எட்டு வகையான சுத்திகரிப்புகள்

8 ஜனவரி 2013    
                              
ஆலப்புழா, கேரளா



அன்ன தாதா சுகி பவ

இந்த உணவை எனக்கு அளித்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும். நீங்களனைவரும் உணவு உண்ணுவதற்கு முன் ஒவ்வொரு நாளும் இந்த மந்திரத்தைச் சொல்வீர்களா? இதைச் சொல்லும் போது, நீங்கள் மூன்று பேரை வாழ்த்துகிறீர்கள். அப்படிச் சொல்லி உணவை உண்பவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். முதல் நபர் விவசாயி. இரண்டாமவர் வியாபாரி. வியாபாரி விவசாயியிடமிருந்து வாங்கி நமக்கு விற்கிறார். மூன்றாவது, அந்த உணவை நமக்கு சமைத்துப் பறிமாறிய பெண்.

முதலில் நாம் விவசாயியை வாழ்த்துகிறோம். விவசாயி மகிழ்ச்சியாக இருந்தால், உணவை உண்பவரும் மகிழ்ச்சியாக இருப்பார். ஆனால் விவசாயி கண்களில் கண்ணீரோடு இருந்து நமது உணவுக்காக உழைத்தால், அந்த உணவை உண்டு நாமும் நோய் வாய்ப்படுவோம். எனவே நாம் உணவு உண்ணக் காரணமாக இருந்த விவசாயிகள் நலமோடு,  மகிழ்ச்சியோடு இருக்க வாழ்த்த வேண்டும். நம் நாட்டில் நாம் விவசாயிகளைப்  புறக்கணிக்கிறோம். விவசாயிகள் வருத்தத்தோடு, துக்கத்தோடு வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள் விவசாயிகள் துக்கத்தோடு உழைத்து, அந்த உணவை நாம் உண்டால் அது நமக்குத் துயரத்தை கொண்டு வரும். எனவே நீங்களனைவரும் விவசாயிகள் ஆனந்தமாக இருப்பதற்காக வாழ்த்த வேண்டும்.

இரண்டாவதாக வியாபாரிகளையும் அவர்களுடைய மகிழ்ச்சிக்காக வாழ்த்தவேண்டும்.பேராசையால் பொருள்களைப் பதுக்கி வைத்து லாபம் சம்பாதிக்காமல், வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை நேர்மையாக நடத்தினால் நாட்டில் உணவுப் பொருள்களுக்கு குறைவு வராது. நம் நாட்டில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு வரக் காரணம், அரசாங்கத்தின் தவறான கொள்கை மற்றும் பேராசை பிடித்த வியாபாரிகள் உணவுப் பொருள்களை பதுக்கி வைப்பது என்று சொல்லலாம். இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் மிகவும் நஷ்டப்படுபவர் விவசாயி தான்.

உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா ? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உணவுப் பொருள்களை விற்கும் நிறுவனங்கள் 300% லாபம் அடைந்தன. அதே சமயம் விவசாயிகள் திவாலாகி விட்டார்கள். நம் வியாபார அமைப்பில் ஏதோ குறைபாடு உள்ளது. இதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். பொருள்களைப் பதுக்கி வைத்து அதிக லாபத்துக்கு விற்பது பெரிய குற்றமாகும். மூன்றாவதாக நாம் வீட்டிலிருக்கும் பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்க வாழ்த்த வேண்டும். உணவு சமைக்கும் பெண்களின் கண்களில் கண்ணீர் இருந்தால், அவர்கள் துயரத்தோடு சமைத்தால், அந்த உணவு நமக்கு நன்மை அளிக்காது.

