்டுகளாக இருக்கலாம். ஆனாலும் இன்றும் அதன் கிரணங்கள் நமக்குப் புத்துணர்ச்சியை அளிக்கிறது. இல்லையா?

எனவே வாழ்க்கை என்பது பழமையும், புதுமையும் சேர்ந்த ஒன்றாகும். இலட்சக்கணக்கான ஆண்டுகளாக நதி ஓடுகிறது. இருந்தாலும், நீர் புதிதாக வந்து கொண்டேயிருக்கிறது. இல்லையா?

கே: சிலர் உணவு உண்ணாமலே வாழ்வதாகச் சொல்கிறார்கள். இவர்களைப் பற்றி ஒரு திரைப்படம் இருக்கிறது. இது உண்மை என்று எண்ணுகிறீர்களா?

குருதேவர்: எனக்கு ஒருவரைத் தெரியும். அவர் “நான் என் உணவுக்காக சூரிய ஒளியை மட்டும் பார்க்கிறேன்” என்று என்னிடம் சொன்னார். உணவில்லாமல் வாழப் பழகி விட்டார். ஆனால் சில சமயம் நிறைய சர்க்கரை போட்டு டீ மட்டும் அருந்துவார்.

பார். இது போல உன் உடலைப் பழக்கப்படுத்தலாம். ரஷ்யாவில் பாலே நடனத்துக்காகப் பழக்கப் படுத்துவார்கள். அவர்கள் உடலையும், முதுகுத் தண்டையும் வளைக்கும் விதத்தைப் பார்த்தால், அவர்கள் உடல் ரப்பரால் ஆனது என்று நினைப்போம். பாலே நடனத்துக்காக உடலைப் பழக்க பல ஆண்டுகள் ஆகும்.

அதேபோல், நீ உணவில்லாமல் வாழ வேண்டுமானால், உன் உடலைப் பல காலம் பழக்க வேண்டும். ஆனால் அதை புத்தகத்தில் படித்துவிட்டு முயற்சி செய்யக் கூடாது. அதில் தேர்ச்சி பெற்ற ஒருவரின் உதவியுடன் பழக வேண்டும். அதைப்  படிப்படியாகச் செய்ய வேண்டும்.
ஆனால் அப்படி இருக்க ஏன் விருப்பப் படுகிறாய்? அதில் என்ன கிடைக்கும்?  உணவைக் குறைத்துக் கொள். அதிகமாகச் சாப்பிடாதே.

உண்மை தான். சிலருக்கு தேவையான சக்தி சூரியனைப் பார்ப்பதில் கிடைக்கிறது. அதிகாலையில் அவர்கள் சூரியனைப் பார்க்கிறார்கள். நம் கண்கள் சூரிய ஒளியிலிருந்து சக்தியைக் கிரகிக்கக் கூடியவை. நவீனமான சோலார் செல் போல் கண்களும் சூரிய சக்தியை கிரகித்து உடலுக்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கிறது. ஆனால் அப்படி நடக்க சரியாகத் தெரிந்தவரிடம் பயில வேண்டும்.

இயற்கை அப்படி விரும்பியிருந்தால் உனக்கு வாயைக் கொடுத்திருக்காது. வாய், ஜீரண சுரப்பிகள், கல்லீரல் மற்றும் பல உறுப்புகள் வேலை செய்வது அவசியம். அதனால் உணவு உண்ணாமல் வாழப் பழக வேண்டிய அவசியம் இல்லை.

கே: சங்கடப் படுத்துவது என்றால் என்ன?

குருதேவர்: சங்கடப் படுத்துவது என்ன என்று சொல்வது தேவையா? எனக்கு எல்லோரையும் அணைத்துப் போவது தான் தெரியும். பிறரை சங்கடப் படுத்துவது தெரியாது.

நீ சங்கடப்படாமல் மற்றவரின் விமர்சனத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டால் சங்கடப்பட மாட்டாய். எதுவுமே உன்னைத் துன்புறுத்தாது. பொதுவாக மக்கள் சங்கடத்திலிருந்து தப்பிக்க முயல்கிறார்கள். சங்கடம் என்பது விமர்சனத்தைத் தாங்க முடியாமல் போவது. சங்கடமான உணர்ச்சியை அனுபவிப்பது. அதனால் நாம் சில சமயம் நம்முடைய வசதியான நிலையிலிருந்து வெளியே வந்து சங்கட உணர்ச்சியை அனுபவிப்பது தேவை. அதன் பிறகு நாம் திடமானவர்களாவோம்.