குழந்தை வளர்ப்பு - கலை


3 ஜனவரி 2013 பெர்லின், ஜெர்மனி


கே: சில நேரங்களில் கடினமாக இருக்கும் இந்த உலகில், நம் குழந்தைகள் ஆனந்தமாய் வளர்வது அற்புதமான ஒரு விஷயம். தியானம் செய்வதற்குரிய வயது வராத அவர்களுக்கு, நாம் நிறையப் பொழியும் அன்பைத் தாண்டி வேறு எதைத் தருவது?

குருதேவ்: அவர்களுடன் விளையாடினாலே போதும். எப்போதுமே அவர்களுக்கு ஒரு ஆசிரியராய் இருந்து கற்றுத் தர ஆரம்பிக்காதீர்கள். உண்மையில், அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டு அவர்களுக்கு மரியாதை அளியுங்கள். குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்பான ஒரு நிலையில் இருக்க வேண்டாம்.

நாங்கள் குழந்தையாய் இருந்தபோது, என் அப்பா மாலையில் வீட்டிற்கு வந்தவுடன் கைகளை தட்டி எங்களை சிரிக்க வைப்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது. என் அம்மா மிகவும் கண்டிப்பாக இருந்தாலும், இரவு உணவு நேரம் வரை, எங்கள் அப்பா கைகளை தட்டி எங்களை எல்லாம் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். அதற்க்கு முன் வரை அவர் கைகளைத் தட்டி வீட்டைச் சுற்றி எங்களை துரத்துவார். உணவுக்கு அமரும் முன் எல்லோரும் சிரிக்க வேண்டியிருக்கும்.எனவே, எப்போதும் சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்காதீர்கள், அவர்களுடன் கொண்டாடுங்கள், அவர்களுடன் விளையாடுங்கள், அவர்களுடன் பாடுங்கள். இதுவே சிறந்தது. எப்போது கையில் பிரம்புடன், ‘இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே’, என்பது நல்லதல்ல.

குழந்தைகளுடன், அதிக நேரம் விளையாடவேண்டும், சில நேரங்களில் கதை சொல்ல வேண்டும். நாங்கள் குழந்தைகளாய் இருந்த போது நிறைய கதைகள் கேட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஒரு கதை. குழந்தைகளுக்கு நற்பண்புகளை இவ்வாறு கதைகள் மூலம் சொல்லி வளர்ப்பது நல்லது. சுவாரசியமான நல்ல கதைகள் சொன்னால், அவர்கள் எப்போதும் தொலைகாட்சி முன் அமரமாட்டார்கள்.

பஞ்சதந்திரக்கதைகள் போல குழந்தைகளுக்கான கதைகள் நிறைய இருக்கிறது. நம் அடியவர் ஒருவர் பஞ்சதந்திரக் கதைகள் கொண்ட வரைவுக் காணொளி (Cartoon) ஒன்றை தாயாரித்துக் கொண்டிருக்கிறார்; விரைவில் அது வெளிவரும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் அமர்ந்து நற்பண்புகளை கற்பிக்கும் கதைகளை கூறுவது நல்லது. நீதி போதனை கொண்ட கதைகள் நல்லது. தரமான அந்த அரைமணி அல்லது ஒரு மணி நேரம் போதும்.

மேலும் அவர்களுடன் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் அமர்ந்து அவர்களை தொல்லை செய்வதும் வேண்டாம். தரமான 45 நிமிடம் அல்லது ஒரு மணி நேரம் போதும், ஆனால் அவை சுவாரசியமாக இருக்க வேண்டும். அவர்கள் உங்களுடன் அமர்ந்து கதை கேட்பதை ஆவலுடன் எதிர்பார்க்குமாறு இருக்க வேண்டும்.

