ஆன்மிகம் என்பது வளர்ந்த நிலையிலும் குழந்தைதன்மையை விடாதிருப்பது.

பிப்ரவரி 13 , 2012

சத்சங்கம் என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?

சத்சங்கம் என்றால் இயல்புடன், சாதரணமாக, எளிமையாக இருப்பது.உங்கள் புன்சிரிப்பு
எனக்கு போதும், வெடிகள் வெடித்து என்னை வரவேற்பதை விட சிரிப்புடன் நீங்கள்
இருப்பதை நான் விரும்புகிறேன். பத்து குழந்தைகள் இருக்குமிடத்தில் ஒரு குழந்தையை கிள்ளினால் அது அழும். உடனே மீதமுள்ள குழந்தைகளும் அழ ஆரம்பிக்கும். வலி ஒரு குழந்தைக்குத்தான் என்றாலும் எல்லா குழந்தைகளும் அழ ஆரம்பிக்கும். நாம் அனைவருமே
இதே நிலையில் இருந்திருக்கிறோம் அல்லவா? சிறு குழந்தையாக நீங்கள் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? மற்றவர் வேதனை உங்களை பாதித்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? வளர்ந்த பிறகு எப்படி இந்த குணத்தை இழந்தோம்? இப்போது எப்படி ஆகி விட்டோம்? இது நாம் நம்மை கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி.

ஆன்மீக மார்க்கம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? அது குழந்தைதன்மையை நிலைநிறுத்திக் கொள்வதுதான்.இதை நாம் செய்து மனதை தூய்மையாக வைத்துக்கொண்டால் போதும்; நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நம்முடையது மட்டுமல்ல,பிறருடைய விருப்பங்களையும் நிறைவேற்றும் சக்தி ஏற்படும்.

நமது மனம் ஒரு குழந்தையுடையதை போன்று பிரதிபலிக்க வேண்டும்.நம் எல்லோரிடமும் குழந்தைத்தன்மை என்பது மறைந்து உறங்கும். அதை நாம் எழுப்ப வேண்டும். நமது
களங்கமற்ற தன்மையை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தலாமே என்று உங்களுக்கு
இதில் ஒரு கேள்வி எழலாம். இல்லை ! அவ்வாறு எண்ணாதீர்கள். அது நிகழாது.


இங்குள்ள மின் விளக்குகள் எல்லாம் எறிவதற்கு காரணம் அவை மின்சக்தியுடன் இணைக்கப்ப ட்டிருக்கின்றன. அது போன்ற இணைப்பு நமக்குள் இருக்கிறது.அந்த இணைப்பு மூலாதாரமான உண்மையுடன் தொடர்புடைய தாக வேண்டும்.அந்த கம்பி இணைக்கப்பட்டதும் மன தெளிவும் அமைதியும் கவலையற்ற நிலையும் ஏற்படும்.


உங்கள் அனைவரையும் அவ்வாறு காண நான் விரும்புகிறேன். உங்கள் கவலைகளை
எல்லாம் என்னிடம் தந்து விடுங்கள். உங்கள் கவலைகளை வாங்கி செல்லவே நான் வந்திருக்கிறேன். நீங்கள் மகிழ்ச்சியுடன் இருங்கள்.

நாம் எத்தனை காலம் வாழ்ந்திருக்கப்போகிறோம்? ஏதேனும் ஒரு நாள் நம் வாழ்கை
முடிந்து விடும். இன்றிலிருந்து ஐம்பது அல்லது அறுபது வருடங்களுக்கு மேல் நாம்
இருக்கப்போவதில்லை. வாழும் இந்த சொற்ப காலத்தில் சந்தோஷமாக வாழ்வோமே?
எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்வது? அதை நாம் '' வாழும் கலை'' என்று பெயரிட்டிருக்கிறோம்.


நமக்கு கவலைகள் ஏற்பட்டால், அதைத் தாண்டி, வாழ்கையின் நோக்கம் என்ன என்று
சிந்திக்க வேண்டும். கவலைகளில் ஆழ்ந்து விடக்கூடாது. இதை செய்ய நீங்கள் தயாரா?
உங்கள் கவலைகளை இங்கு விட்டு செல்லுங்கள். சேவையில் ஈடுபடுங்கள். சமுதாயத்திற்கு நல்லது ஏதேனும் செய்யுங்கள். தியானமும் பிராணாயாமமும் செய்யுங்கள்.பின்னர் உங்கள் விருப்பங்கள் நிறைவேற செய்வது எனது கடமை.