எனவே “அன்ன தாதா சுகி பவ” என்று வாழ்த்தும் போது, வீட்டிலிருக்கும் பெண்மணிகளுடைய மகிழ்ச்சிக்காக இறைவனை வேண்டுகிறீர்கள். வியாபாரிகள் நேர்மையோடு வியாபாரம் செய்து மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறீர்கள்.உணவை உற்பத்தி செய்த விவசாயிகளின் நன்மைக்காகவும் வாழ்த்துகிறீர்கள். இந்த மூவரும் ஆனந்தமாக இருந்தால், சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஆனந்தமாக இருக்க முடியும்.

கேரள மாநிலம் முழுதும் இப்படிப்பட்ட ஆனந்த அலையை உருவாக்குங்கள். இது கேரளத்தில் துவங்கி நாடு முழுதும் பரவட்டும். மற்றவர்கள் ஆனந்தமாக இருக்க நீ வாழ்த்தும் போது, அந்த ஆனந்தம் உன்னையும் சென்றடையும். இது இயற்கையின் சட்டம். மற்றவர்கள் நன்றாக இருக்க நீ வாழ்த்தும் போது, அந்த நன்மை உனக்கும் ஏற்படும். மற்றவர்களுக்கு கெடுதல் நினைத்தால் அந்தக் கேடு உனக்கும் வரும். சரியா? ஆகவே நீ உன் இதயத்தைத் தூய்மையாக, தெளிவாக வைக்க வேண்டும். நாம் ஆனந்த அலைகளை உருவாக்க வேண்டும். அப்படிச் செய்ய, நாம் ஒவொருவரும் ஒரு நாளில் ஒரு மணி நேரத்தை இந்தியாவின் மேம்பாட்டுக்காக செலவிட வேண்டும். இந்த நாட்டிலிருந்து லஞ்ச ஊழலை விரட்டி ஒழிக்க வேண்டும். இங்கிருப்பவர்களில் எத்தனை பேர் லஞ்ச ஊழலால் அவதிப்பட்டு வருத்தமடைந்திருக்கிறீர்கள்? மாற்றத்தைக் காண விரும்புகிறீர்கள் ? (எல்லோரும் கைகளை உயர்த்துகிறார்கள்).

நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த நாட்டின் இலைஞர்களால், (வயதால் மட்டுமல்லாமல், உள்ளத்தில் இளமையோடு இருப்பவர்களால்) இப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நாமனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டால், “குற்றமில்லாத, லஞ்ச ஊழலற்ற இந்தியா “ என்ற கனவை நனவாக்க முடியும். நாம் என்ன செய்ய விரும்புகிறோம்? நம் நாட்டு இளைஞர்கள் சமுதாய மாற்றத்திற்காக என்ன செய்ய முடியும்? இதை பற்றி சிந்தித்து பாருங்கள்.

நான் 1971ல் முதல் முதலாக கேரளத்துக்கு வந்த போது, நான் ஒரு மாணவனாக இருந்தேன். அப்போது உணவு சிவப்பு அரிசியில் சமைக்கப்பட்டிருந்தது. கர்நாடகத்தில் நாங்கள் சிவப்பு அரிசி சோறு உண்பதில்லை. வெள்ளை அரிசி சாதமே எங்களுக்கு பழக்கமாகி இருந்தது. ஆறு நாட்களுக்கு எங்களுக்கு வெள்ளை அரிசி சாதம் கிடைக்கவில்லை. எங்கு சென்றாலும் சிவப்பு அரிசி சாதமே கிடைத்தது. அது எங்களுக்குப் பிரச்சினையாக இருந்தது. கேரளத்துக்கு யார் வந்தாலும், சிவப்பு அரிசி சாதம் அல்லது புழுங்கல் அரிசி சாதம் மட்டுமே கிடைத்தது. கேரள மாநிலத்தவர்கள், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழ்பவர்களை விட உடல் நலம் பெற்றவர்களாக இருந்தார்கள்.