எனக்கு ஞாபகம் இருக்கிறது, எங்களுக்கு குண்டாக, சிவப்பாக, உருண்டை முகத்துடன் ஒரு மாமா இருந்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் எங்கள் வீட்டிற்கு வந்து கதைகள் சொல்வார். நாங்கள் அனைவரும் அவர் முன் அமர்ந்தால், அருமையான கதைகளை சொல்வார். நாங்கள் அனைவரும் அதற்க்கு அடுத்த வார கதை நேரத்தை ஆவலுடன் எதிர்பார்க்குமாறு, கதை முடியும் நேரத்தில் ஏதாவது மர்ம முடிசோடு முடிப்பார்.

அதை போன்ற ஆட்களும் நம்மிடம் உண்டு. இல்லையென்றால், உங்கள் குழந்தைகள் கூட மற்ற குழந்தைகளுக்கு கதைகள் சொல்லலாம். அவர்கள் பெற்றோர்களும் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். குழந்தைகளை பார்த்துக் கொள்ள அவர்களுக்கும் ஆள் தேவை, இது உங்களுடைய அடுத்த தொண்டு / சேவை திட்டமாகவும் கொள்ளலாம்.

ஒரு மனிதத்தன்மையான வருடல் தேவைப்படுகிறது.

இன்றைய குழந்தைகள், காலையில் எழுந்ததிலிருந்து, எதிலும் பங்குபெறாத ஒரு சாட்சியைப் போல தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கிறார்கள்; தங்கள் அம்மா வந்து, ‘வா, காலை உணவுக்கு எழுந்து வா.’ என்று அழைத்தால் அதற்கு எந்த அசைவும் இருக்காது. சில நேரங்களில் காலை உணவை தொலைக்காட்சிக்கு முன் எடுத்துவர வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. இந்த வகை கலாசாரம் நல்லதல்ல. என்ன நினைக்கிறீர்கள்? எத்தனை பேர் நான் சொல்வதை ஒத்துக் கொள்கிறீர்கள்?

ஒரு மணி நேரத்திற்கு மேலாகத் தொலைக்காட்சியை குழந்தைகளுக்குக் காண்பிக்கக் கூடாது. தொலைகாட்சி பார்க்கும் நேரத்தை குறைக்கவில்லை என்றால் குழந்தைகளுக்கு கவனிப்புக் குறைபாடு தன்மை வரக்கூடும். மூளைக்குள் ஏகப்பட்ட காட்சிகள் திணிக்கப்பட்டு அவை எதையும் பதிவு செய்யும் திறன் இல்லாமல் போய், பின்னாளில் குழந்தைகள் மந்தமாகிவிடுகின்றனர். அவர்களால் எதையும் கவனிக்க முடியாமல் போய்விடுகிறது. நாம் குழந்தைகளாய் இருக்கும்போது நல்ல வேளையாக தொலைகாட்சி இல்லை.

உங்களில் எத்தனை பேர் தொலைகாட்சி இல்லாமல் வளர்ந்தீர்கள்? நாம் அனைவரும் தொலைகாட்சி இல்லாமல்தான் வளர்ந்தோம். தொலைகாட்சி அதிகம் பார்த்து வளரும் குழந்தைகள் அவ்வளவு புத்திசாலிகளாக இருப்பதில்லை. தொலைகாட்சி பார்ப்பதை ஒரு நாளுக்கு அதிகபட்சம் இரண்டு மணிநேரங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெரியவர்களுக்குக் கூட ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் போதும், அதற்கு மேலல்ல. பெரியவர்களுக்குக் கூட இது மிக அதிகம். அதிகம் தொலைகாட்சி பார்ப்பதினால் மூளையிலுள்ள நரம்புகள் அதிகம் வேலைக்குள்ளாகிறது. ‘குருதேவ், இது மிக நன்றாக இருக்கிறது’, என்று சொல்லி பலர் என்னை தொலைகாட்சி பார்க்க வற்புறுத்துகிறார்கள். அரை மணி நேரம் அல்லது ஒரு மணிநேரத்திற்கு மேல் என்னால் பார்க்க முடிவதில்லை. அது உண்மையில் மூளைக்கு சுமையைத்தான் அளிக்கிறது.