உங்களில் எத்தனை பேருக்கு உடல் வலி இருக்கிறது?(நிறைய பேர் கை தூக்குகிறார்கள்). பாருங்கள் ! எத்தனை பேருக்கு உடல் வலி இருக்கிறது! சரியான உணவு முறையும்,
வாழ்கை முறையும் இல்லாததாலே உடல் வலி ஏற்படுகிறது.நாம் என்ன உண்கிறோம்


நமது உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி நாம் கவனம் செலுத்துவதே இல்லை.எது கிடைக்கிறதோ அதை உண்கிறோம். அது சரியல்ல.

உணவை அறிந்தவனுக்கு நோய் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு. உடற்பயிற்சி,
யோகா ஆசனங்கள் செய்ய வேண்டும்.யோகா ஆசனங்கள் மூலம், உடலில் சக்தி ற்படும்.
முகத்தில் ஒளி தோன்றும். மனதில் உத்வேகம் வரும். வாழ்கையில் உற்சாகமும் பிடிப்பும் உண்டாகும்.இவை எல்லாம் தானாகவே ஏற்படும்.ஆகவே யோக பயிற்சியும் பிராணாயாமமும் செய்ய ஆரம்பியுங்கள். எத்தனை பேர் செய்யத்தயாராக இருக்கிறீர்கள்?

இல்லையெனில் உடலின் ஒரு இடத்தில் நோய்க்கு த் தீர்வு காண முயன்று மாத்திரைகளை விழுங்கி வேறொரு இடத்தில் நோயை வரவழைத்துக்கொள்கிறோம். வயிற்று வலிக்கு எடுத்துக்கொள்ளும் நுண்ணுயிர்கொல்லி மாத்திரைகள் கல்லீரலை கெடுத்துவிடுகிறது. கல்லீரலை சரி செய்யும் மாத்திரைகள் கணயத்திற்கு த் தீங்கு செய்கிறது. இதனால் தான்

நமது முன்னோர்கள் ஆயுர்வேத வைத்திய முறையை ஏற்படுத்தினார்கள். நாடியை பரிசோதித்து நோயை கண்டறிந்தார்கள்.உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் பெங்களுரு ஆஸ்ரமத்திற்கு வந்து நாடி பரீக்ஷை மூலம் நோயை கண்டறிந்து ஆயுர்வேத சிகிச்சை மூலம் பயனடைகிறார்கள். உடலை மேலும் கெடுக்கும் ஆங்கில மருத்துவ முறையை விட ஆயுர்வேத மருத்துவம் சிறந்தது.நாம் நம்முடைய ஆயுர்வேத சிஹிசை முறைக்கு உரிய மதிப்பையும் இடத்தையும் கொடுக்க வேண்டும்.தவிர, நமது மனதையும் பரந்த மனப் பான்மையுடன் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொருவரையும் உங்கள் இணைப்பகுதியாக எண்ணுதல் வேண்டும். உடனே செய்ய வேண்டுமென்பதில்லை, மெதுவாக எண்ணத் தொடங்கலாம்.மற்றவர்களை மன்னிக்கப் பழக வேண்டும். உங்களை கோபப்படுத்துபவர்களை மன்னிக்க பழகுங்கள். உதாரணமாக யுகாதி (வருஷப்பிறப்பு ) பண்டிகை வருகிறது. அன்றுசென்ற வருஷம் உங்களை கோபப்படுத்திய அனைவரையும் மன்னியுங்கள்.புதிய அத்தியாயத்தைத்தொடங்குங்கள்.இயல்பாக இருங்கள்.

"2012" என்கின்ற பெயரில் ஒரு திரைப்படம் இந்த உலகம் ஒரு முடிவிற்கு வரப்போகிறது
என்று சொல்கிறது. அது மக்களிடையே பீதியை உண்டாக்கவே உருவான ஒரு அபத்தமான
கதை.மக்கள் ஏற்கெனவே பயத்தில் இருக்கின்றனர். இந்த திரைப்படம் உலகம் அழியப்
போகிறது இருள் சூழப்போகிறது என்று பயத்தை மேலும் அதிகரிக்கின்றது. எனவேதான்
நான் இதைப்பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் எழுதும்படி டி.கே. ஹரியிடம் சொன்னேன்.மாயன்கால அட்டவணை நம் இந்தியாவில் உருவானது தான். இந்த
ஞானமெல்லாம் இந்தியாவில் ஒரு காலத்தில் இருந்ததுதான்.எனவே "2012- உண்மைக்
கதை ("2012 The Real Story') நீங்கள் யாரும் 2012 பற்றி பயம் கொள்ள வேண்டாம் என்று சொல்வதற்காகவே எழுதப்பட்டது.