இந்த சத்தான சிவப்பு அரிசியையும், புழுங்கல் அரிசியையும் மற்ற மாநிலங்களில் பரவச் செய்வதற்கு பதிலாக மற்ற மாநிலங்களின் பழக்கப்படி வெள்ளை அரிசி சாப்பிடுவது கேரளத்தில் வழக்கமாகி விட்டதாக கேள்விப்பட்டேன். இல்லை. நீங்கள் மீண்டும் சிவப்பு அரிசி உணவுக்குச் செல்ல வேண்டும். ஏனென்றால் சிவப்பு அரிசியில் விட்டமின் “பி” மற்றும் பல தாதுப் பொருள்கள் உள்ளன. சிவப்பு அரிசி அல்லது புழுங்கல் அரிசி சாதம் சாப்பிட்டால், உங்களுக்கு சர்க்கரை நோய் வராது. ஆனால் பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் ஸ்டார்ச் (மாவுப் பொரூள்) மட்டுமே உள்ளது. அதை உண்பவர்கள் நோய்வாய்ப் படுகிறார்கள். எனவே நாம் நம்முடைய பண்டைய கால உணவுப் பழக்கத்துக்குத் திரும்ப வேண்டும்.சிவப்பு அரிசியையோ அல்லது புழுங்கல் அரிசியையோ சமைத்து உண்ண வேண்டும். இது நாம் ஆரோக்கியமாக வாழ உதவும்.

அதே போல் முற்காலத்தில் நாம் வெல்லம் மட்டுமே உபயோகித்தோம். ஆனால் நாம் இப்போது சர்க்கரை சேர்த்துக் கொள்கிறோம். வெள்ளைச் சர்க்கரையில் கந்தகம் (சல்ஃபர்) உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? சர்க்கரையில் உள்ள கந்தகம் நம் உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்தை (கால்சியம்) வெளியேற்றுகிறது. அதனால் மக்கள் ஆஸ்டியோபோராஸிஸ் என்ற எலும்பு நோய்க்கு உள்ளாகிறார்கள். கேரளத்து சிவப்பு சர்க்கரையில் நிறைய தாதுப் பொருள்கள், துத்தநாகம் (சிங்க்), இரும்புச் சத்து மற்றும் மக்னீசியம் உள்ளன. இது நம் உடலுக்கு மிகவும் உகந்தது. அறிவு வளர்ச்சிக்கும் நல்லது. இதை விட்டு நாம் வெள்ளை சர்க்கரையை உபயோகிக்கிறோம். இது மனதில் கவனக்குறைவு (அட்டென்ஷன் டிஃபிஷியன்ஷி ஸிண்ட்ரோம்) மற்றும் பல வகையான நோய்கள் வரக் காரணமாக இருக்கிறது. எனவே நாமனைவரும் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.