சிலர் எப்படி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் பார்கிறார்கள் என்று வியக்கிறேன். உண்மையில் நாம் மூளையிலுள்ள செல்களை விரயமாக்குகிறோம் என்றே நான் சொல்லுவேன். திரையரங்குகளில் இருந்து வெளி வருபவர்களைப் பாருங்கள், உற்சாகமாகவும், சக்தியுடனும் மகிழ்வுடனுமா இருக்கிறார்கள்? போகும்போது அவர்கள் இருக்கும் மகிழ்வும் உற்சாகமும், வரும்போது பார்த்தால் இருக்கிறதா என்ன? அந்தத் திரைப்படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும், எல்லாம் வடிந்து; ஓய்ந்துபோய், ஒளியிழந்து அல்லவா வெளி வருகிறார்கள், இல்லையா?

பார்த்திருக்கிறீர்களா? திரையரங்குக்கு வெளியிலே நின்று பார்த்தால் தெரியும், அவர்கள் உள்ளே போகும்போதும் வரும்போதும் உள்ள வித்தியாசத்தை. அவ்வளவு வெளிப்படையாக வித்தியாசம் தெரியும்.உங்களில் எத்தனை பேர் இதைப் பார்த்திருக்கிறீர்கள்? ஏன் உங்களிடமே கூட இதை பார்க்கலாம். எந்த ஒரு கேளிக்கையும் நம்மை சக்தியூட்ட வேண்டும், ஆனால் திரைப்படம் பார்ப்பதில் அது நடப்பதில்லை. ஒரு நேரடி நிகழ்ச்சியை பார்க்கும்போது கொஞ்சம் பரவாயில்லை, அவ்வளவு சோர்வில்லை. ஒரு நேரடியான இசை நிகழ்ச்சிக்குப் போகிறீர்கள், அது அவ்வளவாக உங்களை பாதிப்பதில்லை. கொஞ்சம் சோர்வாயிருந்தாலும் அவ்வளவு மோசமில்லை. எத்தனை பேர் கவனித்திருக்கிறீர்கள்?

ஆனால் ஒரு சத்சங்கம் வரும்போது நேர் எதிர். உள்ளே வரும்போது வித்தியாசமாக இருந்தாலும், வெளியே செல்லும்போது நீங்கள் சக்திபெற்றவராக உணர்கிறீர்கள்.

கே: குழந்தைகளுக்கு திகில் கதைகளை சொல்லலாம் என்று நினைக்கிறீர்களா, ஏனென்றால் சில ஜெர்மானிய திகில் கதைகள் இருக்கிறது, சிலர் அதை குழந்தைகளுக்குச் சொல்லக்கூடாது என்கிறார்கள்?

குருதேவ்: திகில் கதைகள் கொஞ்சம் மிதமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு வயதில் நீங்கள் அத்தகையக் கதைகள் சொல்லாமலிருந்து, பின்னர் பெரியவர்களாகி  அதைப் பற்றி தெரிந்துகொண்டு பின்னர் அதைவிட அதிகம் பயம் கொள்வார்கள்.இது அவர்களை பலவீனமாக்கும். அதே நேரம், அவர்களுக்கு அதிக அளவில் திகில் கதைகள் சொல்வதால், அவர்களுக்கு பயம் என்பது ஒரு நிரந்தரமான மாற்ற முடியாத ஒரு தன்மையாகப் போய்விடலாம். அதிகமில்லாமல், கொஞ்சம் திகில் இருக்கலாம்; குறிப்பாக காணொளி விளையாட்டுக்கள் காணொளி விளையாட்டுக்களில் வன்முறை இருக்கக் கூடாது என்று கருதுகிறேன். ஒளித்திரையில் அவர்கள் சுடுகிறார்கள், அது வெறும் விளையாட்டு என்று நினைக்கிறார்கள்; பின்னர் நிஜ வாழ்க்கையிலும் துப்பாகியால் சுட ஆரம்பிக்கிறார்கள், ஏனென்றால் மாய உலகுக்கும் நிஜ உலகுக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரிவதில்லை. இது ஒரு பிரச்சினை. எனவே குழந்தைகளுக்கு வன்முறையான காணொளி விளையாட்டு தேவையில்லை என்பதே என் தேர்வு.