இந்தியாவில் ஆன்மிகம் உச்சத்தில் இருந்தபோது பொருளாதார நிலையும் மிக நன்றாக
இருந்தது நாட்டில் ஆன்மிகம் வீழ்ந்தபோது பொருளாதாரமும் வீழ்ந்தது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் GDP முப்பத்து மூன்று சதவீதமாக இருந்தது. அந்தக் கால கட்டத்தில் ஆன்மிகம் உச்ச நிலையில் இருந்தது. எனவே நாம் ஆன்மிகம், விஞ்ஞானம் பொருளாதாரம் இவற்றை மேம்படுத்தவேண்டும். இங்குள்ள ஒவ்வொருவரும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்,பின் குறைந்த செலவில் நன்றாக வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.
இல்லையா?

உங்களில் எத்தனை பேர் தொண்டர்களாக சேவை செய்யத் தயாராக இருக்கிறீர்கள்? நாம் அனைவரும் சேர்ந்து வேலை செய்வோம் . அரசாங்கம் உங்களுக்குத் தேவையான ஆதரவை அளிக்கும். உண்மையில் என்ன நடக்கிறதென்றால், நாம் அவன் சரியில்லை, அவள் சரியில்லை என்று மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம். இதனால் ஆக்கபூர்வமாக எதுவும் நடக்காது. நாம் நம்மையும் மற்றவர்களையும் குறை சொல்லிக்கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒற்றுமையாக வேலை செய்வோம்.

கேள்வி: குருஜி, இன்றைய உலகம் மிக அதிகமான குழப்பத்தில் உள்ளது.இந்த நிலையில் ஒரு ஆரோக்யமான குழந்தை இந்த சமுதாயத்தில் பிறக்க ஒரு கர்ப்பிணி என்ன செய்ய வேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ: உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். தினமும் நல்ல இசையைக் கேளுங்கள். வேதங்களின்படி நீங்கள் அதிகம் பச்சை நிற பொருள்களை பார்க்கலாம். பச்சை வண்ணம் அமைதியை அளிக்கும். சிவப்பு நிறம் குழப்பத்தை உருவாக்கும். அதற்காக நீங்கள் சிவப்பு நிறத்தைப் பார்த்தால் கண்களை மூடிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.ஆரோக்யமான
உணவு உண்ணுங்கள். வன்முறை நிறைந்த திரைப்படங்களைப் பார்க்காதீர்கள்.


கேள்வி: குருஜி, படிப்பில் மட்டுமன்றி அனைத்திலுமே மனதை ஒருமைப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்?


ஸ்ரீ ஸ்ரீ: மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். YES/ ART Excel ஆசிரியர் ஒருவரைக் கேளுங்கள்.அவர் உங்களுக்கு மனதை எப்படி ஒருமுகப்படுத்துவது என்று சொல்லிக்கொடுப்பார்.


கேள்வி: ஆன்மிகம் என்பது என்ன? நம் ஆன்மாவை தெய்வீகத்துடன் இணைப்பது எப்படி?
நம்மை ஆன்மீகப்பாதையில் செலுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ:: தியானம் செய்யுங்கள்.


கேள்வி: நான் என் ஆரோக்கியத்திற்காக எங்கு செல்ல வேண்டும்? அலோபதி மருத்துவமா? ஆயுர்வேத மருத்துவமா?


ஸ்ரீ ஸ்ரீ: நான் இதைப்பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் . அவசரச் சிகிச்சை என்றால் அலோபதி மருத்துவம் தேவைபடலாம் . மற்றபடி புனிதமான (இயர் கை ,ஆயுர்வேதம் போன்ற)மருத்துவம் தேவை.


கேள்வி: என் மனம் ஊஞ்சலாடுவது ஏன்?


ஸ்ரீ ஸ்ரீ: உங்கள் உடல் அமைப்பில் இரசாயன அல்லது தாது சமச் சீரின்மை காரணமாக இருக்கலாம்.தியானம், பிரணாயாமம் நல்ல ஆரோகியமான உணவு ஆகியவை உங்களுக்கு உதவலாம். அனைத்தையும் விட ஆசீர்வாதம் உங்களுக்கு பெரும் பயன் தரும்.


கேள்வி: குருஜி, இயற்கையில் தீவிரம் அதிகமாக உள்ளது. சமுதாயத்தில் வன்முறை மிகுந்துள்ளது. இந்த நிலையை எப்படி சமாளிப்பது?


ஸ்ரீ ஸ்ரீ: அதனால்தான் நாம் இந்த வேலையை எடுத்துக் கொண்டுள்ளோம். நல்லவர்கள்
எல்லோரும் உறங்கிக் கொண்டுள்ளனர். இந்தக் கலியுகத்தில் வெறும் இருபது சதவீதம்
மக்கள் தான் தீயவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள நல்லவர்கள் உறங்குகிறார்கள்.
அவர்கள் விழித்தெழுந்தால் நிறைய மாற்றங்கள் உண்டாகும்.