முதலாவது : அன்ன சுத்திகரிப்பு. தானியங்களின் சுத்திகரிப்பு. நல்ல உணவு. சத்தான உணவு. தேவைக்கேற்ப சரியான அளவு உண்பது அவசியம்.
இரண்டாவது : ஒவ்வொரு நாளும் சற்று நேரத்துக்கு முறையான உடற் பயிற்சி செய்ய வேண்டும். உங்களிடம் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் இருந்தாலும், சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்களுக்கு நடந்து செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது உடற் பயிற்சிகள் செய்ய வேண்டும்.
மூன்றாவது : வாக்கு சுத்திகரிப்பு. நாம் பேசும் பேச்சில் உண்மை இருக்க வேண்டும். இது மிகவும் அவசியம். நாம் பேசும் பேச்சு மற்றவர் மனதைப் புண் படுத்தக் கூடாது. உன் பேச்சினால் மற்றவர்கள் மனம் வருந்தினால், அவர்கள் அழுதால், அது உன்னையும் பாதிக்கும்.
நான்காவது : கர்ம சுத்திகரிப்பு  நாம் மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். சேவையால் நாம் செய்யும் செயல்கள் தூய்மையாகும்.
ஐந்தாவது : தன சுத்திகரிப்பு. நாம் சம்பாதிக்கும் பணத்தில் குறைந்த பட்சம் 3 % சமுதாய நலனுக்காக செலவிட வேண்டும். அப்போது தான் நாம் ஈட்டும் செல்வம் சுத்தமாகும். சம்பாதிக்கும் அனைத்தையும் நம் சுய நன்மைக்கே செலவிடுவது சரியல்ல. எனவே ஒரு சிறு தொகை சமூக நலனுக்காக செலவிட வேண்டும்.
ஆறாவது. உடல் சுத்தம். நம் உடலை சுத்தமாக வைப்பது அவசியம். எனவே வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை திரிஃபலா அல்லது வேறு ஆயுர்வேத மருந்து உண்டு நம் உடலைச் சுத்தம் செய்வது அவசியம்.
ஏழாவது : பாவ சுத்திகரிப்பு. (சமஸ்கிருத மொழியில் பாவம் என்றால் உணர்ச்சி என்று அர்த்தம்) நம் உணர்ச்சிகளைத் தூய்மைப் படுத்துவது. சத்சங்கத்தில் அவ்வப்போது கலந்து கொண்டு நம் உணர்ச்சிகளைத் தூய்மையாக்க வேண்டும்.
எட்டாவது : புத்தி சுத்திகரிப்பு. அறிவைத் தூய்மையாக்குதல். ஞானம் அறிவைத் தூய்மையாக்கும். வாழ்க்கையில் பரந்த கண்ணோட்டமிருந்தால், அறிவு தூய்மையாகும். நான் யார்? இந்த உலகம் என்னவாக இருக்கிறது? நான் எங்கே செல்கிறேன் ?

கேள்வி பதில்கள்

குருதேவா ! இன்றைய மாணவர்கள் அதிக அளவில் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். பள்ளி நிர்வாகம் மாணவர்களுடைய போதைப் பழக்கத்தைப் பற்றி அறிந்த போதிலும், மாணவர்கள் யோகப் பயிற்சிகள் மற்றும் தியானப் பயிற்சிகளைக் கற்றுக் கொள்வதைத் தடுக்கிறது.

அப்படி தடுப்பது முட்டாள் தனமான செயல். மாணவர்களை போதை மருந்துப் பழக்கத்திலிருந்து விடுவிப்பது மிகவும் அவசியம். ஒரு பள்ளி போதை மருந்துப் பழக்கத்திலிருந்து விடுபட்டது என்று செய்தித்தாளில் படித்த போது அதிர்ச்சியடைந்தேன்.நாம இங்கு 14 பள்ளிகள் நடத்துகிறோம். அங்கு படிக்கும் மாணவர்கள் குடி, மற்றும் போதை மருந்து என்றால் என்ன என்றே அறிந்திருக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.

இன்று ஒரு பள்ளி இந்த கெட்ட வழக்கத்திலிருந்து விடுபட்டது என்று அறிவித்து பெருமைப்படும் வழக்கம் வந்துள்ளது. அப்படியென்றால் மற்ற பள்ளிகளில் இந்த கெட்ட வழக்கம் பெருமளவில் பரவியுள்ளது என்று அர்த்தமாகிறது. நாம் குடிப் பழக்கத்தையும், போதை மருந்துப் பழக்கத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும். பள்ளி நிர்வாகம் மற்றும் அரசு, யோகப் பயிற்சிகள், மற்றும் தியானப் பயிற்சிகளுக்கு எதிராகத் தடை விதிக்கக் கூடாது. ஏனென்றால், யோகம் மற்றும் தியானப் பயிற்சிகள் மக்களை நல்லவர்களாக்கும்.

ஆன்மீகத்துக்கும் கம்யூனிஸத்துக்கும் பொதுவாக ஏதாவது உள்ளதா ?