கே: எல்லா உறவுகளும் முன் வினையின் அடிப்படையில் அமைந்ததா?

குருதேவ்: ஆம். உங்களுக்கத் தெரியுமா, இந்த உலகுக்கு வர விரும்பும் ஆத்மாக்கள் சில சமயம், ஒரு ஆணையும் பெண்ணையும் தேர்தெடுத்து அவர்களுக்குள் அப்படி ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. பின்னர் அவர்கள் நெருங்கி வந்து குழந்தை பிறந்தவுடன், திடீரென்று  அந்த எல்லா அன்பும் காணாமல் போய்விடுகிறது.

உங்களில் எத்தனை பேர் அப்படிப்பட்ட விஷயம் நடந்ததை பார்த்திருக்கிறீர்கள்? முதல் குழந்தை பிறந்த பின், அந்த ஆத்மா பூமிக்கு வரும் வேலை நிறைவேறியபின், அந்த பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிய கவலை அதற்கு இல்லை. எனவே முதல் குழந்தைக்குப் பின் அந்த தம்பதியருக்குள் இருந்த எல்லா ஈர்ப்பும் மறைந்து போகிறது.

இது எப்போதும் நிகழ்வதில்லை, எல்லோருக்கும் இப்படித்தான் என்று நினைத்துவிடாதீர்கள். சிலருக்கு மட்டுமே இப்படி நிகழ்கிறது. சில நேரங்களில் நான்காவது அல்லது ஐந்தாவது குழந்தை பிறப்பில் கூட இப்படி நிகழ்கிறது. அந்த ஆத்மாவினால் செயற்கையாய் இருவரின் ஆளுமைகளும் நெருங்கிவரும்படி செய்யப்படுவதால், குழந்தை பிறப்புக்கு பின் திடீரென்று அவர்களால் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொள்ள முடியாதபடி ஆகிவிடுகிறது.

இப்படியெல்லாம் நிகழ்கிறது, ஆனால் எப்போதும் அல்ல; சுமார் 30% இருக்கலாம். மேலும் இது விவாகரத்தில் தான் முடியும், ஏனென்றால் இந்த தம்பதியினருக்குள் எந்த பொருத்தமும் இருப்பதில்லை. எதுவுமே பொருந்துவதில்லை. ‘நாங்கள் இருவரும் ஆத்மார்த்தமான தம்பதிகள் என்று நினைத்திருந்தோம் அனால் என்ன ஆனது? நான் மிகவும் வித்தியாசமாக இருக்கிறேன் எங்களுக்குள் பொருத்தமே இருக்க முடியாது.’ என்று திடீரென்று உணர்வார்கள். இதுபோன்ற விஷயங்கள் நடக்கிறது.

நீங்கள் ஒருவருக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை, ஆனால் அவர் உங்களுக்கு நன்மைகள் செய்ய ஆரம்பிப்பார். எனவே நண்பரோ அல்லது எதிரியோ அது பொருட்டல்ல. கர்மவினைகளின் வித்தியாசமான விதிகளின்படி உங்கள் வாழ்கை நடத்தப்படுகிறது. எனவே உங்கள் நண்பர்கள் எதிரிகள் எல்லோரையும் ஒரே தட்டில் வைக்கலாம். ஏனென்றால் பத்து வருட நண்பன் பகைவனாக ஆகலாம், எதிரியாகக் கருதப்பட்டவர் எந்த நேரமும் சிறந்த தோழனாக ஆகலாம். இவை எல்லாம் உங்களையும் உங்கள் கர்ம வினைகளையும் சார்ந்தே இருக்கிறது.

கே: அன்பானவரின் இறப்பை ஏற்றுகொள்ள நல்ல வழி என்ன?

குருதேவ்: காலம் அதன் போக்கிலே தன் செயலைச் செய்யும். ஏற்றுகொள்ளவோ அல்லது வேறு எதுவோ செய்ய முயல வேண்டாம். துக்கம் இருந்தால், இருக்கட்டும், அது போய்விடும்.
காலம்தான் எதையும் ஆற்றுவதில் ஆகச் சிறந்தது. காலம் செல்லச் செல்ல உங்களை மேலும் மேலும் இட்டுச் செல்லும். எனவே எதையும் செய்ய முயலவேண்டாம், காலம் அதை பார்த்துக் கொள்ளும்.

அல்லது விழித்துப் பாருங்கள், எல்லோரும் ஒரு நாள் போகத்தான் போகிறோம். அவர்கள் முந்தைய விமானத்தை பிடித்துச் சென்றால் நீங்கள் பின்னர் உள்ள விமானத்தை பிடிக்கப் போகிறீர்கள். அவ்வளவுதான். உங்களை விட்டுச் சென்றவர்களிடம் கூறுங்கள், ‘சில வருடங்கள் கழித்து நான் உன்னை அங்கு சந்திக்கிறேன்.’ இப்போதைக்கு விடை கொடுங்கள். வேறொரு இடத்தில் அவரை பின்னர் சந்திப்பீர்கள்.

கே: எனக்கு குடும்பம் இல்லை, என் தனிமை உணர்வை குறைக்க என்ன செய்வது?

குருதேவ்: ஓ, உங்களுக்கு அவ்வளவு பெரிய குடும்பத்தை, நல்ல குடும்பத்தை, உங்கள் நலம் விரும்பும் குடும்பத்தை அளித்திருக்கிறேன். உங்களுக்கு குடும்பம் இல்லை என்று நினைக்கவே கூடாது, நான் உங்கள் குடும்பம். அதனால்தான் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் அன்றும் புத்தாண்டு அன்றும் நான் இங்கு வருகிறேன். இல்லையென்றால் நான் ஏன் வரவேண்டும்?
கே: உங்களை ஆனந்தமடையச் செய்ய ஆகச் சிறந்த வழி என்ன?

குருதேவ்: நீங்கள் மகிழ்ச்சியாய் இருப்பதும், பிறரை மகிழ்ச்சியடையச் செய்வதும் தான். நீங்கள் என்னை மகிழ்ச்சியடைச் செய்ய எந்தவித முயற்சியும் செய்யவேண்டாம், நான் ஏற்கனவே மகிழ்ச்சியாய்த்தான் இருக்கிறேன். ஆனால் நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தால் அதிகம் மகிழ்வேன். அன்பளிப்பு அளிப்பதோ, விருந்து கொடுப்பதோ அல்லாமல், அவர்களுக்கு ஞானம் அளிப்பதும் அவர்களை வலுவாக்குவதும்தான் நீங்கள் செய்ய வேண்டியது. அவர்களை இந்த ஞானத்திற்கு அழைத்து வந்தால், அதுவே ஆகச் சிறந்தது. 

அஷ்டவக்கிரகீதா’ கேட்டபின் தங்கள் வாழ்கை வெகுவாக மாற்றமடைந்திருக்கிறது என்று மக்கள் கூறுகிறார்கள். உங்களில் எத்தனை பேர் இதை அனுபவித்திருகிரீர்கள்? (பலர் கை தூக்குகிறார்கள்) அஷ்டவக்கிரகீதா’ கேட்கும்போது வாழ்கைபற்றிய உங்கள் முழுப் பார்வையும் மாற்றமடைகிறது.