ஆம். கம்யூனிஸம் என்றால் என்ன? கம்யூனிஸத்தின் சாரப்படி எல்லோரும் சரி சமமானவர்கள். ஆன்மீகமும் அதையே சொல்கிறது. பகவான் கிருஷ்ணர் தான் உலகத்தின் முதல் க\ம்யூனிஸ்ட். அவர் பகவத்கீதையில் சொன்னது கீழே வருகிறது..
யோ மாம் பச்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பச்யதி |
தஸ்யாஹம் ந ப்ரணச்யாமி ஸ ச மே ந ப்ரணச்யதி ||  [அத் 6. பா 30]

யார் என்னை எல்லாவற்றிலும், எல்லாவற்றையும் என்னிடத்தில் காண்கிறானோ அவனே அறிவாளி. (அவன் காட்சியினின்று நான் மறைவதில்லை. அவனும் என் காட்சியினின்று மறைவதில்லை.)

ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேச்வரம் |
விநச்யத்ஸ்வவிநச்யந்தம் ய: பச்யதி ஸ பச்யதி || [அத் 13. பா 27]

உயிர்களனைத்திலும் ஸமமாயிருக்கிறவனும், அழிவனவற்றுள் அழியாதவனுமாகிய 
பரமேசுவரனைப் பார்ப்பவனே பார்க்கிறான்.

வித்யாவினயஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி |
சுனி சைவ ச்வபாகே ச பண்டிதா: ஸமதர்சன: || [அத் 5. பா 18]

கல்வியடக்கமுடைய பிராம்மணனிடத்தும், பசுவினிடத்தும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் கீழோனிடத்தும் ஞானிகள் சமதிருஷ்டியே வைக்கின்றனர். பண்டிதர் என்பவர் யார்? ஸமதர்சன:. யார் எலோரையும் சரி சமமாகப் பார்க்கிறாரோ, அவரே பண்டிதராவார்.
பகவத்கீதையைப் படிக்கும் போது எல்லோரும் சரி சமம் என்ற ஞானம் உனக்குக் கிடைக்கும். எனவே எல்லோரையும் சரி சமமாகப் பார். இதுவே கம்யூனிஸத்தின் சாரமாகும். ஆன்மீகமும் அதையே சொல்கிறது. உண்மையில் ஆன்மீகத்தில் மட்டுமே எல்லோரும் சமமென்பதைப் பார்க்க முடியும். இல்லாவிட்டால் அது தத்துவமாகவே இருந்து விடும்.

உனக்குள் ஒரு கேள்வி எழக்கூடும். ஏன் எல்லோரையும் சமமாகப் பார்க்க வேண்டும்? ஒரு ஆன்மீகவாதிக்கு இந்தக் கேள்விக்கான பதில் தெரியும். ஏனென்றால், தெய்வமே எல்லோரிடமும் உள்ளது. யாரையாவது நீ துன்புறுத்தினால் தெய்வத்தைத் துன்புறுத்துகிறாய். தெய்வத்திடம் அன்பாக இருக்க விரும்பினால் நீ யாரையும் துன்புறுத்தக் கூடாது. எல்லோரையும் சமமாகப் பார்.
ஆன்மீக அறிவின் மூலமே மனிதநேய மதிப்புகள் வலுப்பெறுகின்றன. அல்லது நாம் மனித நேய மதிப்புகள் பற்றி பேசுவதோடு நிறுத்தி விடுகிறோம். அது மேலே செல்வதில்லை. நம் இதயம் திறக்க வேண்டும். ஆன்மீகம் ஒன்றே உன்னை நேர்மையானவனாக ஆக்கும். ஆன்மீகம் உன் இதயத்தை மலர வைக்கிறது. ஆன்மீக சக்தியை உணராத மக்கள் மட்டுமே போதை மருந்துகளையும், மது பானத்தையும் மற்றும் பல கெட்ட விஷயங்களையும் நாடுகிறார்கள்.